வியாழன், 29 அக்டோபர், 2009

முதல் எழுத்து!

பெண் எலியின் கருமுட்டையை எடுத்து உயிரணு தோற்றுவித்து, அதனை வேறொரு பெண் எலியின் கருமுட்டையில் செலுத்தி எலிக்குஞ்சி தோற்றுவித்துள்ளார் ஜப்பான் விஞ்ஞானி “டோமகிரோ”
-செய்தி-

இச்சோதனை, முறையே மனிதர்களுக்கும் நிகழ்த்திப் பார்க்கப் படுமாயின், அப்படிப் பிறந்த குழந்தை தன் அவலம் பாடுவதாக இக்கவிதை...

மாலையிட்டு மஞ்சம் கண்டு
மசக்கை கொள்வது –வெட்டி
வேலையென்று எண்ணிவிட்ட
டோமகிரோ நில்லடா!

தந்தையின்றி தாய்கள்கொண்டு
சனித்த பிள்ளைநான் –இந்த
விந்தைசெய்யும் எண்ணமுன்னில்
விளைந்த தேனடா?

அன்றுசெண்டில் தேனெடுத்து
வண்டு சேர்த்தது –இன்று
செண்டில்செண்டு தேனெடுத்து
சேர்த்து வைக்குது!

இயற்கையென்னும் காண்டிபத்தை
இரண்டு செய்தவா! –உறவின்
இயல்புமாற்றி இனம்பெருக்கும்
அவலம் ஏனடா?

அன்னையிருவர் ஆனதாலே
அன்பில் திளைக்கிறேன் –அன்பு
தந்தையொருவர் இல்லையென்று
தவித்து நிற்கிறேன்!

எதிர்த்தவீட்டு ஏழைப்பிள்ளை
தந்தை தோளிலே –என்னை
உதயம்செய்த தந்தையிங்கு
அன்னை உருவிலே!

மின்னலொன்று மின்னிமின்னி
மனதில் மோதுதே! –விழி
சன்னல்மீதில் சோகமேகம்
சாரல் போடுதே!

காதுகிள்ளி ஓடும்சேயைத்
தாய் அடிக்கலாம் –பிள்ளை
பாதுகாப்பு கருதிதந்தை
போர்வை நுழையலாம்!

தாயடிக்க தாயைச்சேரும்
தமையன் நானடா –என்றன்
காயம்பட்ட இதயத்திற்குக்
களிம்பு பூசடா!

சிறுவர்க்கூட்டம் வீதியெங்கும்
சிற்றல் ஆடுதே –என்னை
அருவருக்கும் பார்வைபார்க்கும்
அவலம் நேருதே!

விதவிதமாய்ப் பெயரும்சூட்ட
விழையும் அன்னைகாள் –என்றன்
முதலெழுத்து என்னவென்று
முதலில் சொல்லுங்கள்!

இடியாய்என்னுள் இதயத்துடிப்பு
இரங்கத் துடிக்கிறேன் –மரண
விடியல்தேடி வாழ்க்கைத் தீயில்
விழுந்து கிடக்கிறேன்!

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஹைக்கூ!

தந்தையின் ஊதியம் சாம்பலாகிறது
மகனின் விரல்களில்
சிகரெட்!

புகைக்கத் தடை
பலகை எச்சரித்தும்
புகைத்தபடி வாகனங்கள்!

இரவில் தேடிவந்து
இலவச ஊசிகுத்தும்
கொசு!

விழிப்புணர்ச்சியோடிருந்தும்
கருத்தரித்து விடுகிறது
காதல்!

நாட்டின் கணிசமான குழந்தைகளைத்
தத்தெழுத்துக் கொண்டிருக்கிறது
குப்பைத் தொட்டி!

வனமெனும் கற்பினைக் காக்கும்வரை
பெய்யெனப் பெய்யும்
மழை!

மற்றவர்கள் அமர
நின்றுகொண்டிருக்கிறது
நாற்காலி!

மின்னல் தோன்றுமுன்
இடியோசை
கொலுசுச் சத்தம்!

பூமி பொய்த்தும்
வானம் விளைகிறது
விண்மீன்கள்!

உயிர்களின் மெய்களில்
எழுதப்படுகின்ற உயிர்மெய்
விதி!

ஒவ்வொரு காலையிலும்
அவளுக்காக வழிந்தபடி
பனிமலர்!

அகரம் அமுதா

திங்கள், 19 அக்டோபர், 2009

பிரிவுப் படலம்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேளை
அது தொடருமானால்
நம் திருமண பந்தத்தால்
திரிந்து போகலாம்...

கலவியின் முடிவில்
கசந்து போகலாம்...

குடும்பச் சுமைசுமந்து
கூன்விழவும் நேரிடலாம்...

இப்படியாய் அதற்கு
மரணம் சம்பவிக்க
நமக்குள்
பிரிவாற்றாமை நிகழக்கூடும்!

இத்துடன் நம்காதல்
முறிந்து போகட்டும்...

ஒருவேலை
அது தொடருமானால்
அதுவே என்
எழுதப்படாத கவிதைகளுக்கு
முற்றுப் புள்ளியாய்
அமையக்கூடும்...!

அகரம் அமுதா

சனி, 26 செப்டம்பர், 2009

சனி, 5 செப்டம்பர், 2009

அலை! இடி!

அலை!

கடலுக்கும் கரைக்கும்
நடக்கும் திருமணத்தில்
நடைபெறும்
மாலைமாற்று!

இடி!

முகில்மண மக்கள்
இணைகிற வேளை
மின்னல் கட்டில்
முறிகிற ஓசை!

அகரம்.அமுதா

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஏக்கவெடி!

கண்ணி வெடி,
கையெறி வெடி,
ஏவுகணை, துப்பாக்கி
என
நாளும் விதவிதமாய்
வெடித்துக் கொண்டிருக்கிறார்
தீபாவளிக்கு எனக்கு
வெடிவாங்கித் தராத
அப்பா...

அகரம்.அமுதா

சனி, 22 ஆகஸ்ட், 2009

முருகடியான் அடியான் சொன்னேன்!

வளமான பொருளைத் தேடி
..வழங்குசொற் சிலம்ப மாடி
அளவான தமிழை நாடி
..அழுதகவி என்றும் பாடிக்
குளமேவு குமுதம் போன்ற
..கோலமிகு புகழைச் சேர்த்தும்
உளமேவும் தமிழால் வாழும்
..முருகடியான் பெருமை சொல்வேன்!

நேர்த்தியாய்க் கவிதை தீட்டி
..நெஞ்சத்தை ஆளும் பாட்டன்
கீர்த்திமிகு கவியால் கம்பன்
..கிளர்த்தபுகழ் பாடும் பூட்டன்
வார்த்தகவி வயலில் நன்றாய்
..வண்ணப்பா வார்க்கும் தோட்டன்
ஈர்க்குமிடை முலையர் பாடா(து)
..இறைவனிசை பாடும் ஏட்டன்

பூவான தமிழைக் கொய்து
..புத்துவமை நாரில் நெய்து
நாவாறப் பாடும் கிள்ளை
..ஞாலத்தில் இவர்போல் இல்லை
தேவாரத் தமிழை இன்று
..செய்புலவர் சிலரே யுண்டு
ஆவாரே அவருள் என்றன்
..ஆசானே முதன்மை என்று!

பணிஓய்வு கொள்ளு கின்ற
..பருவமதை அடைந்த போதும்
பிணிஓய்வு கொள்ளத் தோன்றும்
..பேருறுதி பெற்ற நெஞ்சன்
நனிதோயும் தமிழே மூச்சாய்
..நாற்றிசையும் அதுவே பேச்சாய்த்
தனித்தாய்ந்த தமிழில் பாடத்
..தணியாத யாப்பின் தஞ்சன்!

ஒப்பில்லா என்னா சான்கை
..உவந்திரு எழுது கோலை
அப்பெரும் பிரம்மன் கேட்டே
..அடம்பிடிப் தழுது தீர்ப்பான்
முப்போகம் விளைச்சல் காணும்
..முந்நாடு நந்தம் நாடு
எப்போதும் விளைச்சல் காணும்
..என்னாசான் கைப்பொன் னேடு!

பஞ்சினால் ஆன நெஞ்சம்
..பார்வையோ கணினி யொக்கும்
அஞ்சிடா ஆண்மைத் தோற்றம்
..அடுத்தவர்க் கீயும் கைகள்
நெஞ்சுநேர் செல்லும் கால்கள்
..நீசரை ஒடுக்கும் தோள்கள்
மஞ்சுதான் மேனி வண்ணம்
..மாண்புறும் இலர்நல் லெண்ணம்!

மருவிடும் தமிழைக் காக்கும்
..மாண்பதே மாண்பா மென்றே
செருப்புகுந் தாடும் வாளாய்
..சீற்றத்தோ டெழுந்து பொங்கி
அருவியாய்ப் பொழிவார் தம்மை
..அல்லகவி என்பார் யாக்கை
குருதியால் நிறைந்த தாமோ?
..குக்கல்வாய் உமிழ்நீ ரன்றோ?

அன்பினால் அடிக்கக் கூட
..ஆகுமாம் ஆனால் கொஞ்சம்
வம்பினால் அணைக்கக் கூட
..வகைபடாப் பண்பு கொண்ட
நேஞ்சனாம் என்றன் ஆசான்
..நில்வழி நானும் நிற்பேன்
வஞ்சனைப் பேய்கள் என்னை
..வளைப்பினும் சூழ்ச்சிக் கஞ்சேன்!

திமிங்கிலம் என்னா சான்போல்
..தீந்தமிழில் நஞ்சாய் சேரும்
தமிங்கிலம் எதிர்த்து நிற்பேன்
..தமிழில்தான் கவிப டைப்பேன்
அமிழ்தமிழ் தென்றே ஓத
..அமிழ்திலும் தமிழே உண்டாம்
உமிழ்பிற மொழிக்க லப்பை
..முருகடியான் அடியான் சொன்னேன்!

அகரம்.அமுதா

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சத்துடனே வார்த்திட்ட சங்கமமாம் பாவியத்தைப்
பொத்தகமாய்க் கோர்த்துப் புழங்கவிட்டீர் -பித்துடனே

மொய்த்ததனை மோகித்து மும்முரமாய் வாசித்து
மெய்த்தமிழை நான்கண்டேன் மேன்மையெலாம் -மொய்த்தநற்

கற்பனையைக் கண்டேன் கவின்நடையும் தான்கண்டேன்
விற்றொடுத்த அம்பாய் விரைந்துவரும் -சொற்கண்டேன்

நாணமிலார் வாய்பாட்டால் நற்றமிழுக் கேற்படும்
ஊனத்தைப் போக்கும் உரம்கண்டேன் -தேனமுதம்

கொட்டும் அருவியன்றோ கோலக் கவியுன்றன்
பட்டுக் கவியெலாம் பார்த்தறிந்(து) -அட்டியின்றிப்

பக்குவமாய்ச் சொல்கின்றேன் காக்கைகளின் மத்தியிலே
குக்கூ வெனுக்குயில்நீர் குக்களிடை -நற்பிடிநீர்

சேற்றிலொரு செங்கழுநீர் தெண்ணீரில் தேன்குளிநீர்
ஏற்பீர்பாத் தென்றலா ரே!

சங்கமம் -பாத்தென்றல் முருகடியான் வெளியிட்ட நூல்களுள் ஒன்று.

அகரம் அமுதா

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஈகையின் மேலார்!

உற்றக்கால் அன்றி உறாக்காலும் ஈவரே!
முற்றும் வழங்கும் முனைப்புடையார் –உற்றளவும்
தந்துதவும் ஆறு தணவீசுங் கோடையிலும்
வந்துதவும் ஊற்றின் வழி!

பொன்னையே ஈந்தபின்னும் போதா தெனநினைத்துத்
தன்னையே ஈவர் தகவுடையார் –முன்னம்
கருங்காயும் ஈயும் கதலி இலையும்
தருங்காயின் தன்னைத் தரும்!

அகரம் அமுதா

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இராமாயணம்!

அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகையுளவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!

அகரம் அமுதா

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை!

செடியில் மலர்கள்...
தீண்டத்தகாத பொருளாம்
விதவைக்கு!

கற்பழிக்கப் பட்டபின்
கலகலப்பாய் எழுந்துவந்தாள்
நடிகை!

வெள்ளைக் காரிக்கும்
கருப்பாய் இருந்தது
கன்னத்து மச்சம்!

அகரம் அமுதா

புதன், 29 ஜூலை, 2009

காட்சிக்குக் கவிதை!


விண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்
கண்மணிகள் கண்டு களிப்புறும்; -பெண்மணிகள்
பூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்
ஈர்க்கும் இளநெஞ்சை ஈண்டு!

மின்னல்போற் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்
பின்னல்போற் சாலம் புரிந்திடவே -கன்னலைப்போற்
பெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவரைக் காட்சிகளாய்
தொய்வின்றித் தந்திடுதே தான்!
அகரம் அமுதா

வெள்ளி, 24 ஜூலை, 2009

இறகுப்பந்து விடுதூது!

காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!

ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு!

ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! –பாங்காய்ப்பின்
என்நிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்நிலையைச் சொல்வாள் தளர்ந்து!

தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! –குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!

இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; -தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில் உண்டு!

உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன? –பண்டென்
உளங்கள வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன் வந்து!


வந்தாரக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் –அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!

நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் –தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது!

தூதாக நீயுமத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் –போதாயோ?
மெல்லப்போ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து!

சொற்பொருள்:-
ஆகம் –உடல்; தியங்குதல் –கலங்குதல்; மிறல் –பெருமை.


அகரம் அமுதா

ஞாயிறு, 19 ஜூலை, 2009

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!


யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (1)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (2)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற் குரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (3)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (4)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதார் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய் சொல்வேனுன் மாண்பு! (5)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (6)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! என்றன்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க் கரணாந் தருவே உனையிங்
குமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (7)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்*
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (8)

பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரிற் புகழ்நாட்டு பொன்முடியே! –காரில்
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! (9)

உரைக்கப் புகுந்தால் உணர்ந்துன் புகழைக்
கரைக்குள் அடங்காக் கடலாய் –விரியும்;
தனைநிகர்த் தோனே! தரிசித் ததுண்டோ
உனைநிகர்த் தோனை உலகு! (10)

சொற்பொருள்:- மாணார் -பகைவர்; பேணார் -பகைவர்; புணரிசார் -கடல்சார்ந்த; வல்வெட்டி -வல்வெட்டித்துறை.
வளரும்....
அகரம் அமுதா

செவ்வாய், 14 ஜூலை, 2009

குறளே வெண்பாவாக! (3)

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு! -குறள்-


முகத்தின் எதிர்நின்று முத்துப்பல் காட்டி
அகத்திற்புண் செய்வார் அறிவோ -டகமுமிலார்
யானுற் றுயிருருகி வாடும் நெடுங்காமம்
தானுறாத் தன்மையாற் சார்ந்து!

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! -குறள்-

ஊரார் உரைப்பழி உற்ற உரமாக
நீராகி அன்னைசொல் வேர்பாய -பாராய்!
நெடிதோங்கி நின்று நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்குமிந் நோய்!

அகரம் அமுதா