திங்கள், 28 ஜூன், 2010

பந்து!

பையன்கள் ஆடினர் பந்து!
பாப்பா பார்த்தனள் வந்து!
பந்தை வளைக்குள் நந்து
பாய்ச்சுமுன் பிடித்திட முந்து!

வியாழன், 24 ஜூன், 2010

புகழைத் தேடு!

தம்பி! தம்பி! ஓடிவா!
தங்கக் கம்பி ஓடிவா!
எம்பிக் குதித்து ஓடிவா!
எவரும் மெச்ச பாடிவா!

பள்ளிப் படிப்பை நாடிவா!
படித்தால் உயரலாம் ஆடிவா!
வெள்ளி நிலாவே! ஓடிவா!
விரும்பிப் புகழைத் தேடிவா!

ஞாயிறு, 20 ஜூன், 2010

குறளே வெண்பாவாக! (4)

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! -குறள்-


உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளியதைக்
கண்டால் களிசெய்யா கள்ளதுவே! -கண்டிடினும்
பூமனத்தில் எண்ணிடினும் பொங்கி எழுந்தாடும்
காமத்திற் தோன்றும் களிப்பு!

அகரம் அமுதா

சனி, 12 ஜூன், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (13)



மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (121)

இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (122)

தியங்குதல் –கலங்குதல்.

கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (123)

கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து.

தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (124)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (125)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (126)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (127)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (128)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.


ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (129)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (130)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.
அகரம் அமுதா

செவ்வாய், 8 ஜூன், 2010

கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

அகரம் அமுதா

வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)