வெள்ளி, 30 ஜனவரி, 2009

பூங்கா!

நரகத் திடையே
துறக்கம் போல
நகரத் திடையே பூங்காக்கள் -அதில்
சிரிக்கும் பூக்களைத்
திருடா திருக்கத்
திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்!

சின்னப் பூக்கள்
சிரிக்கும் அழகில்
சிந்தும் தேனின் சுவைகண்டு -இதழ்க்
கன்னம் வைத்துக்
கவின்மலர்த் தேனைக்
கவர்ந்து போகும் பொன்வண்டு!

திங்கள் தவழும்
தென்றல் உலவும்
சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்
தங்கும் பூங்கா
தன்னைச் சார்ந்து
தங்கிக் களிப்பார் தனிமையிலே!

விரித்த பாய்போல்
விளங்கும் பாதை
விளிம்பில் இருக்கை நிறைந்திருக்கும் -அதில்
இருக்கும் மனம்விடுத்(து)
இடையிடை மறைவில்
இருக்கும் வகையால் உளமுவக்கும்!

அமைதி தேடி
அலையும் கூட்டம்
அமர்ந்து பொழுதைக் கழிக்கிறது -அதில்
அமைதி தேட
அமைத்த பூங்கா
அமைதி இழந்து தவிக்கிறது!

மாலை வந்தால்
மக்கள் வந்து
மலிவார் அமைதிப் பறிபோகும் -சிலர்
மாலை வந்தால்
மனத்துயர் விடுத்து
மறுபடி கிளப்ப இரவாகும்!

பின்னல் தலையில்
பிஞ்சுப் பூக்கள்
பிறங்கப் பூங்கா சிரிக்கிறது -அட
புன்னகை சிந்தும்
பூக்களை மெல்லப்
பூவிரல் நாடிப் பறிக்கிறது!

சிரித்து மகிழ்ந்து
சிலபொழு திருந்து
செலவே சிலபேர் வருகின்றார் -உளம்
வருத்தும் நினைவின்
வளர்முளை கிள்ளி
மறக்கச் சிலபேர் வருகின்றார்!

போகாப் பொழுதைப்
போக்கித் தொலைக்கப்
பூங்கா சேரும் சிலருண்டு -உடல்
வாகாய் விளங்க
வடிநற் காற்று
வாங்க வருவார் சிலருண்டு!

முந்தியை விரித்து
மூலையில் படுத்து
மூழ்கிடும் கனவில் ஒருகூட்டம் -அட
குந்திய இடத்திற்
கொஞ்சிக் குலவிக்
குடித்தனம் நடத்தும் ஒருகூட்டம்!

ஓவ்வொரு மரமும்
ஓவ்வொரு கல்லென
உணர்ந்து மரச்சிலை அவர்வடித்தால் -அதில்
அவ்வவர் துணையொடு
அண்டிக் களித்து
அனைத்துக் கலைகளும் இவர்படிப்பார்!

கொணர்ந்த பொருளைக்
குதப்பித் தின்றுக்
குப்பை யாக்கச் சிலர்வருவார் -மலர்
மணக்கும் பூங்கா
மணத்தைக் குளைக்க
வாயிற் புகையொடு சிலர்வருவார்!

நகைக்கும் பூங்கா
நாடி மகிழ்ந்து
நடையைக் கட்டல் பீடாகும் -சுருள்
புகைக்கும் அரங்கெனப்
புகைத்தாற் பூங்கா
புகழ்தனை இழந்து காடாகும்!

விழுப்ப மெல்லாம்
விளங்கும் ஒழுக்கம்
வீரிட் டழுவுது பூங்காவில் -இவ்
ஒழுக்கக் குறைகள்
ஒழித்து விழுப்பம்
உயர்ந்து விளங்க யார்காவல்?

சீருடை அணிந்த
சிறார்கள் போலச்
சிரிக்கும் பூங்கா வெடிக்கிறது -பெரும்
பேருடை தன்னின்
பெரும்புகழ் குறைத்தல்
பிழையெனச் சாடி முடிக்கிறது!


அகரம்.அமுதா

செவ்வாய், 20 ஜனவரி, 2009

அகவற்பா!

"தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்"

-செய்தி- 19/1/2009

கொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ
பொக்கெனச் சிரித்துப் பொருதுதல் நன்றோ
கொணர்ந்த கருவியைக் கொடுத்துப்
பிணமாய்ச் சாயும் பெருமைசிங் களர்க்கே!


பொருள்:-
ஆடாதும் அசையாதும் தூண்போல் கொக்கு நிற்பது ஓடுமீன் ஓட உருமீன் வரவுக்காக அல்லவா! கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன? இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ! எதிரியை வீழ்த்த ஏந்திய போர்க்கருவியை எதிரியின் எதிர்ப்பைக் கையாள முடியாது தோற்று எதிரியின் கைகளில் போர்க்கருவியையும் அவர்காலடியில் தன் உயிர்விட்ட உடலையும் ஒப்படைக்கின்ற பெருமை இவ்வுலகில் சிங்களர்களுக்கு மட்டுமே உண்டு.

தற்காப் புணர்ந்து தானாய் அகல
முற்போய் வென்றதாய் மொழிவீர் கேள்மின்
இடுமயி ராலெழு மெழிலே
நெடுமயி ரெழிலின் நேரெனல் நகையே!


பொருள்:-தற்காத்துக் கொள்வதற்காகப் பின்வாங்கியோரை நேரெதிர்த்து வென்று இடங்களை மீட்டதாய்ச் சொல்லும் சிங்களரே! கேளுங்கள். செயற்கையாகப் பொருத்தப் பட்ட இடுமயிரால் உண்டாகும் அழகு, இயற்கையாக நீண்டு வளர்ந்த கூந்தலின் அழகிற்கு நிகரானது என்பது சிரிப்பிற்குறிய செயலாகும்.
(அத்தகைய தன்மையுடையதே தங்களது வெற்றியும் என்றதாம்.)

தீட்டுங் கருவியும் தீட்டா மதியும்
வாட்டுமென் றறியா வழுவுடைச் சிங்கள!
மாற்றான் கொடுத்த மதியால்
ஏற்றம் எட்டுணை என்பது மிலதே!


பொருள்:-
பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கருவியைச் செலுத்துதலும், பகுத்தாயும் பட்டறிவில்லாக் குறையறிவைப் பயன்படுத்திச் செயலில் இறங்குவதும் இரண்டுமே ஒருசேரத் துன்பம் தருவன என்பதைக் கூடப் பட்டறியும் அறிவில்லாத சிங்களரே! மூளையைப் பயன்படுத்தும் ஆற்றலில்லாதோர்க்கு வேற்று நாட்டுப்படைகள் கொடுக்கும் போர்முறையால் எள்ளளவும் முன்னேற்றம் அடைவதரிது என்பதை அறிவீராக.

புற்றீசல் போல்உம் புறப்பா டெனினும்
வெற்றீசற் கியாரே வெருளுவர் விதிர்ப்பர்
கற்றூண் அஞ்சா கரந்துறை
புற்றர வஞ்சும் புயலிடி தனக்கே!


பொருள்:-புற்றீசல் படையெடுத்தால் அஞ்சி நடுங்குவர் உளரோ? அத்தகையதே உமது படையெடுப்பு. பெருமழையினூடு பேரிடி வீழின் பாதுகாப்பு நிறைந்த புற்றில் வாழ்ந்தாலும் பாம்பு அஞ்சவே செய்யும். மாறாகப் பாதுகாப்பில்லாது தனித்துநிற்கும் கற்தூண் ஒருபோதும் அஞ்சாது.

பின்னடை வென்னும், பிதற்றும், பெரிதும்
முன்னடை வென்னும், முனையும், முனிவுறு
களிற்றின் கையுறு கதலியாய்
நளிவிழந் துழன்று நமனிடஞ் செலவே!

பொருள்:-
புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்பார். அதனையே தொடர்ந்து பிதற்றவும் செய்வார். தமக்கே முன்னடை வென்பார். மேலும் முன்னேற ஊக்கங்கொள்வார். இம் முன்னகர்வு எதற்காகவெனில் சினத்தின் மிகுதியால் பெருமரத்தையே பிடுங்கும் ஆற்றல் படைத்த மதயானையிடம் அகப்பட்டு சீரழியும் வாழைமரம் போலத் தம்படையின் செறிவிழந்து, நிலைகுலைந்து, உயிர்விட்டுக் காலனிடம் செல்வதற்காகவே இத்தனை ஆரவாரமும் செய்கிறார்.

அகரம்.அமுதா

புதன், 14 ஜனவரி, 2009

நேர்காணல்!

(நான் வெண்பா எழுதக்கற்றுக் கொண்ட புதிதில் எனக்கெழுந்த ஐயங்களை வெண்பாவில் வினவியதும் எனதாசான் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் வெண்பாவில் விடையறுத்ததும்!)

கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!

பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!

கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?

பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்து கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!

கேள்வி-
பூவனையச் செந்தமிழைப் போற்றிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்து தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?

பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!

கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!

பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர் புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?

கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?

பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!

நான்:-புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!

அகரம்.அமுதா

வெள்ளி, 9 ஜனவரி, 2009

இனியும் பொறுத்தல் இழுக்கு!


எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்
புலியே விரைவாய்ப் பொருது!

வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!

சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை
இறப்பே வரினும் எதிர்!

இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!

நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!

கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்
இனியும் பொறுத்தல் இழுக்கு!

நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)
அஞ்சும் படையா அவண்!

கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்
இடுப்பை ஒடித்தல் இசை!

கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!

செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு!

அருஞ்சொற்பொருள்:-

நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு (காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)

அகரம்.அமுதா

புதன், 7 ஜனவரி, 2009

தமிழன் துணிந்தால்...!

தனக்கென்று நாடொன் றில்லாத்
      தமிழனே! இன்னல் என்ப(து)
உனக்குற்றால் அன்றி நெஞ்ச
      உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!
கணக்கற்றோர் ஈழ நாட்டிற்
      களங்கண்டுச் சாகும் போதும்
‘எனக்கென்ன?’ என்று நீயும்
      இருப்பதே மாட்சி யாமோ?

நம்மினம் உரிமை யற்று
      நளிவெய்தித் தாழக் கண்டும்
நம்மினம் இடமொன் றின்றி
      நானிலம் அலையக் கண்டும்
நம்மினம் வாழ்க்கை யற்று
      நமனிடஞ் சேரக் கண்டும்
கம்மென இருப்ப தாநீ?
      கண்ணில்தீ கனலச் செய்வாய்!

தமிழரென் றினமொன் றுண்டேல்
      தனியவர்க் கோர்நா டெங்கே?
தமிழரென் றினமொன் றுண்டேல்
      தனித்தமிழ் ஆட்சி எங்கே?
தமிழரென் றொன்று பட்டுத்
      தனியீழம் பேணு கின்றார்
தமிழரென் றுணர்வுண் டென்றால்
      தகைந்*தவர்க் குதவ வேண்டும்!

குமிழினம்* ஒன்று பட்டால்

      குடிகொளும் வங்கம் என்றால்
துமியினம்* ஒன்று பட்டால்
      தோன்றும்பா கிசுத்தான் என்றால்
உமியினம் ஒன்று பட்டால்
      உயிர்பெரும் இசுரேல் என்றால்
தமிழினம் ஒன்று பட்டால்
      தரணியே கைவ ராதா?

துயில்சேயுங் கிள்ளி விட்டுத்
      தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்
பயில்நெஞ்சத் திந்தி யாதன்
      படைவலி இலங்கைக் கீந்தும்
இயம்பிடும் ‘பேசித் தீர்ப்பீர்!’
      எந்தமிழ் இனத்தைக் கொல்ல
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்
      முடிக்கிறார் தடுத்தோ மாநாம்?

இழுதை*போல் இன்னல் செய்தே
      இன்புறும் கீழ்ம னத்தர்
கழுதைபோல் உதைத்த போதும்
      கலங்கிடா உரனும் பெற்றோம்!
பழுதை*போல் கடித்த போதும்
      பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்
பொழுதையார் நிறுத்தக் கூடும்?
      புலிக்குமுன் பூசை ஒப்பா?

பொடாச்சட்டம் பொருதும் போதும்
      புத்தீழம் புலரக் காண்போம்!
தடாச்சட்டம் தாக்கும்போதும்
      தனியீழம் தழைக்கச் செய்வோம்!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்
      இனிதீழம் எழுக என்போம்!
எடா!*சட்டம் என்ன செய்யும்?
      இன்றமிழன் துணிந்தா னென்றால்!


அருஞ்சொற்பொருள்:- தகைந்து -துணிந்து; குமிழ் -நீர்க்குமிழ்; துமி -நீரின் நுண்துளி; இழுதை -பேய்; பழுதை -பாம்பு; எடா -ஏடா என்ற விளியின் குறுகல்


அகரம்.அமுதா!

திங்கள், 5 ஜனவரி, 2009

பாவலர் இறையரசன்!


அகரம்.அமுதா + பாவலர் இறையரசன்
பாவலர் எனக்கு யாத்த வெண்பா!

வேங்கையின் வால்பிடித்தல் வெண்பா எழுதலென்பார்!
பாங்குடன் அப்பாப் பயிற்றுவிக்க -ஈங்குலகில்
வெல்லுங் கணினிவழி வென்ற அமுதாவே
வெல்நா லடிப்பா வியந்து!

பாவலருக்காக நான் யாத்த அறுசீர் விருத்தம்!

இலஞ்சியெழும் இளங்குவளை எழில்பழிக்கும்
        இருகண்கள் இழைத்த பார்வை
பொலஞ்சிறைப்புள் ளரசெனவே பொலியுமுறிப்
        புன்னகையோ புரிமின் னற்கீற்(று)
அலங்கலுறு நனைமலராய் அலர்மீசை நன்நெஞ்சர்,
        அமிழ்தனையர் அவர்தந் சீரிற்
புலர்ந்துவரும் பூங்கவிக்குப் புயல்வானிற்
        பொலிகதிரே பொருவாங் கண்டீர்!

அணிவகைகள் அணிவகுக்க, அம்பொருவும்
        பொருத்தென்ன, அமைய மையென்(று)
அணங்கெதுகை மோனைமுரண் அடிதோறும்
        இழைதொடையும் அடம்பி டிக்க
நணியிருந்து செம்பொருளும் நன்கமைய
        இறையரசர் நவிலும் பாட்டில்
உணர்விழப்பர், உளங்களிப்பர் ஒண்புலவர்;
        மாற்றமெதும் உரைப்பார் உண்டோ?

அருஞ்சொற்பொருள்:-பொலம் -பொன், சிறை -சிறகு, புள்ளரசு -பருந்து, பொலிபார்வை -விலங்குகின்றபார்வை (பொலிதல் -விலங்குதல், சிறத்தல்), முறி -தளிர்; புரி -சுருள், இலஞ்சி -வாவி, அலங்கல் -பூமாலை, நனை -தேன்,

பொரு -உவமை, அணங்கெதுகை -வருந்தெதுகை(அணங்குதல் -வருந்துதல்), நணி -அணிமையான,

அகரம்.அமுதா!

சனி, 3 ஜனவரி, 2009

உய்யும் தமிழினமென் றோர்!

எதிர்வரும் 2009பிப்ரவரி 9-ம் நாளுக்குள் பிரபாகரனைப் பிடித்துவிடுவோம். -ராசபக்சே


-செய்தி- 2/1/2009


ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
வேழமே! விட்டில் வெரும்படை -சூழமாத்

தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
வீச்சுடைப் பாமரபு வீழுமா? -மாச்சுதை*

பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
கிள்ளையது பூசை*வரக் கீச்செனுமே! -ஒள்ளொளி*

மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
குக்கலால்* ஆமென்றாற் கொள்வரோ? -பக்கலிற்*

காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
வீணர் உரையால் விளைவதென்ன? -பேணும்

பொருவிற்* றமிழ்மேற் பொருதும் வடவர்
திருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்

வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
சற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு?

ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
காற்றைத் தளைகொள்ளக் கற்றவர்யார்? -கூற்றிற்கே

நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
தேட்கொடுக்கிற் கைவைக்கச் சேர்ந்தவர்யார்? -வாட்பிடியை

விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
எட்டுணையும்* வெற்றி எழுந்திடுமோ? -முட்ட

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
இழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்!*

நொச்சி*யது போய்விடினும் நோவில்லை முல்லை*யுண்டு
கச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை

தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்
உய்யும் தமிழினமென் றோர்!

அருஞ்சொற் பொருள்:-சுதை -மின்னல்; பூசை -பூனை; ஒள்ளொளி -மிகுந்தஒளி; குக்கல் -நாய்; பக்கல் -பகல் என்பதன் நீட்டல் விகாரம்; பொருவில் -உவமையில்லாத; எட்டுணையும் -எள் துணையும் (புணர்ச்சியான் இயன்றது); சழக்கு -தளர்ச்சி; நொச்சி -கிளிநொச்சி; முல்லை -முல்லைத்தீவு .

அகரம்.அமுதா!

வியாழன், 1 ஜனவரி, 2009

நேர்காணல்!

முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர், தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடன் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டிய சிறப்பு நேர்காணல்!

நேர் காண்பவர்:- அகரம்.அமுதா


ஆற்றுநீர் கேட்டால் அருந்த நொதிப்பழச்
சாற்றுநீர்* தந்தீர் தகையாமோ!
-மாற்றுநீர்
முந்தைய ஆட்சியர் முன்வைத்தார் நாமதைப்
பின்பற்று கின்றோம் பெரிது!

கள்ளுக் கடையை அரசுடைமை ஆக்கினீர்
பள்ளிகளை ஆக்காப் பரிசென்ன?*
-கள்ளுக்
குடிமகனாய் வாழ்தல் குலப்பெருமை நல்லக்
குடிமகனாய் வாழ்தல் குறை!

கோடியிலே நீன்றீர் கொடிபிடித்துக் கோல்*பிடித்துக்
கோடிகளைச் சேர்க்கும் கொடுமையென்ன?
-கூடடைந்து
தேனெடுத்தோன் நத்திப் புறங்கையை நக்கானோ!
நானுமதைச் செய்தேன் நயந்து!

திட்டங்கள் யாவும் திருடுதற் கென்றறிந்தும்
சட்டங்கள் ஏனிங்கே சல்லடையாய்?
-கொட்டமடித்(து)
ஓடி வெளியேற ஊழல் பெருச்சாலி
தேடி அமைத்த திவை!

"வரிவிலக்குச் செய்தால் வளர்தமிழும் வெள்ளித்
திரைவாழும்" என்றவர்யார் செப்பும்!
-உரைக்குங்கால்
தாழுமென் றெண்ணித் தவிப்பதேன்? நன்றாய்நான்
வாழத் தமிழ்வாழும் வந்து!

தமிழ்வழிக் கல்விக்குத் தக்கவழி காணா(து)
அமிழ்வதேன் ஆங்கிலத்தை அண்டி?
-நமக்கெதிரி
இந்தியன்றி ஆங்கிலம் இல்லையப்பா! ஆங்கிலத்தில்
சிந்திக்கின் சேரும் சிறப்பு!

நாய்மொழியும் தாய்மொழியில் நன்கமைய நற்றமிழர்
தாய்மொழியோ நாய்மொழிபோல் நாறிடுதே!
-தாய்மொழியாய்
ஆங்கிலமும், வாய்மொழியாய் ஆரியமும் ஆகுங்கால்
நீங்கிவிடும் இந்த நிலை!

சன்டி.வி யார்டி.வி? என்டி.வி உன்டி.வி
என்றடித்துக் கொள்ளும் இழிவுமேன்?
-பொன்முட்டை
போடுகிற வாத்தப்பா! போக விடலாமா?
கூடும் வரைகறத்தல் கோள்!

தொலைக்காட்சி தந்துமின் துண்டித்தீர் நீள்வான்
அலைக்காட்சி காண்பதென்(று) ஆங்கே?
-உலைக்கரிசி
ஒற்றை உருவாய்க் குவந்தீய மக்களும்
மற்றதைப் போவார் மறந்து!

திரவிடம் பேசித் திரிகிறீர் அஃதால்
தரவு*ண்டோ சொல்வீர் தகைந்து!*
-திரவிடம்
பேசியே நாட்டைப் பிடித்தோம் பொருள்பற்றும்
வேசியே போலும் விரைந்து!

