சிக்குண்டான் போர்வீரன்
தீவிர வாதியிடம்;
நொக்குண்டான்; என்பு
நொறுக்குண்டான்; – ‘பக்’கென்றான்
விட்டு விடக்கெஞ்சி
எட்டாள் பலம்கொண்ட
ஏறு! (1)
கேட்டுச் சிரித்தவக்
கேடனோ வாரணன்;
போட்டுத்தான் தள்ளுவதில்
பூரணன்; – ‘போட்டி
சரியாயோர் மூன்றெ’ன்றான்,
‘தப்பிக்க நீஅப்
பரிட்சையில் பண்ணடா
பாஸ்!’ (2)
‘கூடாரம் மூன்றுண்டு;
கூடாரம் ஒன்றிலே
நாடாரும் நாடும்
நறவுண்டு; - ஆடாப்பல்
ஆடும் புலியொன்றில்,
ஆரணங்கு மற்றொன்றில்,
ஈடுகொடுப் பாயோ
இவைக்கு!?’ (3)
'போட்டி இதுதான்நீ
போய்முதலில் கள்ளருந்து;
காட்டுப் புலிப்பல்
கழற்றியெடு; - வாட்டும்
விரகத்தால் வாடும்
விலைமாதின் நெஞ்சச்
சுரத்தை எறிவாய்
துணித்து!' (4)
அச்சமில் லாதவன்
ஆகத்தில் எங்கேயோ
மச்சமென் றேகள்ளை
மாந்தினான் - அச்சச்சோ!
காட்டுப் புலிக்கூண்டில்
கால்வைத்தான்; கூண்டதுவும்
ஆட்டம்தான் கண்டதுவே
ஆங்கு! (5)
சோலி முடிந்ததெனச்
சுற்றி இருந்தவர்
'காலி இவனெ'ன்று
கத்தினார்; - கேலிசெய்தார்;
ரத்தக் களரியாய்
ராணுவன் வந்துகேட்டான்
'சொத்தைப்பல் பெண்ணெங்கே
சொல்!' (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக