போனவன் போய்விட்டான்; போட்டதெல்லாம்
போட்டபடிக்
கீனப்பட் டங்கே கிடக்குதடி; – நானவற்றை
ஓடிப்போய்ப் பார்த்துவரேன் ஓரெட்டு; போனதெண்ணி
வாடிநின்றால் என்னா வது!? 01
காற்றில் கலந்த கணவனை எண்ணிநீ
நோற்றது போதுமடி நோய்ச்சலனம்; - சோற்றை
ருசிக்கொருவாய் யல்லாமல் ரோதனை விட்டுப்
பசிக்கொருவாய் தின்று படு! 02
சகிக்கத்தான் வேண்டுமடி சாவை; தனியே
வகிக்கத்தான் வேண்டுமடி வாழ்வை; – அகிலத்தில்
யார்தான் நிரந்தரம்? இங்கவர்
விட்டேகும்
பேர்தான் நிரந்தரமென் பேன்! 03
ஆளப் பிறந்தவன் ஆண்டு முடிக்குமுன்னே
மாளப் பறந்ததாய் மாரடியாய்; - ஆளனுயிர்
வானாளப் போனதடி வைகுந்தம்; பூதவுடல்
கானாளப் போனதிடு காடு! 04
தேங்கி விடாமலும் தேம்பி அழாமலும்
வாங்கடி தெம்மை மனதிற்குப் – பூங்கங்கில்
வெந்தானை எண்ணி வெறுந்தரையில் மோதாமல்
முந்தாணை யில்சிந்து மூக்கு! 05
பொட்டழிஞ்சு போனதென்று பூவழிஞ்சு
போனதென்று
பட்டழிஞ்சு போனதென்று பார்க்காதே –
கட்டியவன்
விட்டுவிட்டுச் சென்றுள்ள வீட்டை வழிநடத்த
எட்டுவைத்துப் பெண்ணே எழு! 06
போனவனை எண்ணிப் பொழுதும்ஒப் பாரிவைத்து
ஆன வரையழுதென் னாவதடி – நான்றிந்த
ஆறுதலைச் சொல்லிவிட்டேன் ஆற்றா தழுவாமல்
மாறுதலைக் கொள்வாய் மனம்! 07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக