ஞாயிறு, 28 மார்ச், 2010

தமிழ்!



கிழவியே! கிளியே! நாளும்
        கிடந்துநான் கொஞ்சத் தூண்டும்
அழகியே! அமுதே! தேனே!
        அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
        கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
        தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
        உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
        கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
        கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
        விழுங்கவும் ஒன்னா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
        தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
        திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டு னுள்ளும்,
        உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
        ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

அகரம் அமுதா

வெள்ளி, 26 மார்ச், 2010

உயிர்விடு தூது!

தூரத்துத் தேய்பிறைக்கு –என்
துயர்சொல்லும் ஓர் கடிதம்
உயிர்சுமந்த கடிதமல்ல –என்
உயிர்கறைந்த கடிதம்!

அடுக்கிவைத்த ஆசைகளால்
அரும்பும்கண் ணீரெடுத்து
அடிநெஞ்சின் துயரத்தை
அணிந்துகொண்ட கடிதமிது!

தனியே அமர்ந்துகொண்டு
தன்னிலை மறந்துவிட்டு
தலைமகள் நலங்காண
தலைவன்? எழுதுகிறேன்!

சங்கடம் உனக்கிருக்கும்
காரணம் பிணக்கிருக்கும்
பிணக்குகள் இருந்தபோதும்
படிக்கவும் மனமிருக்கும்

கண்ணீர் கரையுடைத்துக்
கடித்ததை நனைக்கவேண்டாம்
காரணம் இருக்கிறது –கடிதம்
கண்ணீரில் எழுதியது!

வார்த்தெடுத்த சிற்பமென
வளர்ந்துவரும் நிலவுமென
மொட்டவிழ்ந்த மலர்சூடி
மங்கைநீ நடந்துவர

காமம் தலைக்கேறும்
காதல் சிறகடிக்கும்
கற்பனை மரம்தழைத்துக்
கவிதைப் பூப்பூக்கும்

புதுப்புது இரவு –அதில்
புதுப்புது கனவு
புதுப்புது கவிதை –தந்தது
புது உறவு

புத்துயிர் பெற்றவனாய்ப்
பூத்திருந்த வேளையிலே
வறுமை உருவெடுக்க
வளைகுடா சேர்ந்துவிட்டேன்

“காதலா! சென்றுவா!
காலனே வரினும்கலங்கேன் –நான்
கடைவிழு உறங்கேன்” என்றாய்
கனவுகளை மறந்துவிட்டு
இரவுதனை இழப்பதற்கா?
காதலனை மறந்துவிட்டு
காசுள்ளவனை மணப்பதற்கா?

உன்திருமண செய்திகேட்டு
உயிர்துறந்த சடலம் –நான்
உன்விழியுள் புதைந்து
உயிர்தேடும் படலம்!

புனைந்தேன் புனைந்தேன்
புதுப்புது கவிதை
அத்தனைக்கும் உயிரில்லை
தின்றுதீர்த்தது கழுதை!

நீ
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல –என்
மனத்தோட்டத்தில் பூத்து
மாற்றானிடம் மணம்போனவள்

நெஞ்சில் உனைச்சுமந்து
நிசத்தில் சுமையாய்ஆனேன்
நினைவலைகள் அறுந்துவிட
நித்திரை மறந்துபோனேன்

அன்றென்னைக் காணாஉன்னிடை
இளைத்தது ஓரளவு
இன்றுன்னைத் தொலைத்து
இளைத்தேன் நூலளவு

இறுதிமூச்சை உரையில்வைத்து
உத்தமிக்கு அனுப்புகிறேன்
சத்தமின்றி முத்தம்தந்து
திருப்பியதை அனுப்பிவிடு!

அகரம் அமுதா

செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழன்னை!

போக்கிலி ஆரியக் கூட்டம்
      பூந்தமிழ் நூல்களைப் போட்டுத்
தீக்கிரை யாக்கிய போதும்
      சிதைந்திடாச் செந்தமிழ்த் தாயே!
மாக்கடல் பேரலை யோடும்
      மண்ணதிர் உற்ற பொழுதும்
தாக்குப் பிடித்துநீ வாழ்ந்து
      தழைத்தனை பார்மிசை நன்றே.

தொல்காப் பியமாய்ப் பிறந்து
      திருக்குற ளாகத் தவழ்ந்து
ஒல்காச் சிலம்பாய் வளர்ந்தாய்
      உயர்கம் பனாலே உயர்ந்தாய்
பல்காப் பியமும் பிறங்கப்
      பைந்தமி ழாகிச் சிறந்த
தொல்தமிழ் அன்னையே!வாழி!
      தூநறைச் சுவையென வாழி!

அகரம் அமுதா

ஞாயிறு, 21 மார்ச், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (5)



நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே -தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரை
செந்தழலுக் கீதல் சிறப்பு! (41)

சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (42)

இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (43)

எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (44)

கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (45)

மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (46)

தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (47)

மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (48)

தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (49)

புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (50)

உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம், தாவு –தப்பு, குற்றம், மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை, நிணம் –கொழுப்பு, பண்டு –பழமை; மறு –குற்றம், புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற; கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்.
 
அகரம் அமுதா

சனி, 20 மார்ச், 2010

வானவில்!



மரபறியாத வானம்
அம்பெறிந்த பிறகு வளைக்கிறது
வில்லை

அகரம் அமுதா

வியாழன், 18 மார்ச், 2010

தாய்ப்பால் தருவீரே!


புதல்வர் வேண்டிப் பூசைகள் பலவும்
புரியும் தாய்மாரே!
மதலை அழுதால் வயிற்றுப் பசிக்கு
மடிப்பால் தந்தீரோ?
முதன்மை அழகென முலைப்பால் தவிர்த்தல்
முறைகே டாகாதோ?
புதுமை நோக்கில் புட்டிப் பால்தரல்
புகழைப் போக்காதோ?

ஆவின் பாலை அதன்கன் றிற்கே
அளிக்க மறுக்கின்றீர்
தாவிச் சென்றதைத் தட்டிப் பறித்துத்
தன்சேய்க் களிக்கின்றீர்
ஆவின் கன்றிற் கதன்தாய்ப் பாலே
அமுதம் ஆகாதோ
தாவின் றித்தன் தகைமை காக்க
தாய்ப்பால் தருவீரே!

சேயின் உடல்நலம் பேணக் கண்டதைத்
தின்னக் கொடுக்காதீர்
தாயின் பாலே சேய்நலம் காக்கத்
தக்க மருந்தாகும்
நோயின் பிடியில் தாயும் விழுவாள்
தாய்ப்பால் கொடுக்காக்கால்
தாயிதை உணர்ந்தால் தன்முலைப் புற்றைத்
தவிர்த்திட லாமன்றோ!

அகரம் அமுதா

திங்கள், 15 மார்ச், 2010

அவள்!

பாலைப் போன்ற நெஞ்சம்;
பளிங்கு போன்ற மேனி;
சேலை ஒக்கும் கண்கள்;
சிலந்தி வலையாய்ப் பார்வை;
மாலை வானின் மஞ்சல்
மங்கை மேனி வண்ணம்;
நூலை ஒத்த இடைமேல்
நுங்குகள் இரண்டு தங்கும்!

சோலை என்ற ஒன்றைச்
சுழலும் இடையில் வைத்துச்
சேலை சுற்றிய தென்றல்;
தெருவில் நடக்கும் மின்னல்;
காலையில் தோன்றும் நிலவு;
கண்முன் உலவும் கனவு;
ஆளைக் கொல்லும் அழகி;
அவள்தான் என்றன் மனைவி!

பூமன் வடிக்க ஒன்னாப்
பூவை அவளை என்றன்
மாமன் வடித்தான் நன்றாய்;
மலரம் பேந்தி நிற்கும்
காமன் என்னும் கள்வன்
கரும்பு வில்லை உடைக்க
மாமன் எனக்குத் துணையாய்
மஞ்சம் சேர்ந்தாள் மங்கை;

தேடிக் காற்றும் தோற்கும்
சேரும் எம்மிடைப் பிளவை;
நாடிக் காமன் நிற்பான்
நங்கையின் மலர்விழி அம்பை;
ஆடிக் காற்றாய் நானும்
ஆடும் போது நாணம்
கூடிக் கண்கள் மூடும்;
கூந்தல் போர்வை ஆகும்!

இதழில் இதழைச் சேர்ப்பாள்;
இன்பத் தேனை வார்ப்பாள்;
குதலை மொழியால் என்னைக்
கொஞ்சம் கொன்று தீர்ப்பாள்;
எதையோ சொல்லும் கண்கள்
என்னைத் தின்று தீர்க்கப்
புதிதாய்ப் பிறந்தேன் நானும்
பூக்கும் இன்பத் தாலே!

அகரம் அமுதா

வெள்ளி, 12 மார்ச், 2010

காதல் மயக்கம்!

வா!இப் படிஎன் வஞ்சிக் கொடியே
வாரி அணைக்கின்றேன்
தா!இப் படிஉன் தங்க உடலைத்
தழுவிக் களிக்கின்றேன்
நீஇப் படிஉன் நாணம் காட்டி
நிற்பது கூடாதே
பூஎப் படிதன் பூமுகம் மூடினும்
பொன்னளி கூடாதோ!

நெஞ்சில் நெஞ்சை நேராய்த் தைத்து
நித்திரை கொள்வோமா?
பஞ்சில் தீயைப் பற்ற வைத்துப்
பார்த்துக் களிப்போமா?
அஞ்சி அஞ்சி அகல்வது மேனோ
அருகில் வாராயா?
மிஞ்சும் காதல் மிருகம டக்கி
வெற்றியைத் தாராயா?

ஓரக் கண்ணால் ஒளிந்து பார்த்தே
உள்ளம் களிக்கின்றாய்!
ஆறத் தழுவுதல் ஆகா தென்றோ
அப்புறம் ஒளிகின்றாய்?
ஈர நெஞ்சில் எழுந்த காதல்
எரியும் தழலாகும்
நீரைக் கொண்டு நெருப்பணைப் பதுபோல்
நீவரல் முறையாகும்!

இதழின் தேனைப் பருகத் துடித்தும்
இவன்நிலை காணாயா?
குதலை மொழியாற் கொஞ்சும் கிளியே!
கூடிட வாராயா?
இதமாய் நெஞ்சில் இடியும் இறங்க
இயலா துழல்கின்றேன்
பதமாய் உன்னைப் பருகி முடிக்கப்
பாயில் புரள்கின்றேன்!

பஞ்சைத் தீட்டிப் பகைவரை ஒடுக்கப்
பாயும் நிலைபோலே
நெஞ்சைத் தீட்டி நேரெதிர்ப் பவளே!
நெஞ்சம் இறங்காயா?
மஞ்சம் கொண்ட மடிப்பு குலைய
மற்போர் புரிவோமா?
மிஞ்சும் இன்பம் இருமடங் காக
மீண்டும் முயல்வோமா?

அகரம் அமுதா

செவ்வாய், 9 மார்ச், 2010

தேர்ந்தவர் வாழ்வினில் சேர்ந்திடும் மகிழ்ச்சி!

கூழும் மொர்மிள காயுமே உணவெனக்
குடிசையில் வாழ்வோரைச்
சூழும் மிக்கதோர் மகிழ்ச்சியிற் களவிலை
தூக்கமும் வந்தேகும்
பாழும் செல்வமே பாரினில் மேலெனப்
பார்த்திடும் பேர்கட்கு
வாழும் நாட்களில் மகிழ்ச்சியும் அமைதியும்
மனத்தினில் தங்காதே!

அன்பு பூப்பதும் அறத்தொடு மனிதமும்
அகத்தினில் வைத்தாரை
என்பு தோலுடை இறையெனப் போற்றுவார்
இன்பமும் நிலைகொள்ளும்
பொன்பு கழ்செயும் என்னுமோர் கொள்கையில்
பொழுதினைக் கழிப்பார்க்கு
பண்ப ழிந்திடும் பணத்தினைப் பற்றிடப்
பறப்பார் மண்மேலே!

தேங்கு நீரிலே பாசியும் நாற்றமும்
சேர்ந்திடும் நிலைபோலாம்
தேங்கு செல்வமும் தீங்கினைச் செய்வதைத்
தேருதல் உயர்வாகும்
வீங்கு தொந்தியும் விரும்பிய செல்வமும்
விளைத்தடும் எந்நாளும்
தீங்கு நன்றிதைத் தேர்ந்தவர் வாழ்வினில்
சேர்ந்திடும் மகிழ்வன்றே!

அகரம் அமுதா

சனி, 6 மார்ச், 2010

கணேசன்!

நிலவும் சிரிப்பிலுண்டு
நீள்கதிரும் விழியிலுண்டு
பலவும் அறிவிலுண்டு
பண்பாடும் மொழியிலுண்டு
கலவும் கற்றறிந்து
கல்லார்க்கு எடுத்துரைப்பான்
சிலவும் பலவுமென
செந்தமிழில் கவிபடிப்பான்!

விலகும் மேகங்காண்
வீரனவன் மேனியது
உலவும் மின்னல்காண்
உள்ளங்கை ரேகையது
தளரும் கொடிகள்காண்
தலைமகனார் கேசமது
புலரும் வானங்காண்
புலவனிவன் விழிகளது

அளகம் கொண்டிருந்தால்
அளகேசன் திருவுருவம்
திலகம் கொண்டிருந்தால்
தையலவள் மறுவுருவம்
உலகம் கண்டிருந்தால்
ஊருக்குத் தலைவனிவன்
கலகம் செய்தறியான்
கணேசன் பெயருடையான்!

அகரம் அமுதா

புதன், 3 மார்ச், 2010

ஏங்கித் தவித்தல் இயல்பு!

மடிமை புகுந்த மனிதன் வாழ்வில்
விடிவே இல்லை விளையும் துயர
மடியில் வீழ்வான் மரித்து!

தூங்கிப் பொழுதைத் தொலைத்தார் வாழ்வில்
ஓங்கு வளர்ச்சி உறுதலும் இல்லை
ஏங்கித் தவித்தல் இயல்பு!

இமையின் பொழுதும் அயரா துழைப்பார்க்
கமையும் வாழ்க்கை அழகாய் மகிழ்ச்சி
நிமையின் பொழுதும் நிலைத்து!

திங்கள், 1 மார்ச், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (4)


மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)

கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறங்கூறி வாழ்விப்பார் யார்? (33)

யார்சொல்லி யுங்கேளார்; யானே எனத்தருக்கிப்
பொர்செய்து தோற்பார் புறங்கண்டே -மார்தட்டி
மண்ணையே கௌவும் மடமற நெஞ்சுடையார்
தன்னையே நோகமிகத் தாக்கு! (34)
தாக்கி அழிக்கத் தகையிலார் மேவுவதை
நோக்கி வெகுண்டாய்; நுதியில்லார்ப் –போக்கை
ஒறுக்கத் துணிந்த உரத்தாய்!உன் மூச்சைப்
பறிக்கத் துடித்தனரே பார்த்து! (35)

பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (36)

உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (37)

எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (38)

ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (39)

உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும்* அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (40)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி; வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்; விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்; நுதி -அறிவுக்கூர்மை; நீர்த்திரை –நீரலை; மள்ளன் –மறவன்; விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்.

அகரம் அமுதா