சனி, 7 மார்ச், 2026

ஜெப வெண்பா!

 ஜெப வெண்பா!

 

கத்தரே! உம்பேர் கதைக்கின்ற நாமணக்கும்

அத்தரே! நற்பரி சுத்தரே! – இத்தரையை

ஆனானப் பட்ட அமெரிக்கா ஆள‍அருள்

வானாதி தேவா! வழங்கு! 01

 

ஏசப்பா! நீங்கள் இரட்சித்தால் வெல்வது

லேசப்பா; ட்ரம்ப்ஒரு லூசப்பா; - மோசமாய்ப்

போகிறது போரப்பா! போர்மடியும் வீரரைக்காப்

பாத்தவழி பாரும்அப் பா! 02

 

குண்டுகளைப் போட்டுக் குழந்தைகளைக் கொன்றாலும்

கண்டுகொள்ளா முல்லாக்கள் கைகலப்பால் – நொண்டிநொண்டிப்

பின்னங்கால் தங்கள் பிடறிபட நம்மறவர்

பின்வாங்கு கின்றார் பிதா! 03

 

பரலோகம் வாழும் பரம பிதாவே!

கரவாமல் காட்டும் கருணை; – விரைந்து

செமையாக வைத்துநாம் செய்யத்தான் வேண்டும்

அமைதிமார்க் கத்தை அசால்ட்! 04

 

உங்களை எண்ணியே உள்ளம் உருகினோம்

எங்களைக் காக்க எழுமையா! - தங்கள்

கரிசனம் வேண்டியே கைதொழு கின்றோம்

பரிசுத்த ஆவியே பார்! 05

 

அல்லாவும் முல்லாவும் ஆட்டிப் படைத்தாலும்

தில்லாகப் போரிடவோம் ஜீசஸே! – கல்லாநாம்

கட்ட வளைகுடா கண்டிப்பாய் வேண்டுமையா!

நட்டத்தில் போகுதுநம் நாடு! 06

 

வெனிசுலா போலில்லை; வீரமுடன் ஈரான்

முனிந்துகுத்து கின்றதே முள்ளாய்; – தனிமனிதன்

போர்வெறியென் றாலும்நம் போரலவோ ஆண்டவரே!

தீர்க்கமுடன் வெற்றிபெறச் செய்! 07

 

வெம்படை என்று வியந்து வியந்துலகம்

பம்மிடச் செய்த படியாலே - நம்படை

சர்ப்பமாய்ச் சீறிச் சமரிலே வெல்ல‍ஏன்

கர்த்தாநீ ரட்சிக் கலை!? 08

 

தோத்திரம் ஆண்டவரே! சோதனை வெற்றிகொளக்

காத்திர மாகநீர் கைகொடுப்பீர்; - சூத்திரம்போல்

எங்கள் தளங்களெலாம் ஏவுகணை பொத்தல்கள்;

மங்காமல் காப்பீரெம் மாண்பு! 09

 

ஆட்டிடையன் கந்தல் அழுக்குடையன் தண்ணீரை

ஊட்ட மதுவாக்கி ஊட்டியவன் – வாட்டமுற்ற

ஊர்சனத்தின் பாவங்கள் ஓட்டும் இறைதூதன்

ஜீசஸ்க்குச் செய்தோம் ஜெபம்! 10

 


ஏசு பிரான் – (தன்மனத்தெண்ணுதல்)

 

என்கால்கை ஆணியையே என்னால் பிடுங்கிட

அன்றுமுதல் இன்றளவும் ஆகவில்லை; – இன்றுநான்

போர்வெல்ல ஆசி புரியனுமாம்; போர்நல்ல

தீர்வல்ல; தோற்கட்டும் சென்று! 11

 

கள்ளிப்பால் தந்து கதையை முடிக்காமல்

அள்ளிப்பால் தந்த,ட்ரம்ப் அன்னையால் – விள்ளநாக்

கூசும் படியாக‍க் கொஞ்சமா ஊர்படுது

லூசுப் பயலாலே லோல்!? 12

 

 

 


 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக