கங்குல் கிழித்துக்
கவின்சேர் கதிர்பரப்பித்
திங்கள் சுரவம்
சிறந்தெழுக; - பொங்குக
பொங்கலே! எம்முழவர்
தங்குக வின்பந்
தழைத்து!
சுறவம் பிறந்தாள்;
துயரம் களைந்து
வரவாய் நலங்கள்
வளர்ப்பாள் – இரவா
நிலையும் இறவா
நிலையும் அடைவார்
நிலையாய் உழவர்
நிலைத்து!
இன்றே தமிழர்க்
கினியநாள்; காளையொடு
கன்று கறவைக்காய்க்
கண்டநாள்; - இன்றுபோல்
எங்கள் உழவர்க்(கு)
இனியொரு நன்னாளை
எங்குபோய்த் தேட
இனி?
பாரில் தமிழரே
பண்பாய் உழவுக்கு
நேரில் திருநாள்
நிகழ்த்தினர் - யாரிதுபோல்
பொன்னாளைக் கண்டார்?
புகல்! இதற் கீடான
நன்னாளைக் கண்டால்
நவில்!
வாழிய தமிழர்
வயல்சார் தொழிலனைத்தும்;
வாழிய காளை
கறவைகளும்; - வாழிய
நன்றாய் உழவர்
நனியவர் வாழ்க்கை
என்றும் சிறக்க
இனிது!
பொங்கா திருக்குமோ
பொங்கல்? மகிழ்ச்சிவந்து
தங்கா திருக்குமோ
தாரணியில்? – மங்காப்
புகழுடைய மாத்தமிழர்
பூமிக் களித்த
தகவுடைய நாளிஃதில்
தான்!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக