தோழி விடுதூது! (1)
புறா மனிதப்பெண்ணைத்தன் காதலுக்குத் தூதுவிட்டால் எப்படியிருக்கும் என்ற சின்ன கற்பனை....
தோழி:- (மனிதப்பெண்)
வரமாட்டாய்; சொல்புறவே!
பம்மாத்துக் காட்டிப்
பசப்பாதே; - தம்மாத்துண்(டு)
அன்பா எனக்குன்மேல்?
ஆழி அளவுண்டே!
பின்பேன் மறைக்கிறாய்?
பேசு! (1)
புறா:-
சொல்லவும் கூடுதில்லை;
சொல்லாமல் வெற்றுவாய்
மெல்லவும் கூடுதில்லை;
மேனகையே! - கல்லவும்
கூடுதில்லை; கண்ட
கனாவைக் கருதவும்
கூடுதில்லை என்செய்வேன்
கூறு! (2)
தோழி:-
என்ன புதுக்கதை?
என்னிடம் சொல்வதற்(கு)
என்ன தயக்கம்?
எடுத்துரை; - என்னால்
இயன்றதை நானுனக்கு
இக்கணமே செய்வேன்;
பயந்தனை விட்டுப்
பகர்! (3)
புறா:-
செய்ய முடிந்ததைச்
செய்கிறேன் என்கிறாய்;
எய்த(து) எதுவென்(று)
இயம்புகிறேன்; - மொய்த்தொருவன்
கைதொட்டுக் காதல்
கழறக் கனாக்கண்டேன்;
மெய்மொத்தம் போனேன்
மெலிந்து! (4)
தோழி:-
அடிக்கள்ளி! காதல்
அரும்பியதா? வாசக்
கொடிமல்லி வெண்மைக்
குருகே! - நொடியில்
விடைகாண ஆகா
வினாவன்றோ காதல்!?
அடைந்தமனத் தாபம்
அள! (5)
புறா:-
என்னென்று சொல்வேன்?
எதுவென்று சொல்வேன்?என்
முன்நின்று கேட்கும்
முழுமதியே! - மின்னொன்று
கண்ணால் எனைவளைக்கக்
காத(ல்)வலை நெய்தவனை
எண்ணாத நாளே(து)
எனக்கு! (6)
தோழி:-
கட்டழகன் தானா?
கருப்பா? உடல்வெளுப்பா?
சட்டென ஈர்க்கும்
சமர்த்தனா? - பட்டெனப்
பார்த்ததும் காதலா?
பன்னாள் பழக்கமா?
ஈர்க்குமெழிற் பூவாய்!
இயம்பு! (7)
புறா:-
ஒத்தநொடி பார்த்தே
உயிர்விட்டேன்; நானவனைப்
பத்துநாள் பார்த்தா
பசலையுற்றேன்? - மொத்தத்தில்
தோள்பார்க்கக் குன்றும்
தொடைநடுங்கும்; என்னவன்
ஆள்பார்க்க ரொம்ப
அழகு! (
தோழி:-
கனவிலே மட்டும்தான்
காதலா? நேரில்
உனக்கவனோ(டு) ஒட்டுறவு
உண்டா? - மனத்தினை
உள்வைத்(து) ஒளிக்காமல்
ஒவ்வொன்றாய்ச் சொல்லிவிடு;
வெள்ளைப் புறாவே
விரைந்து! (9)
புறா:-
நனவிலே பார்த்ததாய்
நன்னெஞ்சு சொல்லும்;
கனவிலே பார்த்ததாய்க்
கண்கள்; - எனக்கோ
அகத்திலா கண்டேன்?
புறத்திலா? என்னும்
திகைப்பே மிகுக்கும்
தினம்! (10)
தோழி:-
அச்சோ!உன் காதல்
அவஸ்தைக் குரியதுதான்;
இச்சோகம் தீர்க்கவவன்
என்செய்தான்? - இச்சோலை
எங்கணும் தேடி
இளைத்த உனையடைந்(து)
எங்ஙனம் தீர்த்தான்
இடர்!? (11)
புறா:-
நேரிலே வந்தெனது
நெஞ்சம் கவர்ந்தவன்
காரிலே தோய்ந்த
கருவண்ணன்; - ஊரிலே
வேறாரும் இல்லையா?
வேண்டாம் இவனென்னும்
கூறாமல் தாயார்
குறிப்பு! (12)
தோழி:-
வண்ணத்தால் என்ன
வருவதும் போவதும்?
எண்ணத்தால் எல்லாம்
எழிலுறும்; - திண்மைக்
குணத்தால் பெருமை
குலத்தால் இலை;நன்
மணத்தால் பெருமை
மலர்க்கு! (13)
புறா:-
தட்டிக் கழிக்கத்
தகுந்த(து) எனநிறத்தை
எட்டிப் பிடித்தாள்
எனதன்னை; - பட்டினி
நான்கிடந்த போதும்
நறுக்கென்(று) உமிழ்கின்றாள்
வான்கிடந்த வண்ணன்
வசை! (14)
தோழி:-
உன்தந்தைக்(கு) உன்மேல்
உயிருண்டு; நோகாதே
பொன்தீயில் இட்ட
புழுக்கணக்காய்; - முன்நின்(று)
உனதருமைக் காதலை
உள்ளத்தால் ஏற்பார்;
எனதருமைத் தோழியே
எண்! (15)
புறா:-
தந்தையும் என்மீது
தப்பே உரைக்கின்றார்;
சிந்தையில் சாதித்
திமிரவர்க்குச் - சொந்தமும்
ஏதிலி என்றவனை
ஏளனம் செய்கிறது;
காதலிநான் சிந்துகிறேன்
கண்! (16)
தோழி:-
செய்யும் தொழிலாலும்
தெய்வப் பெயராலும்
வையத்து மாந்தர்
வகைபிரிந்தார்; - ஐயகோ!
காட்டிலே ஏன்தான்
கடைபிடிக்க வேண்டுமவை
நாட்டிலே கொண்ட
நடப்பு! (17)
புறா:-
‘மாந்தர்க்கு நாமென்ன
மட்டமா?’ என்றிவர்கள்
சேர்ந்துபல சட்டங்கள்
செய்துள்ளார்; - பூந்தளிரே!
ஆறறிவை மிஞ்சுகிற
ஆட்டத்தை ஐந்தாட
ஆறறிவு கண்டால்
அழும்! (18)
தோழி:-
ஆருயிர் அண்ணன்
அரவணைப்பான்; ஆதலால்
ஊருறவைப் பாராய்;
உடனேசெல்; - நீருதிர்க்கும்
உன்விழிகள் பார்த்தால்
உருகித்தான் போய்விடுவான்;
தன்விழிபோற் காத்தான்
தவித்து! (19)
புறா:-
வேலை எதுவுமில்லா
வெட்டிப் பயலைநீ
மாலை இடநான்
மனமொப்பேன்; - காலைப்
படிதாண்டி வைத்துத்தான்
பாரென்றான் அண்ணன்;
நொடிஆண்டாய் நீள்கிறதென்
நோய்க்கு! (20)
தோழி:-
பரிந்துரைத்தால் பார்ப்பானே;
பக்கமக்கம் வேலை
தெரிந்துரைத்தால் செய்வானே;
சீராய்ப் - புரிந்துரைத்தால்
இல்லறம் காக்க
இயன்றதெல்லாம் செய்வானே
நல்லறம் காப்போன்
நயந்து! (21)
புறா:-
சேர்த்துவைக்கும் எண்ணம்
சிறிதிருந் தால்தானே
பார்த்தொரு வேலை
பரிந்துரைப்பான்; - தீர்த்துவைக்கும்
எண்ணம் உளதால்
எடுத்தெறிந்து பேசுகிறான்
அண்ணன் பொறுமை
அழிந்து! (22)
தோழி:-
உங்கை ஒருத்தி
உனக்குண்டே; யாரிடத்தும்
மங்கை உனக்காய்
வழக்காடத் - திங்கள்
பெயர்த்தெடுத்த நெற்றிக்குப்
பேர்போ னவளே!
கயற்கண்ணில் கண்ணீர்
களை! (23)
புறா:-
யார்மணப்பார் நாளை
இவளை? எதிர்ப்பட்டால்
ஊர்சிரிப்பார் காதல்
ஒதுக்கென்று - நேர்நிறுத்தித்
தங்கையைக் காட்டித்
தடம்மாற்றப் பார்க்கின்றார்
மங்கைநான் என்செய்வேன்
மற்று! (24)
தோழி:-
உன்நிலை கேட்டென்
உளமே பதறுதடி;
தன்நிலை தாழ்ந்தார்
தமரெல்லாம்; - நன்நிலை
காட்டுமடி தெய்வம்
கலங்காதே; இன்பமிகும்
வாட்டுகிற துன்பம்
வடிந்து! (25)
புறா:-
வடிந்துவிடும் என்பதும்
வாட்டம் மறைந்து
விடிந்துவிடும் என்பதும்
வீண்சொல்; - முடிந்துவிடும்
இப்படியே என்னுயிர்;
என்கா தலரின்றி
எப்படிநான் வாழ்வேன்
இனி! (26)
தோழி:-
உதவாத சாதிக்(கு)
உயிர்கொடுத்துக் காக்கும்
மதவாத சக்திகள்
மாய்ந்தால் - இதமாகும்;
காதலித்த பாவம்
கதையை முடிப்பதா?
பேதலித்த ஊர்மேற்
பிழை! (27)
புறா:-
விட்டத்தைப் பார்த்து
விசும்புகிறேன்; என்காதல்
கஷ்டத்தை எண்ணிக்
கலங்குகிறேன்; - எட்டத்தில்
என்னவனும் என்போல்
இடுக்கண் அடைவானே;
என்னநான் செய்வேன்
இதற்கு? (28)
தோழி:-
கஷ்டத்தைப் பார்த்தால்
கரம்கோர்ப்ப(து) எப்படி?
நஷ்டத்தைப் பார்த்தால்
நடவுண்டா? - கிட்டத்தில்
உள்ளத்தை வைத்தான்;
உருவத்தால் தூரவுள்ளான்;
வெள்ளத்தைத் தேக்காய்
விழி! (29)
புறா:-
மூடுகிறான் ஜன்னலை
மூத்தவன்; ஜாடையாய்ச்
சாடுகிறாள் பாடுகிறாள்
தாயுமே; - தேடுகிறான்
எந்தை தெருப்பக்கம்
என்னுயிர்க் காதலன்
வந்தால் தலையெடுக்க
வென்று! (30)
தோழி:-
வேண்டாம் எனவெறுக்க
வேறேதும் காரணம்
தூண்டா மணிவிளக்கே!
சொன்னாரா? - ஆண்டாண்டாய்
நேசித்த ஆளன்
நினைவகற்ற நீட்டோலை
வாசித்த நோக்கமென்ன
வாம்? (31)
புறா:-
ஏற்க மறுத்தார்
இருவீட்டார் ஆங்கவரை
நாற்றிசையில் ஆதரிக்க
நாதியில்லை; - மேற்கிலே
மந்தை வெளியில்
மசூதியே தாய்வீடு;
தந்தைக்(கு) உறைவிடம்
சர்ச்! (32)
தோழி:-
அச்சோ இதுவேறா?
அங்கும் கதைவேறா?
இச்சைப் புறவேநீ
என்செய்வாய்? - மச்சான்
இரண்டு மதம்சார்ந்(து)
இருப்பதாலுன் வீட்டார்
முரண்டுபிடித் தாரா
முறைத்து? (33)
புறா:-
வாழ்பெரியார் நூலக
மாடியிலே வாழ்வதனால்
பாழ்புத்தி என்னவனைப்
பற்றியதாம்; - ஆழ்மனதில்
ஏதோ பகுத்தறிவாம்
யாரோ புகுத்தியதாம்
தீதோவா(து) என்பதிவர்
தீர்ப்பு! (34)
தோழி:-
முற்போக்காய் வாழ்தல்
முறைகேடா? ஈதென்ன
பிற்போக்குச் சிந்தனை?
பேரன்பன் - நற்போக்கில்
செல்வதும் நாகரிகம்
கொள்வதும் குற்றமெனச்
சொல்வ(து) அறியாமைச்
சொல்! (35)
புறா:-
கோவில் புறாக்களாய்க்
கொஞ்சநாள் வாழ்ந்ததற்கே
நாவிலே சாதிமத
நச்சுமிழ்ந்தார் – பாவியென்
வாழ்வு படுந்துயரை
வந்துரைத்தால் நானிலம்
சூழ்கடல் ஆகிடும்
சுக்கு! (36)
தோழி:-
காடுவிட்டு நாடுவந்து
மாடப் புறாவாகிக்
கேடுகெட்டுப் போய்விட்டார்
கேளடியோ! – கூடுமட்டும்
பேசிப் புரியவைப்பேன்
பேசா(து) அறியவைப்பேன்
வாசித்த நூலறிவை
வைத்து! (37)
புறா:-
நாலும் படித்தவள்நீ
நாகரிக மானவள்நீ
மேலும் பகுத்தறிவை
மேய்ந்தவள்நீ – ஏலுமென்
வாட்டத்தைப் போக்குதற்கு;
வந்தெம் வனப்புறாக்
கூட்டத்திற் கேபுத்தி
கூறு! (38)
தோழி:-
ஆகட்டும் பார்க்கலாம்
அன்பே! அதற்குமுன்
பொகட்டும் உன்னுடைய
புத்தியிருள்; - சோகத்தை
மூட்டைநீ கட்டிவை;என்
மூதுரைமேற் புத்திவை;
ஓட்டை அறியாமை
ஓட்டு! (39)
புறா:-
பேதை எனவிருந்தேன்
பேச்சை மறந்திருந்தேன்
காதை அடைத்துக்
கருத்தழிந்தேன்; - கோதைநீ
செப்புவதும் உண்மை
சிவனே எனவிருந்தேன்
தப்பில்லை உன்குற்றச்
சாட்டு! (40)
தோழி:-
யாவும் உரைத்தாய்உன்
நோவும் உரைத்தாய்வன்
காவல் உரைத்தாய்நீர்
கண்நிறைத்தாய் - தேவதைநீ
சாவ துரைத்தாய்
சதியுரைத்தாய் நீரிருவர்
வாழ்வ(து) உரைக்கின்றேன்
வா! (41)
புறா:-
வாழப் புதிய
வழிகாண்பாய் என்றேதான்
வீழத் துணிந்தோள்
விரைந்தெழுந்தேன்; - தோழமைக்கு
நல்ல உதாரணம்நீ
நங்கைக்(கு) உபாயமும்நீ
மெல்ல எனையெடு
மீட்டு! (42)
தோழி:-
அச்சம் மடமை
அதைவிலக்கு; தன்மானம்
உச்சம் அதனை
உளம்நிறுத்து; - சச்சரவு
செய்தேனும் உம்தரப்பில்
சேர்ந்துள்ள ஞாயத்தை
வைதாலும் ஊர்ச்சபையில்
வை! (43)
புறா:-
‘பாரெதிர்த்த போதும்
பயப்பட வேண்டாம்இவ்
ஊரெதிர்த்த தற்கா
உளநடுக்கம்? - யாரெதிர்த்தும்
அஞ்சாதே கால்பிடித்து
கெஞ்சாதே’ என்றுரைத்து
நெஞ்சாழத் திட்டாய்
நெருப்பு! (44)
தோழி:-
எண்ணிய ஆணை
இணைசேரப் பெண்ணுக்கு
மண்ணில் உரிமை
மறுப்பதெவர்?; - பெண்நீ
உருவம் சிறிதெனினும்
உற்ற வயதால்
பருவம் அடைந்த
புறா! (45)
புறா:-
ஆமாம் மணப்பருவம்
அன்றே அடைந்துவிட்டேன்
ஏமாற்றி இன்றுவரை
ஏய்த்துவிட்டார்; - காமாலைக்
கண்ணுக்குக் காண்கின்ற
காட்சியெலாம் மஞ்சல்போல்
எண்ணத்தில் வைத்தார்
இருட்டு! (46)
தோழி:-
கல்வியும் கேள்வியும்
கைப்பொருளா தாரமும்
பல்கிப் பெருகுவதே
பாவையற்(கு) – ஒல்கா
விடுதலை; மற்றெல்லாம்
வீண்தளை; பெண்ணின்
விடுதலை ஆணுக்கு
வேம்பு! (47)
புறா:-
வைத்திய மானதடி
வஞ்சியுன் வாய்ச்சொல்என்
பைத்தியம் நீங்கிப்
பயனுற்றேன்; - கைத்தலம்
பற்றுகிறேன் என்னவரை
எற்றுகிறேன் ஊரவரை
மற்றிதற்குச் சொல்லாய்
மறுப்பு! (48)
தோழி:-
பொறுப்புரைத்தேன்
அன்றிப் புறாவே உனக்கு
மறுப்புரைக்க மாட்டேன்
மனதால்; - குறும்பொதுக்கிக்
கூறடியோ யாதென்று
கூறுவதைக் கூறிவிட்டு
ஏறடியோ வானின்
இடுப்பு! (49)
புறா:-
சரியான் உனக்கொரு
சத்தியம்செய் கின்றேன்
தரித்தால் மகட்குன்பேர்
வைப்பேன் – அரியவள்நீ
இன்றே புறப்பட்டென்
இன்னல் எலாம்சுட்டி
மன்னன் மனமறிந்து
வா! (50)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக