திங்கள், 3 ஆகஸ்ட், 2026

 

சோகத்தைச் சொல்லில் சுமந்து துடிக்கின்றேன்

ஆகத்தை விட்டு அகன்றவுயிர் – போகட்டும்

மண்ணோரை ஆண்ட வழுவிலா நல்வழியில்

விண்ணோரை ஆள விரைந்து!

 

களைகள் அகற்றக் கழனிசூழ் நாற்றை

முளையில் பிடுங்கும் முறையாம்; -களைநேர்

கறுப்புப் பணமகற்ற நல்லப் பணமும்

தெறுத்திட்ட மோடிச் செயல்!

 

சேர்த்த பணம்சிறிதும் செல்லாது போனதால்

கோர்த்தெடுத்து வங்கியில் கொண்டுகொட்டப் –பார்த்திருந்து

வாராப் பெருங்கடனை வள்ளல்போல் தள்ளுகிறான்

பாராளும் மோடிப் பயல்!

 

பெருவணிகன் எல்லாம் பெருங்கடன் காரன்;

இருங்கட னைச்சிறிதும் ஈயான்; -தெரிந்திருந்தும்

ஏழைப் பணம்சுருட்டி ஏய்த்தோன் கடன்தீர்க்கும்

கோழை அரசைக் கொளுத்து!

 

திருடன் விடுத்துத் திருட்டுப் பொருளை

வருடம் முழுதும் வளைத்தால் –திருட்டுப்

பொருளற்றுப் போமோ? புதிதாய் முளைக்கும்

இருளுற்ற நேரம் இளித்து!

 

 

 

மல்லையா பெற்றகடன் மக்கள் வரிப்பணம்

இல்லையா? ஏமாற்றிச் சென்றவனைக் – கொல்லாமல்

உள்ளபடி இங்கவன் உற்ற கடனையெல்லாம்

தள்ளுபடி செய்தல் தவறு!

 

செலுத்தத் தவறினான் சென்றொளிந்து கொண்டான்

உலுத்தன் இவனை ஒழித்தால் – வலுத்தவன்

பெற்ற கடனைச் சிறிதும்ஏ மாற்றாமல்

முற்றும் அடைப்பான் முனைந்து!

 

கல்லூரிப்பெண்!

 

அங்கமெல்லாம் ஆடை அணிந்தும் மறைத்திடுவாள்

கொங்கைகளைப் பாடநூல் கொண்டு!

 

கொங்கு தமிழிருந்தும் இங்கிலீஷை வைத்திடுவாள்

நுங்குநிகர் நாக்கின் நுனி!

 

எண்ணெயிடாள் கூந்தல் முடிந்திடாள் பூச்சூடாள்

வண்ணவண்ண ஹேர்டையிடு வாள்!

 

கையூட்டே போல்மலிந்த பேச்சுப்பே சும்விழிக்கு

மையூட்டிக் கொள்வாள் மகிழ்ந்து!

 

கைவிரல் மோதிரத்தைத் தொப்பூழ் தனிலணிந்து

கைவளையேக் காதணிவாள் காண்!

 

மெய்க்குயிர்போல் ஒன்றி விடுங்காதல் ஆனாலும்

கைக்குதென்பாள் காசில்லாக் கால்!

 

பிக்கப்பும் ஆவதொடு டேட்டிங்கும் போய்வந்து

செக்கப்பும் செய்வாள் சிலை!

 

டிஸ்கோத்தே டின்பீர் இலாநாக ரீகத்தைப்

பிஸ்கோத்தே போல்பார்ப்பாள் பெண்!

 

கட்டு மரமே!அக் காலனையே ஏமாற்றி

விட்டு நலமாக வீடுவந்தாய்; – துட்டு

மரமே! உனக்கு மரணமே இல்லா

வரமே அவன்தந்தான் வந்து!

 

 

கரையொதுங்கும் என்றன்றோ கண்டிருந்தார்; நீயோ

கரையேறி வந்த கவினை – உரைப்பதெனில்

அப்போலோ செல்லாமல் காவேரி சென்றதனால்

இப்போது மீண்டாய் இனிது!

 

ஆழிதான் ஆங்கே அளவிலா நீர்பெற்றும் 
சூழும் நதிநீர் துணைகொள்ளும் -ஆழப் 
படித்தோம்நாம் என்றெண்ணிப் பற்றுவிடல் வேண்டா 
படிக்கும் பழக்கத்தைப் பற்று! 

 

அறிவில் மிக்கோரை அன்புடை யோரை

அறிவு வரவேற் றமர்தல் –செறிகூர்மை


முள்ளினை முள்ளின் முனைகொண் டெடுத்திட


வல்ல செயலென்பேன் வந்து!


அழகாய் ஒருபெண்ணை ஆங்குநாம் கண்டால்

பழக மனமே பறக்கும் – அழகல்ல


என்பவர் எண்ணித் துணிக இளம்பருவம்


தன்னில் இதல்ல தவறு!


 

கல்லாமை வேண்டும் கரவு பிறன்மனையைப்

புல்லாமை வேண்டும் புரி!

 

இல்லாள் அகத்திருக்க இன்னொருத்தி யைத்தேடல்

நல்லார்க்(கு) அழகோ நவில்!

 

அகத்தாள் இருக்க அயலவளைக் கூடல்

முகையிருப்ப முள்நுகர்ந் தற்று!

 

தேனிருப்பத் தேனடையைச் சென்றுண்ப தொக்குமில்லாள்

தானிருப்ப வேற்றவள்சார் தல்!

 

உனக்கென்(று) ஒருத்தி உளக்கால் உளத்தால்

நினையாய் அயலவளை நீ!

 

கூட ஒருத்தியைக் கொண்டபின் மற்றவளை

கூட நினைத்தல் கொடிது!

 

உற்றவளை நாடி உறவுகொள்; ஒர்பொழுதும்

மற்றவளை நாடல் மறு!

 

ஒருத்தியோ(டு) உற்ற உயர்வாழ்வே வாழ்வாம்

கருத்தினில் ஏற்றல் கடன்!

 

நினைவோடும் மற்றொரு நேரிழையை எண்ணாய்!

மனையாளோ(டு) இன்புறுதல் மாண்பு!

 

ஒருவர்க்(கு) ஒருத்தியென்ற ஒப்பில் மொழியைக்

கருத்தில் நிறுத்திநெறி காண்!

 

இருமனையாள் தேடி இணைவதுவும் வேண்டா;

ஒருமனையாள் போதும் உணர்!

 

வரைவின் மகள்சேர்ந்து வாழீர்; பிரிதில்

உயிர்க்கொல்லி நோயின் உரை!

 

பாராண்ட அம்மா பரம பதமடைந்தார்;
நேராய் இறைவனடி நேர்கவெனச்சீராளும்
வெண்பாக் கவிஞன்நான் வேண்டுகிறேன்; கண்கள்கொண்(டு)
உண்பா இரண்டொன் றுரைத்து!

 

செம்மைப் பணிமுடித்துச் சென்றார் ஜெயலலிதா
அம்மை; இறைவா! அருள்செய்க! - இம்மைவிட்டு
வேனேறி நன்றாய் அமைதி அடையட்டும்
ஊனேறி நின்ற உயிர்!

 

அம்மா! எனத்தமிழர் அன்போ டழைக்கின்ற
அம்மா! அமரராய் ஆகிவிட்டார்; – அம்மாவின்
ஆன்மா அமைதியுற ஆண்ட வனைவேண்டித்
தேன்பா படைப்போம் தெளிந்து!

 

நிலத்துதித்த வெள்ளி நிலவாம்; இவர்தான்
பலம்மிக்க ஆட்சி படைத்தார்சிலர்வந்து
தந்தபல தொல்லைகளை தாங்கித் தடையுடைத்துச்
செந்தமிழ்நா டான்றார் சிறந்து!

 

நமது பணியந்த நல்வரைப் பாடல்;
தமது பணிமுடித்தார் சாவில்அமைதி
உறுக அவரான்மா; ஊரும் உறவும்
பெறுக அமைதி பெரிது!

 

கடலே கடலலையே! காலன் அவர்தம்
உடலை விடுத்துயிர் உண்டான்; - அட!எம்
உயிரைக் கேட்டிருப்பின் ஓரா யிரமும்
அயிர்த்திடா ஈயோமே அங்கு?

 

சிறந்த அவர்வாழ்க்கை சீர்த்தி மிகுந்த
திறந்தநல் நூலாய்த் திகழஇறந்தும்
இருக்கிறார்; எங்கள் இதயத்தில் நின்று
சிரிக்கிறார் அந்தத் திரு!

 

விரைந்து கடமை  விரும்பி முடித்து
தரையை விடுத்துவான்  தங்கவிரைந்த
உன்னை நினைந்து  உருகும் உளங்களை
என்சொல்லித் தேற்றநான்  இங்கு?

 

இனியோர் பிறவி இருக்குமெனில் அம்மா!

நனிபிறக்க வேண்டுமின் நாட்டில்தனியொருத்தி
யாயிருந்து நீசெய்த சாதனைகள் எத்தனை
வாயிருந்தால் வான்கூறும் வந்து!

 

விளக்கே இருளுற்றால் வேறெங்கு போக
விளங்கும் ஒளிக்காய்? விளம்பாய்; – களம்புகுந்து
நாட்டைத் திருத்தி நலங்கள் விளைத்தேனோ
காட்டை அடைந்தாய் கடிது?

 

இங்கிவர்போல் மக்கள் இதயம் கவர்ந்தவர்யார்?
மங்காப் புகழ்படைத்த மங்கையன்றோ? – தங்கா
தெவண்சென்றார் மக்கள் துயரத் துழல
இவண்நின்றோம் கண்ணீர் இழிந்து!

 

சால்பு நிறைபணிகள் சற்றும் குறையாமல்
கால்கொளச் செய்து கடன்முடியாஏல்வையில்
போதும் எனயிறைவன் போந்தழைத்துக் கொண்டானே
ஏதுநாம் செய்ய இனி?

 

பனித்த விழிதுடைத்துப் பாரில் அவர்தம்
தனித்த வழிநடத்தல் சாலும்இனித்த
பணியென் றிதனை எவர்தான் இயற்றார்?
பணிந்து நடப்பார் பகுத்து!

 

மதித்தாரை என்றும் மதிப்பதும் ஓங்கி
மிதித்தாரைக் கூட வியந்தும்துதிபாடாத்
தெள்ளிய நல்மதியால் தேசம் நடத்திய
ஓள்ளிய பாவையை ஓர்!

 

அகவை நிறைந்தோர் அகிலத் திலையா?
அகவை குறைவென் றறிந்தும்தகவிலா
காலன் விரைந்து கதைமுடித்தும் நற்புழகைக்
காலம் எடுத்துரைக்கும் கண்டு!

 

வாழ எமக்கு வழிகாட்டி னாய்நாங்கள்
சூழ நடந்த சுடக்கொடியே! – ஆழப்
புரிந்த எமைவிட்டுப் போந்ததேன் வானம்?
சரிந்த குழலாளே சாற்று!

 

வளர்கிற துன்பம் வடியவழி இன்றித்
தளர்கிற நெஞ்சம் தவிக்கவளர்முகம்
கண்ட அவரைக் கடவுள் அழைத்தனன்
விண்டுரைக்க வாகா விதம்!

 

வழிகள் பலவாம்; மகிழ்ந்து நடக்க
விழிகள் இருந்தும் விளக்கைஇழந்தோம்
நலிகள் சுமந்து நடக்கின்ற எங்கள்
வலிகள் கடக்க வழி?

 

கனிந்த மனத்தால் கருதுபுகழ் உற்றாய்;
முனிந்தது காட்டா முகத்தாய்; - நனியுனை
ஏழை எளியோர் இனிதேத்தும் இந்நாளில்
கோழை இறைநின்றான் கொன்று

 

விரிந்த விழிகள் விளங்கா இருளால்
கரிந்தநல் பார்வை கலுழஇரிகின்ற
கண்ணீர் இமைகடந்து கன்னம் கடலாகப்
புண்ணீர் உறையும் புரிந்து!

 

குளிர்நிலவே! எங்கள் குலவிளக்கே! வண்ணத்
தளிர்மலரே! எந்தமிழர் தாயே! – ஒளிர்கதிராய்
காலம் பலகடந்தும் காசினியில் நீவாழ்வாய்
ஞாலம் புகழும் நனி!

 

நம்ப மறுக்கிறது நன்நெஞ்சம் தாய்மறைவை;
உம்பர் உலகாள உள்ளியோ? - இம்பர்
உலகில் உடலை உதறிஅவர் ஆன்மா
விலகி விரைந்தது விண்?

 

கானேகக் கண்டோம் கவினுடல்; நல்லான்மா
வானேகக் கண்டோம்; வணங்கினோம்; - தானேகித்
தானந்த விண்ணுலகைத் தாங்கக் கடவதென
மானங்கு சென்றாள் மறைந்து!

 

இன்றுபோல் என்றும் இதயம் கனக்கவே
கொன்றுபோய் விட்டான் கொடுங்காலன்; – அன்றுபோல்
சிம்மப் பிறப்பெடுத்துத் தேசத்தை ஆள்வதற்(கு)
அம்மா வருவளோ? அன்று!