வியாழன், 30 அக்டோபர், 2008

கண்ணீர் அஞ்சலி!

யாரது-
யமனா?
நாய்க்கும் நீ
சமனா?

மரணமென்னும் கைகளால்-
மூக்குவிடும் மூச்சை;
நாக்கில் எழும் பேச்சை;
இதயத் துடிப்பை;
இமைகளின் படபடப்பை;
உலுக்கி உலுக்கி
உதிரச்செய்யும் மந்தியே!

உயிர்குடித்தே
உவகை அடையும்
உந்தியே!

எப்போதும்; எஞ்ஞான்றும்
இடுக்கண் தரவே
எழுதப்படும் தந்தியே!

இறப்பை ஈயவே
இதய வீட்டின் வாசலில்
காத்திருக்கும்
கருணையற்ற நந்தியே!

விந்தையே வியக்கும்
விந்தையை;
தன்னெழுத்தால் வாசகர்க்கு
இன்கண் அளித்த -கள்
மொந்தையை;

விருத்தம் தீண்டா
வியப்பை;
ஐம்பொறி என்னும்
குரங்கேறிக் குலுக்காப்
பொருப்பை;

அறிவியல் அறிவை -தன்
ஆறறிவில் தேக்கிய இருப்பை;
உடலுள் உறைந்த
உயிரென்னும் அருவ
உருப்பைப் பிய்த்து
ஓடி ஒளிந்தாயே!

யாக்கைக்குள் உயிரைத்
தேக்கி ஒளித்தாலும்
உட்புகுந்து ஊடுருவித்
தேடிக் கலைத்தாயே!
-- -- --ஓ! ரங்க நாதா!
ஸ்ரீ ரங்க நாதா!
நின்பேர் கொண்டவனை...
நின்ஊர்வழி வந்தவனை...

காலனெனும்
கள்வன்
பாசக்கயிறென்னும்
நாசக்கயிறெறிந்து
உடலை விட்டான்;
உயரைச் சுட்டான்;
மடலை விட்டான்;
முகவரியைச் சுட்டான்!

முறையா?
மண்ணுலகில்
மனிதராய்ப் பிறத்தலும் ஓர்
குறையா?
-- -- --எழுத்துலகின் சகாப்தமே!
நாவல் வாசிப்போர்
நாவெல்லாம் பலுக்கும்
மகாப் பதமே!

சிறுகதைச் செம்மலே!
கவின்தமிழ்த்தாய் -தன்
காதுகளில் அணிந்துகொண்ட
கம்மலே!

பண்ணறிந்த பாவலனே!
பாரறிந்த நாவலனே!
வசன கர்த்தாவே!
விசனத்தில் விட்டாயே!

நீடுதுயில் நீகொண்டால்
ஏடுதுயில் கொள்ளாதா?

கற்றதும் பெற்றதும்நாம்
கடுகளவே என்றிருக்கக்
கற்பித்தது போதுமென்று
காலனிடம் சென்றாயா?

தரமான படைப்பையெல்லாம்
தரணிக்குத் தந்துவிட்டு
மரண அழைப்பேற்று
மனமுவந்து சென்றாயா?
-- -- --
ஐயனே!
எழுதுகோல் ஏந்துங்
கையனே!

புதுமை விரும்பியாய்ப்
புத்தாக்கச் சிந்தனையை
வளமான உரைநடையில்
வார்த்தவனே!

உன்போல்
புதுமைசெய்யப்
புகுந்தாரை
ஆதரித்து ஆனமட்டும்
ஆர்த்தவனே!

"எனக்குப் பிடித்த கவிதை"
என்றெழுதிக்
கணக்கில்லாக் கவிஞர்களை
காசினியோர் கண்முன்
சேர்த்தவனே!

ஈசல் எதிர்த்தா
எரிமலை சாயும்?
ஈர்க்குப் பட்டா
இளங்கதிர் மாயும்?
கட்டுமரம் தடுத்தா
கடலலை ஓயும்?
கார்முகில் உரசியா
கவின்நிலா தேயும்?

கூடுபுகுந்து -உன்
உயிர்குடித்த கூற்றுவன்
ஏடுபுகுந்து -உன்
பீடழிக்க மாட்டாது
தோற்றான்;

தான் தோற்றதைத்
தக்கணமே தரணியறிய
ஏற்றான்!

மரத்தை அரிக்கும்செல்
வைரத்தை அரிப்பதில்லை...
கரத்தைச் சுடும்தீ
அறத்தைச் சுடுவதில்லை!

அகரம்.அமுதா

திங்கள், 20 அக்டோபர், 2008

அலைகடலா? கொலைமடலா?

26.12.2004- அன்று ஆழிப்பேரலையால் தமிழகக் கரையோரங்கள் அழிந்தபோது!

எடுத்து வலைவீசும்
எம்மக்கள் நடுநிசியில்
படுத்து உறங்கையிலா
பார்கடலே பதம்பார்த்தாய்?

மீன்பிடித்தக் கையோடு
மோகம் மூண்டுவர
மானணைத்துக் கிடக்கையிலா
மற்போர் நீபுரிவாய்?

கத்துகடல் நீரலையே!
கரையுடைத்த சேதியென்ன?
எத்தனைநாள் பகைமையடி
ஏனோ கொலைபுரிந்தாய்?

நிலமே நடுநடுங்கி
நிலைகொள்ளா திருக்கையிலே
உளமே பதறும்படி
ஊரழித்த மாயமென்ன?

ஊர்புகுந்து ஊரழித்(து)
ஒருநூறு பேரழித்துப்
பார்புகுந்து பாரழித்தாய்
பாற்கடலே! நாயமென்ன?

துடுப்புப் பிடிப்பவரை
துடுக்காய்ப் பகைமுடித்தாய்...
மூழ்கிமுத் தெடுப்பவரை
மூழ்கடித்துப் பரிகசித்தாய்...

ஏனென்று கேட்கஒரு
நாதியில்லாக் காரணத்தால்
எழுந்து வந்தாயோ?
எமனுருவம் தரித்தாயோ?

பொதுவாய் வீரனுக்குப்
பொருதுவது தான்சிறப்பு!
முதுகில் குத்துகிற
மூடமதி உனக்கெதற்கு?

வெறிநாய்க்கு நாவினிலே
வியர்ப்பதுபோல் அலைநாவைத்
தெரியக் காட்டினையே!
திண்றொழித்(து) ஓடினையே!

வயல்வெளியை உழுவதுபோல்
அலைவெளியை உழுபவரை...
மூச்சடக்கி முத்தெடுக்க
முனைந்தோடி வருபவரை...

ஏன்டி பகைமுடித்தாய்?
எழுந்துவந்து கொலைபுரிந்தாய்;?
தூண்டில் புழுவாட்டம்
துடிதுடிக்கச் சீரழித்தாய்?

ஒருதாலி உதிர்ந்தாலே
உட்கார்ந்து ஊரழுவும்...
ஊர்த்தாலி பரித்தாயே!
உதிரத்தைக் குடித்தாயே!

உன்பசிக்கு ஊர்ந்துவரும்
நதிவெள்ளம் போதாதா?
ஊனோடு உயிரள்ளி
உணவாக்கிக் கொண்டாயே?

அண்ணாந்து வாய்பிளந்து
ஆகாயம் வரையெழுந்து
கண்ணயரும் குடிசைகளை
கல்லறையாய்ச் செய்தாயே?

துள்ளும் நீரலையே
தூக்குக் கயிறானால்
எள்ளும் தண்ணீரும்
இரைப்பதற்கு ஆளேது?

சூழ்ந்துள்ள கடல்யாவும்
சுட்டெரிக்கும் தீயானால்
ஏழ்கடலும் சுடலையெனும்
ஏளணப்பேர் தோன்றாதா?

விதவிதமாய் ஆமைகள்
விரிகடல்நீ பெற்றிருந்தும்
அதனினும் சிறப்பான
ஆமையொன் றில்லையென்பேன்!

பல்லாமை இருந்துமென்ன?
பாழ்கடலே! பிறவுயிரைக்
கொல்லாமை வேண்டுமடி
கொடியவளே! கற்றிடுவாய்!

அகரம்.அமுதா

புதன், 15 அக்டோபர், 2008

அவன் கவியிலையாம்!

அவன்-
ஏடகம் நடத்தும்
நாடகம் என்பது-
தவ்வித் தாவும்
நவ்வியை ஒத்தது...

விருத்தம் காணும்
அருத்தம் என்பது-
தண்டகம்
தண்ணீரில் வைத்து
முகம் காட்டும்
முண்டகம் ஒத்தது!

== == ==

அவன்-
கன்னல் பற்றிக்
கவிதை கழறினால்-
கேட்போர்
காதுகள் இனிக்கும்...

விழிநீர் பற்றி
விருத்தம் விரித்தால்-
காண்போர்
கண்கள் பனிக்கும்...

தீயைப் பற்றிச்
செய்யுள் செய்தால்-
படிப்போர் பார்வை
பற்றித் தகிக்கும்...

பனியைப் பற்றிப்
பாக்கள் புனைந்தால்
வெந்த நெஞ்சம்
வெப்பைத் தணிக்கும்!

== == ==

அவன்-
தவழும் வயதிலும்
சந்தம் தீட்டியவன்!
விருத்த வயதிலும்
விருத்தம் விரிப்பவன்!

அவன் தீட்டினால்
கலிப்பா -
களிப்பாகும்!
ஆசிரியப்பா -
ஆச்சரியப்பா ஆகும்!

பாவலம் கொழிக்கும்
பா நிலம்- அவனுள்
பாவலம் இல்லையெனப்
பகருவதோ-இருகண்
குருடான
கோகுலம்?

நூல்இடை ஒசியும்
நுண்தமிழை-
நூல்நடை கொண்டு
நுகர்ந்தானைக்
கவியிலை-எனக்
கழருவதோ-ஓர்
கால்நடை?

பழத்தைப் பற்றிப்
பழிச்சொல் பகர்வது
காலத்தால் கனியாக்
காயா?

ஞாயிறைப் பற்றி
நவைகள் நவில்வது
ஞானத்தால் தெளியா
நாயா?

எட்டைப் பற்றி
எள்ளித் திரிவது
எட்டிற் சிறிய
ஏழா?

இரத்தம் பற்றி
இழிந்தன உரைப்பது
சிரங்கில் வழியும்
சீழா?

வாளியால் முகப்பதால்
வங்கக்கடல் வற்றிடுமா?
ஈயிறகின் காற்றுபட்டு
இமயம் இற்றிடுமா?

== == ==

கவி
குன்றேறி உலுக்குவதால்
ஆடாது;
அசையாது புவி!

மறம்
மல்லுக்கு நிற்பதால்
ஆடி அடங்காது;
ஓடி ஒடுங்காது அறம்!

தீவட்டி கொண்டு
தீய்ப்பதால்-
வாரணம்
வண்ணம் மாறா; -அவ்
வண்ணம் மாறா
வாரணம் நேரன்றி
"பாத்தென்றல்" என்னும்
பசுந்தென்றலே!-நீ
வேறா?

பொருள்:- நவ்வி -மான்; முண்டகம் -தாமரை; விருத்தம் -மூப்புப் பருவம், விருத்தப்பா; கோகுலம் -குரங்கு; கவி -குரங்கு; வாரணம் -சங்கு

அகரம். அமுதா

வெள்ளி, 10 அக்டோபர், 2008

எல்லாமுமாகிய அண்ணலே!

விடியாத நாட்டிற்கு
விடிவெள்ளி நீதான்!
விடியலை வழங்கவந்த
வைகரையும் நீதான்!

துருப்பிடித்த உணர்வுகளைத்
துலக்கியவன் நீதான்!
துயிலோடும் தன்மானம்
ஊட்டியவன் நீதான்!

சுதந்தரப் பேச்செடுத்த
சூறாவளி நீதான்!
சுதந்தரம் பொழியவந்த
சூழ்மழையும் நீதான்!

பாரதத் தேரிழுக்கப்
புனைந்தவடம் நீதான்!
பாரதத் தேரோட்டிய
சாரதியும் நீதான்!

இந்தியா ஈன்றெடுத்த
இளையமகன் நீதான்!
இந்தியாவை ஈன்றெடுத்த
இளந்தாயும் நீதான்!

வெள்ளையனை விரட்டவந்த
வில்லம்பும் நீதான்!
கொள்கைகளை வளர்க்கவந்த
கோமகனும் நீதான்!

ஆய்தம்போல் தனித்துநின்ற
அகிம்சைவாதி நீதான்!
ஆயினும்என்? தேசத்தின்
அருஞ்சொத்தே நீதான்!

எல்லாமு மாகிய
அண்ணலும் நீதான்!
எல்லாரது நெஞ்சிலும்
நிறைந்தவனும் நீதான்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

கருநாடகமே!

தஞ்சை உழவனவன் சிந்தும் விழிநீரால்
நஞ்சைநிலம் ஆனதவன் கன்னங்கள் -விந்தையில்லை
கன்னத் தரும்புகின்ற தாடிநெல் நாற்றானால்
பண்ணலாம்முப் போகம் பயிர்!

வேறு

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

நம்மிரு வர்க்கும் காவிரி அன்னை;
நம்மில் வேற்றுமை பார்ப்பாளா? –நீ
நம்மில் வேற்றுமை பார்ப்பது கண்டால்
நற்றாய் அவளும் ஏற்பாளா?

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!

ஊருக் கெல்லாம் சோறு போட்டவன்
ஒருபிடி சோறின்றி வாடுகிறான் -அட
நீருக் கன்றோ கைகள் ஏந்தி
நிம்மதி கெட்டு வாழுகிறான்!

நீர்கேட் டெவரும் நேரில் வந்தால்
மோர்கொ டுத்தவன் வாடுவதா? –அவன்
ஏர்பிடித் துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென் றால்நீ சாடுவதா?

பாருக் கெல்லாம் சமமழை என்றே
பார்த்து வழங்கும் கார்குலமே! –தண்
நீருக் கிங்கே கைகள் ஏந்தி
நிற்பதோ எங்கள் தமிழினமே?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மத்தியில் ஆளும் காங்கிரசே! –தமிழ்
மக்கள் படுந்துயர் தீர்க்க ஒணாவிடில்
மரித்தால் என்ன அவ்வரசே?

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

அகரம்.அமுதா