வெள்ளி, 19 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1994)

எம்மக்கள் விடுதலையே பெற்றுமதிப் பொடும்மேன்மை
இயையப் பெற்றும்
செம்மாந்து வாழ்ந்திடவே வேண்டுமெனும் குறிக்கோளைத்
தேர்ந்து பற்றித்
தம்வாழ்வை தம்முயிரைத் தந்தீகம் செய்திட்ட
தகைஞர் தம்மை
எம்நெஞ்சக் கோயிலில்வைத் தெழில்வணக்கம் செய்துய்த*
நாளாம் இந்நாள்!

எமதுவிடு தலைக்காக மதிப்பிடுதற் கொல்லாத
விலைகொ டுத்தோம்;
அமர்க்களம் ஆக்கப்பட் டெம்மண்ணில் குருதிநிறை
ஆறு பாயும்;
எமதரும் வீரரிற்றை நாளினிலும் விடுதலைக்காய்
இறப்பை ஏற்றார்;
எமதுவீ ரர்நினைவுத் தூண்களுமே விடுதலையை
வேண்டி நிற்கும்!

புதியதொரு அணுகுமுறை திட்டத்தோ டாட்சிசெயப்
போந்தார் அந்தப்
புதியவராம் சந்திரிகா அரசமைதிக் கைநீட்ட
போந்து பற்றி
எதிரிகட்கு வன்கட்டுப் பாடெதையும் விதித்திடா
தியைந்து பேச்சின்
முதற்கட்டத் தெமதீழ மக்களுறும் இடர்களுக்கே
முதன்மை தந்தோம்!

சிங்களர்தம் படையமைதி வழியிலெம் சிக்கலினைத்
தீர்க்க நத்தா*
தெங்களின்மேல் நடுவுநிலை அற்றதொரு போர்தொடுக்க
ஏகும் போக்கை
அங்கணுள சந்திரிகா அரசும்கை விட்டதுவாய்
அறிந்தோ மில்லை;
தங்க(ள்)படை நிலைக்கெதிராய்ச் செயல்படவும் விரும்பிடுவ
தாகக் காணோம்!

அரசமைதி வேண்டுவதில் அக்கறையாய் இருக்குமெனில்
அவ்வ ழித்தன்
முரசறையும் படையினையும் முடுக்கிவிடின் எளிதாகும்;
மூளும் போரை
நிறுத்துவதும், பொருள்தடையை நீக்குவதும், நீர்வழியை
நிலத்தில் சாலை
திறத்தலொடு மீள்குடிவைப் பிவையனைத்தும் படையிருப்பைப்
பொருத்த தேயாம்!

அமைதிக்குத் தடையாக அமைந்தவர்கள் நாமில்லை;
அமைதி வாசல்
தமையும்நாம் மூடவில்லை; எம்மக்கள் அன்றாடம்
சார்ந்து நிற்கும்
குமை*களைய விரும்புகிறோம்; எம்மதிப்பைப் பெறவேண்டின்
கொடுங்கோ லாளர்
அமைதியுடன் இயல்புநிலை எம்நாட்டைச் சூழ்ந்திடுமா
றமைதல் வேண்டும்!

நீண்டதொரு குருதிப்போர் கண்டுவரும் எம்மியக்கம்
நேர்ந்த போரை
யாண்டுமொரு உயர்மட்டத் தெடுத்துசெலும் தன்னாட்சிக்
கான மிக்க
நீண்டதொரு கட்டமைப்பை நிறுவியுளோம்; வலிமைமிகு
கடைக்கால் நின்றோம்;
ஈண்டெமது* கடைக்காலை இயைத்தவரைப் போச்சாவா*
திருத்தல் வேண்டும்!

ஆற்றலுடை படையாய்நாம் அமைந்ததினால் சிங்களர்தம்
அரசு பேச்சுக்
கேற்றதொரு ஆர்வத்தைக் காட்டுகிற தருந்தமிழர்
இன்னல் தீர்க்க
மாற்றமிலா அமைதிவழி தீர்வுதனை வைக்குமெனில்
மருங்கு நிற்போம்;
ஏற்றமுறு தன்னாட்சிக் கட்டமைப்பை முன்வைக்கின்
ஏற்றுக் கொள்வோம்!

சலுகைகளைப் பெறுமெளிய குழுவல்ல; விடுதலையைச்
சமைக்கு மெங்கள்
இலக்கெமது தாய்மண்ணில் மதிப்பமைதி விடுதலையும்
இயையப் பெற்றுக்
கலக்கமற வாழ்வதுவே; எம்விருப்பை நிறைவேற்றும்
கவினார் தீர்வே
நிலைக்குமொரு தீர்வாகும்; என்றுமொரு ஒப்புரவை
நிலைநி றுத்தும்!

ஒப்புரவாம் தீர்வதனை உற்றிடவே ஓரினமாய்
ஒருதே சத்தை
எப்பொழுதும் வேண்டிநெகிழ் வற்றுறுதி பூண்டவராய்
இருத்தல் வேண்டும்;
ஒப்பிலதாம் இந்நாளில் உயிரீகர் உறங்குமிடம்
ஒளியை ஏற்றி
அப்பெருமீ கர்குறிக்கோட் குப்பரிசாய் உறுதியிதை
அகத்தில் ஏற்போம்!

துய்தம் –புனிதம்; நத்தாது –விரும்பாது; குமை –துன்பம்; ஈண்டு –இவ்விடம்; பொச்சாவாது -மறவாது.

அகரம் அமுதன்

சனி, 13 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1993)

உரமிக்க போர்கள்செய் துடைத்தடிமைத் தளையகற்றி
உயிர்த்த நாட்டில்
பொருள்மிக்க விடுதலையைப் புரிந்தவரைப் போற்றுகிறோம்;
பூந்தாய் மண்ணின்
உரிமையெமக் குரியதென ஊருலகிற் குணர்த்தினரெம்
ஒப்பில் லாத
வரலாற்றுச் சிற்பிகளாம் மாவீரர் தம்நினைவால்
மலர்ந்த திந்நாள்!

அழுதுபுலம் பிடுதற்கோ அண்டிஅள றுறுதற்கோ
அல்ல இந்நாள்
எழிலுறபுத் துயிர்க்கும்நாள்; ஏற்புறுதி யால்தேச
எழுச்சி நாளாம்!
தழுவியதோர் உயர்ந்தகுறிக் கோளுக்காய்த் தன்னுயிரைத்
தந்தார் ஈகம்
தொழத்தகுமச் செயல்மறவர் தூயமறை வெளியதெனச்
சொல்வா ருண்டோ?

தீதறுநல் மாமறவர் ஈகமது விடுதலையின்
செப்ப ஒல்லா
ஆதனிக விருப்பத்தை அறைகிறது; வேட்கையுடன்
அன்னை மண்ணின்
காதலுறு விடுதலைக்காய்க் களங்கண்டே ஈகியராய்க்
கால மானார்
ஓதமுறும் ஈகைவிடு தலைவேள்வி தன்னிலெழும்
ஒளியு மாகும்!

நம்தாய்மண் தனிலுறங்கும் நல்வீரர் கல்லறைகள்
நன்கொ லிக்கும்
செம்மாந்த விடுதலையின் செம்பாடல் இங்கெமது
செருக்க ளத்தில்
அம்மாப்போ ராட்டத்தின் அரிதான இயங்குதிறன்
ஆக மாறி
எம்மாறா யிரமீகர் உறுதியுரி மையிவற்றால்
எழுந்த தன்றே!

நீண்டபெரும் போராட்டில் நேர்ந்தபல சிக்கல்கள்
நீளி டுக்கண்
யாண்டுமெமைத் தொடர்ந்தாலும் யாமெமது நிலைப்பாட்டில்
வழுவா நிற்போம்
ஈண்டெமது சிக்கல்கட் கோர்தீர்வாய் இறையாண்மை
மிக்க ஈழம்
வேண்டுமெனும் எம்முறுதி உலகிற்கும் பகைவர்க்கும்
விளங்கும் நன்றே!

தனியீழம் பெறமக்கள் தம்மாணை பெற்றபல
தமிழர் கட்சி,
‘இனிதீழம் தோற்றமுற எடுத்திடுவோம் கருவி’யென
இயம்பிச் சென்ற
நனிகுழுக்கள் இவையிரண்டும் இரண்டகமே இழைத்துளன;
நாமே ஏற்ற
தனியீழக் குறிக்கோளைத் தடம்பிறழா துறுதியுடன்
தாங்கி நின்றோம்!

தமிழீழக் குறிக்கோளைச் சார்வதிலே வெற்பனைய
தடைகள் உண்டு;
நமதுகுறிக் கோட்கெதிராய் நடக்கின்ற வலிகளையும்
நாம றிந்தோம்;
எமைச்சூழ்ந்த மண்டலத்து வல்லரசின் நுண்ணுத்தி
யாலே தோன்றும்
சுமைமிக்க குறுக்கீட்டைத் துணிந்தெதிர்த்தோம்; விளிவினிலும்
சுணங்கா நின்றோம்!

அனைத்துலகின் கொள்கைக்குள் அடங்கியதே எமதுவிழை(வு)
அதுவு மன்றித்
துணையெனவே நயன்மையெங்கள் மருங்கிருக்க உறுதியுடன்
தொடர்ந்தோம் போரை
எனைத்துமொரு தன்னுரிமை தனிநாடு பெறுந்தகுதி
எமக்கு முண்டாம்
அணைந்துறுதிப் பற்றதனை அகமேற்றால் விடுதலையை
அடைய ஒல்லும்!

மாந்தநெறி எனுமச்சில் மண்ணுலகம் சுழலவில்லை;
மக்கள் மேன்மை
சார்ந்தஅற நெறி,உரிமை பேணவில்லை; தம்நயன்மை
சாற்றி முன்வைத்
தேந்திடுவர்; பொருள்,வணிகம் இவையுலகின் ஒழுங்குறவை
இயற்ற வாய்மை
சார்ந்தஎங்கள் நன்னெறியைத் தரணியுடன் பட்டேற்கத்
தயங்கு மன்றே!

எமக்கிணக்க மானதொரு நற்சூழல் நானிலத்தில்
எழலாம்; அன்று
நமதினிய நயன்*மிக்க குறிக்கோளை நானிலமும்
நத்தக் கூடும்;
நமதுபெரும் போராட்டம் உண்மையிலிவ் உலகத்தை
நம்பி இல்லை;
எமதுவெற்றி எம்முறுதி முயற்சிவலி இவற்றைச்சார்ந்
திருக்கக் காண்பீர்!

அறநெறிசார் நயன்மையொன்றே வெற்றிதரா; வலிமைமிகும்
அருங்கோட் பாட்டில்
உறுதிமிக உடையவராய் உயிர்குடிக்கும் போர்த்தொழிலில்
உறப்பு* மிக்க
திறமைமிகப் பெற்றவராய்த் திகழ்ந்திடவும் வேண்டும்நம்
தேசம் தன்னின்
முறைமையுறும் ஒத்தேற்புக் காய்நாமே போராடல்
முறைமை ஆகும்!

சிங்களரின் இனப்பகைமை அரசுநயன் மைவழியில்
சிக்க லைத்தீர்த்
திங்கணுறும்* எனவெதிர்பார்த் திடவொல்லா; வன்முறையின்
திசையில் சென்றே
இங்குள்ள சிக்கலினை எதிர்கொள்ளப் பார்க்கின்ற
திரக்க மற்ற
தங்க(ள்)படை அணுகுமுறை யால்நாற்பான் ஆண்டாயெம்
சிக்கல் நீளும்!

ஆதனிகம் –ஆன்மீகம்; ஓதம் –பெருமை;நுண்ணுத்தி –தந்திரம்; சுணங்காது –சோராது; விழைவு –விருப்பம்; எனைத்தும் –முழுதும்; நயன் –நீதி; உறப்பு –செறிவு; இங்கண் –இவ்விடம்.

அகரம் அமுதன்

வியாழன், 4 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1992)

இன்றுமா வீரர் நாளாம்;
இத்தரை வரலாற் றில்நேர்
ஒன்றிலாப் பாவி யம்மாய்
உயர்ந்துநம் விடுத லைப்போர்
நின்றிடச் செய்த வீரர்
நெடுதுயில் கொள்வ தெண்ணி
நன்றுநாம் நெஞ்சில் வைத்து
நற்றொழு கைசெய் நாளே!

தன்னின மீட்சி ஒன்றே
தன்குறிக் கோளாய்க் கொண்டு
தன்னுயிர் மேல தாக
தழுவிய குறிக்கோ ளுக்காய்
இன்னுயிர் ஈந்தார் கொள்கை
இளவல்கள்; விடுத லையே
மன்னுநற் பேறாம்; மாந்த
வளர்ச்சியும் பொருளும் அஃதே!

இத்தரை பிறந்த நாளாய்
எழுந்தபோர் புரட்சி யெல்லாம்
தத்தமை அடிமை கொண்ட
தளைகளை உடைக்க வன்றோ!
வைத்தழி செய்தும், தாழ்த்தி,
வகையுற சுரண்டி வாழ்ந்தும்
மெத்தவே எதிரி யாகி
மனிதனை மனிதன் தின்றான்!

விரிந்தயிப் பார்மி சைத்தன்
விடுதலை அற்று வாழ்வோர்
இருக்கிற நாள்வ ரைக்கும்
இருந்திடும் விடுத லைப்போர்;
ஒருவரின் விடுத லையை
ஒழித்திட ஒருவர் ஏகின்
அறங்கெடும்; இனம்கு லங்கள்
அரும்பிடும்; மோதல் மூளும்!

தன்னுரி மையி ழந்து
தரணியில் தவிக்கும் மக்கள்
தன்னிலோர் பிரிவாம் நாமும்
தகைந்து*போ ராடு கின்றோம்!
இன்றுபோ ராடு கின்ற
ஏனையோர் போரின் மேலாய்
ஒன்றிநம் போர்க்கு ரல்பா
ரொலித்திடல் கண்டு கொள்வீர்!

எங்கணும் காண ஒல்லா
ஈகமும் ஈவும் செய்த
எங்களின் வீரர்க் கீடாய்
இங்காரு மில்லை; வீரம்
பொங்கிடும் பாவி யத்தைப்
புரிந்தனர்; ஒடுக்கப் பட்டோர்க்
கெங்களின் போராட் டம்மே
ஈடுகாட் டான தன்றே!

இறப்பினுக் கஞ்சி டாத
எழில்மிகும் உறுதிப் பாடும்
மறவ(ர்)தம் வலியும் எங்கள்
மற்போர்க்கு வளமை சேர்க்கும்
உறப்பிலாப் பகைவர் போல
உதவிகேட் டலையாப் போக்கால்
அறக்கழி வாளர் கூடி
அடக்கியும் நிமிர்ந்து நின்றோம்!

எமைநெருக் கடிகள் சூழ
எம்விடு தலைப்போர் மிக்க
அமைவுறும் இக்கட் டுக்கள்
அடைந்தெதிர் நோக்கி நிற்கும்;
அமைதியின் கதவ டைத்தே
அடுகளத் தேகும் மாணார்
தமிழினத் துன்பம் தீர்க்கத்
தகவுடன் தீர்வு காணார்!

என்றுமில் லாத போரை
எடுத்தனர்; உக்கப் போரை
நன்றுநாம் எதிர்கொண் டாடி
நலித்தனம்; பேரி ழப்பை
என்றுமில் லாவ கையில்
எதிரிகண் டானெம் மண்ணில்
என்றுமே வன்க வர்புக்
கிடமிலை உணர்த்தி விட்டோம்!

போரினால் பொருளி ழந்தும்
பெரும்நெருக் கடிக ளுற்றும்
நேரிலாப் புலிப்ப டைமுன்
நின்றிட ஒல்லாப் போழ்தும்
சீரிலாப் படைந டத்தித்
திருவிலா வன்க வர்பே
தீர்வெனச் சிங்க ளர்கள்
தீவிரம் காட்டு கின்றார்!

கருவிகொண் டெமைய டக்கக்
கருதிடும் பகைவர் போக்கில்
ஒருசிறு மாற்ற மில்லை;
உணர்ந்தினப் பகையாம் சேற்றில்
இருந்திடும் அவரால் எம்மின்
இச்சையை நிறைவு செய்ய
ஒருதீர்வுந் தோன்றா தென்ற
உண்மைநாம் உணர்தல் வேண்டும்!

நாற்பதாண் டிற்கும் மேலாய்
நடக்குமெம் விடுத லைப்போர்
ஏற்புறும் அமைதிப் போராய்
எழுந்துபின் ஆய்தப் போராய்
மாற்றமுற் றெத்த னையோ
வழிதனில் நயன்மை கேட்டும்
மாற்றலர்க் கெம்கு ரல்தம்
மனந்தொட்ட தாகக் காணோம்!

காலமும் எமது மக்கள்
கண்டபே ரவலத் தொடு
மாளவும் அழிவு மாக
வருத்ததின் சுமையால் மக்கள்
சாலமும் குருதி சிந்திச்
சாகிறார்; இவையெல் லாமும்
ஆளுமச் சிங்க ளர்தம்
அகந்தொட்ட தாகக் காணோம்!

ஈவிரக் கமிலான்; போரை
ஏற்பவன்; எமது நாட்டின்
ஆவியைப் பறித்து மக்கள்
அழிவினைக் குறிக்கோ ளாக்கிக்
கூவிடும் பகைவர் நெஞ்சம்
குறைகளைந் தெமக்கு நீதி
மேவிடக் காண்பா ரென்று
மிழற்றிட ஒல்லா தன்றே!

இந்நிலை யில்நாம் போரை
ஏற்பதைத் தவிற வேறு
நன்னிலை கண்டோ மில்லை;
நடைபெறும் போரின் போதும்
திண்ணிய அமைதி வாசல்
திறக்கிறோம்; அமைதி தன்னை
உன்னியே எதிரி வந்தால்
உறவுற அணிய மாவோம்!

வன்முறை மீது காதல்
வளர்த்தனர் எதிரி; என்றும்
நன்முறை அற்ற போரை
நத்தினர் படையெம் வாயில்
நின்றுபோர் முரசு கொட்டி
நிலத்திலெம் மினம ழிக்கத்
தன்னுயிர், குருதி சிந்தத்
தகையிலார் அணிய மானார்!

நெருக்கடிச் சூழ லில்நம்
நிலத்தினை இனத்தைக் காக்கக்
குருதியைச் சிந்தி வென்று
கொள்கிற துய்த மான
உரிமையே விடுத லையாம்;
ஓர்பொருள் அல்ல அஃதை
அருவிலை பேசு தற்கே!
அயர்வுறா தெதிர்த்து நிற்போம்!

பேரிடர் உற்றும்; நாளும்
பெருநெருக் கடிகள் கண்டும்
நீரெனக் குருதி சிந்தி
நிற்குமெம் மக்க ளாலும்
வீரரின் ஈகத் தாலும்
விதிர்த்திடா தெதிர்த்து நின்றோம்;
பாரினில் வரலா றேயெம்
பயனுறு வழிகாட் டாகும்!

வீரரின் குருதி யாலே
விளைந்தயிவ் விடுத லைப்போர்
சீரெலாம் உற்றும் துய்தம்
சேர்த்துமீ கத்தால் தேசம்
பேருரு வாக்கம் பெற்றும்
பெட்புடை உறுதி பெற்றும்
தேரிடச் செய்தார் அந்தச்
சிற்பியர் வணங்கு வோமே!

தகைந்து –துணிந்து; ஈகம் –தியாகம்; ஈவு –அர்ப்பணிப்பு; ஈடுகாட்டு –உதாரணம்; உக்கம் –உக்கிரம்; மாற்றலர் –பகைவர்; சாலவும் –மிகவும்; மிழற்றுதல் –சொல்லுதல்; ஒல்லாது –முடியாது; அருவிலை –பேரம்; துய்தம் –புனிதம்.

அகரம் அமுதன்