கொள்ளுங்கால் மக்களைக் கோமாளி ஆக்குமக்
கொள்கை உமக்குமெனக் கொள்வதுண்டா?
-கொள்கையெலாம்
தொண்டர்க்கே யன்றித் தொகுத்த த
லைவனுக்கும்
உண்டென்பார் யாரே உரை!
தீட்டணி என்பீர் எதிரணிசேர்ந் தாரொடுபின்
கூட்டிணி வைத்தலுமோர் கொள்கையோ?
-கூட்டணியே
கொள்கை எனவானால் கூட்டணிக்குள் கொள்கையுமேன்?
கொள்கை புதையின் குழி!

வாக்களித்த மக்களும் வாழ வகைகாணா(து)
ஏக்கமுறச் செய்தல் இசையாமோ?
-வாக்கிற்கு
வாக்குக் கொடுத்தோமே வாய்மொழியாய்; வேறெதையும்
மேற்கொண்டு கேட்பதெல்லாம் வீண்!


இன்னுமா உம்மை இழவெடுத்தோர் நம்புகிறார்?
ஒன்னுமா* இந்த உணர்வலைகள்?
-என்னபண்ண?
வண்ணத் தொலைக்காட்சி வக்கணையாய் வாய்ப்பேச்சு
நண்ணுவார்* இந்த நகைக்கு!

வேசிச் சிரிப்பாலே வேதனையைத் தூண்டாதீர்
யோசனையென் நாட்டின் உயர்வுக்கு?
-யோசனையா?
சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
தேதிக் கொருகட்சி செய்!


புற்றீசல் போலப் புதுக்கட்சி கள்கண்டால்
உற்றிடுமோ இந்நா(டு) உயர்வனைத்தும்? -அற்றமறந்(து)
ஆங்குறு கட்சிகளின் ஆதரவில் நாடாள்வோம்
தீங்கிலை நாட்டிற்கு தேர்!

மத்தியில் நீர்சொன்னால் மாட்டேன்என் பாரோதான்?
நத்திப் புலி*க்காய் நவிலீரோ?
-சித்தம்*
பரிசுவரும் என்றால் பணிப்பேன்*; பணிக்கேன்*
துரிசு*வரும் என்றால் துணிந்து!

ஈழம் தமிழர்க்கே என்றெடுத் தோதாமல்
மேழம்*போல் ஏன்வெறும்வாய் மெல்லுகிறீர்?
-ஏயம்*
எனக்கருதி விள்ளா* திருந்திட்டேன் நீயும்
‘எனக்கென்ன?’ என்றே இரு!

ஐந்துமுறை ஆண்டும் அலுப்பிலையோ? நாடிதனை
ஐந்நூறும் ஆளும் அவாஉண்டோ?
-பைந்நிறைந்தும்
நெஞ்சு நிறைவில்லை நேரெனக்குப் பின்னென்றன்
சந்ததியும் நாடாளும் சார்ந்து!

நக்கல் நயப்பேச்சும் சிக்கல் செழும்பேச்சும்
மிக்குடையாய்! வாழும் மிடுக்*குரை!
-மக்களாம்
மந்திகளால் வாழும் வகையுற்றேன் வேறென்ன?
தொந்திவளர்க் கின்றேன் தொடர்ந்து!

அருஞ்சொற் பொருள்:-

நொதிப்பழச் சாற்றுநீர் -பழங்களை நொதிக்கவைத்து உண்டாக்கும் பழக்கள்; பரிசு -பண்பு; கோல் -செங்கோல்; தரவு -இலாபம்; தகைந்து -துணிந்து; ஒன்னுதல் -பொருந்துதல்; நண்ணுதல் -பொருந்துதல்; புலி -விடுதலைப் புலிகள்; சித்தம் -திண்ணம்; பணித்தல் -ஆணையிடுதல்; பணிப்பேன் -ஆணையிடுவேன்; பணிக்கேன் -ஆணையிட மாட்டேன்; துரிசு -துன்பம்; மேழம் -ஆடு; ஏயம் -தள்ளத்தக்கது; விள்ளுதல் -சொல்லுதல்


அகரம்.அமுதா

கல்!

குழவியில்கல்; கோள இளமையில்கல்; கோலூன்
கிழமையில்கல்; நூல்பல தேர்ந்து -முழுவதும்
கல்;ஆர்த் திராப்பகல் காணா தியன்றுகல்;
கல்லாதான் காயமோர் கல்!


அகரம்.அமுதா!