109 தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு! 1081
கோதற்ற தேவதையோ? கோலமயிற் பேரழகோ?
காதணிகள் பூட்டிய காரிகையோ? – ஈதறிய
மாட்டா எனதுமனம் மாறா மயக்கத்தில்
மாட்டியதே காதலின் மாட்டு!
தெய்வப்பெண் தானோ? தெளிந்த நடைமயிலோ?
மெய்யாய்க் குழையணிந்த மென்மாதோ? – அய்யோ!
மயங்கும் எனது மனமே தவிக்கும்
இயங்கும் நிலையாவும் இற்று!
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்
தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து! 1082
வேல்விழியை என்மீது வீசினாள்; நானும்என்
பால்விழியைப் பெண்மீது பாய்ச்சினேன்; – வேல்விழியாள்
பெத்தம் பெரும்படையைப் பேர்த்துவந்து
என்மீது
மொத்தம் குவித்துவிட்டாள் மொய்த்து!
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு! 1083
கூற்றுவன் என்னும் கொடியவனை நான்றியேன்
நேற்றுவரை; இன்றே நிஜம்கண்டேன்; – சாற்றுங்கால்
பூம்பாவை போலஉடல்; போர்த்தொழிலின்
திட்டமிடல்;
வீம்பான கூர்வேல் விழி!
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்
பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்! 1084
காண்பவரின் இன்னுயிரைக் காலை உணவாகத்
தோண்டி எடுத்துண்ணும் தோற்றத்தால் – ஆண்டமைந்த
பெண்தன்மை மிக்குடைய பேரழகுப் பேதைக்கும்
கண்களுக்கும் மாறுண்டு காண்!
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து! 1805
இன்னுயிர் வாங்கும் எமன்தானோ? அல்லது
இன்முறுவல் பூக்கும் இளம்விழியோ? – அன்றி
வனத்துலவும் மான்தானோ? மங்கையவள் பார்வை
இனமிந்த மூன்றின் இருப்பு!
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்! 1806
கூன்பிறை போலும் குமரி இளம்புருவம்
தான்வளை யாமல் தடித்திருந்தால் – மீன்கண்கள்
அச்சத்தில் என்மனதை ஆழ்த்தித் துயரத்தின்
உச்சத்தில் ஏற்றாதே ஊர்ந்து!
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்! 1807
நேராக நின்றிருக்கும் நெஞ்சத்தில்
நேரிழையாள்
சீராய் அணிந்திருக்கும் சிற்றாடை – பாராய்வெம்
போர்க்களத்தில் போராடும் போர்வெங் களிறுமுகம்
போர்த்திய ஆடையினைப் போன்று!
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு! 1808
களம்புகா வீரரும் கண்டஞ்சு கின்ற
வளங்காளை என்றன் வலிமை – இளமான்
சிறுநெற்றி முன்னம் சிதைந்துபொடி ஆச்சே
உறுதுயரம் எல்லாமும் உற்று!
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து! 1089
மான்விழிப் பார்வையும் மாண்புறு நாணமும்
தேன்மொழியாள் நல்லணியாய்த் தேர்ந்தபின் –
ஏன்இன்னும்
பொன்னின் அணிகலன்கள்? பூவின்
தொடைச்சரங்கள்?
மின்னும் இவைஅவட்கு வீண்!
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று! 1090
உண்டால் மகிழ்ச்சியை ஊட்டுகிற கள்ளைநாம்
கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாது; – மண்டுமிந்த
நற்பெருமை வாய்த்ததெல்லாம் நாம்கொண்ட காதல்தான்;
அற்பெருமை கள்ளுக்கே ஆம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக