வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கடவுள் கேட்டால்?




கற்பிழந்து போன கடவுள்கள் எல்லாரும்
இப்பொழுது வந்தே இடங்கேட்டால்? –இப்புவியில்
மூன்றடி மண்கேட்டு முற்றும் கவர்ந்தகதை
ஈண்டறி யோமோ இயம்பு!

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

உயிரச்சு போயிற் றுடைந்து!

நடைபோட்டாள் நங்கை நடனமிடுங் கண்ணால்
எடைபோட்டாள் என்னை எடுத்து!

கண்தான் கருவி; பருவம் களமாம்;அப்
பெண்செயும்போர்க் கீடோ பிற!

மோதல் முகவரி; முன்நின் றவளனுப்பும்
காதல் கடுதாசி கண்!

விழிமுதலாய் வைத்து விரித்தாள் கடையை;
மொழியிழந்தேன் காதல் முதிர்ந்து!

விழுத்தினாள் வீழ்ந்தேன் விழிதனில்; காதல்
அழுத்தினால் என்னாம் அகம்?

மயிற்பீலி காதல்; சுமந்தேன் சுமந்தேன்
உயிரச்சு போயிற் றுடைந்து!

கண்ணீரில் மூழ்கியென் கண்சாகும்; தன்காதல்
பெண்நெஞ்சின் உள்மறைக்கும் போது!

வற்றாக் கடலாய் வளரும் விழியிரண்டில்
ஒற்றைப் படகுன் உரு!

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 6

செம்மை மனத்தர் சிவனார் அடிமுடியை
எம்பிக் குதிப்பதனால் எட்டு! (41)

இழந்தால் திரும்பா திளமைவிளை யாடு
குழந்தைக் குழுசேர்த்துக் கொண்டு! (42)

கிணற்றுத் தவளைபோல் தத்திக் கடல்போய்
மணல்வீடு கட்டி மகிழ்! (43)

வாலாட்டும் பல்நிறந்துப் பட்டத்தை வானேற்றி
நூலாட்டிக் கைகொட்டி நோக்கு! (44)

எம்பிக் குதித்தபடி ஏந்தஉன் கைசுற்றும்
பம்பரம் ஆடப் பழகு! (45)

குதிரைத்தாண் டாடுபுலி கிட்டிப்புள் போன்ற
முதிர்ந்த விளையாட்டுள் மூழ்கு! (46)

விடுத்த(அ)ம்பு போலே விரைந்துபின் மீளும்
சடுகு(டு)ஆட் டத்தைத் தழுவு! (47)

விட்டுக் கொடுத்து விளையாடு நன்னெஞ்சால்
தொட்டுக் கலந்தின்பம் துய்! (48)

களம்புகுந் தாட கருத்தைக் கவரும்
சிலம்பமும் வாளும் சுழற்று! (49)

ஏறு தழுவுதல் இன்தமிழர் பண்பாடாம்
சீறுமெது கண்டும் சிரி! (50)

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 5

தந்தை உணுமுணவைத் தட்டிப் பறித்துப்பின்
தந்து மகிழ்ந்தாடு வாய்! (31)

தவழ்ந்து தளிர்நடையிட் டோடி உலாவும்
குழந்தைக் கழகாம் குறும்பு! (32)

அடிக்க விழைவாரும் அள்ளிமுத்தம் ஈவார்
வெடிப்புச் சிரிப்பால் விழுங்கு! (33)

கன்னம் குழிவிழ கற்கண்டாய்ப் புன்னகைத்துத்
தெங்கிளநீர் அன்னமொழி தேர்! (34)

நீட்டியிரு கையால் நிலாவைப் பிடித்துவந்து
கூட்டிலடைத் தாடிடுவாய் கூத்து! (35)

தட்டான் பிடித்தல் தவறாகும் உன்விரல்
பட்டால் அழுமே அது! (36)

துன்பம் தரலாமா தும்பி தனைப்பிடித்து?
இன்பம் அதுவா இயம்பு! (37)

பொம்மை விளையாடு; பூங்கிளி யோடும்பே(சு)
அம்குயில் பாட்டும் அறி! (38)

விழுவாய் பிறந்தமண் மீது படியும்
புழுதி நறுமணப் பூச்சு! (39)

விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய்
எழுந்தால் மரமாய் எழு! (40)

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 4

பின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய்
அன்னை கழுத்தூஞ்சல் ஆம்! (21)

ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத்
தேடி அலைவாள் திகைத்து! (22)

தாய்மொழியில் அம்மாவை அம்மா எனவழைப்பாய்
வேற்றுமொழி தேடாய் விடு! (23)

வாயார நீயழைத்தால் வந்துமுத்தம் சிந்தாளோ?
போயாரக் கட்டிப் புகல்! (24)

முத்தங்கள் முந்நூறாய் தாய்வழங்கப் பூத்திடுவாய்
முத்துப்பல் காட்டி முகம்! (25)

சேரா உறவுகளை சேர்த்துவைக்க நீபிறந்தாய்
தீராப் பகையுணர்வைத் தீர்த்து! (26)

பகையுணர்வு மிக்காரும் பிள்ளாய்!நீ பேச
நகையுணர்வு கொள்வார் நயந்து! (27)

பகையும் பொடிபடும் பல்லுறவும் கூடும்
முகையுன் சிரிப்புக்கு முன்! (28)

பெற்றோர் படுந்துயர்க்குப் பிள்ளையுன் தீஞ்சொல்லே
உற்ற மருந்தென் றுணர்! (29)

தாய்தன் மடியே தரணியென் றெண்ணாது
போய்விளை யாடு புறம்! (30)