வெண்பா கஃபே!
veg & nonveg
அகரம் அமுதன்
===
இறைவணக்கம்!
அங்கிங் கெனாதபடி எங்குமுள்ள
தங்கிலீஷ்
இங்கென்வெண் பாவில் எழட்டுமே! - சங்கு
மெகாமிடறுள் வாங்கி விஷத்தைவைத்த ஈசா!
வொகாபுலரி வார்த்தைகள்தா வோய்!
சங்கரா! வேலன் தகப்பா! உடனேநீ
இங்க'ரா!' என்னை எழுதவை; - பங்கமாய்
உன்னைக் கலாய்த்தேனா? உன்முன்
விடாய்த்தேனா?
என்னறிவைத் தாடேய் எடுத்து!
போலக் கவிபாடிப் பொய்மூட்டை யாகாமல்
சாலச் சிறந்தகவி சாற்றவை; - ஞாலத்தில்
ஆட்டுமந்தைக் குள்ளென்னை ஆடாக ஆக்காமல்
காட்டுப் புலியாக்கு God!
சிந்தை துருப்பிடிக்கச் செய்வாயோ? புத்தாக்க
விந்தை தடுக்க விழைவாயோ? - அந்தரத்தில்
ஆடுகின்ற நாயகனே! அத்தா! எனைநன்றாய்ப்
பாடுகின்ற வாயனாக்கப் பார்!
இன்னும் புதுமையாய் இன்னும் தனித்துவமாய்
இன்னும் அழகாய் இளமையாய் - என்ன
எழுதலாம் என்றெண்ணி எம்மண்டை காயப்
பொழுதெலாம் தூக்கமில்லை போ!
மாசமொன்று ஆச்சு மணிமணியாய் நானெழுதி;
மோசமும் போச்சோஎன் மூளைதான்? - ஆசையாய்
ஏதோ எழுதப்போய் ஏதோ வெளிப்படுதே!
ஏதேதென் னாச்சோ எனக்கு?
புஸ்வாணம் ஆவதா பூகம்பம்? கண்டகண்ட
கஸ்மாலம் எல்லாம் கலாய்ப்பதா? - விஸ்தாரம்
ஆக்கடா கற்பனையை; ஆதிப் பரம்பொருளே!
நாக்கிலே சொல்வன்மை நாட்டு!
==
தன்னிலை விளக்கம்!
பாவி எனப்பலரும் பாவம் எனச்சிலரும்
கூவி உரைப்பதைக் கொள்ளேன்;வெண் - பாவின்
கலர்மாற்றத் தங்லிஷ் கலக்கிறேன்; பேசும்
அலர்க்காக அஞ்சேன் அகம்!
அட்லியைப்போல் காப்பி அடிப்பதில்லை; சீனத்து
ஜெட்லியைப்போல் ஆக்ஷனெல்லாம் செய்வதில்லை; - இட்லியைப்போல்
பாமரனின் காலைப் பசிக்கே உணவாகும்
வாமனம்தான் என்பா வரி!
அன்றாட வெண்பாக்கள் ஆண்ட்ராய்டு போனிலே
நின்றாடத் தேவையில்லை நீட்தேர்வு; – மன்றில்
அரங்கேற்றம் வேண்டாம்; அழகான
ஆண்ட்ராய்(டு)
அரங்கேற்றம் போதும் அவைக்கு!
==
ஔவையார் வணக்கம்
பாட்டியே! வைக்காதே பூட்டியே; ஆற்றலைவை
Noughtyயே! என்நெஞ்சில் நாட்டியே; - வாட்டியே
நீயும் கசக்காதே; நின்பா கசக்காதே;
சேயிவனைச் சுற்றவிடா தே!
எம்மாம்பேர் பார்த்தேன்; எழுத்தெண்ணி
வாசித்தேன்;
அம்மாம்பே ரும்புல்;நீ ஆலமரம்; - ஜம்மென்று
நானூஞ்சல் ஆடிட நல்ல விழுதைத்தா!
வானேஞ்சல் பாடட்டும் வாழ்த்து!
பழங்கிழவி! உன்னுடைய பண்ணாற்றல் யாவும்
வழங்குருவி; வாழும்பா வார்ப்பேன்; - புழங்கஒரு
தங்கRing தேவையில்லை; தப்புநிகழ்ந்
தாற்போடு
Tinkering செய்யஓர் Deal!
ஆயாஎன் றாலே அறிவுரைதான்; பெற்றதுநீ
வாயா? தமிழர் வழிமுறைதான்; - தேயாத
தங்கநிலா உன்புகழ்தான்; தந்துதவு
உன்தமிழ்தான்;
பங்கமறப் பாடிடுவேன் பாட்டு!
மூதாட்டி! தண்டட்டிக் காதாட்டி!
என்தலையைக்
கோதாட்டி நானழுவேன் கொஞ்சாட்டி; - வாதாட்டி
வாலாட்டி னாலுமென்முன் வா!பாட்டி! நீயுதவ
ஏலாட்டிச் செல்லேன் எழுந்து!
கெஞ்சுகிறேன் என்றெண்ணாய்; கேட்டதுநான்; நீபின்ஆய்;
எஞ்சியதைத் தாராதே என்அன்னாய்! -
வஞ்சமின்றி
ஏய்!மாற்றுப் பிள்ளையை ஏமாற்றிப் பெற்றாயே!
தாய்க்கிழவி! அத்தமிழைத் தா!
==
காளமேக வணக்கம்!
காளமேகா! என்றன் கடவுளே! வெண்பாநான்
ஆளவே நீவந்(து) அருளாயோ? - நாளமெலாம்
ஓடுவதுன் ரத்தம்; உதவிடுநின்
சொற்தத்தம்;
வாடுவதா பிள்ளைநான்? வாழ்த்து!
ஒராண்டி நீயென ஓதுகையில் கண்டேன்;உன்
பேராண்டி நானென்று பேசாயோ? - வாரான்டி
வெண்பாப் புலியென்று வீணற்(கு) உரைநன்று;
கண்டஞ்சட் டும்நமது Guts!
நீகுட்டா ஆளுண்டா? நீதிட்டாப்
பேருண்டா?
நீசுட்டாத் தீதுண்டா? நீயேசொல்! -
வா!கொண்டா
வார்த்தைகளைக் கொட்டுநான் வைத்துள்ளேன் அண்டா;பின்
டார்டாராய் நான்கிழிப்பேன் டா!
சண்டாளா! நின்றாயே சண்டைக்கு; முன்புநான்
மண்டேலா; கொம்பளித்தாய் மண்டைக்கு; - ரெண்டாளாய்
வந்தாலும் குத்துகிறேன்; வாய்திறந்தால்
எத்துகிறேன்;
இந்தபலம் போதா(து) எனக்கு!
புத்தம் புதுமைகளைப் பூப்போற் பதுமைகளை
நித்தம் அணைத்தபடி நீகொடுத்தாய்; - வித்தகன்நான்
வேட்டி அவிழ்க்க விருப்பமில்லை; வெண்பாவில்
சீட்டி அடிக்கஅருள் சிந்து!
==
கைப்புள்ள வெண்பா கஃபே!
ஆத்துறாப் போல அதுதோணும்; டீயைஓங்கிச்
சாத்துறாப் போலவே சத்தமெழும்; - மாத்திமாத்தி
மேலிருந்து கீழாக மேஜிக் அவன்பண்ண
காலில்லாக் காத்தாடும் கண்டு!
டீயைக் கயிறாத் திரிக்குறான்; காத்துலயே
மேயவிட்டு லாவகமா மீட்குறான்; - ஆயகலை
கத்தவன்லாம் சொக்குறான்; கால்கடுக்க
நிக்கிறான்;
ஒத்தைவரி டீக்கவிதைக் கு!
அரைவட்டம் போடும் அவன்கை; குவளை
நுரைமுட்டை போடும் நொடியில்; - வரையாத
சட்டம் அவன்சட்டம்; சர்க்கார்
அவன்மட்டும்;
லிட்டர் குறையாது லேய்!
சொன்ன படிக்கேக்கும்; சொன்ன படிஆடும்;
சொன்னபடி டீஅவனைச் சுற்றிவரும்; - கண்ணா!
கமிஷன் கொடுத்தானா? காண்!புவிஈர்ப்
புக்கு
டிமிக்கி கொடுத்தானே டேய்!
டீயருவி கொட்டுதுபார்; தீயுருகிச்
சொட்டுதுபார்;
வாயருவி யார்க்கும் வழியுதுபார்; - மாயவலை
பின்னிப் பெடலெடுக்கும், நொங்கி
நுரையெடுக்கும்,
திண்ணமுடன் ஆத்துமிவன் தில்!
நீரை முறுக்குகிறான்; நீட்டிச்
சுருக்குகிறான்;
சாரைப்பாம் பாக்கிச் சலுப்புகிறான்; - நீரை
விழுதாக்கி அந்தரத்தில் வீசுமிவன் முன்னால்
பொழுதாகிப் போகிறதே பொய்த்து!
அடித்தும் துவைத்தும் அழகாய்ப்
பிழிந்தும்
வெடிக்கும் நுரைப்பூ விளைத்தும் –
குடிப்போர்
'செம!செம!' என்றெல்லாம் செப்பும் படிக்குக்
கமகம டீவரும்நம் கைக்கு!
தோராய மாகத்தான் தொங்கவிட்டான்
தோரணமாய்;
சாராயம் ஆகுமது சத்தியமாய்; - ஆராய்ந்தால்
ஆல்கஹால் இன்றிஅட்டீ ஆடாது; பாடாது;
சீல்வைத்துச் சோதனைக்க னுப்பு!
காந்தத்தை டீயில் கலந்தானா? போய்மீளும்
கோந்தைத்தான் டீயில் குழைத்தானா? - ஏந்தல்தான்
தந்திரமாய் நூல்கட்டித் தாங்கிப்
பிடித்தானா?
மந்திர மா?மாய மா?
ஆவி பறப்பதால் ஆவிகளின் வேலையோ?
காவிநிறத் தால்அதன்பின் காவிகளோ? – சாவிகொடுத்(து)
ஆட்டுவிக்கும் இந்த அடுமடையன் ’பி.எச்டி’
கேட்டுவாங்கி வந்ததெந்த ஸ்கூல்!?
விதிதான் வளைகிறதோ வில்லாய்? விதிசெய்
சதிதான் உடைகிறதோ சில்லாய்? - இதுவிளங்கா
விஞ்ஞானம் நொண்டியிட, மெய்ஞ்ஞானம்
மண்டியிட,
அஞ்ஞானத் திற்கே(து) அறிவு!?
டீயா இதன்பேர்? திருத்திக்கொள்; ஆடிடுதே
Toyயாய் அவன்சொல்லைத் தட்டாமல்; - நாய்வாலோ
நீண்டு வளைந்து நிமிரா
திருப்பதனால்?
காண்டில் குடித்ததோ கள்!?
வால்நீண்ட வெந்நீரோ? வாய்பெருத்த
வட்டாவின்
தால்நீண்ட தென்னவோ? தண்டுவடம் -
மேல்காட்டி
உள்ளே ஒளியும்டீ, உண்ண மலியும்டீ,
தள்ள முடியாத தப்பு!
காற்றில் குளிப்பாட்டிக் காற்றில்
தலைதுவட்டி
ஆற்றி நுரைநாய்டு ஹால்உடுத்தி - ஏற்றிஎழில்
மேவி மிடுக்காய் மினுக்க
மெனக்கிடுறான்
ஆவிப் பவுடர் அடித்து!
பார்திரவ நூடுல்ஸை, பைப்வடிவ கோல்டுகாசை,
நீர்சுரந்து நச்சரிக்கும் நின்நாக்கை; - சோர்வா?
விளாசுநீ டீயை; விவரம்சொல் வேன்டீ
கிளாஸிலே ஊற்றிவைத்த கேர்ள்!
தூக்கியாற்று கின்றசாயா சொல்லைத்தட் டாதசேயா?
வாக்கியமா? சூடான வாத்தியமா? - ஆக்கிவிடும்
பைத்தியமா; நாடிப் பருகவைக்கும் நைச்சியமா;
வைத்தியமா? டீஎவ் வகை!
==
வாருகிற வெண்பா விழையாட்டு!
அகரம் அமுதன்:-
டானே! அசரா டகால்டிவெண்பாக்
கல்லூரி
டீனே!ஓர் ஐம்பதிலும் ‘டீனேஜே!’ - மூணேநாள்
‘Moon’னே! மொறுமொறு மீனே! அசல்பயில்
வானே! தொடர்பிலே வா!
காமா கதிரே! கணக்குப் புதிரே!நீ
Calmமாகக் கொள்வதேன் கண்ணுறக்கம்? - தாமாக
முன்வந்து Callபோடு; மோகன Goalபோடு;
பின்வந்து தோளில்கை போடு!
அண்ணன் விக்டர்தாஸ்:-
நாலு மணிக்கு நதிஇரண்டு சங்கமமா?
சாலை இனிஆகும் சந்தனமா;- காலைவரை
அன்பின் சுயம்வரமா? ஆஹா இதுதகுமா?
என்னசொல்ல ஈதே இதம்!
அகரம் அமுதன்:-
மிராக்கிள் நிகழ்த்துகிறாய் வெண்பாவில்; முன்பு
வராச்சொல் வருதே வரியில்; - தராதலத்தில்
நான்உண்டு நீயுண்டு நம்மைவெல்ல
உண்டாசொல்
வான்கீழ் எவனா வது!?
அண்ணன் விக்டர்தாஸ்:-
வெண்பாவின் ