திங்கள், 30 மார்ச், 2009

உழவின்றி உய்யா துலகு (1)!

பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
உழவின்றி உய்யா துலகு!

மாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;
வாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்
இழவின்றி* யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு!

வாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்
பாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்
பழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்
உழவின்றி உய்யா துலகு!

சோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*
வேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை
பழனம்* அழிந்து பயிர்செய் தொழிலாம்
உழவின்றி உய்யா துலகு!

இழவு -வறுமை, கேடு; பாலை -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்; பழனம் -வயல்


அகரம்.அமுதா

புதன், 25 மார்ச், 2009

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அமெரிக்காவுடன் இந்தியா அணுவொப்பம் செய்தபோது:-

மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
தன்மானப் போக்கா? தகுமோதான்? -நன்காய்ந்(து)
உணர்ந்தேயிவ் வொப்பம் உதவா தெனத்தேர்ந்(து)
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

நம்பி அவருறவை நாமேற்றுப் பின்னாளில்
வெம்பி விழுவதுவும் வேண்டாமே! -தெம்பால்
திணவெடுத்தத் தோளர்தம் தீயுறவுக் கஞ்சி
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

வல்லார் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
இல்லாரின் சொல்லோ எடுபடும்? -வல்லார்
பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்;
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

மேற்கு கிழக்கென்று மேதினியைத் துண்டாக்கி
மேற்கு கிழக்கையாள விட்டுவிட்டோம் -மேற்கை
இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!


அகரம்.அமுதா

வெள்ளி, 20 மார்ச், 2009

ஒரு கொள்கையாளனின் குமுறல்கள்!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடென்ற
பரம்பரைப் பாட்டிற்குத் தன்னை
பக்குவம் செய்து கொண்டு
இரவு பகலென்றும் பாராமல்
இனிதே உழைத்துயர
திரைகடல் கடக்கும்
தோழர்கள் ஏராளம்!

விழியில் எதிர்பார்ப் புக்களோடும்
வண்ணக் கனவுகளை
மொழியில் ஏற்றியும் வரும்
மனிதர் எண்ணிக்கை தாராளம்!

சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல
சூடுவைக்கும் நோக்கோடு
ஆழிதனைக் கடக்கும்
ஆடவரும் ஏராளம்!

ஒவ்வொரு குணவான்களும்
ஒன்றுசேரும் பாலைவனம்
வெவ்வேறு திசைப் பறவைகள்
வந்துபோகும் வேடந்தாங்கல்

காலும் அறையுமெனக்
காணிகள் இருந்தபோதும்
நாளும் அதையெண்ணி
நானும் நாடுகடந்தேன்

பாலும் தோற்கும் மனம்
படைத்த பெற்றோருக்காய்
வேலும் தோற்கும் அல்லி
விழித் துணையாளுக்காய்

சிந்திய வியர்வைத் துளிக்காய்
சிலநூறு கைக்குவரும் -அதைச்
சிந்தாமல் சிதறாமல் அனுப்ப
சிறகடித்துக் கடிதம்வரும்

தளிர்கள் அனுப்ப முகத்தில்
தழும்பேறி வரும்மடல்
குளிருக்கும் வெயிலுக்கும்அதுவே
குடையாய் எனைக்காக்கிறது

தொலைதூர உறவுகளுக்குத்
தகர்க்கப்பட்ட மனதினூடே
தொலைபேசி உரையாடல்
தேனினும் தமிழினும் இனிது

நலமா? சுகமா? என
நாலுவரி கேட்டுமுகக்
களையோடு கண்ணுறக்கம்
கனவுகளும் சிறகடிக்கும்

மலரெனப் பூக்கும்முகம்
மறுநாளே மாறிவிடும்
தளிரெனத் தழைக்கும் இன்பம்
தாரகையாய்ச் சிறுத்துவிடும்

களிறுடல் இளைத்துவிடும்
கனவுகளும் குறைந்துவிடும்
பிளிறுகின்ற யானைப்போலே
பாவிமனம் படுத்திவிடும்

காலமது எடுத்துச் சொல்லும்
கட்டளைக்கு அடிபணிந்து
நாளமதை முறுக்கேற்றி
நாளுமெனை வதைக்கின்றேன்

காலமது கறைந்தபின்னும்
கோலமது களையவில்லை
சாலளவு ஆசைகளோ -ஏழ்மைச்
சாக்கடையில் மூழ்கியதே!


அகரம்.அமுதா

ஞாயிறு, 15 மார்ச், 2009

அம்மாவுக்கு!

பத்துத்திங்கள் சுமந்தீன்று
பாசத்தைப் பொழிந்தஉன்றன்
கண்ணோரக் கதகதப்பில்
காலம்பல வாழ்ந்திருந்தேன்

சிறுவன்என் கைகளிலே
சிறகுகளைக் கட்டிவிட்டு
திரவியம் தேடிவரத்
திரைகடல் தாண்டவெச்சே!

தனிமரமா ஆகிவட்ட
தவிப்பினில் நானிருக்க
"மறந்துட்டியா?" என்றுகேட்டு
மடலொன்று வரைந்தவளே!

உதட்டோடு முத்தமிட்டு
உயிரோடு சேர்த்தணைத்துத்
திகட்டாத அன்புவெச்ச
தாயுன்னை மறப்பேனா?

தடத்தில்தாள் பதியாதுன்
தளிர்த்தோளில் தடம்பதித்து
நடைபயின்று நான்வளர்ந்த
நாட்களை மறப்பேனா?

வயிற்றினில் சுமந்துகொண்டே
வேலைவெட்டி செய்தஉன்னை...
வாயோடு வயிற்றைக்கட்டி
வளர்க்கப் பாடுபட்டஉன்னை...
காலங்கள் மறந்திடலாம்- என்றன்
நாளங்கள் மறந்திடுமா?
நெஞ்சமதை மறந்துவிட்டால்
நல்லகதி சேர்ந்திடுமா?

கடையாணி உடைந்துவிழ
கடைக்குட்டி வண்டிக்குக்கீழ
உடையாத மனமுடைந்து
மூர்ச்சையற்றுப் போனதந்தை

அறியாத சிறுவன்நான்
தெரியாமல் தவறுசெய்ய
திட்டினால் திருந்தேனென்று
தூணில்கட்டித் தோலுரித்தார்

கேள்விப்பட்டு ஓடிவந்து
"கோ"வென அழுதுகோண்டு
இரத்தக்கண்ணீர் வடித்தஉன்னை
இராக்கனவும் மறந்திடுமா?

பெற்றபிள்ளை அறிவுகெட்டு
பேசிய பேச்சையெல்லாம்
ஒற்றைநொடிப் பொழுதுக்குள்ள
பெற்றவள்நீ மறந்திடுவாய்...

அத்தனையும் கனவோடு
அம்புமழை பொழியுதம்மா...
நித்தநித்தம் நினைவிலாட
நித்திரையும் போனதம்மா...

"நான்பிறந்த அப்புறந்தான்
நெல்லுசோற்றைக் கண்டோ"மென்ற
தித்திக்கும் செய்திசொல்லி
திருட்டிசுற்றிப் போட்டவளே

நெல்லுசோற்றை விட்டுத்தள்ளு
நேசமனம் கொண்டவளே
நான்பொறந்த அப்புறம்நீ
நல்சோறு தின்றதுண்டா?

அறுவை சிகிச்சைசெய்து
அம்மாநீ கிடக்கயிலே
அன்புமுகம் பார்ப்பதற்கு
அருமைமகன் நான்வரலே

கருணையுள்ள தாய்மனசு
அதற்கும் கலங்கவில்லே
நினைத்தால் அழுகைவரும்
நதியூறும் கன்னத்திலே

மூன்று அகவையில்நான்
உன்நெஞ்சில் உதைக்கையிலே
உதைத்த காலைச்சுற்றி
முன்னூறு முத்தம்வைப்பாய்

பதினாறு அகவையில்நான்
படுத்திய பாவத்திற்குப்
பிணத்திற்கும் சாபம்சேரும்
பிணந்தின்னி விலகியோடும்

ஆத்தா! அடிஆத்தா!
நான்செத்தாக் கொள்ளிவை
முந்திக்கொண்டு போயிட்டின்னா
பெயரன்கிட்டச் சொல்லிவை!


அகரம்.அமுதா

செவ்வாய், 10 மார்ச், 2009

கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

மாந்தர் மனத்துன்கண் மாசைப் புறமகற்றி
ஆந்தனையும் ஒப்புரவை ஆங்கமைப்போம்; -சாந்தனையும்
உண்டிக்காய்ச் செய்தொழிலில் தாழ்வே(து) உயர்வேது?
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழியக்
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ? -தோய்ந்தறிவும்
நன்கமைய வேண்டின் நறும்பொருள் சேர்நூலைக்
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்க(ர்)வரப் பொய்மறைத்தே
மாய்க்குதென்பார் ஆளனுளார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
தண்ணுற்றே வானில் தவழும் தளிர்நிலவா?
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

துன்பத்தைக் கண்டு துவளாதே! காலத்தால்
இன்பத்தை நல்கி இடம்பெயரும்; -மண்பதையில்
விண்ணற்ற கொப்புலங்கள் வெள்ளணையப் பொய்மறையும்;
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!


அகரம்.அமுதா

வியாழன், 5 மார்ச், 2009

வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


அகரம்.அமுதா --- பாவலர்.இறையரசன் --- கவிஞர். இறை.மதி

இருவரி தீங்குறட்(கு) ஏற்றி இவர்செய்
அரும்பொருள் கண்டுமிக ஆர்த்தேன் -விரும்பி
இறையரசன் பண்ணிலுரை ஈந்த முறைபோல்
திறம்படச் செய்தார்யார் செப்பு!

ஞாலத்தை நன்களந்த நாலடிமேல் மால்கொண்டு
கோலெடுத்துத் தீட்டிவிட்டார் கொள்கையுரை -சாலமில்லா(து)
ஓங்கு பகுத்தறிவை உள்வைத்(து) ஒலித்திட்டார்
மாங்கனியுள் சாறுள்ள வாறு!

பாராளும் முப்பாற்கும் பாகன்ன நாலடிக்கும்
பேராளும் பாட்டிலுரை பெய்திட்டார் -நேராய்
இறையரசன் செய்திட்ட இன்பணி போற்றி
உரையரசன் என்றே உரை!

சூழ்ந்த பகையால் துவண்டொழிந்து போகாமல்
ஆழ்ந்த கலைவளங்கள் அத்தனையும் -தோய்ந்த
அமுத மொழியாய் அகிலத்தில் வாழும்
தமிழ்போல் வாழ்க தளிர்த்து!

பல்லாண்(டு) அவர்வாழப் பண்ணாளும் பைந்தமிழ்ச்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே -இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்(க)!

அகரம்.அமுதா