புதன், 30 மே, 2012

அமுதன் குறள்! 1


              அமுதன் குறள்!

தலைவணக்கம்!

என்னைக் கவிபுனைய இங்கே பணித்திட்ட
கன்னித் தமிழ்க்குவணக் கம்.

யாக்கை* எனக்கீந்த யாய்யெந்தை* தாள்*தொழுது
நீக்கமற நின்றேன் நினைந்து.

முடிவாய் வணக்கம் மொழிந்தேன் முருகன்
அடியார்* அவர்தாள் அணைந்து*.

யாக்கைஉடல்; யாய்எனதுதாய்;  எந்தை -எனது தந்தை;  தாள்கால்;  முருகன்அடியான் -பாத்தென்றல் முருகடியான்;  அணைந்துசார்ந்து.

                                அவையடக்கம்!

கண்ணிலான் காசெண்ணும் காட்சியொக்கும் எண்ணெழுத்(து)
எண்ணிநான் பாடும் இயல்பு.

மணல்திரித்துக் காற்றுகட்ட வந்தசிறு பிள்ளைக்
குணம்பொறுப்பீர் நெஞ்சம் குளிர்ந்து.

ஞாயிறு, 27 மே, 2012

அமுத வெண்பா! 4



பொன்னையே ஈந்தபின்னும் போதா தெனநினைத்துத்
தன்னையே ஈவர் தகவுடையார் –முன்னம்
கருங்காயும் ஈயும் கதலி இலையும்
தருங்காயின் தன்னைத் தரும்!

புதன், 23 மே, 2012

பகடி வெண்பா!

தீட்டிய பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லை‘மை’
கூட்டிய பார்வையில்தான் கொங்(கு)உளதோ? –கேட்டவுடன்
நேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளை‘மை’
ஊற்றிய பார்வையென்பாய் ஓர்ந்து! (1)

சித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்
பத்திரம் அப்பாநீ பார்த்துக்கொள்; -அத்திரங்கள்
போடட்டும் காமன்; புதுமண மக்காள்!நன்(கு)
ஆடட்டும் கட்டில் அசைந்து! (2)

இடம்மாறும் பெண்ணால் இடம்மாறும் நெஞ்சம்;
இடம்மாறும் பெண்ணில் இயைவால்; -இடம்மாறும்
யாவும் அணைப்பால்;யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்?
ஓவும்பூங் காற்றும் உணர்ந்து! (3)

சந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்
சந்தியாக் காலத்தைச் சாடுவிரோ? –சிந்தைநீ
செய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று
வைகுமோ நண்பா!உன் வாய்! (4)

‘நான்’என்று சொல்கின்ற நாள்ஓடிப் போச்சு(து)இனி
‘நான்’அன்று ‘நாம்’என்று நாமொழியும்; –தேன்இப்போ(து)
உள்ளங்கை தன்னில்; உணத்தான் தடைபோடும்
உள்ளபடி நாணம் உயர்ந்து! (5)

நங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்
பங்கைத்தா என்றே பகர்வாயோ? –நுங்குநிகர்
நாவால் அவள்பேர் நவின்(று)அரு கேஅழைத்துத்
தேவாய் சுவைக்கையில் தேர்ந்து! (6)

உண்ணா வறண்டே உடலம் உதறுமப்பா;
உண்ணாய் பசித்தும் ஒருவாய்; -எண்ணாய்
எதையும்; அணங்கின் எழில்கண்(டு) உளறும்
அதையும் இதையும்வாய் ஆம்! (7)

பாயே இலையாக பாவை உணவாக
நீயோ பசியில் நெலிவாயே; -நீயாக
அள்ளித்தான் உண்ணவும் ஆகாதே; நாணத்தால்
உள்ளந்தான் நோகும் உடைந்து! (8)

பசிக்கும்; பசும்பால் பழம்பக்கம் இருந்தும்
புசிக்கும் நினை(வு)அற்றுப் போகும்; -புசிக்கின்
புளிக்கும்; உளம்அந்தப் பூவை இடம்மேவிக்
களிக்கும் தடைகள் கடந்து! (9)

முத்தம் பிறக்குமிடம் முந்நீரோ? செவ்விதழோ?
பித்தத்தால் நீயும் பிதற்றுவாய்; -அத்தானின்
ஐயத்தைப் போக்க அவளும் வழங்குவாள்
செய்யவாய் மேலும் சிவந்து! (10)

கச்சிருக்கும் போதும் கரும்புவில்லோன் அம்பிலொன்று
தச்சிருக்கும் போதும் தழும்பேறி –மொச்சிருக்கும்
கொங்கை மிகவாட்டம் கூட்டாதோ? உன்னிரண்டு
செங்கை படத்தான் திரண்டு! (11)

எட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல்
எட்டிக்காய் என்றே இகழ்வாழோ? –எட்டிக்காய்
கின்றமதி இன்முகத்தாள் கேள்வா! அவளிரண்டு
நின்றமுலை தெங்கிள நீர்! (12)

தப்பெல்லாம் இங்கே சரியாம்; சரிதப்பாம்;
எப்போதோ நான்கண்ட உண்மையிது; -இப்போது
காணத் துடிப்பவனே! காலை அதைக்கேட்டால்
நாணித் துவள்வாயோ நன்று! (13)

தோல்வியில்லாத் தோல்வியிது; தொல்லையில்லாத் தொல்லையிது;
வேல்வியில்லா வெல்வியிது; வேல்வியந்த –வேல்விழியாள்;
ஊற்றும்நெய் நீ;உன்னை ஊற்றின் வரமாக
ஈற்றில் விளைந்திடும் இன்பு! (14)

