சனி, 1 பிப்ரவரி, 2025

 சேவல்:-

முச்சில்* அரிசியிட்டு
மும்முரமாக் கல்பொறுக்கும்
மச்ச நெறத்து
மவராசா! - எச்சிலூறக்
கூப்பிடுதே என்னையுந்தான்
கொத்திப் பசியாற;
சாப்பிட நாலரிசி
தா!
முச்சில் - முறம்.
கிழவன்:-
நாலே அரிசிம்பே;
நாந்தந்தா சாப்பிட்டுத்
தா லேய் ஒருபிடி
தானென்பே - ஏ லேய் உன்
புத்தி தெரியாதா
போக்குப் புரியாதா
ஒத்தலேன்னா* வீழும்
உதை!
சேவல்:-
வாயே திருவோடாய்,
மாஞ்சேன் கருவாடாய்;
ஏய்ஏய் கொஞ் சம்தா
எழுந்தோடாய்; - தாயேநீ
சொன்னா தருவான்;உன்
சுட்டுவிழிக் கேபணிவான்;
பொன்னாத்தா சொல்லடியிப்
போ!
கிழவி:-
திங்கிறது இங்கே
துரைக்குத் தினவெடுத்தாத்
தங்குறது எங்கேன்னு
தாஞ்சொலவா? - மங்கலத்துப்
பஞ்சாரம் தேடிப்
பறக்கும் உனக்கரிசி
அஞ்சாறு கேக்குதா?
ஆங்!
சேவல்:-
நான்போனா தப்புனது
நாயகன் அப்பப்போ
தான்போனா மட்டும்
சரிதானா? - ஏன்பாட்டி!?
ஏதோநான் பாட்டுக்கே
ஏதேச்சை யாப்போனேன்
காதோடு சொல்லுச்சே
காத்து!
கிழவி:-
கிழட்டுப் பயலேநீ
கெட்டக்கேட் டுக்கு
விழட்டுமா என்றெவள்
வீழ்ந்தாள்? - சுழற்ற
எடுவிளக்கு மாற்றை;
எவளெவளுக் கோஎன்
படுக்கையில் கேக்குதா
பங்கு!?
கிழவன்:-
பத்தவச் சுட்டியே
பங்காளி; வாயிலேயே
குத்தவச் சுட்டியே
கூட்டாளி; - செத்த இரு
சாராய போதைக்குச்
சாப்பிட நானுரிப்பேன்
தோராய மாயுனது
தோல்!
சேவல்:-
பிடிகொடுக்க வாறேன்;
பிடிச்சுத்தான் பாரேன்?
தடிக்கிழவா! சம்மதம்
தாரேன்; - பொடிநடையாய்
நான் போறேன் முன்னாலே
நீ வாடா பின்னாலே
கூன்'மல்லி கா'வீட்டுக்
கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக