அறுசீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுசீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூலை, 2026

30/8/2020

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா அங்க சத்தம்

இதுவரைக்கும் கேக்கு தேம்மா

ஒன்னாருந் திட்டிட் டானா

ஒரண்டையும இழுத்துட் டானா

சின்னதா கெட்ட வார்த்த

சேத்தொன்ன சொல்லிட் டானா

என்னன்னு சொன்னா தானே

ஏதாச்சும் செய்வேன் நானே!

 

அகரம் அமுதன்:-

 

பேசிக்கிட் டிருக்கோம் மாமா!

பெரச்சன ஒன்னு மில்ல;

ஏசிப்புட் டொருத்தன் போக

இளப்பமா? விடுவே னாநான்?

பூசிநான் மொழுக வில்ல

பொய்யேதும் சொல்ல வில்ல;

வீசிநீ விலாஒ டிக்க

விறகோடு வரவேண் டாமே!

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா இதஎங் கிட்ட

இவ்வளவு லேட்டா சொல்ர

கொண்டாநீ அவன இங்க

கொத்தாவே அருத்து மூணும்

சுண்டக்கா வத்த லாட்டம்

சுடச்சுட காய வச்சி

அண்டங்காக் காவுந் திங்க

அத்தனையும் வீசி போவோம்!

 

அகரம் அமுதன்:-

 

சுண்டக்கா மேட்ட ருக்கே

சும்மாநீ இருந்தி டாம

வெண்டக்கா வெரலொ டிக்க

வேகமா வருவா யின்னா

துண்டக்கா ணும்மே இன்னுந்

துணியக்கா ணும்மே இன்னுஞ்

சண்டைக்கே வரல யின்னுஞ்

சமாதானம் பேசு வானே!

 

ஏடி வரதராசன்:-

 

வந்தாலும் என்ன இப்போ

வரலைன்னா என்ன இப்போ

அந்தாளு யாரு ஒன்ன

அசிங்கமா பேசிப் போக?

இந்தாவா ரேனே நானும்

எவந்தான்னு பேர சொல்லு

அந்தாளா நானா இன்னு

அப்புறமா நீயும் பாரு!

 

அகரம் அமுதன்:-

 

அட!கூட நீயி ருக்க

அடிக்கஒ ருத்தன் வந்தா

தொடக்கூட விடமாட் டேன்னு

தெரியாதா? தொட்டுப் புட்டா

விடக்கூட மாட்டே யின்னு

வெளங்காதா? கொல்லிக் கண்ணு

படக்கூட விடமாட் டேன்னு

புரியாதா? விட்டுத் தள்ளு!

 

30/8/2020

 

வியாழன், 30 ஏப்ரல், 2026

 கட்டுமரக் கூற்று!

 

கியூட்டாகச் சிரிக்கும் பில்கேட்ஸ்,

கிறங்கடிக் கின்ற ஐன்ஸ்டின்,

நியூட்டனொடு ஓருசந் திப்பை

நிகழ்த்திநான் டைட்டில் பார்க்கை

பியூட்டியாய்த் தமிழ கத்தில்

பெரிதாகத் திறத்தல் ஒன்றே

டியூட்டியாய்ச் செய்ய வேண்டி

டீலிங்கை அன்றே போட்டேன்!

 

ஈர்ப்புவிசை பற்றி நியூட்டன்

எடுத்துரைத்த தாரால்? ஐன்ஸ்டின்

பார்நடுங்கும் அணுவின் குண்டைப்

பண்ணியது யாரால்? பில்கேட்ஸ்

நேர்வந்து மைக்ரோ சாஃப்டை

நிறுவியது யாரால்? என்றன்

கூர்மதியில் விளைந்த தைநான்

கூறியதால் விளந்த தன்றோ!?

 

நானின்றி அணுவும் இங்கே

நகராது; கண்ண சைத்தால்

வானின்று மழையும் கூட

வாராது; கைய சைத்தால்

தீனியை ஆவும் கன்றும்

தின்னாது; பூமிப் பந்தின்

ஆணிவேர் நானே அஃதை

அறிந்தவன் உடன்பி றப்பே!

 

 



புதன், 22 ஏப்ரல், 2026

 

மோடி -

 

சௌகிதார் வந்தி ருக்கேன்;

   சகஜமாய்ப் பழகும் தம்பி!

சௌக்யமா? மனதில் ஏதும்

   சலனமா? பேர்தான் என்ன

கௌசிக்கா? மனதில் என்ன

      ‘லவ்சிக்கா? உள்ள வற்றைக்

கௌரவம் விட்டு விஸ்வ

   குருவிடம் சொலமாட் டாயா?

 

கடைக்காரன் -

 

சிந்தூர்போர் போல்வி ரைந்து

   சீக்கிரம் முடிப்ப தற்கு

சிந்தையிலே ஊறுங் காதல்

   சிக்கலென்ன சிறுசா? மோடி!

எந்தவூர் ஆளு நீங்க?

   என்னவாங் கிடவந் தீங்க?

கந்துக்கே கடையைப் போட்டேன்

   காசீந்து வாங்கிக் கோங்க!




 

டிரம்ப் கூற்று!

 

அழகான பெண்ணை எல்லாம்

   அணைக்கத்தான் வேண்டும் அன்றிக்

குழிதோண்டி புதைக்கும் எண்ணம்

   கூடாது; மலர்மஞ் சத்தில்

பழகாத வித்தை யெல்லாம்

   பழகத்தான் வேண்டும் அன்றிப்

பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணம்

   பரவிடல் முறையா காது!

 

அப்பனே! ஈரான் தேசம்

   ஆள்வோனே! செயற்கை யான

ஒப்பனை தேவை இல்லா

   ஒண்டொடி எண்ம ரையும்

இப்பவே விடுத லைசெய்!

   இல்லாது போனால் போரில்

துப்புற வாக உன்னைத்

   துடைத்தழித் திடுவேன் நானே!





 

சுடலை -

 

லிக்கரை விற்றுக் காசை

   லவட்டியும், குடிமக் கள்தம்

நிக்கரை உருவி மானம்

   நிம்மதி இழக்கச் செய்தும்,

டக்கராய் வாழும் இந்த

   டாடியின் தாகம் தீர்க்கச்

சக்கரை இலாக்க ருப்பஞ்

   சாறுபிழிந் தீவாய் தாத்தா!

 

வியாபாரி -

 

என்னண்ணன் செட்டு நீங்க!

   என்னையா தாத்தான் றீங்க?

நன்மையே செய்யா நீங்க

   நாடாள ஏன்வ றீங்க?

கண்ணியமாச் சொல்றேன் எந்தன்

   கடைப்பக்கம் வாரா தீங்க

புண்ணியமாப் போகும் நாடு

   புலரட்டும் வீடு போங்க!




புதன், 1 ஏப்ரல், 2026

உன்னைத்தான் கேட்கிறேன்!

 


ஒட்டாதா தமிழர் நாவில்
. . ஒண்டமிழ்? ஒட்டி னாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
. . இன்னிலை? எட்டி னாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
. . குவியல்கள்? கொட்டி னாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
. . கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

கூடாதா தமிழர் கூட்டம்?
. . கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண் டேய்க்கும்
. . கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
. . ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
. . பக்கத்தில் வந்தி டாதா?

திங்கள், 1 டிசம்பர், 2025

கத்திக் கம்மல்!

 


கத்தியிற் கம்மல் செய்து
காதிலே மாட்டும் பெண்ணே!
புத்தியிற் பொறியும் தட்டப்
புளகித்துப் போனேன் கண்ணே!
புத்தகம் புகட்டி டாத
புதுவகை பாது காப்பை
மெத்தனம் செய்யா மல்நீ
மிரட்டிட அணிந்தாய் ஆப்பை! 01
பொன்னணி காதில் மாட்டிப்
போவதால் களவே மிச்சம்;
சின்னதோர் கத்தி மாட்டிச்
செல்வதால் கள்வர்க் கச்சம்;
சின்னவீண் செய்தி கூடச்
செவிகளைத் தீண்டல் தீது;
என்பதைச் சுட்டத் தானோ
இணைகத்தி அணிந்தாள் மாது? 02
கத்தியின் வேலை என்ன
காய்கறி வெட்டல் தானே...
சொத்தையை வெட்டி நீக்கும்
தொழிலினைச் செய்தல் தானே...
எத்தனை பேர்கள் பேசி
ஏய்த்திட முயலக் கூடும்...
எத்தரைக் கண்டால் கத்தி
இடுப்பிலே இறங்கக் கூடும்! 03
குத்திய காதைப் பேச்சால்
குத்திட முனையும் யாரும்
குத்துகள் படுவார் என்னும்
குறிப்புகள் தந்தாள் பாரும்;
அத்துகள் மீறு வோரை
அடக்கிடும் பொருளைத் தீட்டிப்
பித்தரை எச்ச ரித்தாள்
பெண்ணிவள் காதில் மாட்டி! 04
அவசியம் கத்திக் கம்மல்
அணிவதைச் சட்டம் செய்வீர்;
அவசர மாக அஃதை
அமல்படுத் திடவும் செய்வீர்;
தவறுகள் நடக்கும் முன்னம்
தடுப்பதே அரசின் வேலை
கவர்ந்திடும் வண்ணம் செய்து
காட்டினாள் அழகு வாலை! 05
அகரம் அமுதன்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழன்கை அன்றே ஓங்கும்!


மலையாளி ஆண்டான்; நம்மை
வடுகனுமே ஆண்டான்; தண்ணீர்
இலையென்ற கன்ன டத்தின்
எழில்மங்கை ஆண்டாள்; என்றும்
நிலையாகத் தமிழர் நாட்டை
நின்றாளத் தமிழன் போந்தால்
கொலைவாளுக் கஞ்சி யோடும்
கோழைபோற் பதுங்கு கின்றோம்!

அண்டைமா நிலத்தா ரெல்லாம்
ஆள்கிறார் நம்மை; வந்து
மண்டைமேல் ஏறிக் குந்தி
மகிழ்கிறார்; எதிர்த்துக் கேட்டால்
சிண்டைத்தான் பிடித்து ஆட்டிச்
சிதைக்கிறார்; துடித்தெ ழுந்து
பெண்டைத்தான் நிமிர்த்தா விட்டால்
பேடிகள் நாமென் றாவோம்!

தானாடா விட்டா லென்ன?
சதையாடும் என்பார்; அந்த
ஊனாடா விட்டா லென்ன?
உயிராட வேண்டும்; நம்மை
ஏனாள வேண்டும் மாற்றான்
      எனும்கேள்வி எழுந்தால் போதும்
தானாக மாற்றம் தோன்றும்
      தமிழன்கை அன்றே ஓங்கும்!

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

உன்னைத்தான் கேட்கிறேன்!


ஒட்டாதா தமிழர் நாவில்
      ஒண்டமிழ்? ஒட்டி னாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
      இன்னிலை? எட்டி னாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
      குவியல்கள்? கொட்டி னாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

கூடாதா தமிழர் கூட்டம்?
      கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண் டேய்க்கும்
கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
      பக்கத்தில் வந்தி டாதா?