சனி, 13 ஜூன், 2009

படம் சொல்லும் பாடல்! (2)


கொத்தணி குண்டின் கொடுமோசை யாற்காதுஞ்
செத்த(து) அழுதழுதே சிந்தியகண் –வற்றிய(து);
ஒட்டுத் துணிபோல் உயிரும் உடலிதனை
விட்டுப்போ காதோ விரைந்து.
.
எழுந்திடக் கூட இயலாக் கிழவர்
விழுந்ததுபோல் எம்மினமும் வீழ்ந்த(து) –எழும்நாளும்
என்றோ? இனிதுகண் டின்புறும் பாரோரே!
நன்றோ?உம் மௌனம் நவில். (கவிக்கூற்று)


அகரம் அமுதா

12 கருத்துகள்:

  1. /ஒட்டுத் துணிபோல் உயிரும் உடலிதனை
    விட்டுப்போ காதோ விரைந்து./

    எதைச் சொல்ல

    பதிலளிநீக்கு
  2. ////எதைச் சொல்ல////

    தோன்றியதைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் திருத்தித் தந்த வெண்பாவை
    இட்டுள்ளேன்.

    அடிகளை மட்டும் ஒழுங்க படுத்தி வெளியிடுவது எப்படி என்பது தெரியவில்லை.
    ..........................

    கிடந்துத் துடிக்கிற(து) என்னுடைய தேகம்
    அடைய நினைத்த கனவுகள் அத்தனையும்
    மண்ணில் புதைந்து மறைந்தே அழிவதைக்
    கண்முன்னே காண்கின்றக் கால்!

    பதிலளிநீக்கு
  4. நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?

    மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்
    எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்கு
    போரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்
    யாரைத்தான் நோவதோ போ.

    பதிலளிநீக்கு
  5. ஒட்டிய மேனியின் ஒட்டுத் துணியைப்போல்
    கட்டிய கோட்டை கலைந்ததடா! -கொட்டிய
    கொத்தணி குண்டால் குலமே அழிந்ததடா!
    இத்தனையும் ஏனோ இயம்பு!

    பதிலளிநீக்கு
  6. தங்கள் திருத்திய வெண்பா
    ---------------------

    காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும்
    ஆட்சி அரியணை என்றே அலைகின்ற
    எட்டப்பன் மார்கள் இருக்கும் வரையெல்லாம்
    எட்டாக் கனியே எமக்கு!

    பதிலளிநீக்கு
  7. ஒன்றாகி ஓர்குலமாய் ஒண்டமிழர் வாழாக்கால்
    நன்றாமோ? வாலாட்டும் நாய்களாய்ச் -சென்றாங்கே
    சிங்களரை ஓரிருவர் சேர்ந்துலவு சொல்லுவதால்
    எங்குலமே பாழாச்சே ஈங்கு

    பதிலளிநீக்கு
  8. எட்டாக் கனியென் இருந்தால் விடுதலை
    கொட்டாவி விட்டபடி தூங்காதோ? -விட்டோமில்
    என்றே முயன்றால் எழில்வெற்றிக் கண்டிடலாம்
    ஒன்றாய் முயல்வோம் உணர்ந்து.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் உமா அவர்களே! நெடு நாட்களாகக் காணவில்லை. தங்கள் கருத்தும் வெண்பாவும் சரியே! வாழ்த்துகள்.

    யாரையும் நொந்தும் பயனில்லை எம்மினம்
    கூரை இழந்ததோர் குட்டிச் சுவராச்சே!
    ஓர்தாலி வீழ்ந்ததற் கொப்பாரி வைத்தொருத்தி
    ஊர்தாலி கொண்டாளே ஓர்ந்து.

    பதிலளிநீக்கு
  10. எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
    பயின்றிட காத்திருக் கின்றோமிங்[கு] நன்றாம்
    பிரவா கமென்னும் [பா]விலக்கண நண்பர்
    குழுப்பக்கம் சற்றே திரும்பு.

    மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மை
    கண்ணுற்ற போது கவியெழுத வார்த்தையில்லை
    சோர்வுற்ற நெஞ்சின் துயர்களைந்தி[ட] கற்ற
    தமிழன்றி இல்லைத் துணை

    பதிலளிநீக்கு
  11. வருக! வணக்கம் உமா அவர்களே!

    ////எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
    பயின்றிட காத்திருக் கின்றோமிங்[கு] நன்றாம்
    பிரவா கமென்னும் [பா]விலக்கண நண்பர்
    குழுப்பக்கம் சற்றே திரும்பு.////

    தாங்கள் உரைத்ததுபோல் பிரவாகம் பக்கம் வர ஆவலாக உள்ளேன். எனினும் புதிய புதிய முயற்சிகளைச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறேன். அடுத்ததாக பிரபாகரன் அந்தாதி எழுத்தத்துவங்கியுள்ளேன். ஆதலால் கவனம் சிதையாதிருக்க இணையத்தை முடிந்தவரைத் தவிர்த்து வருகிறேன். தவறாகக் கருதவேண்டா.

    ////மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மை
    கண்ணுற்ற போது கவியெழுத வார்த்தையில்லை
    சோர்வுற்ற நெஞ்சின் துயர்களைந்தி[ட] கற்ற
    தமிழன்றி இல்லைத் துணை////

    வெண்பா அருமை. அருமை. வாழ்த்துகள். பாவிலக்கணத்தில் ஒற்று நீக்கி அலகிடும் முறைதான்உள்ளது. மெய்யெழுத்தை நீக்கி அலகிட முடியாது. விதிவிளக்கு- உகரத்தின்முன் 'ய'கரப் புனர்ச்சி வரும்போது மட்டும் இகரமாகத்திரிவதால் நீக்கி அலகிட முடியும். ஆதலால் தங்கள் வெண்பாவை சற்று மாற்றினால் நலம்.

    மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மை;
    கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
    சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
    தமிழன்றி இல்லை துணை

    (வார்த்தையில்லை என்ற சொல்லின் ஒலி நீண்டொலிப்பதால் 'சொல்லில்லை என மாற்றிவிட்டேன். வாழ்க.வாழ்க.

    பதிலளிநீக்கு