திங்கள், 30 ஜூன், 2008

பேரறிஞர் அண்ணா!

பெரியாரின் வழிநின்றே மூடப் போக்கை
பீரங்கிப் பேச்சதனால் எதிர்த்து வந்தார்!
சரியாய்நம் திராவிடரின் கொள்கை
கூறி தறுக்கியதோர் ஆரியப்பேய் ஓட்டி நின்றார்!
நெறியான எழுத்ததனால் நாளும் நாளும்
நேசத்தமிழ் காத்திட்டார்! கல்வி யென்ப
தறியாத மக்களையும் அவர்தம் பேச்சால்
அறிவிலுயர் பகுத்தறிவை அடையச் செய்தார்!

பேச்சென்றால் அவர்பேச்சு முகிலின் வீச்சு!
பேச்சதனைக் கேட்போர்க்குள் மின்னல் வீச்சு!
ஆச்சதனால் ஆரியர்மேல் இடிவீழ்ந் தாச்சு
அன்றுமுதல் அவர்கொட்டம் அற்றே போச்சு!
நாற்றிக்கும் நம்பெருமை நாட்ட லாச்சு!
நறுந்தமிழ் ஏடாளும் நம்மண் ணாச்சி
ஆட்சிப்பாங் காயாற்றி அகிலம் போற்ற
அருமைமிகு சாதனைகள் பலசெய் தாச்சு!

ராமகதை பாடுகின்ற மேடைக் கூத்தை
ராத்திரிகள் பலவிழித்து ரசிப்போர்க் கெல்லாம்
காமகதை அதுவென்றே கண்டு கொள்ள
கம்பரசம் தந்திட்டார்! தமிழர் மாட்சி
பூமியுள நாள்வரையும் போற்றச் செய்தே
பூந்தலைவர் துண்டலைவீழ் கடலோ ரத்தில்
ஓய்வெடுக்கப் போய்விட்டார்! போனா லென்ன?
உயர்தமிழர் நன்னெஞ்சில் வாழும் போதே!

அகரம்.அமுதா

செவ்வாய், 24 ஜூன், 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா


சனி, 21 ஜூன், 2008

புதியதோர் உலகம்செய்வோம்!

புதியதோர் உலகம்செய்வோம் -ஆங்கே
புகவரும் மடமையைத் தடையும்செய்வோம்!

மூடப் பழக்கங்களைக் -கண்
மூடித் தனத்தொடங் கேற்பதற்கில்லை!
சாடத் தலைப்படுவோம் -பழஞ்
சாத்திரம் சடங்கினுக் கங்கிடமில்லை!

ஒற்றுமை ஓம்பிடுவோம் -அங்(கு)
ஓர்குலம் ஓர்நிரை வேற்றுமையில்லை!
குற்றமே புரிந்திடினும் -திருக்
குறள்வழி திருத்துவோம் தண்டனையில்லை!

சாதிக்குப் பிறந்தவனாய் -மிகத்
தறுக்கிடு வோர்கங் கிடமுமில்லை!
சாதிக்கப் பிறந்தவனாய் -உரை
சாற்றிடு வோர்க்கொரு தடையுமில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -பாயும்
நதிகளை இணைக்கவோர் விதியும்செய்வோம்!

பார்க்குயிர் நாடியெனத் -திகழ்
பாட்டாளி தான்முதல் வகுப்பினனாம்!
வேர்த்தவன் உடலுழைப்பில் -தன்
மேனியை வளர்ப்பவன் இழிந்தவனாம்!

ஏழைசொல் அம்பலத்தே -சென்(று)
ஏறிடும் நிகழ்வுகள் பலநடக்கும்!
கீழிவன் மேலவன்காண் -எனும்
கீழ்மைக்குத் தண்டனை மிககிடைக்கும்!

அணுகுண்டோ டாயுதங்கட் -கங்(கு)
அனுமதி யென்பது சிறிதுமில்லை!
அணுக்கத்தோ டிணைந்திருந்தே -அங்(கு)
அரசுகள் நடந்திடும் சிறுமையில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -யாவும்
பொதுவுடை மையெனும் கொள்கையும்செய்வோம்!

ஆண்பெண் இருவருக்கும் -அங்(கு)
அவசியம் உயிர்நிகர்க் கற்புநெறி!
காண்கின் மதுவிலக்கை -மிகக்
கடுமையென் றாக்கிடும் அரசறிக்கை!

இயந்திர மயமிருக்கும் -அவை
இருப்பினும் பணியிடம் பலவிருக்கும்!
வியந்திடு பொருளிருக்கும் -பண்
விளம்பிடும் வழியிலப் பார்நடக்கும்!

செந்தமிழ் அரியனையில் -ஏறிச்
சிறப்புற ஆளுமப் பாரினிலே...
எந்தமிழ் மாந்தரெல்லாம் -நாளும்
ஏறுவர் புகழெனும் தேரினிலே...!


அகரம்.அமுதா

புதன், 18 ஜூன், 2008

புதிய நிலா!

பாலன்ன வெள்ளியதாய்; பருவக் காற்றாய்;
பழச்சுளையின் தேன்சாறாய்; பருவ மங்கைச்
சேலன்ன வீச்சுளதாய்; தெளிந்த ஊற்றாய்;
திகட்டாத பால்மழலை செப்பும் சொல்லாய்;
காலத்தை வென்றவனாம் கவியின் ராஜன்
கண்டெடுத்த புதுமைப்பெண் போல்நி மிர்ந்தே
ஞாலத்தைக் காண்பதுவாய்; நாளும் தோன்றி
நலங்காட்டும் புதியநிலா வானில் வேண்டும்!

ஏழைக்குக் கஞ்சியுமாய்; செல்வ ருக்கும்
எட்டுகிற நிம்மதியாய்; ஆளன் இல்லாச்
சேயிழைக்குத் தூதாய்நம் வாய்ம னைவாழ்
சேந்தமிழின் இனிமையுமாய்; கேட்டு வக்கும்
யாழினிய மெல்லிசையாய்; குறளோன் பண்பாய்
யாத்திட்டச் செய்யுளுமாய்; இன்பக் கொத்தாய்;
ஏழுலகும் காணாத இன்பம் தேக்கி
இளையநிலா எழுச்சிநிலா எழுதல் வேண்டும்!

நான்காணும் திசையெல்லாம் நாடி வந்து
நல்லொளியைச் சிந்திடத்தான் வேண்டும் அந்த
வான்காணும் உயரத்தில் சிந்தை மேவி
வளமார்ந்த கவிதைகள்நான் வார்க்கும் போழ்தில்
தேன்காணும் இன்சுவையை என்றன் சொல்லில்
தேக்கிடத்தான் வேண்டும்நல் வனப்பைக் காட்டிக்
கூன்காணும் பழையநிலா போலே யன்றிக்
கொள்கைநிலா கோளநிலா எழுதல் வேண்டும்!


அகரம்.அமுதா

ஞாயிறு, 15 ஜூன், 2008

குறளே வெண்பாவாக! (1)

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்! -குறள்-


பட்டன்னப் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள்! -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டு காணாதக் கால்!

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து. -குறள்-


சேல்தீட்டி மைவடியச் செய்திடேன் காதலவர்
வேல்வீச்சுக் கண்ணகத்தே வீற்றுளதால் -மால்கொண்டு
தீட்டும்மை என்னவரின் தேகத்தைத் தான்மறைத்து
வாட்டுமெனை என்றே மருண்டு!

அகரம்.அமுதா

வியாழன், 12 ஜூன், 2008

வள்ளுவத்தை நாளும் வழுத்து!

உள்ளி மனிதர் உவந்தொழுக்கம் பேணிட
வள்ளுவர்போல் யார்சொன்னார் வந்து!

சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு!

தெள்ளியதோர் ஓடையெனத் திண்மன மாசகற்றும்
வள்ளுவத்தை நாளும் வழுத்து!

அகரம். அகரம்

திங்கள், 9 ஜூன், 2008

குறள்காத்தல் கோளாங் குறி!

இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
திருக்குறள்போ லுண்டோ திரு?

விண்தேடும் வள்ளுவனார் வேய்ந்த* குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி!

ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
பாகாப்பாய் நன்கு படித்து!

திரள்*செல்வம் என்றேநம் தீங்தமிழ்க்கு வாய்த்த
குறள்காத்தல் கோளாங் குறி!

குறட்பா படித்தாய்ந் துணரின் முறையாய்த்
திரண்டு வருமே தமிழ்!

வேய்ந்த* -சூடிய, திரள்* -மிக முடுகிய நடையுடைய பாட்டு!


அகரம்.அமுதா

வெள்ளி, 6 ஜூன், 2008

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!


தமிழ்வாழ்த்து!

வானை பிறைவாழ்த்தும் வல்லமை தா!தமிழே!
ஆனமட்டும் முத்தமிழ் ஆசானை -நானுவந்தே
நற்கவி தீட்டுவதால் நற்றமிழே! உன்றனிரு
பொற்கழல் போற்றல் புகழ்!

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!
அஞ்சுகத்தாய் சேயாகி அண்ணாவின் தம்பியுமாய்
தந்தஉரை யால்குறளோன் தாசனுமாய் -செந்தமிழர்
சிந்தை நிறைந்தவராய் செம்மொழி கண்டவராய்
அஞ்சுமுறை ஆண்டார் அறி!

எழுகடலை உட்புகுத்தி யாப்பிசைத் தோனுக்
கெழுகடல்மேற் சிற்பம் எடுத்தார்! -தொழுமிறைவன்
தென்னை இளநீருள் தென்னை தனைவைத்த
உண்மை நிலையதனை ஓர்ந்து!

மூவடி யாலளந்தோன் மூவுலகை ஓர்முக்கால்
சேவடி யாலளந்தான் தீம்புலவன் -ஆவலோ(டு)
இங்கவனின் இன்குறளுக் கோவியமே தீட்டிவிட்டார்!
தங்தத் தமிழ்வாழத் தான்!

பேச்சில்; செயலில்; பெரிதும் இவரெழுத்தில்;
மூச்சில்; விழிப்பார்வை ஓரத்தின் -வீச்சில்;
நடையில்; நளினத்தில்; நல்லுருவில் நன்றாய்த்
தடையின்றி வாழும் தமிழ்!

அடிமுடி காணா அருந்தமிழ் கண்டே
நொடிநொடி தோறும்‘பா’ நூற்றார் –அடிமடி
தான்கனக்க அஞ்சுகமா ஈன்றார்? இலையிவரை
வான்தமிழே ஈன்றதென வாழ்த்து!

அன்னை தமிழென் பதில்தவ றில்லை;
தமிழ்அன்னை எனுஞ்சொல் அதுதவறே! -இன்றமிழே
ஆணுருவேற் றிங்கிவராய் ஆனதனால் இற்றைமுதல்
பேணுதமிழ் ஆண்பால் பெறும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 3 ஜூன், 2008

செல்வம்!


தழைத்த குமுதம் உடனிருந்தும்
அழுக்குத் துணிசேர் தண்ணீர்போல்
உழைப்போர் கைசே ராதேய்ப்போர்
உள்ளங் கைசேர் தரவியமே!

விலகிச் செல்லும் உறவுகளை
விரைந்தே ஒட்டும் செயலதனால்
நலஞ்சேர் தமிழில் நயமுடனே
நவிலும் பெயரது பசையன்றோ!

உள்ளார் இல்லார் எல்லாரும்
உள்ளிப் பதுக்கினும் ஓரிடத்தில்
நில்லா மல்நீ செல்லுதலால்
செல்வ மெனும்பேர் பெற்றனையோ?

மாசை மனதில் வைத்தோர்தம்
மடியோ டும்நீ சேருதலால்
காசென் னும்பேர் பெற்றனையோ?
காசினி யில்சிறப் புற்றனையோ?

மனமென் பதில்லா மாந்தரொடும்
தனமே! உனக்குத் தொடர்புண்டு...
குணமே இல்லாப் பேருடனும்
பணமே! உனக்கு நட்புண்டு...

நாநய மில்லா பேர்களையும்
நாடும் உன்பேர் நாணயமாம்...
ஆனபேர் யாவிலும் பொருளுமில்லை
ஆயினும் பொருளுமுன் பேர்பெறுமாம்!

அகரம்.அமுதா