வியாழன், 30 ஏப்ரல், 2009

அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

மெய்போய் துளைத்திட்ட வில்லம்பால் தன்மகவும்
எய்போல் கிடக்குதென்(று) ஏற்றினாள் -ஐயமற
அன்னையவள் கூறுவமை ஆகினேன் ஐய!உம்
அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

அகரம்.அமுதா

சனி, 25 ஏப்ரல், 2009

அவள்!

மயில்நடை கற்க மரமடக்கம் கற்கக்
குயிலோ எனில்தேன் குரலே -பயில
முகில்வண்ணம் வேண்டி முறையிட மன்றல்
அகில்வேண்டி நிற்கும் அணங்கு!


அகரம்.அமுதா

திங்கள், 20 ஏப்ரல், 2009

சொன்னது நீதானா சொல்!

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் -மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றித் தோகை உனைமறக்கச்
சொன்னவள் நீதானா சொல்!

அகரம்.அமுதா

புதன், 15 ஏப்ரல், 2009

உள்ளிருள் நீக்கும் ஒளி!

அடிதோய் இருளை அகற்றா விளக்கைக்
கடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ?
நள்ளிருள் நீக்குவது ஞாயிறாம்; தீங்குறளே
உள்ளிருள் நீக்கும் ஒளி!

அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்
இல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி
தொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்
உள்ளிருள் நீக்கும் ஒளி!

தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்து
உன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்
சொல்லுக் கிணையுண்டோ? தொல்லுலகில் வேறுண்டோ
உள்ளிருள் நீக்கும் ஒளி?


அகரம் அமுதா

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

இட்டவடி நோவும் அவட்கு!

சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
இட்டவடி நோவும் அவட்கு!

நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே
பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை
பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே
இட்டவடி நோகும் இவட்கு!


அகரம் அமுதா

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

உழவின்றி உய்யா துலகு (2)!

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
உழவின்றி உய்யா துலகு!

பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
துழவின்றி உய்யா துலகு!

வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
உழவின்றி உய்யா துலகு!

வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
உழவின்றி உய்யா துலகு!

புழங்குதல் -கையாளுதல்; வியல் -மிகுதி; கொழுநீர் -பெருகும் நீர்


அகரம் அமுதா