வெள்ளி, 20 செப்டம்பர், 2013

வாழ்த்துப்பா!


வாழ்த்துப்பா!

கிறுக்கன்தான் பெயரெனினும் பலரைப் போலக்
கிறுக்குவதைக் கவியென்னும் பண்பில் லாதான்!
சிறிதுந்தான் செறுக்கில்லாச் சிந்தை கொண்டோன்!
சிலேடைக்குக் காளமேகம் தம்பி ஆவான்!
நறுக்கென்றே இவன்பாடும் வண்ணம் கேட்டு
நஞ்சுடைய நெஞ்சத்தார் நாணு கின்றார்
மறுப்பில்லா மணிக்கவிதை வடித்துக் காட்டும்
வரகவிஞன் நம்கிறுக்கன் போலிங் கேயார்?

தேறலதில் இத்துளிதான் சிறந்த தென்று
தேர்ந்துசொல்ல இதுவரையில் முடிந்த துண்டோ?
மாறனவன் மலர்க்கணைபோல் மயங்க வைக்கும்
மதுப்பாவின் எப்பாவின் மாண்பைச் சொல்வேன்?
ஊறலுள்ள ஊற்றினைத்தான் ஊரும் நாடும்!
உண்மையுள்ள பாவினைத்தான் உலகம் பாடும்!
ஆறடுத்த கழனியைப்போல் பாக்கள் தீட்டும்
அருந்தமிழ்க் கிறுக்கன்பா என்றும் வாழும்!




குறிப்பு:- அருமை நண்பர் கவிஞர் தமிழ்க்கிறுக்கன் அவர்களை வாழ்த்தி நான் எழுதிய எண்சீர் மண்டிலம்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தென்னம் பாளையில் தேன்பூ!


கரிகாலன் ஈற்றெடுப்பு –
தென்னம் பாளையில் தேன்பூ!

‘அகரம் அமுதன்’ விரல்கள் எழுதும்
சிகரம் தொடும்செந் தமிழ்ப்பா –நுகர்ந்ததும்
வெண்முல்லைப் பூக்கள் விரிமலர்ச் சோலைக்குள்
கண்புதையக் கண்டேன் கனா!

கனவெல்லாம் வீரன் கரிகாலன் வந்தான்
தினவெடுத்த தோளில் திகழ்ந்தான் –முனம்எம்
‘அகரத்தின்’ வாசல் உயரத்தில் தோன்றும்
நிகரற்ற ஓவியமாய் நின்று!

நின்றெங்கள் நெஞ்சம் நிலைத்தவா நேற்றுன்னைக்
கொன்றாரோ காடையராம் கோழையர்? –அன்றன்று
மாவீரம் என்றும் மரணிப்ப தில்லைநீ
போர்வீரம் போற்றும் புலி!

புலியடித்துப் போட்டதையே பூனைகள் நக்கும்
எலிவளைமுன் ஏங்கியே நிற்கும் –விழிகள்
உறங்கிடா வீரப் புலிப்படையால் நாளை
பிறந்திடும் ஈழம் பெயர்த்து!

பெயர்த்தும் தகர்த்தும் பெரும்போர்த் திறத்தால்
உயிர்த்தும் எழுவதே வீரம் –செயிர்த்தே
அனுரா தபுரத்தை அன்றெறிந்த குண்டால்
துணிக்கப் பறந்தார் துணிந்து!

துணிந்தவர்க்கோ ஆழி முழங்காலின் மட்டம்
எழுந்தவர்க்கோ உச்சிவான் எட்டும் –எனவீரம்
ஊற்றெடுத்துப் பாயும் உயர்பெரும் பாவியமாம்
‘ஈற்றெடுப்பு’க் குண்டாமோ ஈடு?

ஈடில்லா மாவீரன் ஈழக் கரிகாலன்
பாடுபொருள் ஆனான்உம் பாத்தொகுப்பில் –ஏடவிழ்
பொற்றமிழைப் போற்றும் புகழேந்திப் பாவலனின்
சொற்றமிழில் தேனாய்ச் சொரிந்து!

சொரிந்ததுவோ செந்தமிழ்ச் சொல்மாரி சிந்தை
அருந்தியதோ வெண்பா அமுதம் –நிறைந்ததுவோ
காவிரியின் கல்லணை கற்கண்டாய்ப் பாய்ந்ததுவோ
நாவிரியும் பைந்தமிழ் நீர்!

நீரன்றோ நேற்றுமுதல் பார்போற்றும் பாவலன்
நீரன்றோ இன்றைய வெற்றிகொண்டான் –நீரன்றோ
நேரிய ஈழத்தின் நாளை அவைப்புலவன்
நீரன்றோ சங்கத் தமிழ்!

தமிழாகி வந்தாய் தரணிபுகழ் கொண்டாய்
அமுதன் எனப்பேரும் பெற்றாய் –இமிழ்கடல்
ஈழக் ‘கரிகாலன் ஈற்றெடுப்பு’ நூல்தென்னம்
பாளையின் பூமணக்கும் பா!

வைகைவாணன்
மானாமதுரை

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 2


எனது நண்பர் சின்ன பாரதியின் மைத்துநர் அறிவழகன் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துப் பாவாக இயற்றியது

தண்ணளி நெஞ்சன்; தண்டாப் பொறையினன்;
கண்ணோளி யாஞ்செழுங் கல்வியில் வான்புகழ்
வேளாண் துறைசார் வெல்லுங் கல்வியே
மேலாம் எனநனி விரும்பிப் பயின்றோன்;
சான்றோன் ‘தனிக்கொடி’ தாய்‘கோ சலை’சேய்;
ஆன்ற அறிவின் அழகன் ஆதலால்
‘அறிவழ கன்’எனும் அழகுறு பெயரினைச்
செறிவுடன் ஏந்திய செம்மல்; அறிவழி
உட்குச் செகுத்த பெட்புக் குரியோன்;
கட்குண வாகிடுங் கவின்யாக் கையினன்;
ஒள்ளிதி யாதென் றுள்ளி உஞற்றும்
மள்ளன்; என்மன மன்றில் உறையும்
பாவலன் ‘சின்ன பாரதி’ மைத்துனன்;
நாவலன்; நனிபெரும் நல்லோன் தனக்கும்,
வைகற் கதிராய்; வம்பு செறிமலர்ப்
பொய்கைத் தேறலாய்ப் பொலஞ்செறி அன்னம்
அனைய காரிகை; அன்பின் நிறைகுடம்;
மூரல் உதிர்க்கும் முழுநிலா; கற்பெனுஞ்
சாரம் செறிந்த தளிர்க்கொடி; செழுங்கனி;
பொறியியல் படித்த பூமகள் ‘சுமித்திரை’
நெறியியல் செழித்த நிறைவயல் தனக்கும்
ஈன்றோர், கிளைஞர், இவரொடு நொதுமலர்,
சான்றோர் கூடித் தகைமிகு திருமண
ஓலை வரைந்து ஒருமன தாக
சோலைக் குயில்களின் தோள்க ளிணைத்தனர்;
கண்ணொடு கண்ணினைக் கண்டு கலந்தும்
பண்பொடு நல்லுடல் பழகித் திளைத்தும்
பெரியோர் மெச்சும் பிறன்கடை பெருக்கி
வரியோர்க் குதவி வான்புகழ் எய்தி
தாமார்க் கும்முன் சான்றென
ஏமாப் பெல்லாம் இயையவாழ்த் துவனே!

சொற்பொருள்:- தண்ணளி –குளிர்ந்த அன்பு; தண்டாத –நீங்காத; பொறையினன் –பொறுமையானவன்; ஆன்ற –அகன்ற; செம்மல் –தலைவன்; உட்கு- அச்சம்; செகுத்தல் –அழித்தல்; பெட்பு –பெருமை; ஒள்ளிது –நல்லது; உள்ளுதல் –எண்ணுதல்; உஞற்றுதல் –செய்தல்; மள்ளன் –வீரன்; மன்று –அவை; நனிபெரும் –மிகப்பெரிய; வைகல் –விடியற்காலை; வம்பு செறிமலர் –மணம் மிகுந்தமலர்; தேறல் –தேன்; பொலம் –அழகு; மூரல் –புன்சிரிப்பு; கிளைஞர் –உறவினர்; நொதுமலர் –அயலார்; பிறன்கடை –வாரிசு; ஏமாப்பு –மகிழ்ச்சி; இயைய –பொருந்த.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 1


2010 ல் நடந்த எனது நண்பர் இலெனின் அவர்களின் திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்து அகவல் இது!

தேறல் மொழியன்; தெளிந்தநோக் குடையான்;
மாறன் அனையன்; மலர்மென் நெஞ்சன்;
காட்சிக் கெளியன்; கட்டுடல் பேணும்
மாட்சிக் குறியோன்; மறவன்; அறிஞன்;
இராம ராசு –சரஸ்வதி ஈன
வராது வந்த மாசறு பொன்னாம்
இலெனின் என்னும் இளவல் தனக்கும்
நிலமுறு பொறையினள்; நெறிநோக் குடையாள்;
கமலம் மீதமர் கலைமகள் அனையாள்;
அமல மொழிமெல் லடியாள்; ‘செவிலித்
தாய்’க்குப் படிக்கும் தகையினள்; சீர்மிக
வாய்க்கப் பெற்ற வடிவினள்; தமிழ்மணி –
மலர்க்கொடி இணையர் மகளாம் சத்திய
கலாவெனும் கவினுறு காரிகை தனக்கும்
திருமண உறவைத் திறம்பட இயற்றி
ஒருமன தாக உவப்புடன் ஒப்பிய
ஈன்றோர் மெச்ச இணையர் இருவரும்
சான்றோர் மொழியைச் சார்ந்து நடந்து
நீக்க மறயிந் நிலத்தினில்
ஆக்க முறபல் லாண்டுகள் வாழ்கவே!