ஞாயிறு, 27 ஜூலை, 2008

திசைமாறிய பறவைகள்!

நீகுடித்த எச்சில்பால்
நான்குடித்து வளர்ந்ததாலா
நான்புசித்த மீதத்தில்
நீபசி ஆறிவந்தாய்?

ஒட்டிப் பிறந்தவர்போல்
உன்நிழலில் நான்நடக்க...
எட்டிப் பிரியாமல்
என்னளவில் நீபழக...

அண்ணன் தம்பிக்குள்
அழியாத நட்பொன்று
அரும்பாய்ப் பூத்துவர
அதிசயிக்கும் ஊர்கண்டு!

பாட்டில் நயமொளிக்கும்
பண்பெனவே நீயொளிய...
பூப்பூவாய்த் தேன்தேடும்
பொன்வண்டாய் நான்தேட...

ஓடி விளையாடி
ஒருவாறு ஓய்ந்தபின்னே...
ஆடித் தடுமாறி
வீடுவந்து சேர்ந்தபின்னே...

அடிவயிற்றுப் பசியாற
அன்னம் இடுபவளின்
மடியோடு நானமர...
மண்ணோடு நீயமர...

என்ன நினைத்திருப்பாய்?
ஏன்பிறந்தான் என்றிருப்பாய்!
உன்னுரிமை நான்கொள்ள
ஓரவிழி வேர்த்திருப்பாய்!

சிறுவயதில் நமக்குள்ளே
சுயநலங்கள் இருந்ததில்லை...!
சிறகுகளை விரித்தாலும்
திசைமாறிப் பறந்ததில்லை...!

பருவம் போனதினால்...
பாழுலகம் புரிந்ததினால்...
திருவில்லாத் தன்னலங்கள்
சிந்தைக்குள் புகுந்ததினால்...

சொத்தைப் பிரித்துவிட்டோம்!
சுமந்தவரை பிரிந்துவிட்டோம்!
பத்தோடு பதினொன்றாய்ப்
பார்ப்பவருக் காகிவிட்டோம்!

தனக்கென்று சிறகுகள்
தனித்தனியாய் ஆனதினால்
திசைமாறிப் பறந்துவிட்டோம்!
திரும்பிவர மறந்துவிட்டோம்!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

நத்தை!

தொழிலிலை எனினும் சுமைதூக்கி!
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி!
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ்
வழிவழி போகா துள்ளபடி!

ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு!
உள்ளதன் படுக்கை அறையுண்டு!
கொற்றவன் இல்லை என்றாலும்
கோல எழில்மணி முடியுண்டு!

கடந்து போகும் இடமெல்லாம் -பொதி
கழுதை போலே சுமந்துசெல்லும்!
அடடா! அதுதான் வீடாகும்!
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்!

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது!
பட்டுத் தெளியுமுன் பட்டறிவால்
ஐம்புலன் அடக்கும் சித்தனிது!

கொம்போ டுடலை உள்வாங்கிக்
கொடுமையி லிருந்து தப்பிக்கும்!
ஐம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 15 ஜூலை, 2008

பேணுகிறேன் உன்னை பெரிது!

கட்டித் தயிரே! கனியூறும் தேன்சாறே!
எட்டுத் திசையாளும் இன்தமிழே! -சொட்டும்
சுவைத்தேனே! உன்னைச் சுவைத்தேனே! அள்ளி
அமைத்தேனே பாட்டில் அறி!

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்ட
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!

அடுத்தோர் பிறப்பென்றால் அங்குமுன் சேயாய்
மடிதோன்றி வாழ்வேன் வடிவே! -நொடிப்போழ்தும்
என்னைநீ நீங்கினால் இன்னுயிர் நீத்திடுவேன்
பொன்னே! தமிழே! புரி!

உச்சி முகர்ந்தெனக் கோரா யிரமாய்நல்
இச்சுத்தா தாயே! இசைத்தமிழே! இச்சகத்தை
ஆளப் பிறந்தவுன்னை ஆளத் துணிந்திட்டேன்
கோளெனவும் கொண்டேன் குறி!

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதன் எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது!

அகரம்.அமுதா

வெள்ளி, 11 ஜூலை, 2008

இருபொருள் வெண்பாக்கள்!

மேகமும், கணினியும்!
பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

யானையும், நெற்றாளும்!
கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

நீரும், பாம்பும்!
கிடந்தா டியிரையும்; ஈசன் சடாம
குடத்தடையும்; முட்டையிடும்; கோணற் -படங்காட்டும்;
வட்டமிடும்; ஆகையினால் வாரிதிநீர் பாம்பின்நேர்
இட்ட முடனாய்ந் தியம்பு!

கோற்சிலம்பரும், பாவலரும்!
அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்!

அகரம்.அமுதா

சனி, 5 ஜூலை, 2008

வேரை மறந்த விழுது!

பொற்றா மரையே! புகழ்நிலவே! பூம்பனியே!
கற்றார் தமைவிரும்பும் காதலியே! –நற்றமிழே!
சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான்
வேரை மறந்த விழுது!

உன்றனுக் கின்பணி ஓயாமல் செய்வதற்கே
தந்தைதாய் காக்கும் கடமையினும் -முந்திடுவேன்
வந்தோர்போ வோர்வேர் மறந்த விழுதென
நிந்திப்பி னும்பொறுப்பேன் நெஞ்சு!


அகரம்.அமுதா