புதன், 22 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (15)


தொடரும் துயரைத் தொலைத்துத் தமிழர்
கடல்சூழ்ந்த நாட்டில் களிக்க -அடல்தனிக்
கோனே! மறவா! கொலைவாள் எடுத்து
வானே புறங்காட்ட வா! (141)

வாவந்தெம் மக்கள் வருந்தும் நிலைமாற்றித்
தாவன்று தெவ்வர் தலைகொய்து -நீவென்று
பாயும் புலிப்படையைப் பார்வியக்க நீநாட்டி
சீயம் தலைதாழச் செய்! (142)

செய்யுள்அச் சீயரின் செந்நீரைப் பாய்ச்சிநாம்
செய்வோம் விளைச்சலைச் சீர்மையுடன் -மெய்யாய்
தமிழர்க் குனைவிட்டால் தக்கதுணை இல்லை
அமிழ்கின்றார் துன்பத்தில் ஆங்கு! (143)

ஆங்குத் தவிக்கும் அருந்தமிழர்க்(கு) ஆறுதலாய்த்
தாங்கிப் பிடிக்க தலைவா!வா! –ஈங்குன்
நெடுந்தோள் நிமிர்ந்தி நெடுவான் வியக்க
அடுவெங் களத்தை அடை! (144)

அடையார்*க் கழிவை அளிக்கும் உரஞ்சேர்
படையாள் பவனே! பரிதுன்* –குடைக்கீழ்
எமையாள் பவனே! எதிரிக் கழிவை
உமையாள் மகனே! உணர்த்து! (145)

உணராப் பதர்கட்(கு) உணர்த்தல் தகுமோ?
துணவாய்* அவரைத் துணிப்பாய்* –தினவால்
திமிருமத் தீயோரைத் தீய்த்துத் தமிழர்
நிமிருமந் நாளை நினை! (146)

நின்போல் எமைக்காக்க நேரொருவன் இல்லையெமை
முன்போல் நலங்காக்க முன்னேவா! –பின்போய்ப்
பகைவர் அழிய படைதோற்று விப்பாய்;
இகல்*நீக்கும் நீயெம் இறை! (147)

இகல் –பகைவர்.


இறைஞ்சி* வருவோர்க்(கு) இனிதருளும் வேந்தே!
நிறைகெட்ட காடையரை நீக்கி –அறைமுரசுக்
கையா! எனையாள் அரசே! எழிற்கதிர்க்
கையா! கடைக்கண்ணைக் காட்டு! (148)

காட்டிக் கொடுத்த கயவன் அருளன்*
நீட்டி உறங்கிடல் ஞாயமோ? –நாட்டிலவன்
வீணாய் உலவுவதும் வேண்டாமே! கொன்றொழித்துக்
காணாப் பிணமாக்கல் காப்பு! (149)

காப்பிட்டுக் காடையரைக் காலன் இடனனுப்பக்
கூப்பிட்டோம் எங்கள் குறைதீர்ப்பாய் –கூப்பிட்டோர்க்(கு)
ஏவலாள் ஆனவனே! எல்லாளா! தாள்பணிந்தோம்
காவலாய் வந்தெம்மைக் கா! (150)

அடையார் –பகைவர்; பரிது –பெரிது; துணவு –விரைவு; துணித்தல் –வெட்டுதல்; இறைஞ்சுதல் –வணங்குதல்; அருளன் –கருணா.

அகரம் அமுதன்

சனி, 18 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (14)


சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (131)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (132)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (133)

நெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்
எஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி
முள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்
அல்லும் பகலோடும் அங்கு! (134)

அங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்
பொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்
போலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை
காலக் கணக்கேட்டில் காண்! (135)

காணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்
காணா துலகம் கடப்பதனால் -நாணாத
நாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்
தீய செயல்பலவுந் தேர்ந்து! (136)

தேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்
நேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த
சிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்
தங்கள் உயிர்விட்டார் தாழ்ந்து! (137)

தாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்
சூழும் இடுக்கண் சொலவொணுமோ? -ஆழம்
தெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி
அரியா தகல்வதோ அன்று! (138)

அன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்
புன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்
எத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ?
புத்தனே கொஞ்சம் புகல்! (139)

புகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு
அகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்
கொஞ்சமோ? இந்தக் கொடுமைகளைக் காண்பார்கண்
துஞ்சுமோ கீழிமை தொட்டு! (140)

சிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான்படைத் தளத்தைக் குறிக்கிறது.


அகரம் அமுதன்

ஆசிரியர் போற்றுதும்!


அஞ்சில் எமைவளைத்து
அமுதனைய கல்வியினை
நெஞ்சில் நிறைக்கின்ற
நேர்த்தியெலாம் கற்றவரே!

பேசரிய மாண்பெல்லாம்
பிள்ளைகள் எமைச்சேர
ஆசிரிய பணிசெய்யும்
அன்பின் தெய்வங்காள்!

பொற்போடு எமைநடத்திப்
புகழ்மணக்கும் கல்வியினைக்
கற்போடு கற்பிக்கும்
கடமையிற் பெரியோரே!

குன்றளவு கொடுத்தாலும்
குறையாத செல்வத்தை
இன்றளவும் எமக்களித்து
இன்புறும் வள்ளல்காள்!

ஈன்றோரின் மேலாக
எம்நெஞ்சில் நிறைபவரே!
சான்றோராய் எமைமாற்றும்
சாதனைகள் புரிபவரே!

எச்செல்வம் அளித்தாலும்
எச்சமின்றித் தீர்வதுண்டு
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
விளிவின்றி வளருமன்றோ!

அன்னையே தெய்வமென்றும்
அன்பே தெய்வமென்றும்
கன்னின்றோர் தெய்வமென்றும்
கதைகள்பல உண்டெனினும்
பள்ளிக் கூடமெனும்
பண்பட்ட கோயிலின்
உள்ளே எழுந்தருளும்
உயர்தெய்வம் நீங்களன்றோ!

தாய்சொல்ல முதன்முதலிற்
சேய்பேசும் அம்மொழியே
தாய்மொழியாம் என்றெவரும்
சாற்றும் மொழியினையும்
சேய்நாங்கள் தப்பின்றிச்
செப்புதற்குக் கருத்துடனே
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற
அன்னையரும் நீங்களன்றோ!

தரிசை சீர்செய்து
தக்கபடி ஏர்நடத்தி
வரிசை பிடித்துவிதை
வார்த்திடுவர் வேளாலர்
அறிவு நீர்பாய்ச்சி
அகந்தைக் களையகற்றி
செறிவுடையோ ராய்எம்மைச்
செய்உழவர் நீங்களன்றோ!

சிலையின் இறுதிநிலை
சீர்மிகு கண்திறப்பாம்
விளையும் பயிரெமக்கோ
விழிதிறப்பே முதல்நிலையாம்...
எண்ணோடு எழுத்தென்னும்
இருகண்கள் திறக்கின்ற
திண்ணிய பணிசெய்யும்
சிற்பியரும் நீங்களன்றோ!

அன்றாடம் எமைநாடி
அறிவு புகட்டுமுமை
இன்றிந்நாள் எம்நெஞ்சில்
இருத்திப் புகழ்கின்றோம்!

வாழ்நாள் முழுவதையும்
மாணவர் எமக்களித்து
வீழ்நாள் இலாக்கல்வி
விளைக்கும்நீர் வாழியவே!

அகரம் அமுதன்

சனி, 11 செப்டம்பர், 2010

மனம்போன போக்கில்…

கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய்
        ஓடுகிறாய் கவின்நெஞ் சே!மார்
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு
        தித்தாடித் தருக்கி யேசீர்
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம்
        தூண்டிப்பின் கிளர்ந்தெ ழுந்து
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன்
        விளையாட்டால் தூக்கங் கெட்டேன்!

அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள்
        நாளும்நீ ஆடு கின்ற
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப்
        பிடி*யானேன்; நினைவ கத்தில்*
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி
        சேமிக்கும் தரவு மாகி
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும்
        ஒளிச்சுருளே!* நீதான் நானா?

மேனியெனும் வன்பொருளில்* விரும்பியிறை
        வன்நிறுவும் மென்பொ ருள்நீ
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி*
        ஆகின்றாய் சிலநே ரத்தில்
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி*
        யாயறிவு மிளிர்ந்த போதும்
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம்*
        முழுதறியேன் நவிலு வாயோ?

ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி
        வும்நீயும் அமர்ந்தி ழுக்க
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல்
        வழியிலெனைச் செலுத்த வேண்டி
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்;
        ஆனாலும் அறிவும் நீயும்
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை
        புரிகின்றீர் வலியைத் தந்தீர்!

நன்னூல்கள் பலநாடி நான்கற்க
        நல்லறிவு நவின்ற போதும்
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி
        பின்செல்லும் காட்சி போல
முன்னாலே நீபோக நானுன்னைப்
        பின்தொடர்தல் முறைமை ஆமோ?
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம்
        என்பதனை உணர்ந்த துண்டா?

மான்போன போக்கிலிரா மன்போக,
        மனம்போன வழியில் சீதை
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ!
        மாரீச தார்வேந் தென்னும்
மான்சாக இராவணன்தன் மனம்போன
        வழிபோன வகையா லன்றோ?
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய்
        நானுன்பின் அலைந்தேன் கெட்டேன்!

ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே!
        நீயென்னுள் ஒளிந்து கொண்ட
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண்
        என்பேனா? பிழைபொ றுத்து
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே
        என்பேனா? நீயென் னொத்த
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற
        வுறுவேனா? நீங்கு வேனா?

பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி,
        ஆசை,யன்பு பொருந்தப் பெற்ற
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர்
        வுகள்பலவாம்! நின்னால் நானும்
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச்
        சிலநேரம் நின்னால் தானே
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய
        நிறைநிறையக் குறிக்கோள் ஏற்பாய்!

நிகழ்பட ஆட்டம் –video game; இயக்குப்பிடி -jaystick; தரவு –data; ஒளிச்சுருள் –film role; வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware; தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் -சூது.

அகரம் அமுதன்