அழகான பெண்ணை அணைப்பாய்; அவளும்
பழகாத பாடம் பயில்வாள்; -அழகில்
அழுந்திக் கிடந்தே அமுதம் எடுக்க
எழுந்து நடக்கும் இரா! (15)

சேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவ
போவதேன் அல்இப் பொழு(து)?என்றே –ஆவல்
தணியா மனத்தாய்! தவிதவிப்பாய்; மற்ற
பணியாவும் போகும் மறந்து! (16)

இராமல் அகலும் இயல்பால் இரவை
இராவென்(று) எவரும் இயம்ப –இராமலே
வைகலும் வைகல் வரக்கண்டு நீநொந்து
வைகலை வைகுவையோ வந்து? (17)

மாசறு பொன்னே! வலம்புரிசங் கே!என்று
பேசரு பேச்செல்லாம் பேசியே -நேசமுடன்
மாதிரை யாகின்ற மஞ்சப் பொழுதுகளை
ஆதிரைச் சித்தா!நீ ஆள்! (18)

கோட்டை பிரபுவே! கொய்யாக் கனிமொழியாம்
ஏட்டைப் புரட்டி எழுதுக –பாட்டில்
முனகல்தான் மோனை; முகிழ்கொலுசின் ஓசை
எதுகை; தழுவல் தளை! (19)

உடலே விறகா; உளமே உலையா;
அடடா விழியே அனலா; –நடக்கும்
சமையல் முடிவில் சனிக்கும் மழலை;
உமையே உருவாய் உரித்து! (20)

படப்பா! 55


எத்தனை புன்னியம் செய்தவை
உன் விரல்கள்...

என் ஒற்றை விரலாவது
உன்மீது படாதா
எனநான் ஏங்கிக் கொண்டிருக்கையில்
மொத்த விரல்களும்
உன்னைத் தொட்டுக் களிக்கின்றனவே

திங்கள், 21 மே, 2012

படப்பா! 54


நீ உடுத்த
தரியில் நெய்யாத ஆடையாக
நான்

நான் உடுத்தத்தான்
இருக்கவே இருக்கின்றனவே
உன் நினைவுகள்

படப்பா! 53


இதயத்தைத் தொலைத்துவிட்டேன்
(உன்னோடு)
விழிப் புணர்ச்சியோடு இருந்ததால்...

சனி, 19 மே, 2012

படப்பா! 52

 
'உன்னை
முடியடியாகப் பாடுவதா?
அடிமுடியாகப் பாடுவதா?'
குழம்பிப் போகிறேன்

உடனே என்னை
ஏற்றுக்கொள்
காதலனாக
அல்லது பக்தனாக...

படப்பா! 51



உன்னைப் பார்த்தவுடன்
முத்த நமஸ்காரம்
செய்யத் தோன்றுகிறது

காலைச் சூரியனைப் பார்த்தால்
சூரிய நமஸ்காரம்
செய்யத் தோன்றுவதைப் போல

வியாழன், 17 மே, 2012

படப்பா! 50


'ஓவியனாகி இருக்கக் கூடாதா?'
முதன் முறையாகக்
கவலைப்பட்டுக் கொண்டேன்

உன்னை எழுத
வார்த்தைகள் கிடைக்காத போது

செவ்வாய், 15 மே, 2012

படப்பா! 49


நீ எனக்குப்
பூச்செண்டு தருவதும்
ஒரு முத்தம் தருவதும்
ஒன்றுதான்

இரண்டிலும் தேனெடுக்கத் தெரிந்த
வண்ணத்துப் பூச்சி நான்

திங்கள், 14 மே, 2012

படப்பா! 48


யாருக்குத் தெரியும்...
உன்போல் ஒரு அழகி
இனியும் பிறக்கக்கூடும்

என்போல் ஒரு
ரசிகன்?

சனி, 12 மே, 2012

படப்பா! 47



கர்ணன் கவச குண்டலத்தோடு
பிறந்ததைப்போல
நாணத்தோடு பிறந்திருக்கிறாய்
நீ

நீ விழியால் சொல்வதை
மொழியால் கூட
சொல்ல முடியாதவனாய் நான்

வியாழன், 10 மே, 2012

படப்பா! 46


உனக்காகவே பிறந்திருக்கிறோம்

நானும்
என்வழி சில
கவிதைகளும்

திங்கள், 7 மே, 2012

படப்பா! 45



என் பத்து விரல்களுக்கும்
சிறகு முளைத்துவிடுகிறது

ஒரு மடிக்கணினியைப்போல்
உன்னைப் பயன்படுத்தும்போது

ஞாயிறு, 6 மே, 2012

அமுத வெண்பா! 3


அடைந்தபெருங் கல்வி அளவிலதென் றாலும்
கிடைத்தநன் நூல்கற்பர் மேலோர் -கடல்தான்
கரையளவு நீரிருக்கக் கண்டு(ம்)உவந் தேற்கும்
விரைகின்ற ஆற்றை வியந்து!

புதன், 2 மே, 2012

அமுத வெண்பா! 2


நல்லாரைக் கண்டால் நயந்தேற்காக் கீழ்மக்கள்
அல்லாரைக் கண்டே அகமேற்பர் -நல்லாய்!
கலைசேர்ந் தழுக்குறும் காண்நற் குமுத
இலைசேரா நீர்க்கீ தியல்பு!