ஞாயிறு, 27 நவம்பர், 2011

படப்பா! 33


இருக்கிற ஒரே
இதயத்தையும் கொடுக்கிறோமே
என்பதல்ல
என் வருத்தம்

உனக்குக் கொடுப்பதற்கு
ஒரேஒரு
இதயம்தானே இருக்கிறது
என்பதுதான்
என் வருத்தமெல்லாம்

வெள்ளி, 25 நவம்பர், 2011

படப்பா! 32


வீசத் தயாராயிரு
பாசப் பார்வையை
அல்லது
பாசக் கயிற்றையாவது

புதன், 23 நவம்பர், 2011

படப்பா! 31


விருப்பப் பார்வை
வீசவில்லை என்றாலும்
பரவாயில்லை
வெறுப்புப் பார்வையாவது
வீசிவிட்டுப் போ

நீ என்னைப்
பார்த்துவிட்டதாக
ஊர்முழுக்கத் தம்பட்டம்
அடிக்க வேண்டும்
எனக்கு

திங்கள், 21 நவம்பர், 2011

படப்பா! 30


தின்றால் கொல்லி
சயனைடு

பார்த்தால் கொல்லி
நீ

சனி, 19 நவம்பர், 2011

படப்பா! 29


உஸ்ஸிற்குப் பின்தான்
கிஸ் போலும்
புயலுக்குப்பின்
அமைதிபோல

வியாழன், 17 நவம்பர், 2011

படப்பா! 28


1331 -வது
குறள்தானே
உன்
உதடுகள்

செவ்வாய், 15 நவம்பர், 2011

படப்பா! 27


சாட்சியே இல்லாமல்
கொலைசெய்வது எப்படி
எனக்
கற்றுத்தரும்
பல்கலைக் கழகம் நீ

இரண்டு விழிகளுமே
பயிற்சியாளர்கள்

ஞாயிறு, 13 நவம்பர், 2011

படப்பா! 26


நீ
வில்போல்
வளைவதில்
வில்லுக்குப் பெருமைதான்

உன்னைப்போல்
வளையமுடிவதில்லையே
என்றுதான்
வறுத்தம் கொள்கிறது

வெள்ளி, 11 நவம்பர், 2011

படப்பா! 25


சிலர்
வெட்டிப் பேசுவர்
சிலர்
வெட்டியாகப் பேசுவர்
உன்னால் மட்டுமே
முடிகிறது
(விழியால்)
வெட்டிவெட்டிப் பேச

புதன், 9 நவம்பர், 2011

படப்பா! 24



முக்தி பெறட்டும்
முத்தமிழ்
மௌனம் களை

திங்கள், 7 நவம்பர், 2011

படப்பா! 23


உனக்கு
இடைதான்
இல்லை என
நினைத்திருந்தேன்
இதயமும்
இல்லை போலும்

இருந்திருந்தால்
இதயத்தில் ஓரிடம்
எனக்காக
ஒதுக்கியிருக்க மாட்டாயா

சனி, 5 நவம்பர், 2011

படப்பா! 22


வடக்கு
வளர்கிறது
தெற்கு
தேய்கிறது
என்பது
எத்தனை உண்மையோ
அத்தனை உண்மை

உன்
மார்பு வளர்வதும்
இடை தேய்வதும்

படப்பா! 21


ஒய்யாரமாக
சாய்ந்து நிற்கும்
உன்னை விட்டுவிட்டு
ஒருவாறு சாய்ந்திருக்கும்
பைசா கோபுரத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்களே
உலக அதிசயமாக

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

தேசிய சாலை!

கன்னிநான் தேசியச்சால
கார்கள்பல ஓடுஞ்சால
உங்கிட்டக் காரிருந்தா
கலந்துகோ ரேஸுல
(கன்னிநான்)
நேர்சால எந்தன் மூக்கு
உதடுகள் ஸ்பீடு பிரேக்கு
ஒழுங்காக ஓட்டுனீண்ணா
உடையாது உந்தன் மூக்கு
கன்னங்கள் வழுக்குச்சால
கண்களில் சந்திக்கும்
சரிவேகம் போகும்காரே
சிக்னலில் முந்திக்கும்
(கன்னிநான்)
மேம்பால மார்புங்க
மெதுவாக ஏறுங்க
சரிவுல சருக்கிடாமே
சமத்தாக ஓட்டுங்க
கைநெடுஞ் சாலைங்க
கருத்தாகப் போய்வாங்க
வெளியேற விரல்கள்பத்தும்
வெளியேற்ற சாலைங்க
(கன்னிநான்)
விரைவுச் சாலதோள்கள்
விருப்பம்போல் ஓட்டலாம்
விடிகிற வரைக்குமங்கே
வெற்றிக்கொடி நாட்டலாம்
தொப்பூழே ரௌண்டானா
அதில்பலர் கவுந்தானாம்
மப்பிலே காரஓட்டி
மல்லாந்து கிடந்தானாம்
(கன்னிநான்)
இடையோட இருபுறமும்
இருக்குது வளைவுங்க
அதிவேகம் போகுங்கார்கள்
அதில்நிலை குளையுங்க
கால்களே ஒருவழிச்சால
தொடைரெண்டும் இருவழிச்சால
அங்கேயோர் ‘யு டர்ண்’போட்டா
அங்குண்டு அழகியசோல
(கன்னிநான்)
மேடுண்டு பள்ளமுண்டு
வளைவுண்டு நெலிவுமுண்டு
விதவித மானகார்கள்
விரைந்திட இடமும்உண்டு
விதியில்லாச் சாலநான்
விளயாட வாரலாம்
பையிலே பணமிருந்தா
பலரௌவுண்டு போகலாம்!
(கன்னிநான்)

திங்கள், 10 அக்டோபர், 2011

மாமன் வந்தான்!

ஆண்:- ஏற்றிய நெய்விளக் கெரிகிற வேளையில்
 காமன் வந்தான் –என்னைக்
 காண வந்தான்
பெண்:- வந்த
 காமனும் கைத்திறன் காட்டிய வேளையில்
 மாமன் வந்தான் –நடு
 சாமம் வந்தான்

ஆண்:- விடச்சொல்லிக் கேட்குது சின்னஇடை –வந்து
       தொடச்சொல்லித் தூண்டுது அன்னநடை
பெண்:- தடைசொல்லப் பார்க்குது நெஞ்சுக்குழி –முத்தம்
       இடச்சொல்லிக் கேட்குது கன்னக்குழி
(ஏற்றிய…)
பெண்:- உன்னிடம் தந்தது ஓரளவு –இன்னும்
       உள்ளது என்னிடம் ஊரளவு
ஆண்:- அத்தனை யும்எனக் குரிமையடி –மெல்ல
       அள்ளிட நாணுது இளையகொடி
(ஏற்றிய…)

வியாழன், 6 அக்டோபர், 2011

மனுசன நெனச்சே சிரிக்குறேன்

மனுசன நெனச்சே சிரிக்குறேன் –அவன்
மனசுல உள்ளத கணிக்குறேன்!

நீதி நேர்மய நெனக்கல –சரி
பாதி பொண்ணுண்ணு மதிக்கல
கருத்துல தெளிவில்ல கண்மண் தெரியல
கால்போற போக்கு சரியில்ல –உடல்
ஆட்டங் கண்டா அப்போது தான்டா
ஆண்டவன் இருப்பது தெரியுது –அவன்
அருள்மனம் வேண்டி உருகுது! -இந்த
(மனுசன)
எளமத் திமிருல திரியுறான் –அவன்
எளச்சவன் கெடச்சா எகுறுறான்
தலகீழ நிக்குறான் தாண்டவ மாடுறான்
தானென்னு மகத்தையில் தருக்குறான் –இத
எடுத்துச் சொன்னா எதிரில் நிண்ணா
எதிர்த்தவன் ஆவிய பிடுங்குறான் –எமன்
எதிரே வந்தா நடுங்குறான்! -இந்த
(மனுசன)

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்


காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்
காலம் போகிற போக்கைச் சொல்கிறேன்
காசு கொடுத்தா நாலும் செய்கிற
காலம் இதிலே கவனம் என்கிறேன்
(காது)
அழகாய்ச் சிரித்து அறிவாய்ப் பேசி
அனைத்தையும் சுரண்டும் உலகமடா –தினம்
அதனால் எத்தனை கலகமடா
விழுங்கி ஏப்பம் விடுவதில் இந்த
வீணருக் கில்லை உவமையடா –அவர்
விழுந்து மடிந்தால் உவகையடா!
(காது)
தனக்கு என்றால் தப்பைச் சரியெனத்
தயக்கம் இன்றிப் பறைசாற்றும் –அவர்
தன்னலம் ஆடும் வெறியாட்டம்
மணக்க மணக்கப் பேசும் இந்த
மடயரின் மனதில் முடைநாற்றம் –அது
முற்றிலும் அறிவை வெளியேற்றும்
(காது)
காசுக் காக கல்வி விற்குற
கல்விக் கடைகள் நிறைஞ்சாச்சு –பணம்
மனுசனின் கண்களை மறைச்சாச்சு
பேசும் தரமும் வாழ்வும் குணமும்
மேலை நாட்டை ஒத்தாச்சு –தமிழ்
தமிழரின் நாவினில் செத்தாச்சு!
(காது)
போதையின் பாதையில் போகிற கூட்டம்
பொழுதை அதிலே கழிக்குது –பெரும்
பொருளை அதிலே அழிக்குது
மாதரும் போதையின் வழியில் செல்கிற
வகையும் நாட்டில் செழிக்குது –கண்டு
மானமும் கற்பும் விழிக்குது
(காது)
புதுமை நோக்கில் எதையும் செய்து
புதையின் குழியில் விழுவானே –அது
புரிந்தபின் உட்காந் தழுவானே
எதுமெய் பொய்யென அறியும் தெளிவும்
இவனுக் கில்லை மொழிவேனே –இவன்
இருந்தால் பயனென் பதுவீணே!
(காது)

திங்கள், 26 செப்டம்பர், 2011

போனால் இளமை திரும்பாது!


போனால் இளமை திரும்பாது –அது
போனபின் ஆசை அரும்பாது
காதல் புரிவோம் இளமையிலே –கட்டிக்
கரும்பே கனியே இளமயிலே!
(போனால்)
மீனா தூண்டில் முள்ளா கண்கள்
விருப்பம் போலே வடிவெடுக்கும் –எனை
ஊனாய் தினமும் உண்டு முடிக்க
எப்போது உன்மனம் முடிவெடுக்கும்?
(போனால்)
தொட்டால் சுடுமா விட்டால் சுடுமா
துய்த்தால் தெரியும் காமத்தைக் –கை
பட்டால் நாணம் பறந்து போகும்
பருகித் தீர்ப்போம் இன்பத்தை!
(போனால்)
மச்சம் சிவக்கும் மர்மக் கலையை
மஞ்சம் சேர்ந்தால் கற்றிடலாம் –உன்
உச்சந் தலைமேல் உச்ச இன்பம்
உருகி வழியப் பெற்றிடலாம்!
(போனால்)
இரவுக் குள்ளே இன்னொரு இரவாய்
இருக்கும் கூந்தல் வீட்டினிலே –நாம்
இரவோடு இரவாய் இன்பக் கவிகள்
எழுதிக் குவிப்போம் ஏட்டினிலே!
(போனால்)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஒத்தக்கல்லு மூக்குத்தி

ஒத்தக்கல்லு மூக்குத்தி
ஓரப்பார்வ மீன்கொத்தி
நாம்புடிச்ச அத்தமக
நளினமான மான்குட்டி!
(ஒத்தக்கல்லு)
கன்னம்ரெண்டும் பூச்சட்டி
கட்டுங்கூந்தல் கரிச்சட்டி
அச்சில்வார்த்த அந்தப்புள்ள
அதரம்ரெண்டும் கருப்பட்டி
அமஞ்சபுருவம் மண்வெட்டி
அழகுமேனி பொன்கட்டி
எதிர்த்துத்தோத்த வட்டநெலா
எட்டிநிற்குது வரிகட்டி
(ஒத்தக்கல்லு)
பற்களெல்லாம் பனிக்கட்டி
பரந்தமார்பு தேர்முட்டி
பூச்சுழியும் பூத்திருக்கும்
இடுப்பதன்கீழ் இருக்கொட்டி
ஆலங்கட்டித் தொடைதட்டி
அங்குமிங்கும் நடைகட்டி
வருமவளைக் கொண்டாடும்
அகிலவுலகம் கைதட்டி
(ஒத்தக்கல்லு)
எம்மனசில் குழிவெட்டி
காதலென்னும் விதைகொட்டி
ஆசைநீரை வார்த்துவந்த
அவளேஎன் அசல்வட்டி
அன்பென்னும் நெரிகட்டி
நாணத்தைச் சரிகட்டி
கட்டிலோடு கண்விழித்துக்
கதைபடிக்கும் சிறுமெட்டி

திங்கள், 5 செப்டம்பர், 2011

பூமியிலே வாழவிடு!


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் கதவுகளையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அவரவர் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!