ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 தான் பொழுதெலாம் கவிதை எழுதுவதைச்சிலர் ஏளனமாய்ப் பார்க்கவும் பேசவும் செய்வதாக ஒரு கவிஞர் குறைப்பட்டுக்கொண்டபோது.....

காசுக்காய் நாளுந்தம்
கால்கடுக்கப் போயுழைப்போர்
நாசுக்காய்ச் சாடுவதும்
நன்மைக்கே! - ஆசுகவி
தீர்க்குமோ தாகத்தை?
தீய்க்குமோ வன்பசியை?
பேர்க்குமோ ஏழ்மையை?
பேசு!
==
புலமையும் வறுமையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். பொருள்படைத்தோர் என்னைப்போல் எழுதவும் ஏலுமோ? என அவர் வினவியபோது...
வாதம் புரியும்வாய்
வன்பசி உற்றக்கால்
சாதம் தனைத்தேடித்
தான்தவிக்கும்; - காத
தொலைவோ புலமைக்கும்
சூழ்பொருட்கும்? இங்கே
இலையோநம் வைரமுத்து?
எண்!
==
வைரமுத்து ஓர் 'இலக்கியத் திருடன்' - என அந்நபர் சாடியபோது...
சங்க இலக்கியத்தின்
சாறு பிழிந்தெடுத்(து)
இங்கு வழங்கல்
இழிவில்லை; - திங்களது
செங்கதிர் சிந்தும்
செழுமொளியைச் சேர்தெடுத்துக்
கங்குலில் ஈதல்
கடன்!
==
தொன்மக்கருத்துகளை எழுதுதல் தவறில்லை. அவற்றைப் பாட்டில் எடுத்தாளுவதை ஏற்கமுடியாது - என அந்நபர் மறுப்புரைத்தபோது....
ஏட்டில் புலவர்
இயம்பிய கற்பனையைப்
பாட்டில் கவியரசன்
பாய்ச்சலையா? - நாட்டில்
இவர்க்குப்போல் மிக்க
இரசிகர் கூட்டம்
எவர்க்குண்டு நண்பா!
இயம்பு!
==
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Senthil Kumar, பாவலர் அபி சத்தி மற்றும் 6 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக