புதன், 2 மார்ச், 2016

நான்!

துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன் -பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!

கொடுமைக்கு அறம்பாடி
முடிக்கின்றவன் -அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!

வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன் -அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!

பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? -என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!

பகடி வெண்பா!

தனிமரமே உன்றன் தனிமை அகற்ற
கனிவனமே வாய்த்த கதைசொல்! -இனிமைமிகு
வண்ணமுகம் கண்டேன் மயலுற்றேன் என்போலும்
பெண்ணவளும் பெற்றாள் பிணி!

மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்க
தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? -பூவமளிப்
போர்க்கும் பொருந்தும் பொலிவினன் என்றேதான்
பார்த்துடன் பட்டாள் பசித்து!

எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட
மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? -கண்மொழி
கற்றுத் தெளிந்தால் கதையளக்கும் வாய்ப்பேச்சு
வெற்றுப் பகட்டென்பாய் வெந்து!

நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்
ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? -நன்றுகேள்
ஐம்புலனிற் கட்புலனே போய்த்தீண்டி இன்பீயும்
மொய்ம்புடைய தென்பேன் முனைந்து!

உரியமொழி பேசி உணர்த்தற்(கு) உரிய
கரியவிழிக்(கு) இன்னோர் கவின்சொல்! -உரியவரைத்
தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே
அன்னியர் காணாத வாறு!

 இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்
நல்லாள் நயனமிடும் கட்டளைஎன்? -பொல்லா
மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க
மதனுக்கிம் மங்கை விழி!

என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை
மென்றுமுழுங் காமல் மிழற்றாழோ? -இன்றுவரைக்
கொல்லரவம் போலென்னைப் பல்லிரவும் கொன்றதுபோய்
நல்லுறவும் வந்த நயப்பு!

நெருநல் வரைநீ நிதமும் அடைந்த
வெருவல் தனித்தா விலகும்? -புருவப்
பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)
உருவில் அணங்கன் உடன்!

ஞாயிறு, 13 ஜூலை, 2014

சங்கொடுவா ராமா நுசம்!

பந்திக் கிலைபோட்டுப் பார்த்துப் பரிமாற
வந்தமர்ந் துண்ணுகிறார் வாயார –சொந்தங்கள்;
அங்குரசத் தோடே அலையா ததையென்வ
சங்கொடுவா ராமா நுசம்!

வெள்ளி முளைத்ததுபோல் வெந்தநல் நெற்சோற்றை
அள்ளியிலை இட்டாய் அழகாக –சொல்லும்படி
இங்கெனக்கு வேலை இடாதே!போய் நல்லர
சங்கொடுவா ராமா நுசம்!

திங்கள், 9 ஜூன், 2014

அவள்!அஹிம்சை முகம்
ஹிம்சை விழி
அவளுக்கு!

திங்கள், 5 மே, 2014

ஆசைக்கே ஆசையெழும்!நாடாத கண்களுண்டோ
நறுமுகையே நீநடந்தால்…
பாடாத வாய்களுண்டோ
பைங்கிளியுன் அழகைத்தன்னால்…

வைத்துக்கொண்டே வஞ்சனைகள்
செய்கின்ற சின்னஇடை
வள்ளலென எண்ணிச்சென்று
கஞ்சனிடம் பெற்றகொடை

பிடியளவு இடையிருக்க
படியளவு மார்கனக்க
அடியெடுத்து நீநடந்தால்
அன்னமே கால்கடுக்கும்

செப்புச்சிலை உன்மேனி
சிவந்தவிழி மலைத்தேனீ
தெங்கிளநீர் இரண்டோடும்
சேர்ந்தநிறம் மருதாணி

காதளவு கண்கள்-அவை
வள்ளல்வீட்டு வாசல்கள்
கன்னியுந்தன் வாய்வார்த்தை
கஞ்சன்கொண்ட கைப்பொருள்கள்

வெடியெடுத்துப் போட்டதுபோல்
வெண்ணிலவே நீநடந்தால்
மதுகுடித்த வண்டெனவே
வந்துமனம் வட்டமிடும்

பொடியெடுத்துப் போட்டவுடன்
பூத்துவரும் தும்மலைப்போல்
அன்னமுனைக் கண்டுவிட்டால்
ஆசைக்கே ஆசையெழும்!

வெள்ளி, 14 மார்ச், 2014

கைக்கூலி! (வரதட்சிணை)பெண்ணாய்ப்
பிறந்த யார்க்கும்
தரணியில்
தாலிதான்
வேலி; -அவ்
வேலியின்
வேலையைச் செய்ய
வேண்டுவதேன் கூலி?

கூலி பெற்று
குவலயத்தில்
வேலியின்
வேலையைச் செய்யும்
ஆண்கள்
ஆரும்
ஆண்கள் அல்ல
ஆண்களிற் போலி!


இன்று
ஏந்திழையர் –
வனப்பைப் பார்த்து
வருவதில்லை வரன்;
பணப்பை பார்த்து –மணம்
பண்ணுவதுதான் முறண்


ஒன்றுபோல்
ஒன்று;
இப்படி ஒன்றுதல்
இருவர்க்கும் நன்று!

ஏற்பதிகழ்ச்சி -
என்றாள் ஔவை; மீறி -
ஏற்கின் எவர்க்கும் -
ஏற்படும் கௌவை!

ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்த்துப்பா! வெண்பாவூர் செ. சுந்தரம்

வெண்பா இமயம், நல்லாசிரியர், வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் 'வெண்பாவில் என்பா விருந்து' நூல் படித்ததால் எழுந்த வெண்பாக்கள்

கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
இவ்விருந்(து) இருக்க இமையோர் அழைத்திடினும்
அவ்விருந்துங் கொள்ளேன் அணைந்து!

தலைதந்தும் வெண்பாவைத் தாங்கும் இவர்தம்
நிலைகண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்; -முலைதந்த
அன்னையவள் அன்பைப்போல் ஆங்குறு சுந்தரனார்
வெண்பாவிற்(கு) உண்டோ விலை?

கொட்டருவி போலுமிவர் கொஞ்சுதமிழ்ப் பாவருவி
தொட்டுருவிப் போகுதடா தூநெஞ்சை; -அட்டியில்லை
பாடிக் கடன்தீர்க்கப் பாருதித்தார் போலுமதை
நாடிக் கடன்தீர்ப்போம் நாம்!

பல்லா சிரியர்இப் பாரிலுளார்; சுந்தர
நல்லா சிரியர்போல் நாட்டினரா? -வல்லிடை
மெல்லினமாய்த் தோன்றியிம் மேதினியை ஆள்கின்ற
வெல்தமிழ் வெண்பா விருந்து!

செவ்வாய், 4 மார்ச், 2014

விடுதலை நாடகம்!

"விடுவதுபோல் விடுகின்றேன்; விரைந்து வந்து
விடாவண்ணம் தடையிட்டே இடுவாய் தூக்கில்
அடிபெண்ணே!" என்பதுபோல் இங்கொ ருத்தி
அண்மித்த தேர்தலுக்காய் நாட கத்தைச்
சுடச்சுடவே அரங்கேற்று கின்றார்; மூவர்
தூக்கிற்கே தூக்கிட்ட நயன்மை மன்றும்
விடுகவெனும் ஆணைதனை விளப்பி டாமல்
விடுவதெனில் விடுகவென்ற விளைவால் அன்றோ!

தாலிகட்டி அறுத்தவரும்; தாலி தன்னைத்
தன்கழுத்தில் ஏற்காத தனிப்பெண் தானும்
வேலிகட்டி ஆளுகின்ற இந்த நாட்டில்
விடுதலையா வார்எழுவர் என்னும் பேச்சு
போலிஅதில் உண்மையில்லை; தேர்தல் தன்னில்
பூந்தமிழர் இவர்கட்குப் புகட்டிப் பாடம்
காலிகளை அடைப்பதுபோல் தட்டி தன்னில்
கருத்துடனே அடைத்திடுதல் கடமை என்பேன்!