வெள்ளி, 30 செப்டம்பர், 2011

காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்


காது கொடுத்தால் சேதி சொல்கிறேன்
காலம் போகிற போக்கைச் சொல்கிறேன்
காசு கொடுத்தா நாலும் செய்கிற
காலம் இதிலே கவனம் என்கிறேன்
(காது)
அழகாய்ச் சிரித்து அறிவாய்ப் பேசி
அனைத்தையும் சுரண்டும் உலகமடா –தினம்
அதனால் எத்தனை கலகமடா
விழுங்கி ஏப்பம் விடுவதில் இந்த
வீணருக் கில்லை உவமையடா –அவர்
விழுந்து மடிந்தால் உவகையடா!
(காது)
தனக்கு என்றால் தப்பைச் சரியெனத்
தயக்கம் இன்றிப் பறைசாற்றும் –அவர்
தன்னலம் ஆடும் வெறியாட்டம்
மணக்க மணக்கப் பேசும் இந்த
மடயரின் மனதில் முடைநாற்றம் –அது
முற்றிலும் அறிவை வெளியேற்றும்
(காது)
காசுக் காக கல்வி விற்குற
கல்விக் கடைகள் நிறைஞ்சாச்சு –பணம்
மனுசனின் கண்களை மறைச்சாச்சு
பேசும் தரமும் வாழ்வும் குணமும்
மேலை நாட்டை ஒத்தாச்சு –தமிழ்
தமிழரின் நாவினில் செத்தாச்சு!
(காது)
போதையின் பாதையில் போகிற கூட்டம்
பொழுதை அதிலே கழிக்குது –பெரும்
பொருளை அதிலே அழிக்குது
மாதரும் போதையின் வழியில் செல்கிற
வகையும் நாட்டில் செழிக்குது –கண்டு
மானமும் கற்பும் விழிக்குது
(காது)
புதுமை நோக்கில் எதையும் செய்து
புதையின் குழியில் விழுவானே –அது
புரிந்தபின் உட்காந் தழுவானே
எதுமெய் பொய்யென அறியும் தெளிவும்
இவனுக் கில்லை மொழிவேனே –இவன்
இருந்தால் பயனென் பதுவீணே!
(காது)

திங்கள், 26 செப்டம்பர், 2011

போனால் இளமை திரும்பாது!


போனால் இளமை திரும்பாது –அது
போனபின் ஆசை அரும்பாது
காதல் புரிவோம் இளமையிலே –கட்டிக்
கரும்பே கனியே இளமயிலே!
(போனால்)
மீனா தூண்டில் முள்ளா கண்கள்
விருப்பம் போலே வடிவெடுக்கும் –எனை
ஊனாய் தினமும் உண்டு முடிக்க
எப்போது உன்மனம் முடிவெடுக்கும்?
(போனால்)
தொட்டால் சுடுமா விட்டால் சுடுமா
துய்த்தால் தெரியும் காமத்தைக் –கை
பட்டால் நாணம் பறந்து போகும்
பருகித் தீர்ப்போம் இன்பத்தை!
(போனால்)
மச்சம் சிவக்கும் மர்மக் கலையை
மஞ்சம் சேர்ந்தால் கற்றிடலாம் –உன்
உச்சந் தலைமேல் உச்ச இன்பம்
உருகி வழியப் பெற்றிடலாம்!
(போனால்)
இரவுக் குள்ளே இன்னொரு இரவாய்
இருக்கும் கூந்தல் வீட்டினிலே –நாம்
இரவோடு இரவாய் இன்பக் கவிகள்
எழுதிக் குவிப்போம் ஏட்டினிலே!
(போனால்)

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஒத்தக்கல்லு மூக்குத்தி

ஒத்தக்கல்லு மூக்குத்தி
ஓரப்பார்வ மீன்கொத்தி
நாம்புடிச்ச அத்தமக
நளினமான மான்குட்டி!
(ஒத்தக்கல்லு)
கன்னம்ரெண்டும் பூச்சட்டி
கட்டுங்கூந்தல் கரிச்சட்டி
அச்சில்வார்த்த அந்தப்புள்ள
அதரம்ரெண்டும் கருப்பட்டி
அமஞ்சபுருவம் மண்வெட்டி
அழகுமேனி பொன்கட்டி
எதிர்த்துத்தோத்த வட்டநெலா
எட்டிநிற்குது வரிகட்டி
(ஒத்தக்கல்லு)
பற்களெல்லாம் பனிக்கட்டி
பரந்தமார்பு தேர்முட்டி
பூச்சுழியும் பூத்திருக்கும்
இடுப்பதன்கீழ் இருக்கொட்டி
ஆலங்கட்டித் தொடைதட்டி
அங்குமிங்கும் நடைகட்டி
வருமவளைக் கொண்டாடும்
அகிலவுலகம் கைதட்டி
(ஒத்தக்கல்லு)
எம்மனசில் குழிவெட்டி
காதலென்னும் விதைகொட்டி
ஆசைநீரை வார்த்துவந்த
அவளேஎன் அசல்வட்டி
அன்பென்னும் நெரிகட்டி
நாணத்தைச் சரிகட்டி
கட்டிலோடு கண்விழித்துக்
கதைபடிக்கும் சிறுமெட்டி

திங்கள், 5 செப்டம்பர், 2011

பூமியிலே வாழவிடு!


ஓ! மனிதர்களே!
இது நீர்நடுவே அமைந்த
தேசம் என்பதாலா
எங்கள் கண்களிலெல்லாம்
நீர்கோர்க்கச் செய்கிறீர்

அறம்பற்றிப் பாடுவதும்
அறம் பாடுவதும்
தமிழனுக்கே உரியது
என்பதாலா
இன்று
அறம்பற்றிப் பேசவும்
அஞ்சுகிறீர்

உரிமைக்குப் போராடும்
எங்களின் உயிர்களை
உணவாக்கிக் கொள்ளும்
ஓநாய்களுக்கு உதவுவதையா
உயர்வெனக் கருதுகிறீர்

அகிம்சை ஆயுதம் கொடுக்க
காவிகள் இங்கே
களமாடுகின்றன

வெள்ளையரிடம் எடுபட்ட அகிம்சை
கொள்ளையரிடம்
கோமாலித்தனமாகிப் போனதே
எதார்த்த உண்மை

ஓ! மனிதர்களே!
நாங்கள் அன்பாய்த்தான் கேட்டோம்
ஓங்கி அடித்தே
இல்லை என்றன
ஓநாய்கள்

எங்கள் கைகளை
ஓங்கச்செய்யும் வேலையை
அந்த ஓநாய்களே
ஓய்வின்றிச் செய்தன

நாங்கள் தட்டிக்கேட்டே
பழக்கப் பட்டவர்கள்
முன்பு அவர்கள் கதவுகளையும்
பின்பு அவர்கள் முதுகுகளையும்

தமிழன்
அயலாரிடம்
அவரவர் தாய்மொழியிலேயே
பேசிப் பழக்கப்பட்டவன்
அதனால்தான்
சிங்களர்களுக்குத் தெரிந்த
ஆயுத மொழியிலேயே
அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்

நாங்கள் எங்களுக்குள்
ஒற்றுமையாய்
இருக்கக் கருதியதைவிட
அவர்களோடு ஒற்றுமையாய்
வாழக் கருதியதே அதிகம்

தோசைகூட
இரண்டு பக்கம்தான்
சுடு படுகிறது
நாங்கள் எல்லா பக்கமும்
எல்லா பக்கத்திலிருந்தும்
சுடப்படுகிறோம்

இனிமேல் நாங்கள்
எங்கள் பெண்களை
வர்ணிக்கும்போது கூட
மயிலே என்று
வர்ணிக்கப் போவதில்லை

கற்புமுதல் கண்ணீர்வரை
சேய்முதல் செங்குருதிவரை
தாய்முதல் தாய்மண்வரை
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
இனி இழப்பதற்கு எங்களிடம்
ஏதுமில்லை
நீங்கள் எதையாவது கொடுத்து
இழக்கச் செய்தால்தான் உண்டு!