புதன், 30 ஏப்ரல், 2008

தொழிலாளர் நாள்!



உழைக்கின்ற மக்க ளால்தான்
      உலகினுக் குயர்வாம் என்று
விழைந்திங்கே ஓடி வந்து
      விளம்பிடும் அருமை நாளே!

பிழைப்புக்கு வியர்வை சிந்தும்
      பேராளர் பெருமை பேச
அழைக்காமல் ஓடி வந்த
      ஆனந்தத் திருமே நாளே!

மண்ணிலே சேற டித்து
      மணிக்கதிர் விளைத்துக் காட்டி
விண்வரைப் போர்கு விக்கும்
      விவசாயி ஓர்தொழி லாளி...

இரும்புவடம் நாற்றாய் மாற
      எழும்சுவரே போத்தாய் வளர
வரும்கட் டடமே மரமாய்
      வளர்ப்பவனும் ஓர்தொழி லாளி...

மலமென்றும் சலமே என்றும்;
      வகைப்படுத்தி மருண்டி டாமல்
கலங்காமல் இறங்கி அதிலே
      கழிவகற்றும் ஓர்தொழி லாளி...

கட்டுமரம் கட்டி விட்டுக்
      காசினியில் கடல்கி ழித்து
முட்டப்புகழ் அடைய நாளும்
      முனைபவனும் ஓர்தொழி லாளி...

அழுக்கினை அடித்துப் போக்கி
      அரும்புமுல் லைபோல் தருவேன்
இழுக்கிலை இதிலே என்றே
      இயம்பும்சல வைத்தொழி லாளி...

மழித்தலை தொழிலாய்க் கொண்டு
      மக்களின் புறத்தோற் றத்தை
அழகுடைத் தாக்கிக் காட்டும்
      அவனும்இங் கோர்தொழி லாளி...

மரத்திற்குக் கிளைகள் வெட்டி
      வளர்ந்தபுட் புதரை வெட்டிச்
சிறப்புறத் தோன்றும் வண்ணம்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

அலைகளில் வலையை வீசி
      வகைவகை மீன்பி டித்து
விலைபேசி விற்றுத் தீர்க்க
      விழைபவனும் ஓர்தொழி லாளி...

கருவறைக் குள்ளே வாழும்
      கடவுட்குப் பூசை செய்யும்
திருவுடைப் பணியே கோளாய்ச்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

ஏட்டிலே கோல்பொ ருத்தி
     இசைமிகு கற்ப னைகள்
பாட்டிலே வடிப்பான் தானும்
     பண்பட்ட ஓர்தொழி லாளி...

எங்கெங்கு காணும் போதும்
      அங்கங்கு தொழிலா ளர்தம்
பங்குண்டாம் என்ப தாலே
      பார்முழுது மேதொழி லாளி...

இதனையே உணர்த்து தற்கே
      இற்றைநாள் அவத ரித்த
விதத்தினால் மேமுதல் நாளே
      நீயும்இங் கோர்தொழி லாளி...

பார்முழுதும் பார்ப்ப தென்றால்
      பற்பலவாய் நாட்கள் உண்டு
சீர்தூக்கிப் பார்க்க வென்றால்
      சிறப்பதெல்லாம் மேநாள் தாமே!

உழைக்கின்ற மக்க ளேதான்
      உலகத்தின் மூச்சு; அவர்தம்
அழைப்பினை ஏற்று வந்தாய்
      ஆனந்தம் பொங்க லாச்சு...

நாளெல்லாம் உழைக்கும் மக்கள்
      நலம்பாடிக் கூவும் குயில்நீ...
கோளென்றே உழைப்பைக் கொண்டோர்
      குலம்வாழ ஆடும் மயில்நீ...

பாருக்குள் சிங்கைத் தாயின்
      பண்பட்டப் புகழை நாட்டும்
வேருக்கு விழுதாய் வந்தாய்
      வெல்க!தொழி லாளர் நாளே!

அகரம்.அமுதா

செவ்வாய், 29 ஏப்ரல், 2008

தீக்குச்சி!

தலையோடு மருந்திருந்தும் தீக்குச் சிக்கு
தலைக்கனம் இருப்பதுவாய்த் தெரிய வில்லை!
தலையோடு மருந்துள்ள கார ணத்தால்
தலைப்பற்றிச் சுடர்விட்டு சிதைந்து மாளும்!

உயிர்பிரிந்தால் எரிப்பதுவே உலக நீதி...
உயிர்பெறவே எரிகிறதே உணர்த்தும் சேதி?
உயிர்பெற்று விளக்கிற்கே ஒளிவ ழங்கி
உயிர்பிரிந் திறப்பதுவோ இதற்கு நீதி?

சிலநொடிகள் வாழ்ந்தாலும் சிரத்தை யோடு
செய்கிறதே ஒளிஈகை விளக்கிற் கெல்லாம்!
நிலையில்லை வாழ்வென்று தெரிந்த பின்னும்
நிமிர்ந்தபடி நின்றெரியும் துணிவால் மேலாம்!

பாரதத்துக் கர்ணனப்பா! சாகும் போதும்
பார்த்தறிந்(து) ஈகின்ற பண்பி னாலே!
காரொத்த ஈதலினால் கடையேழ் வள்ளல்
கண்முன்னே தீக்குச்சாய் நிற்கக் கண்டேன்!

சிரத்தையொடு கையாள சுடரைச் சிந்தும்...
சிந்தைக்கொஞ் சம்தப்பத் தீங்கே மிஞ்சும்...
மறம்கற்ற அறமென்பேன் இதனை கண்டீர்...
மாண்புடனே கையாள்வர் நாளும் பெண்டிர்...!


அகரம்.அமுதா

காக்கைகளின் ஒப்புரவு!

கார்முகிலும் காக்கைகளும் நிறத்தால் ஒன்று;
கனிவுடனே ஈகின்ற குணத்தால் ஒன்று;
சேர்கின்றத் துளியையெல்லாம் வையத் திற்கே
வார்க்கின்ற கார்முகில்போல் காக்கைக் கூட்டம்
ஓர்பருக்கை யானாலும் பகிர்ந்தே உண்ணும்;
ஒப்புரவாய் வாழ்வதனை உயிராய் போற்றும்;
நேரில்லா நற்குணங்கள் நிறையப் பெற்று
நிலமிசை நீடுவாழும் காக்கைப் போல்யார்?

ஐயமிட் டுண்ணென்றே ஒளவை சொன்னாள்!
ஐயன்மீர்! அவ்வுரையின் பொருள்தான் என்ன?
“கையளவே உண்டெனினும் ஈதல் தன்னை
கடுகளவே னும்செய்க” என்ப தேயாம்!
மையன்னக் காக்கைகளைக் கண்டே யன்றோ
தையலவள் செப்பிவைத்தாள்! சமத்து வத்தை
வையத்தில் வாழ்விக்கும் உயிர்கள் தம்மில்
மைவண்ணக் காக்கைகளே முதன்மை யன்றோ!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஏப்ரல், 2008

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!

தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!

முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!

தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!

சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!

விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!

மோகப் போய்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!

ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?

பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!


அகரம்.அமுதா

நடிப்பு!

நாடக மேடை யின்றி
      நடிக்கின்ற நாய கர்கள்
நாடகம் நிறைந்த தாலே
      நடிகர்க்குப் பஞ்ச மில்லை!

நாயகர் சிலரே யுண்டு;
      நரிப்புத்தி கொண்டி ருக்கும்
தீயவர் பலபே ருண்டு
      தீங்கினைச் செய்வ தற்கு!

பக்தராய் வேட மிட்டு
      பாழ்தொழில் செய்வார்; தத்தம்
சக்தியே மேலாம் என்று
      சூழ்ச்சியும் தீதும் செய்வார்!

நாநயம் விற்றே விற்றே
      நாட்டிலே இங்கோர் கூட்டம்
நாணயம் பெருக்கிக் கொள்ளும்
      நாடகம் தொடர்ந்து செல்லும்!

உண்மையே ஊமை ஆகி
      ஊனமாய் ஆன தாலே
உண்மையைப் பேசு தற்கே
      ஊதியம் வழங்க வேண்டும்!

வித்தைகள் நூறு செய்து
      வியத்தகு நடிப்பைக் காட்டும்
வித்தகர் வழங்கக் கேட்டால்
      விருதுக்குப் பஞ்சம் தோன்றும்!

அதிகாரம் கையில் இல்லை;
      அரிதாரம் பூச வில்லை;
அதி-காரம் பேச்சில் காட்டும்
      அவர்கள்போல் நடிக ரில்லை!

அவரவர் பாத்தி ரத்தை
      அவரவர் தேர்ந்து கொண்டு
நவையின்றிச் செய்வ தாலே
      நாடகம் விளங்க வில்லை!

நாயகன் நடத்து கின்ற
      நாடகம் விளங்கி விட்டால்
நாயகம் கொண்ட மாந்தர்
      நடிப்பதை நிறுத்தக் கூடும்!

அகரம்.அமுதா

புதன், 16 ஏப்ரல், 2008

சாமந்தி!



முதலெழுத் திறத்த லாகும்;
        முதல்,கடை இனமே யாகும்;
முதல்,கடை யிரண்டெ ழுத்தை
         முடிச்சிடின் அமைதி யாகும்;
முதலற குரங்கே யாகு(ம்;)
         உயர்இரண்டா மெழுத்தி னோடே
இதன்கடை தளைகின் திங்கள்;
         இச்சொல்சா மந்தி யாமே!

அகரம்.அமுதா

தாமரை!

ஏவலே முதலெ ழுத்தாம்;
எழுத்திதில் கடைத ளைகின்
காவிய வாலி இல்லாள்;
கடையிரண் டெழுத்து மானாம்;
மேவிய இடையை நீக்கி
விரைந்து‘கால்’ தனைஒ றுத்தால்
தாவிலை நிலமாம்; அச்சொல்
தாமரை என்பேன் கண்டீர்!

அகரம்.அமுதா

கல்வி!

முனைந்திடின் பெயரோ டேவல்
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;
கனிவுடன் ஒற்றை நீக்கின்
கவிஞனும் குரங்கும் உண்டாம்;
மனைதனைக் கூடும் சொல்லே
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;
உனையெனை சான்றோ னாக
உயர்த்திடும் கல்வி தாமே!


அகரம்.அமுதா

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

மறுநடவு!

அப்பன் குறும்பாலே
அன்னையினுள் முதல்நடவு!
தொப்பூழ் கொடியவிழத்
தொட்டிலிலே மறுநடவு!

பிள்ளையினுள் வெள்ளைமனம்
பேரிறைவன் முதல்நடவு!
கள்ளகுணம் ஆசைமனம்
காலத்தின் மறுநடவு!


பள்ளியிலே பாடங்கள்
பாலகனில் முதல்நடவு!
பள்ளியறைப் பாடங்கள்
பருவத்தின் மறுநடவு!

எண்ணத்தை நெஞ்சுள்ளே
எழுதுதல் முதல்நடவு!
கண்ணுறங்கும் வேளைவரும்
கனவுகள் மறுநடவு!

உற்றுணர்ந்த யாவையுமே
உள்ளத்தில் முதல்நடவு!
கற்பனையில் கண்டெடுக்கக்
காகிதத்தில் மறுநடவு!


எழுத்துக் கல்வியினால்
இமைதிறத்தல் முதல்நடவு!
பழுத்த அனுபவத்தால்
பார்வைபெறல் மறுநடவு!

வயதில் செய்கின்ற
வன்முறைகள் முதல்நடவு!
வயதான பின்னாலே
வளைந்துக்கொடல் மறுநடவு!

பல்லில்லாச் சேய்பேசும்
பாகுமொழி முதல்நடவு!
பல்லிழந்த கிழம்கூறும்
பாழ்மொழிகள் மறுநடவு!

பிள்ளையிலே தாய்க்கரத்தை
பிடித்துலவல் முதல்நடவு!
தள்ளாடும் முதுமையிலே
தடியூணல் மறுநடவு!

கருவறையில் முதல்நடவு!
கண்ணறையில் கையறையில்
இருப்பதெல்லாம் மறுநடவு!
இறப்(பு)அது அறுநடவு!

அகரம்.அமுதா

தீபம்!

ஊற்றிடும் நெய்தனை
உணவெனக் கொண்டொளி
கூட்டிடும் வண்ண தீபம்! –ஞான
ஊற்றிடும் நெய்யுண்(டு)
உற்றதை உணர்ந்ததை
ஏட்டி(ல்)செய்யும் எண்ண தீபம்!

அகலொடும் மாவொடும்
ஐமுக விளக்கொடும்
ஆடிடும் அழகு தீபம் -நாளும்
அகமொடும் அறிவொடும்
அனுபவத் திரியொடும்
ஆடிடும் அன்பு தீபம்!

சூழ்ந்திடும் இருளினை
சுந்தர ஒளியினால்
துடைத்திடும் எரியும் தீபம் -தன்னை
சூழ்ச்சியால் வீழ்த்திடத்
துடிப்பவர் நாணிடத்
துளிர்த்தெழும் அறிவு தீபம்!

திரியிலே ஆடிடும்
தேகயெழில் காட்டிடும்
விட்டிலை விழுங்கும் தீபம் -எண்ணப்
பரிசலில் ஆடிடும்
பாழ்செயல் தூண்டிடும்
பண்பில்லார் ஆசை தீபம்!

உயிரோடு உணவுமாய்
உற்றநல் மெழுகதன்
உருவழித் தாடும் தீபம் -பாரில்
உயர்வான உறவினைப்
புகழோடு பொருளினை
உதிர்த்தோடும் கோப தீபம்!

கடவுளை கைதொழச்
செய்திடும் நம்தமைக்
கற்பூரம் கொண்ட தீபம் -நல்ல
நடத்தையால் சிறந்தாரை
நாளெலாம் தொழுதிடும்
நல்லார்தம் உள்ள தீபம்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 6 ஏப்ரல், 2008

பம்பரம்!

ஒற்றைக் காலில் நின்றபடி
உன்னை என்னை பார்த்தபடி
சற்றே காற்றைக் கிழித்தபடி
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?

நிலையே இல்லா இவ்வாழ்வில்
நிலைத்து வாழ வேண்டுமெனில்
நில்லா துழைத்தல் வேண்டுமென்று
நிற்கும் பம்பரம் சொல்கிறது!

ஊனம் உடலில் இல்லையென்றும்
உளத்தில் தானது உள்ளதென்றும்
காணும் பேரைக் கூப்பிட்டுக்
கனிவுடன் பம்பரம் சொல்கிறது!

வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்
இட்ட முடனே எல்லோர்க்கும்
இயன்றது செய்திட இயம்பிடுது!

தலைக்கனம் கொண்டே ஆடுவதால்
தாழ்வே வந்து சேருமென்று
தலையை ஆட்டித் தக்கபடி
தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!

தன்னைச் சுற்றும் சாட்டைக்கே
தன்னை வழங்கும் பம்பரம்போல்
உன்னை சார்ந்த உறவுக்கும்
உன்னை ஈந்திடு என்கிறது!

சொந்தக் காலில் நிற்பதுதான்
சுகத்திற் சிறந்த சுகமென்றும்
அந்தப் பம்பரம் சொல்கிறதே!
அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!

அகரம். அமுதா

மதியுரை!

தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? –அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை –அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது –தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு –நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு!

அகரம்.அமுதா

புதன், 2 ஏப்ரல், 2008

கருத்ததேன் முகிலே!


வாகாய்வெண் ணிறத்தை மாற்றி
வலம்வந்து மழைக்கும் காரே!
ஆகாய வீதி யெங்கும்
ஆவியாய் அலையும் நீரே!
போகாத நகரம் எல்லாம்
போயுலவிப் பார்த்து விட்டு
வேகாத வெயிலில் மேனி
வியர்த்திடும் மேக தேரே!

காசிரும் மனங்கள் போலே
கருத்ததேன் முகிலே? நெஞ்சில்
மாசெதும் வைத்திட் டாயோ?
மாற்றமேன் முகத்தின் மேலே?
பேசரும் பஞ்சின் வண்ணம்
பிறங்கிடும் மேனி வண்ணம்
ஈசனின் நீல கண்டத்(து)
இணைநிறம் உற்ற தேனோ?

வெய்யிலில் நடந்த தாலே
விரைந்துநீ கருத்திட் டாயோ?
மையலை வழங்கு முன்றன்
மணிமுலை இரண்டி னோடும்
தொய்யிற்குப் பதிலாய் கண்ணின்
மையெழுதி னாயோ? மையால்
மெய்யெழுதி னாயோ? உன்றன்
மெய்வண்ண மாற்றம் ஏனோ?

பார்க்கவெள் ளைக்கா ரன்போல்
பால்வண்ணம் கொண்ட போதும்
நீக்ரோவின் நிறத்தின் மீதே
நீங்கிடாக் காதல் தானோ?
மாக்களாகி மாந்தர், மேனி
வண்ணத்தால் பிரியா வன்னம்
சேர்க்கத்தான் வண்ண மாற்றம்
தேகத்தில் செய்கின் றாயோ?

அகரம்.அமுதா

மேகம்!

காற்றுத் தறியில்
கானல் இழைகொண்டு
நேர்த்தியாய் நெய்த
நீர்க்கம்பளம்...

தாரகை வண்டுகளைத்
தனக்கிரை ஆக்கிட
நீரென்னும் சிலந்தி
நெய்தவலை...

கைநீட்டி வான்தொடக்
கரைதாவும் அலைகள்
மெய்சோர்ந்துத் திரும்பி
மேனி வியர்வையால்
நீலவானுக் கெழுதும்
நீளுரைமடல்...

காலனாம் காற்றினால்
கறைகின்ற கற்பூரம்...

சூழ்மின்னலற் சுடரினால்
உருகும் மெழுகு...

ஆழ்கடற் கிழவியின்
அழுக்குச் சேலை...

வான வெற்றிலையில்
தடவும் சுண்ணாம்பு...

கானென்னும் வண்டை
நாடும் தேன்மலர்...

துடுப்பில்லா ஓடம்...
தூணில்லா மண்டபம்...

யாரும்எடுக்க இயலாத
இளவம் பஞ்சு...

ஆழிக் குயவன்
வனைந்த நீர்க்குடம்...

தென்றல் இடறத்
தடுக்கி வீழ்ந்திடினும்
மின்னற் கொடிகாக்கும்
குமரன்...

என்றென்னை
கற்பனை கவிஞர்கள்
கவிதை வரிகளில்
சொற்புனைந் துவமை
சொல்வர்!

நானோ
பசுமை தேசத்தில்
பறக்கும் கொடி...

பச்சை வனங்களின்
பந்தல்...

நானே
மழையின் தாய்...
முத்தின் தந்தை...
பிழைகாண முடியாப்
பெரும் பிழைநான்...

கழைக்கூத் தாடிநான்!
கழையடித் தாடுவேன்!
இசைமழைக் கோட்டையில்
இருந்துல காளுவேன்!

மீன்கள் நீந்தா
மலட்டுநீர் நிலைநான்...
தேன்'கள்' சொரிந்திடும்
தெங்கிளம் பாளை...

மரங்கள் என்றன்
மழைத்துளிகளின் பிடிமானம்...
வயல்கள் என்றன்
வருகைக்கு வரவேற்பு...

மேடையாம் என்மீதேறி
முழங்கும் மின்னலுக்கு
மேடைநான் களைந்தபின்பே
வண்ணவிற் பொன்னாடை
போர்த்துமந்த
வான்போல் பலரையென்
வாழ்நாளில் காணுகின்றேன்...

தேன்போல் சுவைகூட்டி
திசையெங்கும் மேவிப்
பொழியும் காலங்களில்
போவென்று குடைபிடிப்பார்
பொய்க்கும் கோடையிலோ
வான்பார்த்து ஏங்கிடுவார்!

அகரம்.அமுதா