பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
திங்கள், 24 பிப்ரவரி, 2014
இளங்குமரனார் அருளிய வாழ்த்துமடல்!
திருவள்ளுவர் தவச்சாலை,
அல்லூர் 620 101,
திருச்சி மாவட்டம்,
16.03.2012
பேரன்புப் பாவலரே,
வணக்கம். வாழிய நலனே; தாங்கள் நேரில் வழங்கிய 'அமுதன் குறள்' நூலை இன்று படிக்க வாய்த்தது.
யாப்பும், அதன் கோப்பும், பொருள் சீர்த்தியும் போற்றும் பொலிவின. தங்கள் படைப்புத் திறனும் பண்பாடும் வேட்கையும் பைந்தமிழ் நலங்களாம்!
தொடர்ந்து அணிபல சூட்டத் தக்க துலக்கம், துலக்கமாகிறது அமுதன் குறளால்!
இன்ப அன்புடன்,
இரா.இளங்குமரன்
புதன், 12 பிப்ரவரி, 2014
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!
‘அ’கரம் தொடங்கி ‘ன’கரம் ஈறாய்
அகிலம் தோன்றிய அருந்தமிழே!
‘ண’கரம் ‘ந’கரம் ‘ன’கரம் வேறாய்
நாவில் நடமிடும் நறுந்தமிழே!
‘ர’கர ‘ற’கரம் ஒலிபிற ழாமல்
பகர இனிமை தருபவளே!
‘ழ’கர ‘ள’கரத் தனிச்சிறப் பாலே
இளமை குன்றாத் திருமகளே!
வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றால்
வளப்பம் குறையா வண்டமிழே!
சொல்லிலும் பொருளிலும் சுடர்மிகு வல்லமை
தோன்றிட இங்குறு தொல்தமிழே!
ஒன்றா? இரண்டா? மூன்று தமிழாய்
உலகில் முதலாய்ப் பிறந்தவளே!
நன்றாய் முதலிடை கடைச்சங் கத்தில்
நாவலர் நாவிற் சிறந்தவளே!
ஒருசொல் பலபொருள் பலசொல் ஒருபொருள்
உடையாய்! உளதோ உனக்கீடு?
பொருந்திய எழுத்துச் சொற்பொருள் யாப்பணி
பொலியவென் நெஞ்சே! பண்பாடு!
காப்பியன் வள்ளுவன் கம்பனைத் தந்து
காசினி யில்சிறப் புற்றாய்நீ
பூப்பினில் நறுந்தேன் பீய்ச்சிடும் பூவுனை
மோப்ப விழையும்நான் நற்றேனீ
காலை கடும்பகல் மாலை இரவிலும்
காதல் தானுன் மீதெனக்கு
தோளின் மீதே தொற்றிக் கொள்ளத்
தடையா தோஇப் போதுனக்கு?
நாரும் பூப்போல் நாறும்; பூவை
நாடின் என்பார் அதுபோலே
நேரில் தமிழை நேர்ந்தேன்; இன்பம்
நேருள தோசொல் இதுபோலே?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)