எனக்கும் அண்ணன் விக்டர்தாஸ் அவர்களுக்கும் நிகழ்ந்த வெண்பா உரையாடல் :-
கூரார்ந்த நின்பார்வை
கூறும் பலசெய்தி;
ஏரார்ந்த உன்னையெவன்
தம்பியிடம் கூறாய்;
தருக்கன் தலைகொய்து
இம்மெனுமுன் தீர்ப்பேன்
இடர்!
-அகரம் அமுதன்
இடரென்று ஏதுமில்லை
ஏதலிக்க வில்லை
படர்ந்ததென்னில் சோகம்
பலவாய்-முடிவதற்கு
நானொன்றும் கானலில்லை
நானறிவேன் ஆனாலும்
வீணெனவே சாய்ந்தேன் விழுந்து.
-விக்டர்தாஸ்
வீழ்வதோ? அண்ணா!
விழிகள் விரக்தியில்
ஆழ்வதோ? செங்கதிர்
அம்புலியாய்த் - தேய்வதோ?
தன்விரல் தன்கண்ணைத்
தான்குத்த ஏகிடுமா?
அன்றன்று சொல்வேன்
அறிந்து!
-அகரம் அமுதன்
அறிந்தது நன்றே
அரிந்த(து) உறவு
முறிந்ததன்றோ அன்பென்னும்
மூளை-செறிந்த நம்
அன்பினைச் சொல்லுமே
ஆற்றலைச் சொல்லுமே
என்பினால் போர்த்த இயல்.
-விக்டர்தாஸ்
காதலால் இத்தனை
கலவரம்; மெய்யுற(வு)
ஆதலால் இத்தனை
அமலிகள்; - ஊடலால்
நெஞ்சங்கள் மென்மேல்
நெருங்க இராவெலாம்
மஞ்சத்தில் பூக்கும்
மகிழ்வு!
-அகரம் அமுதன்
மகிழ்வெங்கே போகும்
மனத்தினை விட்டு
அகழ்ந்து பல பாட்டெழுத
ஆசை-அகம் மட்டும்
ஆலைக் கரும்பானால்
ஆவதென்ன வாழ்வதென்ன
ஏழை என் செய்வேன் இனி.
-விக்டர்தாஸ்
இனிதேற் றுளியால்
இடிபடாப் பாறை
தனிச்சிலை யாகா
ததுகாண்; - நனிசேர்
கனிந்தசொல் போலன்றிக்
காயஞ் செயினும்
முனிந்தசொல் மேலாம்
முழங்கு!
-அகரம் அமுதன்
முழங்கத்தான் ஆசை
முகிழ்க்கத்தான் ஆசை
எழுதத்தான் ஆசை
எனினும்- அழவைக்கும்
சூழலில் சிக்குண்டால்
சூரியனும் தேயுமாம்
ஆழிநான் வற்றினேன் ஆழ்ந்து.
-விக்டர்தாஸ்
ஆழ்ந்தகன்று நிற்கும்
அறிவினாய்! துன்பமது
சூழ்ந்தகன்று நின்றால்
துவளுவதா? - வீழ்ந்தடித்துக்
கொள்ளுவதால் அஃது
குறைவதில்லை; மொட்டுவிடும்
தள்ளுவதால் இன்பத்
தளிர்!
-அகரம் அமுதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக