வியாழன், 25 டிசம்பர், 2008

கற்றல் சிறப்பு!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழிய
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

அகரம்.அமுதா

சனி, 20 டிசம்பர், 2008

தாலி வரம்!

திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம் செல்கிறான். அந்த இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி அவனுக்கு எழுதும் கவிதைக் கடிதமாக இக்கவிதை!

திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?

இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...

அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...

பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...

விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?

சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...

முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...

முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!

அகரம்.அமுதா

புதன், 17 டிசம்பர், 2008

வேண்டாமே இந்தப் ப(பு)கை!


நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!

வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!

நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!

காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!

புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர்
பகையில் புகையே பகை!

சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்
பொறியைந்தும் பாழாம் புரி!

பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்
புற்றுவைக்கும் வேண்டாம் புகை!

பஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு சாவாய் நலிந்து!

வெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்
மண்குழியில் வீழ்வாய் மரித்து!

புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!

அகரம்.அமுதா

வெள்ளி, 12 டிசம்பர், 2008

தீ! சொல்!

தீ!
வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ஆட்டிப் படைத்தே அறிவழித்துக் -கூட்டினை
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ?

சொல்!
சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
தேம்புவதால் இன்பம் திரண்டிடுமோ? மண்பதையில்
சோம்புவதால் உய்வுண்டோ சொல்?

அகரம்.அமுதா

சனி, 6 டிசம்பர், 2008

அருவி!

நான்
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...

விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...


உடலெங்கும்
வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...

குன்றுகளின்
கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...

நான்நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...

பாறைகள்
என்
விளையாட்டு பொம்மைகள்...

நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!

நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்

என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்

மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்

என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்

என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?

அகரம்.அமுதா

திங்கள், 1 டிசம்பர், 2008

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!


(மும்பையைப் பத்துப்பேர்கள் கொண்ட தீவிர வாதிகள் தாக்குதலைக் கண்டித்து எழுதப்பட்டது.) -26.11.2008-


அக்குளில் அழுக்கி னைப்போல்
       அண்டியே துன்பு றுத்தும்
குக்கலின் என்பு டைத்துக்
       கொடுங்குளிர் காய வேண்டும்!
மக்களை மாய்க்கு மந்த
       மதியிலார் போக்கால் பாரில்
சிக்கலே மிகுவ தாலே
       தீயரை ஒறுக்க வெண்டும்!

செப்படி வித்தை காட்டிச்
       செருவிடை மார்நி மிர்த்தி
எப்படை எதிர்த்த போதும்
       எறும்பென ஊதித் தள்ளும்
முப்படை நமக்கு முண்டு!
       முன்னரண் தாண்டி வந்து
தப்படி வைப்பின் அன்னார்
       தாள்களை யொடிக்க வேண்டும்!

தந்தைக்குப் பிறந்தா லன்றோ
       தருக்குவான் நேரில்! மாட்டு
மந்தைக்குப் பிறந்த கூட்டம்
       மறைந்தன்றோ தாக்கும்!? முற்றும்
சிந்திக்கும் திறனில் லாத
       தீயரைப் பிடித்து வந்து
தந்திக்கு முன்பு தைத்துத்
       தலைதனை இடர வேண்டும்!

சோற்றிலே கல்கி டந்தால்
       சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வ ளர்ந்தால்
       நன்மையோ? பெருகி யோடும்
ஊற்றிலே நஞ்சி ருந்தால்
       உண்ணுதற் காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்து பட்ட
       கொடியரைக் கொல்ல வேண்டும்!

வேவுகொள் துறையே! நீயுன்
       வேலையை முடுக்கி விட்டு
வேவுகொள்; அன்றி நீயும்
       மெத்தென வீற்றி ருப்பின்
சாவுகொள்; எல்லை தாண்டித்
       தருக்கிடும் பேடி தம்மைக்
காவுகொள்; நாட்டின் ஆண்மை
       காவல்கொள்; விழிப்பி னைக்கொள்!

பஞ்சுமாப் பொதியிற் றீயைப்
       பதுக்கிடும் தன்மை போலக்
கொஞ்சமா சூழ்ச்சி செய்தார்?
       கொடுமனப் போக்கால் நாளும்
நஞ்சுமா நெஞ்சர் ஆடும்
       நாடகம் அறிந்த பின்னும்
அஞ்சுமா இந்தி யாதான்?
       அயருமோ எல்லைக் காவல்?

அணுக்கமாய் எடுத்து ரைப்பாய்!
       அறிவிலாப் பேய்ம னத்தர்
இனக்கமாய் வாரா விட்டால்
       இடியெனப் பொருது! போ!போ!
சுணக்கமேன்? இந்தி யாவே!
       தூமனம் துயில்தல் இல்லை;
மணக்குமோ காகி தப்பூ?
       மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா

வியாழன், 27 நவம்பர், 2008

வாழ்த்தும், ஏற்பும்!


யர்திரு நெல்லைக்கண்ணன் அவர்கள் என் வலைப்பூவைப் படித்து என்னைப் பாவால் பாராட்டியமையும் அதனை ஏற்று நான் பதிற்பா வடித்தமையும்.


வெண்பாவில் விளையாடும் உங்களையே
      வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
      கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
      பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன்
      பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க!

அன்புடன் நெல்லைக்கண்ணன்

இனி என் பாடல்:-

வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா

அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?

நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் ஒப்பாதே!
ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே

பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
ஆணென்பேன் என்னை அகவையிறு பத்தெட்டு!
முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்

மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;

பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!

அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே

கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;

தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
தீரமின் மையால் தெரிந்து!

அகரம்.அமுதா

ஞாயிறு, 23 நவம்பர், 2008

என் பாடல்!

செந்தமிழில் சொல்லெடுத்துத்
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!

காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!

உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!

முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!

உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!

முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!

சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!

எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!

காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?

எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!

முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!

அகரம்.அமுதா

வியாழன், 6 நவம்பர், 2008

சிங்கை பெற்ற செல்வம்! முகம்மது ரஃபி!


- - - - - - - - - முகம்மது ரஃபி--- அகரம்.அமுதா--- பொன்.மாகாலிங்கம்.

காலைக்கதிர் முளைக்கும் முன்-ஓர்
சோலைக்குயில்
ஒலி அலைவழி
ஒலியெழுப்பும்...

அதைக்-
கேட்டெழுந்தத் தென்றல்
கீழ்த்திசை கட்டிலில்
கிடந்துறங்கும் கதிரைத்
துயிலெழுப்பும்!

சேவல் கூவிச்
செங்கதிர் எழும் -இதை
ஊரறியும்;
உலகறியும்!

ஓர்-
பூவை கூவிப்
பொழுது புலர்வதை
வானொலி கேட்கும்
மாந்தர்தம்
காதறியும்;
கருத்தறியும்!

அக்குயிலின் பேர்
முகம்மது ரஃபி- என
மூலைக்கு மூலை
மாந்தர்தம்
மூளைக்கு மூளை
எழுதி(யி)ருக்கும்...!

-- -- --

அரிநிகர்த்த –அவ்
அரியவனின் நிறம்
ஊதா;

குரலில் கொஞ்சம்
தேனைக் குழைப்பார்
அதனைத் துய்க்காது
அளிகள் ஓடிப்போய்
மலர்களில் மகரந்தத்தை
ஊதா!

-- -- --

அவர்-
சாதனைகளின் குதிர்;
எப்படி சாதிக்கிறார்
என்பது
சாதனைகளாலும்
அறியப்படாத புதிர்!

சாதிக்க வேண்டி
மௌனமாய் இருந்து
மௌனத்தைச் சோதிப்பார்;
மௌனம்- இவரிடம் தோற்று
மௌனமானபின்
மலரிதழ் பூத்து
வாதிப்பார்!

இருமுப்பது மணிகள்
இடையறாது
நிகழ்ச்சி படைத்து
சாதிப்பார்;
இவர்போல்- ஆரும்
இயன்றிடின்- இயன்றவர்
தொண்டை கட்டிப்
பாதிப்பார்!

-- -- --

நூலாய்ந்த புலவோரும்;
கற்றாய்ந்த கவியோரும்
சூழ்ந்திருக்க...

என்போல்
கத்துக் குட்டிகளும்
கடைதேறக்
கவிதை நேரம் கண்டார்!

கிழமையில்
காரி வந்தால்
கவிதை ஒலிக்கும்...
அந்த வாய்ப்பு
ரஃபி தந்தது!

அதன் வழிதான்
கவியுலகின்
குஞ்சுக் குழாம்களைக்
குவலயம் கண்டது!

அநேகக் கவிஞருக்கு
அவரின்- கவிதை நேரம்தான்
ஊட்டச் சத்து!
ஆகையால்தான்
அவர்மேல்- எனக்கு
ஏகப்பித்து!

ஓராயிரத்து ஏழில்-
ஒப்பிலா மனிதரை
ஈராயிரத்து ஏழில்-
ஐந்தாம் முறையாக
அளப்பறிய நிகழ்ச்சிப்
படைப்பாளராய்
சிங்கை ஏற்றுக்கொண்டது!
அப்படி ஏற்றதனால்
அடங்காப் புகழைத்
தன்முடிமேல்
ஏற்றிக்கொண்டது!

அகரம். அமுதா

வியாழன், 30 அக்டோபர், 2008

கண்ணீர் அஞ்சலி!

யாரது-
யமனா?
நாய்க்கும் நீ
சமனா?

மரணமென்னும் கைகளால்-
மூக்குவிடும் மூச்சை;
நாக்கில் எழும் பேச்சை;
இதயத் துடிப்பை;
இமைகளின் படபடப்பை;
உலுக்கி உலுக்கி
உதிரச்செய்யும் மந்தியே!

உயிர்குடித்தே
உவகை அடையும்
உந்தியே!

எப்போதும்; எஞ்ஞான்றும்
இடுக்கண் தரவே
எழுதப்படும் தந்தியே!

இறப்பை ஈயவே
இதய வீட்டின் வாசலில்
காத்திருக்கும்
கருணையற்ற நந்தியே!

விந்தையே வியக்கும்
விந்தையை;
தன்னெழுத்தால் வாசகர்க்கு
இன்கண் அளித்த -கள்
மொந்தையை;

விருத்தம் தீண்டா
வியப்பை;
ஐம்பொறி என்னும்
குரங்கேறிக் குலுக்காப்
பொருப்பை;

அறிவியல் அறிவை -தன்
ஆறறிவில் தேக்கிய இருப்பை;
உடலுள் உறைந்த
உயிரென்னும் அருவ
உருப்பைப் பிய்த்து
ஓடி ஒளிந்தாயே!

யாக்கைக்குள் உயிரைத்
தேக்கி ஒளித்தாலும்
உட்புகுந்து ஊடுருவித்
தேடிக் கலைத்தாயே!
-- -- --ஓ! ரங்க நாதா!
ஸ்ரீ ரங்க நாதா!
நின்பேர் கொண்டவனை...
நின்ஊர்வழி வந்தவனை...

காலனெனும்
கள்வன்
பாசக்கயிறென்னும்
நாசக்கயிறெறிந்து
உடலை விட்டான்;
உயரைச் சுட்டான்;
மடலை விட்டான்;
முகவரியைச் சுட்டான்!

முறையா?
மண்ணுலகில்
மனிதராய்ப் பிறத்தலும் ஓர்
குறையா?
-- -- --எழுத்துலகின் சகாப்தமே!
நாவல் வாசிப்போர்
நாவெல்லாம் பலுக்கும்
மகாப் பதமே!

சிறுகதைச் செம்மலே!
கவின்தமிழ்த்தாய் -தன்
காதுகளில் அணிந்துகொண்ட
கம்மலே!

பண்ணறிந்த பாவலனே!
பாரறிந்த நாவலனே!
வசன கர்த்தாவே!
விசனத்தில் விட்டாயே!

நீடுதுயில் நீகொண்டால்
ஏடுதுயில் கொள்ளாதா?

கற்றதும் பெற்றதும்நாம்
கடுகளவே என்றிருக்கக்
கற்பித்தது போதுமென்று
காலனிடம் சென்றாயா?

தரமான படைப்பையெல்லாம்
தரணிக்குத் தந்துவிட்டு
மரண அழைப்பேற்று
மனமுவந்து சென்றாயா?
-- -- --
ஐயனே!
எழுதுகோல் ஏந்துங்
கையனே!

புதுமை விரும்பியாய்ப்
புத்தாக்கச் சிந்தனையை
வளமான உரைநடையில்
வார்த்தவனே!

உன்போல்
புதுமைசெய்யப்
புகுந்தாரை
ஆதரித்து ஆனமட்டும்
ஆர்த்தவனே!

"எனக்குப் பிடித்த கவிதை"
என்றெழுதிக்
கணக்கில்லாக் கவிஞர்களை
காசினியோர் கண்முன்
சேர்த்தவனே!

ஈசல் எதிர்த்தா
எரிமலை சாயும்?
ஈர்க்குப் பட்டா
இளங்கதிர் மாயும்?
கட்டுமரம் தடுத்தா
கடலலை ஓயும்?
கார்முகில் உரசியா
கவின்நிலா தேயும்?

கூடுபுகுந்து -உன்
உயிர்குடித்த கூற்றுவன்
ஏடுபுகுந்து -உன்
பீடழிக்க மாட்டாது
தோற்றான்;

தான் தோற்றதைத்
தக்கணமே தரணியறிய
ஏற்றான்!

மரத்தை அரிக்கும்செல்
வைரத்தை அரிப்பதில்லை...
கரத்தைச் சுடும்தீ
அறத்தைச் சுடுவதில்லை!

அகரம்.அமுதா

திங்கள், 20 அக்டோபர், 2008

அலைகடலா? கொலைமடலா?

26.12.2004- அன்று ஆழிப்பேரலையால் தமிழகக் கரையோரங்கள் அழிந்தபோது!

எடுத்து வலைவீசும்
எம்மக்கள் நடுநிசியில்
படுத்து உறங்கையிலா
பார்கடலே பதம்பார்த்தாய்?

மீன்பிடித்தக் கையோடு
மோகம் மூண்டுவர
மானணைத்துக் கிடக்கையிலா
மற்போர் நீபுரிவாய்?

கத்துகடல் நீரலையே!
கரையுடைத்த சேதியென்ன?
எத்தனைநாள் பகைமையடி
ஏனோ கொலைபுரிந்தாய்?

நிலமே நடுநடுங்கி
நிலைகொள்ளா திருக்கையிலே
உளமே பதறும்படி
ஊரழித்த மாயமென்ன?

ஊர்புகுந்து ஊரழித்(து)
ஒருநூறு பேரழித்துப்
பார்புகுந்து பாரழித்தாய்
பாற்கடலே! நாயமென்ன?

துடுப்புப் பிடிப்பவரை
துடுக்காய்ப் பகைமுடித்தாய்...
மூழ்கிமுத் தெடுப்பவரை
மூழ்கடித்துப் பரிகசித்தாய்...

ஏனென்று கேட்கஒரு
நாதியில்லாக் காரணத்தால்
எழுந்து வந்தாயோ?
எமனுருவம் தரித்தாயோ?

பொதுவாய் வீரனுக்குப்
பொருதுவது தான்சிறப்பு!
முதுகில் குத்துகிற
மூடமதி உனக்கெதற்கு?

வெறிநாய்க்கு நாவினிலே
வியர்ப்பதுபோல் அலைநாவைத்
தெரியக் காட்டினையே!
திண்றொழித்(து) ஓடினையே!

வயல்வெளியை உழுவதுபோல்
அலைவெளியை உழுபவரை...
மூச்சடக்கி முத்தெடுக்க
முனைந்தோடி வருபவரை...

ஏன்டி பகைமுடித்தாய்?
எழுந்துவந்து கொலைபுரிந்தாய்;?
தூண்டில் புழுவாட்டம்
துடிதுடிக்கச் சீரழித்தாய்?

ஒருதாலி உதிர்ந்தாலே
உட்கார்ந்து ஊரழுவும்...
ஊர்த்தாலி பரித்தாயே!
உதிரத்தைக் குடித்தாயே!

உன்பசிக்கு ஊர்ந்துவரும்
நதிவெள்ளம் போதாதா?
ஊனோடு உயிரள்ளி
உணவாக்கிக் கொண்டாயே?

அண்ணாந்து வாய்பிளந்து
ஆகாயம் வரையெழுந்து
கண்ணயரும் குடிசைகளை
கல்லறையாய்ச் செய்தாயே?

துள்ளும் நீரலையே
தூக்குக் கயிறானால்
எள்ளும் தண்ணீரும்
இரைப்பதற்கு ஆளேது?

சூழ்ந்துள்ள கடல்யாவும்
சுட்டெரிக்கும் தீயானால்
ஏழ்கடலும் சுடலையெனும்
ஏளணப்பேர் தோன்றாதா?

விதவிதமாய் ஆமைகள்
விரிகடல்நீ பெற்றிருந்தும்
அதனினும் சிறப்பான
ஆமையொன் றில்லையென்பேன்!

பல்லாமை இருந்துமென்ன?
பாழ்கடலே! பிறவுயிரைக்
கொல்லாமை வேண்டுமடி
கொடியவளே! கற்றிடுவாய்!

அகரம்.அமுதா

புதன், 15 அக்டோபர், 2008

அவன் கவியிலையாம்!

அவன்-
ஏடகம் நடத்தும்
நாடகம் என்பது-
தவ்வித் தாவும்
நவ்வியை ஒத்தது...

விருத்தம் காணும்
அருத்தம் என்பது-
தண்டகம்
தண்ணீரில் வைத்து
முகம் காட்டும்
முண்டகம் ஒத்தது!

== == ==

அவன்-
கன்னல் பற்றிக்
கவிதை கழறினால்-
கேட்போர்
காதுகள் இனிக்கும்...

விழிநீர் பற்றி
விருத்தம் விரித்தால்-
காண்போர்
கண்கள் பனிக்கும்...

தீயைப் பற்றிச்
செய்யுள் செய்தால்-
படிப்போர் பார்வை
பற்றித் தகிக்கும்...

பனியைப் பற்றிப்
பாக்கள் புனைந்தால்
வெந்த நெஞ்சம்
வெப்பைத் தணிக்கும்!

== == ==

அவன்-
தவழும் வயதிலும்
சந்தம் தீட்டியவன்!
விருத்த வயதிலும்
விருத்தம் விரிப்பவன்!

அவன் தீட்டினால்
கலிப்பா -
களிப்பாகும்!
ஆசிரியப்பா -
ஆச்சரியப்பா ஆகும்!

பாவலம் கொழிக்கும்
பா நிலம்- அவனுள்
பாவலம் இல்லையெனப்
பகருவதோ-இருகண்
குருடான
கோகுலம்?

நூல்இடை ஒசியும்
நுண்தமிழை-
நூல்நடை கொண்டு
நுகர்ந்தானைக்
கவியிலை-எனக்
கழருவதோ-ஓர்
கால்நடை?

பழத்தைப் பற்றிப்
பழிச்சொல் பகர்வது
காலத்தால் கனியாக்
காயா?

ஞாயிறைப் பற்றி
நவைகள் நவில்வது
ஞானத்தால் தெளியா
நாயா?

எட்டைப் பற்றி
எள்ளித் திரிவது
எட்டிற் சிறிய
ஏழா?

இரத்தம் பற்றி
இழிந்தன உரைப்பது
சிரங்கில் வழியும்
சீழா?

வாளியால் முகப்பதால்
வங்கக்கடல் வற்றிடுமா?
ஈயிறகின் காற்றுபட்டு
இமயம் இற்றிடுமா?

== == ==

கவி
குன்றேறி உலுக்குவதால்
ஆடாது;
அசையாது புவி!

மறம்
மல்லுக்கு நிற்பதால்
ஆடி அடங்காது;
ஓடி ஒடுங்காது அறம்!

தீவட்டி கொண்டு
தீய்ப்பதால்-
வாரணம்
வண்ணம் மாறா; -அவ்
வண்ணம் மாறா
வாரணம் நேரன்றி
"பாத்தென்றல்" என்னும்
பசுந்தென்றலே!-நீ
வேறா?

பொருள்:- நவ்வி -மான்; முண்டகம் -தாமரை; விருத்தம் -மூப்புப் பருவம், விருத்தப்பா; கோகுலம் -குரங்கு; கவி -குரங்கு; வாரணம் -சங்கு

அகரம். அமுதா

வெள்ளி, 10 அக்டோபர், 2008

எல்லாமுமாகிய அண்ணலே!

விடியாத நாட்டிற்கு
விடிவெள்ளி நீதான்!
விடியலை வழங்கவந்த
வைகரையும் நீதான்!

துருப்பிடித்த உணர்வுகளைத்
துலக்கியவன் நீதான்!
துயிலோடும் தன்மானம்
ஊட்டியவன் நீதான்!

சுதந்தரப் பேச்செடுத்த
சூறாவளி நீதான்!
சுதந்தரம் பொழியவந்த
சூழ்மழையும் நீதான்!

பாரதத் தேரிழுக்கப்
புனைந்தவடம் நீதான்!
பாரதத் தேரோட்டிய
சாரதியும் நீதான்!

இந்தியா ஈன்றெடுத்த
இளையமகன் நீதான்!
இந்தியாவை ஈன்றெடுத்த
இளந்தாயும் நீதான்!

வெள்ளையனை விரட்டவந்த
வில்லம்பும் நீதான்!
கொள்கைகளை வளர்க்கவந்த
கோமகனும் நீதான்!

ஆய்தம்போல் தனித்துநின்ற
அகிம்சைவாதி நீதான்!
ஆயினும்என்? தேசத்தின்
அருஞ்சொத்தே நீதான்!

எல்லாமு மாகிய
அண்ணலும் நீதான்!
எல்லாரது நெஞ்சிலும்
நிறைந்தவனும் நீதான்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

கருநாடகமே!

தஞ்சை உழவனவன் சிந்தும் விழிநீரால்
நஞ்சைநிலம் ஆனதவன் கன்னங்கள் -விந்தையில்லை
கன்னத் தரும்புகின்ற தாடிநெல் நாற்றானால்
பண்ணலாம்முப் போகம் பயிர்!

வேறு

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

நம்மிரு வர்க்கும் காவிரி அன்னை;
நம்மில் வேற்றுமை பார்ப்பாளா? –நீ
நம்மில் வேற்றுமை பார்ப்பது கண்டால்
நற்றாய் அவளும் ஏற்பாளா?

கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுக்
கழனி உழுது நடுகின்றான் -அக்
கண்ணீர் வற்றிக் கண்ணீர் வற்றிக்
காய்ந்த நிலம்கண் டழுகின்றான்!

ஊருக் கெல்லாம் சோறு போட்டவன்
ஒருபிடி சோறின்றி வாடுகிறான் -அட
நீருக் கன்றோ கைகள் ஏந்தி
நிம்மதி கெட்டு வாழுகிறான்!

நீர்கேட் டெவரும் நேரில் வந்தால்
மோர்கொ டுத்தவன் வாடுவதா? –அவன்
ஏர்பிடித் துழுதிட தண்ணீர் கொஞ்சம்
ஈயென் றால்நீ சாடுவதா?

பாருக் கெல்லாம் சமமழை என்றே
பார்த்து வழங்கும் கார்குலமே! –தண்
நீருக் கிங்கே கைகள் ஏந்தி
நிற்பதோ எங்கள் தமிழினமே?

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மத்தியில் ஆளும் காங்கிரசே! –தமிழ்
மக்கள் படுந்துயர் தீர்க்க ஒணாவிடில்
மரித்தால் என்ன அவ்வரசே?

கருநா டகமே! கருநா டகமே!
காவிரி நீரைத் தாராயா?
ஒருதாய் மக்கள் நாமென் பதனை
ஓர்கண முணர்ந்து பாராயா?

அகரம்.அமுதா

திங்கள், 29 செப்டம்பர், 2008

வட்டநிலாச் சுட்டவடு!

தென்றல்போல் என்சிந்தை
தீண்ட விழைகிறாள் -வண்ண
மின்னல்போல் விழிவிழுந்து
ஏனோ ஒளிகிறாள்!

பூமயங்கும் பூவிழிகள்
பேசு கின்றன –அதில்
பூமணமும் பாமணமும்
வீசு கின்றன!

பூங்காந்தள் விழிசொல்வ
தென்ன மந்திரம்? –எனை
ஏகாந்தம் சூழ்ந்துக்கொள்ள
என்னக் காரணம்?

தென்றலெனத் தேடிவந்து
தீண்டும் நினைவுகள் -அது
கொண்டவுயிர் கொண்டுப்போகும்
காலன் கயிறுகள்!

கண்ணழர்ந்து தூங்கையிலும்
கவிதை சொல்கிறேன் -நாளும்
உண்ண(அ)மர்ந்து உண்ணாமல்
எழுந்து கொள்கிறேன்!

சிந்தையுற்ற அன்னையெனை
சினந்து கொள்கிறாள் -கையில்
மந்திரித்தக் கயிறெடுத்து
கட்டி விடுகிறாள்!

மணிக்கட்டில் கயிறுறுத்த
வெட்டி எறிகிறேன் -அவள்
பொன்கூந்தல் குழலெடுத்துக்
கட்டிக் கொள்கிறேன்!

சிந்தையெலாம் உற்றநிலா
தொலைந்து போனதே -இன்று
அந்தநிலா இன்னொருவன்
சொந்த மானதே!

வட்டநிலாச் சுட்டவடு
மறந்து பார்க்கிறேன் -அது
முடிவதில்லை என்றபோது
இறந்து பார்க்கிறேன்!

அகரம்.அமுதா

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

வான்புகழ் வள்ளுவர்!

அதி-காரம் இல்லா(து) அதிகாரம் செய்தவ்
வதிகாரத் துட்பொருள் ஆளும் -விதத்துடனே
குற்றமதில் சற்றேனும் காணொண்ணா முப்பாலே
சித்தத்திற் கேற்றநூல் செப்பு!

அறமுண்டாம்; வாழப் பொருளுண்டாம்; சேர்ந்தில்
லறங்காண இன்பமும் உண்டாம் -திறத்துடனே
நாம்குறளைக் கற்க நலமுண்டாம் பொய்யில்லை
தேம்பா திருக்குறளில் தேர்!

எப்பாலும் ஏற்கும்பால் எப்பாலென் றார்ப்பாரேல்
முப்பாலாம் என்றேநீ முன்மொழி -அப்பாலில்
செப்பாமல் வள்ளுவனார் விட்ட நெறியிலையாம்
தப்பாமல் ஊர்க்கிதை ஓது!

தமிழ்க்குடியைப் பாரறியத் தக்க வழிகண்(டு)
அமிழ்தினிய முப்பால் அளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்துச் செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து!

அகரம்.அமுதா

வியாழன், 18 செப்டம்பர், 2008

உறவு!

விழுதெனவே நமைத்தாங்க
விழைவதுதான் உறவு –நாளும்
பழிபேசிப் பரிகசிக்கும்
பண்பதுவா உறவு?

இரும்பெனவே அமைந்தஓடு
ஆமையதன் உறவு –வாழை
மரத்திற்கே கூற்றுவனாய்
வரும்குலையா உறவு?

இறக்கையிலும் உடனிருக்க
இசைவதுதான் உறவு -கையில்
இருப்பிருக்க இன்புறவே
இணைவதுவா உறவு?

வற்றிவிட்ட குலத்துடனே
வாடும்புல் உறவு -தண்ணீர்
முற்றுமின்றி போகஓடும்
புள்ளினமா உறவு?

காசினியில் நற்குணத்தைக்
கண்டுவரல் உறவு -நெஞ்சில்
மாசைவைத்து முகத்தளவில்
மலருவதா உறவு?

அகத்தளவில் கலந்திருக்க
அமைவதுதான் உறவு -இனிக்கப்
பகருகின்ற வெற்றுரைக்காய்ப்
பழகுவதா உறவு?

கருமேகம் அற்றபோதும்
காணும்வில் உறவு -வானில்
இருளகன்றால் ஒளிந்துகொள்ளும்
விண்மீனா உறவு?

கண்ணிமையாய் அருகிருந்து
காக்கவேண்டும் உறவு -அன்றிப்
புண்ணெனவே வலிதந்தால்
பூணவேண்டும் துறவு!

அகரம்.அமுதா

வியாழன், 11 செப்டம்பர், 2008

தமிழென்னை இணைந்ததாலே!

நெல்லெடுத்துப் பால்மழலை எழிற்றைக் கீறும்
      நேர்த்தியென நிறைந்ததடா தமிழ்என் நெஞ்சில்
புல்லெடுத்துக் கூடுகட்டும் குருவி யைப்போல்
      புகழ்மொழியில் அதனால்தான் பாட லுற்றேன்!
வில்லெடுத்துப் போர்புரிந்த வேந்தர் போற்றி
      வியனுலகில் வளர்த்திட்ட தமிழை தேனை
அல்லொடுக்கும் ஒளிவழங்கும் பகலோன் தாயை
      அமுதனிவன் அமுதெனவே பருக லுற்றேன்

அன்புமனம் வேண்டுமெனில் அன்னை போதும்;
      அருங்கலைகள் கற்கவெனில் ஆசான் போதும்;
இன்பநலம் துய்க்கவெனில் இல்லாள் போதும்;
      இணைபிரியா திருக்கவெனில் நண்பன் போதும்;
விண்சென்றும் புகழ்நிற்க ஈகை போதும்;
      விளம்பிவிடின் இங்குரையாய் விரித்த யாவும்
ஒன்றாகி ஓருருவாய் நிற்க வேண்டின்
      ஒண்டமிழ் அன்னையவள் மட்டும் பொதும்!

கொண்டபொருள் அத்தனையும் கொள்ளை போகக்
      கொடுத்திடினும் சிரித்தலன்றி அழுதற் கில்லை!
தொண்டையிலே நஞ்சிறங்கத் துன்ப மெல்லாம்
      தொடர்ந்திடினும் மகிழ்தலன்றித் துடித்தற் கில்லை!
மண்டையிலே இடியிறங்கி வருத்தும் போதும்
      மார்தட்டி எதிர்த்தலன்றி மருள்த லில்லை!
அண்டமெலாம் ஆள்தமிழென் அகத்தை விட்டே
      அகன்றுவிடின் மரித்தலன்றி உயிர்த்த லில்லை!

நன்றென்றும் தீதென்றும் பகுத்துப் பார்க்கும்
      நல்லறிவைப் பெறவில்லை! மனங்கள் தோறும்
சென்றங்கு மறைந்திருக்கும் சூழ்ச்சி தன்னை
      சிலநொடியில் பேச்சினிலே தெரிந்தே னில்லை!
உண்டென்று சொல்லுமிறை உணர்ந்தே னில்லை!
      உழைத்துழைத்துக் களைத்திட்டேன் உயர்ந்தே னில்லை!
என்றாலும் அதுபற்றிக் கவலை யில்லை
      எழிலன்னைத் தமிழென்னை இணைந்த தாலே!

அகரம்.அமுதா

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சுமை தாங்கி!

அஞ்சலம் முத்துசாமி அன்னையாய் வாய்ப்பதற்கே
என்னதவம் செய்துவிட்டேன் என்றறியேன்! -கண்ணுக்
கிமையாய்க் கனிவோ டிருந்தவளைக் காத்துச்
சுமைநானே தாங்கியா வேன்!

வேலுமகன் முத்துசாமி ஏறனையார் என்தந்தைத்
தோளுக்கு நான்சுமையாய்த் தோன்றிவிட்டேன்! -நாளும்
இமைவருத்திக் காத்தவரை இன்பநலம் சூழச்
சுமைநானே தாங்கியா வேன்!

அகரம்.அமுதா

சனி, 30 ஆகஸ்ட், 2008

இதுவா நட்பொழுங்கு?

தேளைப் போலக் கொட்டும் கேளை
நாளும் நாடி நட்புற்றேன் -அது
வேளை பார்த்துக் கொட்டுவ தென்றன்
மூளைக் கேட்டிட துடித்திட்டேன்!

வானம் என்றே பேனை எண்ணி
நானென் தலைமேல் இடந்தந்தேன் -அது
ஊனைக் கடித்தென் உதிரம் உண்ணக்
காணும் போதோ மிகநொந்தேன்!

நஞ்சை நறவம் என்றே எண்ணி
நெஞ்சில் வைத்துக் காத்தேனே –எனை
வெஞ்சினத் தாலது வஞ்சனை செய்ய
விழிநீர் கொட்டித் தீர்த்தேனே!

பாலைக் கேட்டால் பருகக் கள்ளிப்
பாலைத் தருவதா நட்பொழுக்கு? -அது
நாளும் நட்பெனும் போர்வைக் குள்ளே
நடாத்து கின்ற கற்பழிப்பு!

எத்தனை கற்றுத் தெளிந்தி டினு(ம்)இவ்
எத்தர் நெஞ்சம் புரிவதில்லை -அவர்
எத்தனை யாய்இன் சொற்கள் சொல்லி
ஏய்ப்பினும் ஏய்ப்பது தெரிவதில்லை!

சேயைப் போலே மார்பில் மிதித்தால்
தாயைப் போலே பொறுத்திடுவேன் -கொடும்
பேயைப் போலே துன்பம் தன்னை
ஈயப் போந்தால் ஒறுத்திடுவேன்!

அன்பா லென்னை ஆள்வோர்க் கென்போல்
நன்றி காட்டும் நாயில்லை -சுடும்
வன்சொல் லாலெனை வதைப்போர்க் கென்போல்
துன்பம் ஈயும் ஊழில்லை!

அகரம்.அமுதா

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஆசிரியர்!

ஒத்தினம் நாளும் ஓதும்
ஒப்பிலாக் கல்வி தன்னை
நத்திநம் நெஞ்சத் துள்ளே
நடுமாசி ரியர்கள் போற்ற
எத்தினம் உகந்த தென்றே
எண்ணிநாம் விதந்த வேளை
இத்தினம் எழுந்து வந்தே
இசைமாறி பொழியு திங்கே!

தரிசெம்மை உழுது நட்டுத்
தரணிக்குப் புகழைச் சேர்க்கும்
பரிசுத்த உழவர் என்றே
பார்க்கின்றேன் இவரை; அற்றம்
இரிதலைத் தொண்டாய்ச் செய்யும்
இவர்புகழ் தன்னை வானும்
அறிதலை வேண்டி நாமும்
அமைத்திட்ட இந்நாள் வாழ்க!

பொறையோ(டு) அறிவை என்றும்
பொய்த்திடா நற்கு ணத்தைக்
குறையாத கல்விச் செல்வம்
கொடுக்கின்ற வள்ளல் நாளும்
அறிவென்ற ஒன்றை மட்டும்
அமுதென்றே ஊறும் ஊற்றாய்த்
தருவிக்கும் இவர்த கைபோல்
தகைமையை நாட்டில் காணோம்!

பள்ளிக்குப் புழுவாய்ச் சென்றோம்
பட்டென்றே மாற்றி விட்டுத்
தள்ளிநின் றுவகை கொள்ளும்
தன்மையால் சிறந்து விட்டார்
அள்ளியே அறிவை ஈந்தும்
ஆனந்தம் அதிலே கண்டும்
உள்ளத்தால் வாழ்த்தும் இந்த
உத்தமரை உலகம் போற்றும்!

நல்வழி காண வேண்டி
நவின்றிடும் இவர்கள் பற்றிச்
சொல்லியம் பாட வென்றால்
சுந்தரத் தமிழே தீரும்
பல்கலை தேர எம்மைப்
பண்போடு பண்ப டுத்தி
நல்வினை ஆற்றும் அந்த
நல்லோர்கள் வாழ்க! வாழ்க!

அகரம்.அமுதா

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

அரசே அறிவிப்பாய் ஆங்கு!

நாட்டில் நகர்ப்புரத்தில் நாடிப் படிக்கும்நாள்
ஏட்டின் எழுத்துகளில் இன்திரைப் -பாட்டுகளில்
பட்டிதொட்டிப் பாமரர்தம் பேச்சுகளில் இல்லைபெயர்த்
தட்டியிலும் இல்லை தமிழ்!

தொட்டுப் பயிலும் தொடக்கநிலைக் கல்விமுதல்
பட்டப் படிப்புவரைப் பைந்தமிழைக் -கொட்டும்
முரசே முழங்க முழுமனதாய் ஆளும்
அரசே அறிவிப்பாய் ஆங்கு!

செம்மொழியாச் செய்து சிரிக்கின்றீர் வெட்கமின்றி!
அம்மொழியும் ஆட்சிமொழி ஆனதுண்டா? -நிம்மதியாய்
நாடாள வேண்டி நடாத்துகிறீர் நாடகங்கள்
பீடாறும் பாங்கில் பெரிது!

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைத்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து!

தாய்நாட்டில் தாய்மொழிக்குத் தக்கமதிப் பில்லையெனில்
மாய்ந்தேனும் அந்நிலையை மாற்றிடுவோம்! -தேய்ந்தேனும்
மீண்டுவரும் விண்ணிலவாய் மீளட்டும் மென்றமிழும்;
ஆண்டுவரும் நல்லரசே ஆங்கு!

எத்துறை நோக்கினும் எங்கும் எதிலும்நம்
முத்தமிழைக் காண முடியவில்லை -செத்தமொழிப்
பட்டியலில் சேர்க்கத்தான் பார்க்கின்றீர் உண்மையி(து)
அட்டியிலை என்பேன் அறிந்து!

இறைக்குச் சமற்கிருதம் என்றாகித் தோயுந்
துறைதோறும் ஆங்கிலமே தோன்றின் -முறையாசொல்!
தாய்நாட்டில் தாய்த்தமிழ் சாகும் நிலையெனில்
பேய்நாடீ தென்பேன் பெரிது!

பத்தொடு நாளும் பதினொன்றாய் ஆகின்றீர்;
நத்தி நரகலையே நாடுகிறீர்; -தித்திக்கும்
தீங்கரும்பாம் செந்தமிழைத் தீய்த்துத் தமிழர்க்குத்
தீங்கிழைத்து விட்டீர் தெரிந்து!

இதுவரை இன்றமிழ்க் கென்செய்தீர்? நாட்டை
மதுக்கடையாச் செய்து மகிழ்ந்தீர்; -இதற்கும்
வருந்தத்தான் வேண்டும் வழுநீங்க வேண்டின்
திருந்தத்தான் வேண்டும் தெரிந்து!

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து!


அகரம். அமுதா

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

மலர்கள் மீண்டும் மலரும்!

வில்லென்ற புருவம் வைத்து
வேலென்ற விழிகள் வைத்துக்
கள்ளுண்ட அதரம் வைத்துக்
கனியுண்ட அங்கம் வைத்தே
இல்லென்ற இடையும் வைத்தவ்
இடையகத்தில் இன்பம் பொங்கும்
நெல்லென்ற ஒன்றை வைத்து
நிற்பவரோ பெய்வ ளைகள்?

மொழிமுறை முற்றும் மாற்றி
மொழிதலை விரும்பு வோரும்
வழிமுறை என்னும் பேரில்
வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்
இழிமுறை அறிந்தி ருந்தும்
இருப்பதோ கல்லாய்? அவரை
அழிமுறை அறிந்தெ ழுந்தே
ஆர்ப்பதே பெண்ணின் வேலை!

வேணவா தீரும் மட்டும்
விரும்பியே அணைத்துக் கொள்ளும்
ஆணவா தீர்ந்த பின்னும்
அணங்கவா தொடர்ந்து விட்டால்
வீணவா என்னும் கீழ்மை
விலங்கவா வன்றோ மஞ்சல்
பூணவா பூவ வாவைப்
பூணொண்ணா விதவைக் கோலம்!

பெற்றவளைக் காணப் போமோ?
பிறப்பினால் தமக்கை யாகப்
பெற்றவளைக் காணப் போமோ?
பின்னாளில் மனையைக் கூடிப்
பெற்றவளைக் காணப் போமோ?
பேச்சிலே முள்ளை வைத்து
மற்றவளை கைம்பெண் என்றே
மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?

மதியென்பார் முகத்தை; வாயின்
மலரென்பார் சிரிப்பை; திரு
மதியென்பார் மணந்து கொண்டால்;
மணவாளன் இருக்கும் மட்டும்
மதியென்பார்; அவன்ம ரித்தால்
மதியவளை மிதியென் பார்கள்;
விதியென்றே வீட்டின் மூலை
வீழ்தலோ பெண்ணின் வீரம்?

மெட்டியை; மஞ்சல் தோய்ந்த
மணிக்கயிற் றோடு நெற்றிச்
சுட்டியை; பூவை; வண்ணம்
துளங்கிடும் ஆடை தன்னை;
போட்டோடு கைவ ளையைப்
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
அட்டியிலை அடுத்தோர் மாலை
அவள்தோளில் வீழ்தல் நன்றே?

பதுமைதான் இதுவ ரைநீ;
பாவைநீ துணிந்து விட்டால்
புதுமைதான் பூமி யெங்கும்;
புத்தியில் ஓர்ந்த றிந்தே
புதுக்கிடும் மறும ணத்தைப்
புரிதலே பெருமை யாண்டும்!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!

அகரம்.அமுதா

சனி, 9 ஆகஸ்ட், 2008

அமைதிப் பூங்கா!



பூக்கள் நிறைந்த சாலைகளும்
      புள்ளின மாடும் சோலைகளும்
ஆக்கும் எந்திர ஆலைகளும்
      ஆற்றல் கைகளும் தோள்வலியும்
பாக்கள் நிறைந்த தமிழ்மொழிபோல்
      பசுமை படர்ந்த சிங்கைதே
னீக்கள் நாடும் பூவனம்போல்
      எழில்சேர் அமைதிப் பூங்காவாம்!

கலவரம் அறியாக் கன்னியிவள்
     கருணை அமைதியின் செல்லமகள்
பலவினம் வாழும் எல்லையிவள்
     பகையொன் றறியாப் பருவமகள்
அலைகடல் நடுவே வான்பிறைபோல்
     அமைந்த அமைதியின் உருவமிவள்
நிலவரம் பில்குறள் அளவெனினும்
     நேர்குறள் பொருளின் செறிவுடையாள்!

மெல்லினம் அரசாய் அமைந்ததனால்
     மேன்மைகள் நாட்டில் நடைபோடும்
வல்லின அரக்கரைச் சட்டம்தன்
     வலையில் வீழ்த்திச் சிறைபோடும்
பல்லினம் வாழும் நாடெனினும்
     பண்போ டொற்றுமை பேணுவதால்
இல்லையொன் றிங்கே பகையுணர்வு
     இதனால் கண்டார் நிதமுயர்வு!

காவலர் பணிக்கிங் காளுண்டு
     கள்வர் கயவர் எவருமில்லை
மேவிய நீதி மன்றமுண்டு
     கோவிலைப் போலன்றி வேறில்லை
தீவிர வாதம் தலைதூக்கித்
     திக்கெலாம் தாண்டவ மாடுகையில்
தீவிர அமைதி பேணுவதில்
     சிங்கைக் கியாதொர் நிகருமில்லை!

கள்வர் இல்லை களவுஉண்டு
     காதலர் கண்செயும் களவுஅது...
கொள்வார் இல்லை எடுத்தலுண்டு
     கொடுப்பார் புகழவாய் எடுத்தலது...
கல்லார் இல்லை கரத்தலுண்டு
     கவியுள் செம்பொருள் கரத்தலது...
இல்லார் இல்லை இரத்தலுண்டு
     இறையடி சேர்ந்திடும் இரத்தலது!

இனத்தால் கலவரம் இங்கில்லை
     இருளில் வீழா மதியுளதால்...
தனத்தால் ஏற்றத் தாழ்வில்லை
     சட்டம் தன்பணி ஆற்றுவதால்...
தனித்தேன் ஈப்போல் ஒன்றிடுவார்
     தனைப்போல் பிறரைக் கருதுவதால்...
மனத்தால் கெடுவார் எவருமில்லை
     மதியால் விதிவெல அறிந்துளதால்...

எப்படை வரினும் எதிர்த்துநின்றே
     இசைசேர்த் திடுவார் இனம்காப்பார்
தப்படி வைத்தெவர் தறுக்கிடினும்
     தப்புணர்த் திடுவார் திருத்திடுவார்
முப்படை நாற்றிசை காவலுறும்
     முறையுண் டெனினும் போரில்லை
செப்பிடின் ஆயுதம் அமைதிக்கே
     சேர்த்திடும் சிங்கைபோல் வேறில்லை!

நாடுகள் பலவும் நானிலத்தே
     நலிவுறும் உட்பகைப் பூசலினால்
பீடுறு அமைதி நிலையிழந்தே
     பெரிதும் துயர்படும் காலையிலும்
காடுறு அமைதியை நாட்டினிலே
     கண்டதென் நாடு? இந்நாடே!
நாடிது அமைதிப் பூங்காவாய்
     நாட்டிய நல்லர சோங்குகவே!

அகரம்.அமுதா

புதன், 6 ஆகஸ்ட், 2008

தன்நோய்க்குத் தானே மருந்து!

மாலைப் பொழுது; மலர்கள் மலர்ந்தாடும்
சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன்
உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும்;
தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப்
பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக்

கூத்தாடி நிற்கும்; குழலொலியைத் தன்குரலில்
ஏற்றிக் குயில்கூவும் எங்கோ இருந்தபடி;
சேற்றில் கயல்தேடிச் சென்றிருந்த நாரைகள்
கூட்டை அடைந்துவிடும் கொள்கையால் சிறகடித்துக்
காட்டைக் கலைத்துவிடுங் காற்றைப் பெருக்கிவரும்;

அங்கோர் அணில்கிளையில் ஆடும் அருங்கனியைத்
தங்கையில் ஏந்தித் தனதுபசி ஆறும்;
கதிரும் களைத்துக் கனிந்த பழம்போல்
உதிரும்; வானும் உதிரத்தைக் கக்கிவிடும்;
அந்தப்பொன் அந்தியிலே அங்கோர் மரக்கிளையில்

வந்துக்குந் திக்கொண்ட வண்ணப் பசுங்கிளிதன்
பெட்டை வரவைப் பெரிதும் எதிர்பார்த்துக்
கட்டைபோல் ஆடாது கண்ணிமையும் மூடாது
எண்ணப் பறவையது எங்கெங்கோ சென்றுவர
வண்ணப் பறவையிது வாடி மிகநொந்துச்

சின்னநுனி மூக்கின் சிவப்பழகுப் பெண்கிளியை
முன்னம் அருகிருந்து முத்தமிட்ட காட்சிகளும்,
கன்னங்கள் என்கின்ற கண்ணாடிக் கோப்பையிலே
தென்னங்கள் ஊற்றித் தினங்குடித்த காட்சிகளும்,
கண்ணின்முன் தோன்றக் கருத்தில் கடுங்காமம்

புண்ணில்வேல் பாயுதல்போல் போந்து துயர்செய்ய
தேறாது நெஞ்சமெனத் தேர்ந்த பெருங்கிளியின்
மாறாத மோகமதை மாற்றி விடாய்தீர்க்க
வந்த பெடைகண்டு வாரி அணைத்துமுத்தம்
தந்து தழுவித் தனதேக்கம் தீருமட்டும்

நோக்கும் பெடைதந்த நோய்க்கப் பெடையேநோய்
தீர்க்கும் மருந்தாம் தெரி!

அகரம்.அமுதா

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இருபொருள் வெண்பாக்கள்!

பம்பரமும், செக்கும்!
ஓரச்சில் ஊண்றி உழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்!

பம்பரமும், பாம்பும்!
மூச்சிரையும்; நின்று தலையாட்டும்; முன்கோபப்
பாய்ச்சலிட்டே கொத்திப் பதம்பார்க்கும்; -பேச்சென்ன
வட்டமிடும் ஆகையால் பம்பரமும் நற்பாம்பும்
இட்டமுடன் நேரென் றிரு!

ஆழியும்;, மாந்தரும்!
ஈகை குணமுளதால்; இவ்வுல காளுதலால்;
வாகாய் ஒலிசெயும்நா வாயுளதால்; -ஆகாயம்
சாருதலால்; உப்பிடுந் தன்னையால் இப்புவியில்
வாரிதிநேர் மாந்தர் வழுத்து!

தோசையும், கோலமும்!
பெண்கள்கை போடும்; அரிசிமா கொண்டாகும்;
கண்கள்போற் புள்ளிபல காணுமதைத் -தின்றுபசி
தீர்க்கும் பலஉயிரும் என்பதனால் தோசையின்
நேர்கோலம் என்றே நவில்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 27 ஜூலை, 2008

திசைமாறிய பறவைகள்!

நீகுடித்த எச்சில்பால்
நான்குடித்து வளர்ந்ததாலா
நான்புசித்த மீதத்தில்
நீபசி ஆறிவந்தாய்?

ஒட்டிப் பிறந்தவர்போல்
உன்நிழலில் நான்நடக்க...
எட்டிப் பிரியாமல்
என்னளவில் நீபழக...

அண்ணன் தம்பிக்குள்
அழியாத நட்பொன்று
அரும்பாய்ப் பூத்துவர
அதிசயிக்கும் ஊர்கண்டு!

பாட்டில் நயமொளிக்கும்
பண்பெனவே நீயொளிய...
பூப்பூவாய்த் தேன்தேடும்
பொன்வண்டாய் நான்தேட...

ஓடி விளையாடி
ஒருவாறு ஓய்ந்தபின்னே...
ஆடித் தடுமாறி
வீடுவந்து சேர்ந்தபின்னே...

அடிவயிற்றுப் பசியாற
அன்னம் இடுபவளின்
மடியோடு நானமர...
மண்ணோடு நீயமர...

என்ன நினைத்திருப்பாய்?
ஏன்பிறந்தான் என்றிருப்பாய்!
உன்னுரிமை நான்கொள்ள
ஓரவிழி வேர்த்திருப்பாய்!

சிறுவயதில் நமக்குள்ளே
சுயநலங்கள் இருந்ததில்லை...!
சிறகுகளை விரித்தாலும்
திசைமாறிப் பறந்ததில்லை...!

பருவம் போனதினால்...
பாழுலகம் புரிந்ததினால்...
திருவில்லாத் தன்னலங்கள்
சிந்தைக்குள் புகுந்ததினால்...

சொத்தைப் பிரித்துவிட்டோம்!
சுமந்தவரை பிரிந்துவிட்டோம்!
பத்தோடு பதினொன்றாய்ப்
பார்ப்பவருக் காகிவிட்டோம்!

தனக்கென்று சிறகுகள்
தனித்தனியாய் ஆனதினால்
திசைமாறிப் பறந்துவிட்டோம்!
திரும்பிவர மறந்துவிட்டோம்!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஜூலை, 2008

நத்தை!

தொழிலிலை எனினும் சுமைதூக்கி!
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி!
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி -அவ்
வழிவழி போகா துள்ளபடி!

ஒட்டகத் திமில்போல் ஒன்றுண்டு!
உள்ளதன் படுக்கை அறையுண்டு!
கொற்றவன் இல்லை என்றாலும்
கோல எழில்மணி முடியுண்டு!

கடந்து போகும் இடமெல்லாம் -பொதி
கழுதை போலே சுமந்துசெல்லும்!
அடடா! அதுதான் வீடாகும்!
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்!

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது!
பட்டுத் தெளியுமுன் பட்டறிவால்
ஐம்புலன் அடக்கும் சித்தனிது!

கொம்போ டுடலை உள்வாங்கிக்
கொடுமையி லிருந்து தப்பிக்கும்!
ஐம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 15 ஜூலை, 2008

பேணுகிறேன் உன்னை பெரிது!

கட்டித் தயிரே! கனியூறும் தேன்சாறே!
எட்டுத் திசையாளும் இன்தமிழே! -சொட்டும்
சுவைத்தேனே! உன்னைச் சுவைத்தேனே! அள்ளி
அமைத்தேனே பாட்டில் அறி!

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்ட
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்!

அடுத்தோர் பிறப்பென்றால் அங்குமுன் சேயாய்
மடிதோன்றி வாழ்வேன் வடிவே! -நொடிப்போழ்தும்
என்னைநீ நீங்கினால் இன்னுயிர் நீத்திடுவேன்
பொன்னே! தமிழே! புரி!

உச்சி முகர்ந்தெனக் கோரா யிரமாய்நல்
இச்சுத்தா தாயே! இசைத்தமிழே! இச்சகத்தை
ஆளப் பிறந்தவுன்னை ஆளத் துணிந்திட்டேன்
கோளெனவும் கொண்டேன் குறி!

அமுதெனவே ஆனவளே! அன்னாய்!உன் சேய்நான்
அமுதன் எனும்பேர்கொண் டார்த்தேன்! -குமுகாயம்
காணயெனைக் கையோடு கூட்டிப்போய்க் காட்டம்மா!
பேணுகிறேன் உன்னை பெரிது!

அகரம்.அமுதா

வெள்ளி, 11 ஜூலை, 2008

இருபொருள் வெண்பாக்கள்!

மேகமும், கணினியும்!
பல்கருவி யாக்கலால்; மின்சார விச்சுளதால்;
தொல்புவி எங்குமே தோன்றுதலால்; -எல்லார்க்கும்
நற்பயன் ஆகுதலால்; நானிலத்தே நீர்மேகம்
நற்கணினி நேர்காண் நயந்து!

யானையும், நெற்றாளும்!
கலத்திடை மேவுதலால்; கண்டவர் பற்றித்
தலைக்குமேல் தூக்கி அடித்தலால்; -நிலைத்தநற்
போரிடலால்; ஆள்சுமக்கும் போக்கதனால்; யானைக்கு
நேரென்பேன் நெற்றாளை நான்!

நீரும், பாம்பும்!
கிடந்தா டியிரையும்; ஈசன் சடாம
குடத்தடையும்; முட்டையிடும்; கோணற் -படங்காட்டும்;
வட்டமிடும்; ஆகையினால் வாரிதிநீர் பாம்பின்நேர்
இட்ட முடனாய்ந் தியம்பு!

கோற்சிலம்பரும், பாவலரும்!
அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்!

அகரம்.அமுதா

சனி, 5 ஜூலை, 2008

வேரை மறந்த விழுது!

பொற்றா மரையே! புகழ்நிலவே! பூம்பனியே!
கற்றார் தமைவிரும்பும் காதலியே! –நற்றமிழே!
சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான்
வேரை மறந்த விழுது!

உன்றனுக் கின்பணி ஓயாமல் செய்வதற்கே
தந்தைதாய் காக்கும் கடமையினும் -முந்திடுவேன்
வந்தோர்போ வோர்வேர் மறந்த விழுதென
நிந்திப்பி னும்பொறுப்பேன் நெஞ்சு!


அகரம்.அமுதா

திங்கள், 30 ஜூன், 2008

பேரறிஞர் அண்ணா!

பெரியாரின் வழிநின்றே மூடப் போக்கை
பீரங்கிப் பேச்சதனால் எதிர்த்து வந்தார்!
சரியாய்நம் திராவிடரின் கொள்கை
கூறி தறுக்கியதோர் ஆரியப்பேய் ஓட்டி நின்றார்!
நெறியான எழுத்ததனால் நாளும் நாளும்
நேசத்தமிழ் காத்திட்டார்! கல்வி யென்ப
தறியாத மக்களையும் அவர்தம் பேச்சால்
அறிவிலுயர் பகுத்தறிவை அடையச் செய்தார்!

பேச்சென்றால் அவர்பேச்சு முகிலின் வீச்சு!
பேச்சதனைக் கேட்போர்க்குள் மின்னல் வீச்சு!
ஆச்சதனால் ஆரியர்மேல் இடிவீழ்ந் தாச்சு
அன்றுமுதல் அவர்கொட்டம் அற்றே போச்சு!
நாற்றிக்கும் நம்பெருமை நாட்ட லாச்சு!
நறுந்தமிழ் ஏடாளும் நம்மண் ணாச்சி
ஆட்சிப்பாங் காயாற்றி அகிலம் போற்ற
அருமைமிகு சாதனைகள் பலசெய் தாச்சு!

ராமகதை பாடுகின்ற மேடைக் கூத்தை
ராத்திரிகள் பலவிழித்து ரசிப்போர்க் கெல்லாம்
காமகதை அதுவென்றே கண்டு கொள்ள
கம்பரசம் தந்திட்டார்! தமிழர் மாட்சி
பூமியுள நாள்வரையும் போற்றச் செய்தே
பூந்தலைவர் துண்டலைவீழ் கடலோ ரத்தில்
ஓய்வெடுக்கப் போய்விட்டார்! போனா லென்ன?
உயர்தமிழர் நன்னெஞ்சில் வாழும் போதே!

அகரம்.அமுதா

செவ்வாய், 24 ஜூன், 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா


சனி, 21 ஜூன், 2008

புதியதோர் உலகம்செய்வோம்!

புதியதோர் உலகம்செய்வோம் -ஆங்கே
புகவரும் மடமையைத் தடையும்செய்வோம்!

மூடப் பழக்கங்களைக் -கண்
மூடித் தனத்தொடங் கேற்பதற்கில்லை!
சாடத் தலைப்படுவோம் -பழஞ்
சாத்திரம் சடங்கினுக் கங்கிடமில்லை!

ஒற்றுமை ஓம்பிடுவோம் -அங்(கு)
ஓர்குலம் ஓர்நிரை வேற்றுமையில்லை!
குற்றமே புரிந்திடினும் -திருக்
குறள்வழி திருத்துவோம் தண்டனையில்லை!

சாதிக்குப் பிறந்தவனாய் -மிகத்
தறுக்கிடு வோர்கங் கிடமுமில்லை!
சாதிக்கப் பிறந்தவனாய் -உரை
சாற்றிடு வோர்க்கொரு தடையுமில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -பாயும்
நதிகளை இணைக்கவோர் விதியும்செய்வோம்!

பார்க்குயிர் நாடியெனத் -திகழ்
பாட்டாளி தான்முதல் வகுப்பினனாம்!
வேர்த்தவன் உடலுழைப்பில் -தன்
மேனியை வளர்ப்பவன் இழிந்தவனாம்!

ஏழைசொல் அம்பலத்தே -சென்(று)
ஏறிடும் நிகழ்வுகள் பலநடக்கும்!
கீழிவன் மேலவன்காண் -எனும்
கீழ்மைக்குத் தண்டனை மிககிடைக்கும்!

அணுகுண்டோ டாயுதங்கட் -கங்(கு)
அனுமதி யென்பது சிறிதுமில்லை!
அணுக்கத்தோ டிணைந்திருந்தே -அங்(கு)
அரசுகள் நடந்திடும் சிறுமையில்லை!


புதியதோர் உலகம்செய்வோம் -யாவும்
பொதுவுடை மையெனும் கொள்கையும்செய்வோம்!

ஆண்பெண் இருவருக்கும் -அங்(கு)
அவசியம் உயிர்நிகர்க் கற்புநெறி!
காண்கின் மதுவிலக்கை -மிகக்
கடுமையென் றாக்கிடும் அரசறிக்கை!

இயந்திர மயமிருக்கும் -அவை
இருப்பினும் பணியிடம் பலவிருக்கும்!
வியந்திடு பொருளிருக்கும் -பண்
விளம்பிடும் வழியிலப் பார்நடக்கும்!

செந்தமிழ் அரியனையில் -ஏறிச்
சிறப்புற ஆளுமப் பாரினிலே...
எந்தமிழ் மாந்தரெல்லாம் -நாளும்
ஏறுவர் புகழெனும் தேரினிலே...!


அகரம்.அமுதா

புதன், 18 ஜூன், 2008

புதிய நிலா!

பாலன்ன வெள்ளியதாய்; பருவக் காற்றாய்;
பழச்சுளையின் தேன்சாறாய்; பருவ மங்கைச்
சேலன்ன வீச்சுளதாய்; தெளிந்த ஊற்றாய்;
திகட்டாத பால்மழலை செப்பும் சொல்லாய்;
காலத்தை வென்றவனாம் கவியின் ராஜன்
கண்டெடுத்த புதுமைப்பெண் போல்நி மிர்ந்தே
ஞாலத்தைக் காண்பதுவாய்; நாளும் தோன்றி
நலங்காட்டும் புதியநிலா வானில் வேண்டும்!

ஏழைக்குக் கஞ்சியுமாய்; செல்வ ருக்கும்
எட்டுகிற நிம்மதியாய்; ஆளன் இல்லாச்
சேயிழைக்குத் தூதாய்நம் வாய்ம னைவாழ்
சேந்தமிழின் இனிமையுமாய்; கேட்டு வக்கும்
யாழினிய மெல்லிசையாய்; குறளோன் பண்பாய்
யாத்திட்டச் செய்யுளுமாய்; இன்பக் கொத்தாய்;
ஏழுலகும் காணாத இன்பம் தேக்கி
இளையநிலா எழுச்சிநிலா எழுதல் வேண்டும்!

நான்காணும் திசையெல்லாம் நாடி வந்து
நல்லொளியைச் சிந்திடத்தான் வேண்டும் அந்த
வான்காணும் உயரத்தில் சிந்தை மேவி
வளமார்ந்த கவிதைகள்நான் வார்க்கும் போழ்தில்
தேன்காணும் இன்சுவையை என்றன் சொல்லில்
தேக்கிடத்தான் வேண்டும்நல் வனப்பைக் காட்டிக்
கூன்காணும் பழையநிலா போலே யன்றிக்
கொள்கைநிலா கோளநிலா எழுதல் வேண்டும்!


அகரம்.அமுதா

ஞாயிறு, 15 ஜூன், 2008

குறளே வெண்பாவாக! (1)

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்! -குறள்-


பட்டன்னப் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள்! -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டு காணாதக் கால்!

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து. -குறள்-


சேல்தீட்டி மைவடியச் செய்திடேன் காதலவர்
வேல்வீச்சுக் கண்ணகத்தே வீற்றுளதால் -மால்கொண்டு
தீட்டும்மை என்னவரின் தேகத்தைத் தான்மறைத்து
வாட்டுமெனை என்றே மருண்டு!

அகரம்.அமுதா

வியாழன், 12 ஜூன், 2008

வள்ளுவத்தை நாளும் வழுத்து!

உள்ளி மனிதர் உவந்தொழுக்கம் பேணிட
வள்ளுவர்போல் யார்சொன்னார் வந்து!

சீரடி மூன்றால்பார் தீரவளந் திட்டான்மால்;
ஈரடி போதும் இவர்க்கு!

தெள்ளியதோர் ஓடையெனத் திண்மன மாசகற்றும்
வள்ளுவத்தை நாளும் வழுத்து!

அகரம். அகரம்

திங்கள், 9 ஜூன், 2008

குறள்காத்தல் கோளாங் குறி!

இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
திருக்குறள்போ லுண்டோ திரு?

விண்தேடும் வள்ளுவனார் வேய்ந்த* குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி!

ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
பாகாப்பாய் நன்கு படித்து!

திரள்*செல்வம் என்றேநம் தீங்தமிழ்க்கு வாய்த்த
குறள்காத்தல் கோளாங் குறி!

குறட்பா படித்தாய்ந் துணரின் முறையாய்த்
திரண்டு வருமே தமிழ்!

வேய்ந்த* -சூடிய, திரள்* -மிக முடுகிய நடையுடைய பாட்டு!


அகரம்.அமுதா

வெள்ளி, 6 ஜூன், 2008

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!


தமிழ்வாழ்த்து!

வானை பிறைவாழ்த்தும் வல்லமை தா!தமிழே!
ஆனமட்டும் முத்தமிழ் ஆசானை -நானுவந்தே
நற்கவி தீட்டுவதால் நற்றமிழே! உன்றனிரு
பொற்கழல் போற்றல் புகழ்!

நான்கண்ட முத்தமிழ் அறிஞர்!
அஞ்சுகத்தாய் சேயாகி அண்ணாவின் தம்பியுமாய்
தந்தஉரை யால்குறளோன் தாசனுமாய் -செந்தமிழர்
சிந்தை நிறைந்தவராய் செம்மொழி கண்டவராய்
அஞ்சுமுறை ஆண்டார் அறி!

எழுகடலை உட்புகுத்தி யாப்பிசைத் தோனுக்
கெழுகடல்மேற் சிற்பம் எடுத்தார்! -தொழுமிறைவன்
தென்னை இளநீருள் தென்னை தனைவைத்த
உண்மை நிலையதனை ஓர்ந்து!

மூவடி யாலளந்தோன் மூவுலகை ஓர்முக்கால்
சேவடி யாலளந்தான் தீம்புலவன் -ஆவலோ(டு)
இங்கவனின் இன்குறளுக் கோவியமே தீட்டிவிட்டார்!
தங்தத் தமிழ்வாழத் தான்!

பேச்சில்; செயலில்; பெரிதும் இவரெழுத்தில்;
மூச்சில்; விழிப்பார்வை ஓரத்தின் -வீச்சில்;
நடையில்; நளினத்தில்; நல்லுருவில் நன்றாய்த்
தடையின்றி வாழும் தமிழ்!

அடிமுடி காணா அருந்தமிழ் கண்டே
நொடிநொடி தோறும்‘பா’ நூற்றார் –அடிமடி
தான்கனக்க அஞ்சுகமா ஈன்றார்? இலையிவரை
வான்தமிழே ஈன்றதென வாழ்த்து!

அன்னை தமிழென் பதில்தவ றில்லை;
தமிழ்அன்னை எனுஞ்சொல் அதுதவறே! -இன்றமிழே
ஆணுருவேற் றிங்கிவராய் ஆனதனால் இற்றைமுதல்
பேணுதமிழ் ஆண்பால் பெறும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 3 ஜூன், 2008

செல்வம்!


தழைத்த குமுதம் உடனிருந்தும்
அழுக்குத் துணிசேர் தண்ணீர்போல்
உழைப்போர் கைசே ராதேய்ப்போர்
உள்ளங் கைசேர் தரவியமே!

விலகிச் செல்லும் உறவுகளை
விரைந்தே ஒட்டும் செயலதனால்
நலஞ்சேர் தமிழில் நயமுடனே
நவிலும் பெயரது பசையன்றோ!

உள்ளார் இல்லார் எல்லாரும்
உள்ளிப் பதுக்கினும் ஓரிடத்தில்
நில்லா மல்நீ செல்லுதலால்
செல்வ மெனும்பேர் பெற்றனையோ?

மாசை மனதில் வைத்தோர்தம்
மடியோ டும்நீ சேருதலால்
காசென் னும்பேர் பெற்றனையோ?
காசினி யில்சிறப் புற்றனையோ?

மனமென் பதில்லா மாந்தரொடும்
தனமே! உனக்குத் தொடர்புண்டு...
குணமே இல்லாப் பேருடனும்
பணமே! உனக்கு நட்புண்டு...

நாநய மில்லா பேர்களையும்
நாடும் உன்பேர் நாணயமாம்...
ஆனபேர் யாவிலும் பொருளுமில்லை
ஆயினும் பொருளுமுன் பேர்பெறுமாம்!

அகரம்.அமுதா

சனி, 31 மே, 2008

கருவிழி இல்லாத கண்!


முக்கண்கள் ஈசனுக்கு மட்டுந்தான் என்கின்ற
மக்கன்யார் கண்டால் வசைபாடு -மொக்காய்
இருகண் முகத்தில் இடையிலொன்று கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

துய்த்ததைச் சொன்னேன் துணிந்து!

 பாலும் கசக்கப் பழம்புளிக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலுமிப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போல்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து!

இளநீராய் எண்ணி இளமுலைகள் பற்றி
உளமாறக் கண்டேன் உருசி -தளதளக்கும்
சிற்றிடையில் கோலோச்சச் சீக்கிரமே கூப்பிட்டுப்
பெற்றிட்டாள் இன்பம் பெரிது!

முக்கண்கள் ஈசனுக்கு மட்டும்தான் என்றுரைத்த
மக்கன்யார்? கண்டால் வசைபாடு! -மொக்காய்
இருகண் இவள்முகத் தொன்றிடையில் கண்டேன்
கருவிழி இல்லாத கண்!

உச்சிமுதல் கால்வரை நச்செனவே இச்சுவைக்க
மெச்சியென் மெய்யணைத்தாள் மெல்லிடையாள்! -அச்சச்சோ!
தைத்ததடா மெத்தைமுள்; தையல் சுகத்தின்முன்
கைத்ததடா பேரின்பம் காண்!

பொத்தானைத் தான்நீக்கப் பொங்கிவரும் மோகத்தால்
அத்தானைக் கட்டி அணைத்திட்டாள்! -பத்தானை
வேகத்தைக் காட்டி விடியும் வரையவளின்
மோகத்தைத் தீர்த்தேன் முனைந்து!

காட்டாறு போலத்தான் கட்டடங் காதாட
பாட்டாறு போல்பாவை பாடினாள்! -கேட்டபடி
மெத்தை முறிகிற வேகத்தை நான்காட்ட
தத்தை தவித்தாள் தளர்ந்து!

சந்தனத்தைப் பூசி சரிகைவெண் பட்டிட்ட
செந்தனத்தைக் காட்டிச் சிரித்திட்டாள்! -எந்திறத்தை
நான்காட்ட நாணி நயனத்தை மூடினாள்
தேன்கூட்டில் சிந்திற்றே தேன்!

பொங்கும் புதுநீரால் புல்லரித்தாள்; பூவையவள்
தங்கத் தளிர்வாயில் தேனெடுத்தேன்! -மங்கையில்லா
சொர்க்கம்வே றெங்காம்? சுகப்போழ்து வேறேதாம்?
தற்குறிகாள்! சாற்றிடுவீர் தான்!

அகரம்.அமுதா

வெள்ளி, 30 மே, 2008

ராதே!

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவைத் தேராதே -தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!

பொருள்:-
தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும் -வெற்றிபெறாது நம்இருவருக்கும் இடையில் பூத்தக் காதல் வெற்றியே பெறாது என்றே
தேராதே ஓர்முடிவைத் தேராதே -ஆராயாமல் ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்காதே
தேராதே தேராதே என்பாயேல் - ஆராயாமல் நம்காதல் வெற்றிபெறாது என்று சொல்வாயே யானால்
தேராதே என்நெஞ்சம் தேராதே -(அச்சொல் கேட்டால்)துன்பக்கடலில் மூழ்கிக் கிடக்கும் என்நெஞ்சம் அதிலிருந்து மீண்டுவரவும் முடியாதே! மீண்டுவரவே முடியாதே!
ராதே ராதே -ராதா! ராதா!

அகரம்.அமுதா!

வியாழன், 29 மே, 2008

தத்தித் தவித்தேன் தளர்ந்து!

ஒரு வீடியோப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அவ்வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக்கவும்.செய்தி இதுதான் உயிரோடு ஒரு மீனை அடுத்து அதன் செதில்களை நீக்கி வயிற்றைக் கிழித்துக் குடலை நீக்கி அதைத் துடிக்கத் துடிக்க அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு வானலில் (சுடுஎண்ணையில்) உடல்வரை வறுத்து எடுத்து (இப்பொழுதும் மீன் உயிருடன் தான் உள்ளது) தட்டில் வைத்துப் பரிமாறுகிறார்கள் (ஓர் ஹோட்டலில்) (சீனாவா ஜப்பானா என்பது தெரியவில்லை) அந்த ஹோட்டலில் பணிபுரியும் மனித மிருகங்கள். அதையும் கூடியமர்ந்து சில மனித மிருகங்கள் (இப்பொழுதும் மீனுக்கு உயிரிருக்கிறது) கிழித்துத் தின்கிறது. இவ்வீடியோ பதிவைப் பார்த்து அதிர்ந்தேன். அதன் காரணமாய்த் தோன்றிய வெண்பாக்களே இவைகள்.

அந்த இறுதிக் கட்ட வேளையில் அம்மீனின் நிலையிலிருந்து எழுதப்பட்டது.

நீக்கிச் செதிலையெல்லாம் நீராட்டி நீள்குடலைப்
போக்கிநெய்க் கொப்பறையின் பொங்குநெய்யில் -தூக்கியிட
வேகுதே மேனி மிகவெப்பத் தால்அய்யோ!
நோகுதே வாலின் நுனி!

துள்ளித் துடித்துத் துவண்டு வழுக்கிவிழ
அள்ளி குடலை அகற்றியுடல் -முள்ளை
ஒடித்தார்; உடல்நோவ உப்பளம்போல் என்னை
எடுத்தார் சுடுநெய்யுள் இட்டு!

சிக்குண்டேன்; நீள்வலையுள் சிக்கிநீ ராடிதன்னில்
முக்குண்டேன்; கொண்டசெதில் முற்றிலுமாய் -நீக்க
நறுக்குண்டேன்; எண்ணைப்பி சுக்குண்டேன்; மேனி
கருக்குண்டேன்; உண்டார் களித்து!

வெந்தப்புண் தன்னில்வேல் வீசுதல்போல் அய்யய்யோ!
நொந்தயென் மேனிதன்னை நோக்கியே -வந்துவந்துக்
குத்திக் கிழித்துக் கொடும்பசி யாற்றுகிறார்
தத்தித் தவித்தேன் தளர்ந்து!

அகரம். அமுதா!

புதன், 28 மே, 2008

பனித்துளிகள்!

பனித்துளிகளே! முகில்தெளிக்கும்
பன்னீர்த் துளிகளே!
அரும்புகளின் மேனிபூத்த
அம்மைக் கட்டிகளே!

நீங்கள்
பூப்பெய்தியப் பூக்களுக்கு
பூப்பெய்யும் பூக்கள்...

இரவு சிப்பியின்
திரவ முத்துகள்...

புல்வெளிக்கு வழங்கப்படும்
போலியோ சொட்டுமருந்து...

மேக விவசாயி கண்ட
சொட்டுநீர்ப் பாசனம்...

பாமரன் வீட்டுப்
பாத்திரம் நிறைக்காத
பருவ மழை...

மண்மகள் மார்பினில்
மலைப்பால் வற்றியதால்
வான்முகில் புட்டிப்பால்
வழங்கவரும் ஏற்பாடு...

விண்வெளிச் சாலையில்
விலக்குகள் எரிந்தும்
மேக விமானங்கள்
மோதிக் கொள்வதினால்
உடைந்து விழுகின்ற
உதிரித் துண்டுகள்...

இரவு நீக்ரோவின்
வெள்ளைவண்ண வாரிசுகளே!

உங்கள் அழகினிலே
உள்ளம் பறிகொடுத்து
மங்கல மலர்களெல்லாம்
மார்பள்ளிச் சூடிடுதோ?

புற்களின் மார்பினில்
இல்லாத கொங்கைக்கு
கச்சித மானதொரு
கச்சைஏன் ஆகின்றீர்?

விண்மீன்களுக்கு நிகரான
ஊர்வலம் நடத்திட
மண்ணில் மலர்களுக்காய்
முழங்கவரும் தொண்டர்களே!

நீங்கள்...
பெற்ற வெற்றிக்குப்
பின்காணத் தோன்றாத
அரசியல் வாதிகள்போல்
அதிகாலை மறைவதேனோ?


அகரம்.அமுதா

திங்கள், 26 மே, 2008

இயற்கையைப் பாடுவேன்!

நேசக் கையை
நீட்டி யழைத்து
நிற்குது கவின்மாலை! -நெஞ்சை
நிறைப்பது கவிமாலை!


வாசம் பரப்பி
வண்டை அழைப்பது
வண்ண மலர்சோலை! -என்னை
வடிப்பது கவிச்சோலை!

மாலை வந்தபின்
மதியும் வந்தே
மங்கல வானெழுதும்! -விண்மீன்
வாழ்த்திசைப் பண்ணெழுதும்!


சோலை வந்தபின்
சில்வண் டெல்லாம்
சொக்கியா நின்றுவிடும்? –பூக்கள்
வெட்கத்தை வென்றுவிடும்!

உருகும் மேகம்
உயர்த்திப் பிடித்த
உறுவில் மையெழுத்து! -மின்னல்
ஒளியோ கையெழுத்து!


அருவிக் குழந்தை
ஆறே மங்கை
ஆழி மூப்பாகும்! -கரைக்கு
அலையே சீப்பாகும்!

கயற்கண் காரிகை
கயமை சமூகம்
கண்டிடு கவிதையிலே -அவைதான்
கவிதைகள் என்பவனே!


இயற்கைக் கவிஞன்
எழுதாக் கவிகள்
எழுதுதல் என்பொறுப்பு! -இதிலேன்
இடுகிறாய் பிடிநெருப்பு!

அகரம்.அமுதா

வெள்ளி, 23 மே, 2008

அன்னை பாரதம்!

எம்மதமும் சம்மதமாம்
இந்தியாவின் தேர்தலில்...
மும்மதத்தில் குத்துவெட்டு
முடியவில்லைக் கூக்குரல்...

கத்தியின்றி இரத்தமின்றிப்
பெற்றெடுத்த பாரதம்...
முற்றுமின்று இரத்தமின்றி
ஓடவில்லை ஆறெதும்...

காடுவெட்டி நாடுசெய்து
கண்டதுதான் என்னவோ?
வீடுகட்டி வாழும்கீழ்மை
விலங்குகள்நாம் அல்லவோ!

வாக்களித்து வாக்குவாங்கி
வாழ்க்கைபெற்ற பேர்களே!
வாக்களித்தோர் வாழ்வினிலே
வளர்ச்சியில்லை பாரிலே...

கள்ளமின்றிப் பள்ளமேடு
கடந்துசெல்லும் ஆறுகள்...
கல்லைக்கொண்(டு) அணையெழுப்பக்
கழயெலாம் பாலைகள்...

அன்னையென்று பாரதத்தை
அன்றுத்தொட்(டு) இன்றுமே
சொன்னதெல்லாம் போதுமடா
சொன்னசொல்லைக் காப்போமே!

அகரம்.அமுதா

புதன், 21 மே, 2008

திரைகடல் போகிறேன்!

நெஞ்சம் வளர்த்தே இடையகம் தேயும்
நிலவே! திரைகடல் போய்வரவா?
கஞ்சன் வழங்கிய தானம் போன்ற
கனிமொழி யே!நான் போய்வரவா?

பனிமல ரே!பூம் பஞ்சணை யே!உன்
பார்வையின் எல்லை கடந்திடவா?
கனிமர மே!பொன் ஊஞ்சலு மே!நல்
கற்பக மே!விடை கொடுத்திடுவா!

எல்லா நதியும் மலையில் தோன்றிக்
கடலில் தானே முடிகிறது –உன்
பொல்லா நதியோ விழியில் தோன்றிப்
பொதிகையில் சென்றேன் முடிகிறது?

குளத்தில் தானடி தாமரை மேவும்- செங்
குமுதத் தில்ஏன் இருகுளங்கள்?
நிலத்தில் வீழும் மின்னல் போலென்
நெஞ்சில் உன்னால் கலவரங்கள்!

அழுதது போதும் அடியே பெண்ணே!
வழிகின்றக் கண்ணீர் வற்றவிடு
விழுதென வழிகிற தெந்தன் விழிநீர்
செழுமடல் இதழால் ஒற்றியெடு!

பிரிவுத் துயரம் எனக்கும் உண்டு
பிரிவே உறவுக்கு வழிவகுக்கும்- இதழ்
பிரியா மொட்டுகள் மணப்பதுமில்லை
பிரிந்தால் தானடி மலர்மணக்கும்!

ஆண்டுகள் இரண்டு போனால் வருவேன்
அதுவரை அன்பே! வாழ்ந்துவிடு- உன்
சாண்முழ மல்லிகை நிலைக்கணும் அதனால்
எனையும் கொஞ்சம் வாழவிடு!


அகரம்.அமுதா

சனி, 17 மே, 2008

மரணமே முழுமையாய்!

வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவிலாநன் பகலிலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!

பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில் வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஒத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 11 மே, 2008

மனம்!

எண்ண வலையில் இரையைத் தேடி
உண்டுக் களித்து மீளாப் பறவை...
ஆறறி வென்னும் சாரதி சொல்லை
மீறி நடந்து மீளும் குதிரை...

கற்பனை யென்னும் சிற்பம் செதுக்க
சிற்றுளி கொண்டே சனித்த பாறை...
தைத்திடும் முள்ளெனத் தைத்திடும் வேளை
பிய்த்தெறிந் திடினும் பிழைத்தெழும் கோரை...

ஒன்றை விட்டே ஒன்றில் தாவி
ஒன்றைப் பற்றி ஓடிடும் தேனீ...
சஞ்சல மாம்அலை தாவி யெழுந்தால்
கொஞ்சமும் நிலையின்றிக் குதித்திடும் தோணி...

பண்போ டன்பு பாசம் பற்றெனும்
பண்ணெழு திடவே படைத்த ஏடு...
செய்தமுன் வினைக்காய் வினைப்பயன் பெற்றிட
மெய்யெனும் கையது ஏந்திய ஓடு...

ஆசை என்னும் வேசையை நாடிப்
பூசை நடத்திப் புலம்பிடும் போகி...
பற்றாம் தூசைப் பற்றி யெடுத்து
முற்றும் அகற்றி முனகிடும் யோகி...

மறதி யென்னும் மருந்தைப் பூசி
விரைந்து ஆறிட விளைந்த காயம்...
நினைவாம் கணைகள் நிமிடமும் பாய்ந்து
கணத்தில் தைக்கக் கடவுளின் சாபம்...!

அகரம்.அமுதா

செவ்வாய், 6 மே, 2008

கைவளைக்கும் இல்லை கனிவு!


காமன் வதைபட கட்டில் முறிபட
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!
சட்டெனமா மன்பிரிந்த தால்!

கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;
ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்
மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்
தேனினிய சொல்திக்கு தே!

மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்; எண்
சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்
வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்
தோளிரண்டில் தொத்தாதக் கால்!

வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்
எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்
ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்
காணேனே கண்ணொடுகொண் கன்!

கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்
கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்
என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்
கண்ணருகில் காட்டானோ கண்டு?


வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்
சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல
மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்
கைவளைக்கும் இல்லை கனிவு!


அகரம்.அமுதா

சனி, 3 மே, 2008

பேற்றேனே துன்பம் பெரிது!


ஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!

-செய்தி-

(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்
சாமப் பொழுதுகளில் சீரழிந்(து) –ஊமையாய்
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?

தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்
என்றனுக் கிந்தநிலை ஏன்?

கட்டிப் பிடித்தான் கனியிதழை மென்றிட்டான்
தொட்டுச் சுவைத்தான் துடியிடையை -எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான் பக்கமிருந் தின்பம்
கொடுத்தாலும் செய்தான் கொலை!

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டுத் துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!

அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா நடப்பு!

வெங்கானம் தானேகி வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!

அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்
கெடுத்தான் அருகில் கிடந்து!

தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!
தாய்வழிப் பாட்டனைத் தான்!

அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பில் செய்தவினை யோ?


அகரம்.அமுதா

புதன், 30 ஏப்ரல், 2008

தொழிலாளர் நாள்!



உழைக்கின்ற மக்க ளால்தான்
      உலகினுக் குயர்வாம் என்று
விழைந்திங்கே ஓடி வந்து
      விளம்பிடும் அருமை நாளே!

பிழைப்புக்கு வியர்வை சிந்தும்
      பேராளர் பெருமை பேச
அழைக்காமல் ஓடி வந்த
      ஆனந்தத் திருமே நாளே!

மண்ணிலே சேற டித்து
      மணிக்கதிர் விளைத்துக் காட்டி
விண்வரைப் போர்கு விக்கும்
      விவசாயி ஓர்தொழி லாளி...

இரும்புவடம் நாற்றாய் மாற
      எழும்சுவரே போத்தாய் வளர
வரும்கட் டடமே மரமாய்
      வளர்ப்பவனும் ஓர்தொழி லாளி...

மலமென்றும் சலமே என்றும்;
      வகைப்படுத்தி மருண்டி டாமல்
கலங்காமல் இறங்கி அதிலே
      கழிவகற்றும் ஓர்தொழி லாளி...

கட்டுமரம் கட்டி விட்டுக்
      காசினியில் கடல்கி ழித்து
முட்டப்புகழ் அடைய நாளும்
      முனைபவனும் ஓர்தொழி லாளி...

அழுக்கினை அடித்துப் போக்கி
      அரும்புமுல் லைபோல் தருவேன்
இழுக்கிலை இதிலே என்றே
      இயம்பும்சல வைத்தொழி லாளி...

மழித்தலை தொழிலாய்க் கொண்டு
      மக்களின் புறத்தோற் றத்தை
அழகுடைத் தாக்கிக் காட்டும்
      அவனும்இங் கோர்தொழி லாளி...

மரத்திற்குக் கிளைகள் வெட்டி
      வளர்ந்தபுட் புதரை வெட்டிச்
சிறப்புறத் தோன்றும் வண்ணம்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

அலைகளில் வலையை வீசி
      வகைவகை மீன்பி டித்து
விலைபேசி விற்றுத் தீர்க்க
      விழைபவனும் ஓர்தொழி லாளி...

கருவறைக் குள்ளே வாழும்
      கடவுட்குப் பூசை செய்யும்
திருவுடைப் பணியே கோளாய்ச்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

ஏட்டிலே கோல்பொ ருத்தி
     இசைமிகு கற்ப னைகள்
பாட்டிலே வடிப்பான் தானும்
     பண்பட்ட ஓர்தொழி லாளி...

எங்கெங்கு காணும் போதும்
      அங்கங்கு தொழிலா ளர்தம்
பங்குண்டாம் என்ப தாலே
      பார்முழுது மேதொழி லாளி...

இதனையே உணர்த்து தற்கே
      இற்றைநாள் அவத ரித்த
விதத்தினால் மேமுதல் நாளே
      நீயும்இங் கோர்தொழி லாளி...

பார்முழுதும் பார்ப்ப தென்றால்
      பற்பலவாய் நாட்கள் உண்டு
சீர்தூக்கிப் பார்க்க வென்றால்
      சிறப்பதெல்லாம் மேநாள் தாமே!

உழைக்கின்ற மக்க ளேதான்
      உலகத்தின் மூச்சு; அவர்தம்
அழைப்பினை ஏற்று வந்தாய்
      ஆனந்தம் பொங்க லாச்சு...

நாளெல்லாம் உழைக்கும் மக்கள்
      நலம்பாடிக் கூவும் குயில்நீ...
கோளென்றே உழைப்பைக் கொண்டோர்
      குலம்வாழ ஆடும் மயில்நீ...

பாருக்குள் சிங்கைத் தாயின்
      பண்பட்டப் புகழை நாட்டும்
வேருக்கு விழுதாய் வந்தாய்
      வெல்க!தொழி லாளர் நாளே!

அகரம்.அமுதா

செவ்வாய், 29 ஏப்ரல், 2008

தீக்குச்சி!

தலையோடு மருந்திருந்தும் தீக்குச் சிக்கு
தலைக்கனம் இருப்பதுவாய்த் தெரிய வில்லை!
தலையோடு மருந்துள்ள கார ணத்தால்
தலைப்பற்றிச் சுடர்விட்டு சிதைந்து மாளும்!

உயிர்பிரிந்தால் எரிப்பதுவே உலக நீதி...
உயிர்பெறவே எரிகிறதே உணர்த்தும் சேதி?
உயிர்பெற்று விளக்கிற்கே ஒளிவ ழங்கி
உயிர்பிரிந் திறப்பதுவோ இதற்கு நீதி?

சிலநொடிகள் வாழ்ந்தாலும் சிரத்தை யோடு
செய்கிறதே ஒளிஈகை விளக்கிற் கெல்லாம்!
நிலையில்லை வாழ்வென்று தெரிந்த பின்னும்
நிமிர்ந்தபடி நின்றெரியும் துணிவால் மேலாம்!

பாரதத்துக் கர்ணனப்பா! சாகும் போதும்
பார்த்தறிந்(து) ஈகின்ற பண்பி னாலே!
காரொத்த ஈதலினால் கடையேழ் வள்ளல்
கண்முன்னே தீக்குச்சாய் நிற்கக் கண்டேன்!

சிரத்தையொடு கையாள சுடரைச் சிந்தும்...
சிந்தைக்கொஞ் சம்தப்பத் தீங்கே மிஞ்சும்...
மறம்கற்ற அறமென்பேன் இதனை கண்டீர்...
மாண்புடனே கையாள்வர் நாளும் பெண்டிர்...!


அகரம்.அமுதா

காக்கைகளின் ஒப்புரவு!

கார்முகிலும் காக்கைகளும் நிறத்தால் ஒன்று;
கனிவுடனே ஈகின்ற குணத்தால் ஒன்று;
சேர்கின்றத் துளியையெல்லாம் வையத் திற்கே
வார்க்கின்ற கார்முகில்போல் காக்கைக் கூட்டம்
ஓர்பருக்கை யானாலும் பகிர்ந்தே உண்ணும்;
ஒப்புரவாய் வாழ்வதனை உயிராய் போற்றும்;
நேரில்லா நற்குணங்கள் நிறையப் பெற்று
நிலமிசை நீடுவாழும் காக்கைப் போல்யார்?

ஐயமிட் டுண்ணென்றே ஒளவை சொன்னாள்!
ஐயன்மீர்! அவ்வுரையின் பொருள்தான் என்ன?
“கையளவே உண்டெனினும் ஈதல் தன்னை
கடுகளவே னும்செய்க” என்ப தேயாம்!
மையன்னக் காக்கைகளைக் கண்டே யன்றோ
தையலவள் செப்பிவைத்தாள்! சமத்து வத்தை
வையத்தில் வாழ்விக்கும் உயிர்கள் தம்மில்
மைவண்ணக் காக்கைகளே முதன்மை யன்றோ!

அகரம்.அமுதா

திங்கள், 21 ஏப்ரல், 2008

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!

தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!

முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!

தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!

சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!

விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!

மோகப் போய்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!

ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?

பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!


அகரம்.அமுதா

நடிப்பு!

நாடக மேடை யின்றி
      நடிக்கின்ற நாய கர்கள்
நாடகம் நிறைந்த தாலே
      நடிகர்க்குப் பஞ்ச மில்லை!

நாயகர் சிலரே யுண்டு;
      நரிப்புத்தி கொண்டி ருக்கும்
தீயவர் பலபே ருண்டு
      தீங்கினைச் செய்வ தற்கு!

பக்தராய் வேட மிட்டு
      பாழ்தொழில் செய்வார்; தத்தம்
சக்தியே மேலாம் என்று
      சூழ்ச்சியும் தீதும் செய்வார்!

நாநயம் விற்றே விற்றே
      நாட்டிலே இங்கோர் கூட்டம்
நாணயம் பெருக்கிக் கொள்ளும்
      நாடகம் தொடர்ந்து செல்லும்!

உண்மையே ஊமை ஆகி
      ஊனமாய் ஆன தாலே
உண்மையைப் பேசு தற்கே
      ஊதியம் வழங்க வேண்டும்!

வித்தைகள் நூறு செய்து
      வியத்தகு நடிப்பைக் காட்டும்
வித்தகர் வழங்கக் கேட்டால்
      விருதுக்குப் பஞ்சம் தோன்றும்!

அதிகாரம் கையில் இல்லை;
      அரிதாரம் பூச வில்லை;
அதி-காரம் பேச்சில் காட்டும்
      அவர்கள்போல் நடிக ரில்லை!

அவரவர் பாத்தி ரத்தை
      அவரவர் தேர்ந்து கொண்டு
நவையின்றிச் செய்வ தாலே
      நாடகம் விளங்க வில்லை!

நாயகன் நடத்து கின்ற
      நாடகம் விளங்கி விட்டால்
நாயகம் கொண்ட மாந்தர்
      நடிப்பதை நிறுத்தக் கூடும்!

அகரம்.அமுதா

புதன், 16 ஏப்ரல், 2008

சாமந்தி!



முதலெழுத் திறத்த லாகும்;
        முதல்,கடை இனமே யாகும்;
முதல்,கடை யிரண்டெ ழுத்தை
         முடிச்சிடின் அமைதி யாகும்;
முதலற குரங்கே யாகு(ம்;)
         உயர்இரண்டா மெழுத்தி னோடே
இதன்கடை தளைகின் திங்கள்;
         இச்சொல்சா மந்தி யாமே!

அகரம்.அமுதா

தாமரை!

ஏவலே முதலெ ழுத்தாம்;
எழுத்திதில் கடைத ளைகின்
காவிய வாலி இல்லாள்;
கடையிரண் டெழுத்து மானாம்;
மேவிய இடையை நீக்கி
விரைந்து‘கால்’ தனைஒ றுத்தால்
தாவிலை நிலமாம்; அச்சொல்
தாமரை என்பேன் கண்டீர்!

அகரம்.அமுதா

கல்வி!

முனைந்திடின் பெயரோ டேவல்
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;
கனிவுடன் ஒற்றை நீக்கின்
கவிஞனும் குரங்கும் உண்டாம்;
மனைதனைக் கூடும் சொல்லே
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;
உனையெனை சான்றோ னாக
உயர்த்திடும் கல்வி தாமே!


அகரம்.அமுதா

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

மறுநடவு!

அப்பன் குறும்பாலே
அன்னையினுள் முதல்நடவு!
தொப்பூழ் கொடியவிழத்
தொட்டிலிலே மறுநடவு!

பிள்ளையினுள் வெள்ளைமனம்
பேரிறைவன் முதல்நடவு!
கள்ளகுணம் ஆசைமனம்
காலத்தின் மறுநடவு!


பள்ளியிலே பாடங்கள்
பாலகனில் முதல்நடவு!
பள்ளியறைப் பாடங்கள்
பருவத்தின் மறுநடவு!

எண்ணத்தை நெஞ்சுள்ளே
எழுதுதல் முதல்நடவு!
கண்ணுறங்கும் வேளைவரும்
கனவுகள் மறுநடவு!

உற்றுணர்ந்த யாவையுமே
உள்ளத்தில் முதல்நடவு!
கற்பனையில் கண்டெடுக்கக்
காகிதத்தில் மறுநடவு!


எழுத்துக் கல்வியினால்
இமைதிறத்தல் முதல்நடவு!
பழுத்த அனுபவத்தால்
பார்வைபெறல் மறுநடவு!

வயதில் செய்கின்ற
வன்முறைகள் முதல்நடவு!
வயதான பின்னாலே
வளைந்துக்கொடல் மறுநடவு!

பல்லில்லாச் சேய்பேசும்
பாகுமொழி முதல்நடவு!
பல்லிழந்த கிழம்கூறும்
பாழ்மொழிகள் மறுநடவு!

பிள்ளையிலே தாய்க்கரத்தை
பிடித்துலவல் முதல்நடவு!
தள்ளாடும் முதுமையிலே
தடியூணல் மறுநடவு!

கருவறையில் முதல்நடவு!
கண்ணறையில் கையறையில்
இருப்பதெல்லாம் மறுநடவு!
இறப்(பு)அது அறுநடவு!

அகரம்.அமுதா

தீபம்!

ஊற்றிடும் நெய்தனை
உணவெனக் கொண்டொளி
கூட்டிடும் வண்ண தீபம்! –ஞான
ஊற்றிடும் நெய்யுண்(டு)
உற்றதை உணர்ந்ததை
ஏட்டி(ல்)செய்யும் எண்ண தீபம்!

அகலொடும் மாவொடும்
ஐமுக விளக்கொடும்
ஆடிடும் அழகு தீபம் -நாளும்
அகமொடும் அறிவொடும்
அனுபவத் திரியொடும்
ஆடிடும் அன்பு தீபம்!

சூழ்ந்திடும் இருளினை
சுந்தர ஒளியினால்
துடைத்திடும் எரியும் தீபம் -தன்னை
சூழ்ச்சியால் வீழ்த்திடத்
துடிப்பவர் நாணிடத்
துளிர்த்தெழும் அறிவு தீபம்!

திரியிலே ஆடிடும்
தேகயெழில் காட்டிடும்
விட்டிலை விழுங்கும் தீபம் -எண்ணப்
பரிசலில் ஆடிடும்
பாழ்செயல் தூண்டிடும்
பண்பில்லார் ஆசை தீபம்!

உயிரோடு உணவுமாய்
உற்றநல் மெழுகதன்
உருவழித் தாடும் தீபம் -பாரில்
உயர்வான உறவினைப்
புகழோடு பொருளினை
உதிர்த்தோடும் கோப தீபம்!

கடவுளை கைதொழச்
செய்திடும் நம்தமைக்
கற்பூரம் கொண்ட தீபம் -நல்ல
நடத்தையால் சிறந்தாரை
நாளெலாம் தொழுதிடும்
நல்லார்தம் உள்ள தீபம்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 6 ஏப்ரல், 2008

பம்பரம்!

ஒற்றைக் காலில் நின்றபடி
உன்னை என்னை பார்த்தபடி
சற்றே காற்றைக் கிழித்தபடி
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?

நிலையே இல்லா இவ்வாழ்வில்
நிலைத்து வாழ வேண்டுமெனில்
நில்லா துழைத்தல் வேண்டுமென்று
நிற்கும் பம்பரம் சொல்கிறது!

ஊனம் உடலில் இல்லையென்றும்
உளத்தில் தானது உள்ளதென்றும்
காணும் பேரைக் கூப்பிட்டுக்
கனிவுடன் பம்பரம் சொல்கிறது!

வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்
இட்ட முடனே எல்லோர்க்கும்
இயன்றது செய்திட இயம்பிடுது!

தலைக்கனம் கொண்டே ஆடுவதால்
தாழ்வே வந்து சேருமென்று
தலையை ஆட்டித் தக்கபடி
தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!

தன்னைச் சுற்றும் சாட்டைக்கே
தன்னை வழங்கும் பம்பரம்போல்
உன்னை சார்ந்த உறவுக்கும்
உன்னை ஈந்திடு என்கிறது!

சொந்தக் காலில் நிற்பதுதான்
சுகத்திற் சிறந்த சுகமென்றும்
அந்தப் பம்பரம் சொல்கிறதே!
அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!

அகரம். அமுதா

மதியுரை!

தேய்ந்து தேய்ந்து
தொலைந்த நிலாவும்
தோன்றி வளர்வது கண்டாயா? –அது
தேய்ந்து தொலைந்தும்
தோன்றி வளர்ந்தும்
தரும்மதி யுரைதனைக் கொண்டாயா?

வளரும் போதும்
மதியிழந் தேசிறு
வழியும் மாறிச் செல்வதில்லை –அது
தளரும் போதும்
தன்னை மறந்து
தடத்தை மாற்றிக் கொள்வதில்லை!

கொடுக்கக் கொடுக்கக்
குன்றும் குறையும்
கோள நிலாவும் குறைகிறது –தனை
எடுத்துக் கொடுத்த
இளைய நிலாவின்
இசையே பிறையாய் நிறைகிறது!

முயன்றால் நிச்சயம்
ஏற்ற மென்பதே
பிறைவளர்ந் துணர்த்தும் மதியுரைகாண் -நாம்
முயலா விட்டால்
வீழ்ச்சி யென்பதை
முழுமதி தேய்ந்தே உரைப்பதுகாண்!

இல்லை என்னும்
இருளை ஓட்ட
இளைய நிலாபோல் ஈந்துவிடு –நீ
தொல்லை காணா
திருக்க வேண்டின்
ஈயும் போதே ஆய்ந்துகொடு!

அகரம்.அமுதா

புதன், 2 ஏப்ரல், 2008

கருத்ததேன் முகிலே!


வாகாய்வெண் ணிறத்தை மாற்றி
வலம்வந்து மழைக்கும் காரே!
ஆகாய வீதி யெங்கும்
ஆவியாய் அலையும் நீரே!
போகாத நகரம் எல்லாம்
போயுலவிப் பார்த்து விட்டு
வேகாத வெயிலில் மேனி
வியர்த்திடும் மேக தேரே!

காசிரும் மனங்கள் போலே
கருத்ததேன் முகிலே? நெஞ்சில்
மாசெதும் வைத்திட் டாயோ?
மாற்றமேன் முகத்தின் மேலே?
பேசரும் பஞ்சின் வண்ணம்
பிறங்கிடும் மேனி வண்ணம்
ஈசனின் நீல கண்டத்(து)
இணைநிறம் உற்ற தேனோ?

வெய்யிலில் நடந்த தாலே
விரைந்துநீ கருத்திட் டாயோ?
மையலை வழங்கு முன்றன்
மணிமுலை இரண்டி னோடும்
தொய்யிற்குப் பதிலாய் கண்ணின்
மையெழுதி னாயோ? மையால்
மெய்யெழுதி னாயோ? உன்றன்
மெய்வண்ண மாற்றம் ஏனோ?

பார்க்கவெள் ளைக்கா ரன்போல்
பால்வண்ணம் கொண்ட போதும்
நீக்ரோவின் நிறத்தின் மீதே
நீங்கிடாக் காதல் தானோ?
மாக்களாகி மாந்தர், மேனி
வண்ணத்தால் பிரியா வன்னம்
சேர்க்கத்தான் வண்ண மாற்றம்
தேகத்தில் செய்கின் றாயோ?

அகரம்.அமுதா

மேகம்!

காற்றுத் தறியில்
கானல் இழைகொண்டு
நேர்த்தியாய் நெய்த
நீர்க்கம்பளம்...

தாரகை வண்டுகளைத்
தனக்கிரை ஆக்கிட
நீரென்னும் சிலந்தி
நெய்தவலை...

கைநீட்டி வான்தொடக்
கரைதாவும் அலைகள்
மெய்சோர்ந்துத் திரும்பி
மேனி வியர்வையால்
நீலவானுக் கெழுதும்
நீளுரைமடல்...

காலனாம் காற்றினால்
கறைகின்ற கற்பூரம்...

சூழ்மின்னலற் சுடரினால்
உருகும் மெழுகு...

ஆழ்கடற் கிழவியின்
அழுக்குச் சேலை...

வான வெற்றிலையில்
தடவும் சுண்ணாம்பு...

கானென்னும் வண்டை
நாடும் தேன்மலர்...

துடுப்பில்லா ஓடம்...
தூணில்லா மண்டபம்...

யாரும்எடுக்க இயலாத
இளவம் பஞ்சு...

ஆழிக் குயவன்
வனைந்த நீர்க்குடம்...

தென்றல் இடறத்
தடுக்கி வீழ்ந்திடினும்
மின்னற் கொடிகாக்கும்
குமரன்...

என்றென்னை
கற்பனை கவிஞர்கள்
கவிதை வரிகளில்
சொற்புனைந் துவமை
சொல்வர்!

நானோ
பசுமை தேசத்தில்
பறக்கும் கொடி...

பச்சை வனங்களின்
பந்தல்...

நானே
மழையின் தாய்...
முத்தின் தந்தை...
பிழைகாண முடியாப்
பெரும் பிழைநான்...

கழைக்கூத் தாடிநான்!
கழையடித் தாடுவேன்!
இசைமழைக் கோட்டையில்
இருந்துல காளுவேன்!

மீன்கள் நீந்தா
மலட்டுநீர் நிலைநான்...
தேன்'கள்' சொரிந்திடும்
தெங்கிளம் பாளை...

மரங்கள் என்றன்
மழைத்துளிகளின் பிடிமானம்...
வயல்கள் என்றன்
வருகைக்கு வரவேற்பு...

மேடையாம் என்மீதேறி
முழங்கும் மின்னலுக்கு
மேடைநான் களைந்தபின்பே
வண்ணவிற் பொன்னாடை
போர்த்துமந்த
வான்போல் பலரையென்
வாழ்நாளில் காணுகின்றேன்...

தேன்போல் சுவைகூட்டி
திசையெங்கும் மேவிப்
பொழியும் காலங்களில்
போவென்று குடைபிடிப்பார்
பொய்க்கும் கோடையிலோ
வான்பார்த்து ஏங்கிடுவார்!

அகரம்.அமுதா

சனி, 8 மார்ச், 2008

விழி!


சுற்றும் சுழலும் பம்பரமோ? –பனி
சொட்டும் மார்கழி இரவுகளோ?
வெட்டும் மறையும் மின்னலுமோ? –கணை
வீசும் காமன் வில்தானோ?

கனவுகள் சிறைப்படும் சிறையறையோ? –பல
காட்சிகள் காட்டிடும் திரையறையோ?
மௌனம் பேசும் சித்திரமோ? –மணி
ஊஞ்சல் ஆடும் ரத்தினமோ?

மையைத் தீட்டும் காகிதமோ? –பல
பொய்கள் தீட்டும் புலவருமோ?
மெய்மேல் வரைந்த ஓவியமோ? -இது
மெய்யோ? இதன்பேர் காவியமோ?

பூமனின் தூரிகை உடைந்ததுவோ? –அது
புருவத்தின் கீழ்வந்து விழுந்ததுவோ?
தாமரை வடிவில் தா-மரையோ? -இமை
சாமரம் வீசிடும் அரசவையோ?

இமைக்கை காட்டிக் காட்சிகளை –மன
இருட்டறைக் கழைக்கும் விபச்சாரி!
நமைப்பிறர் அறிந்திட அகம்காட்டி –தொடர்
நாடகம் ஆடிடும் கண்ணாடி!

பொருள்: பூமன்-பிரம்மன்; தா-மரை-தாவுகின்றமான்;

அகரம்.அமுதா

விழி!


இமையென்னும் திரையூடே
இரவுகளில் கனவுகளைத்
திரையேற்றிக் காணுகின்ற சுவைஞன் -மெல்லத்
திரைவிலகத் திறன்காட்டும் நடிகன்!

நாசியென்னும் தென்னையதன்
நற்கீற்றாம் இமை,புருவம்
காய்த்தாடும் பதமான இளநீர் –மனதில்
காயமென்றால் வடித்துவிடும் துளிநீர்!

புருவமென்னும் பெட்டையதன்
பூஞ்சிறகாம் இமையிருந்து
காட்சியிரை தேடியுண்ணும் குஞ்சு –தூக்கக்
கழுகுகண்டால் சிறகொளியும் அஞ்சி!

அணங்கையிடம் பிறையளவாய்
ஆண்களிடம் முழுநிலவாய்
இமைமுகிலின் பின்தோன்றும் நிலவு –நொடியில்
இதயத்தை செய்துவிடும் களவு!

அகரம்.அமுதா

வியாழன், 6 மார்ச், 2008

எழுதுகோல்!

பைதன்னில் இருப்ப தாலே
பயனொன்றும் இல்லை என்றே
கைதன்னில் தொட்டெ டுத்தேன்
காகிதப் பரப்பி லெங்கும்
மைதெளிப்பாய் என்ப தாலா?
மலரேட்டில் கவிதை யென்னும்
மெய்தெளிப்பாய் என்றே யன்றோ
விழைந்துன்னை தொட்டெ டுத்தேன்!

என்னருமை எழுது கோலே!
எடுத்துன்னை திறக்கும் போதே
பொன்னருமை ஏடாம் தன்னில்
பூக்காதோ கவிதை கோடி?
பண்ணருமை உணர்ந்த தாலே
பைந்தமிழைப் போற்று தல்போல்
உன்னருமை உணர்ந்த தாலே
உளத்தருகே உன்னை வைத்தோம்!

தலைக்கனத்தால் ஆடும் யாரும்
தலைக்குனிய நேரும் என்ற
தலையாயத் தத்து வத்தை
தரணியுள்ளோர்க் குணர்த்தத் தானோ
தலைக்குனிந்தே ஆட்டம் போட்டு
தற்குறிகள் கற்கும் வன்னம்
தலைப்பணிவை ஏட்டில் செய்து
தலைநிமிர்ந்தாய் பைகள் தோறும்?

கத்தியும்கை வேலும் சூலும்
கடுங்கூரென் றுரைப்பார் கூடப்
புத்தியினால் உன்னை யன்றோ
புகழ்கின்றார் கூரே என்று!
கத்தியினை எடுத்தார் சாவும்
கத்தியினால் தானாம்; உண்மை!
கத்தியினும் கூராய்! உன்னால்
கமழ்கிறதே கற்றோர் வாழ்வு!

அகரம்.அமுதா

எழுதுகோல்!

மையிட்டக் கோலதன்
மெய்பிடித்து –நன்
செய்யிட்ட ஏரன்ன
சேறடித்து...

பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து –நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...

உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நற்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!

ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண் டள்ளொணா
சமுத்திரம்தான்!

தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!

மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!

நாவென்று நாம்வாழ
நானிலத்தே –ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!

மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தபின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்பென்றகோல்!

அவ்வூண்று கோல்தாங்கி
அடங்கிடாமுன் -நம்
கையூண்றும் ஒப்பிலாக்
கோல்எழுதுகோல்!

எண்முனைந் தோதியதை
ஏற்றுஒழுகும் -பெண்
கண்முனை யொத்தகோல்
தாளிலழுவும்!

மாடிமனைத் துயின்றிடும்
மாந்தருக்கும் -தெருக்
கோடிமுனைத் துன்புறும்
கூட்டத்திற்கும்...

ஏட்டில்முனை வைத்தழுவும்
எழுதுகோலே –அவர்
பாடுயற பகுத்தறிவின்
திறவுகோலே!

பொருள்:- உடுக்கை –உடை; தூளி –தூசி; தொகை –கணக்கு;

அகரம்.அமுதா

ஞாயிறு, 2 மார்ச், 2008

என்னைப் பற்றி!

நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!

ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!

தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்:-தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

அகரம்.அமுதா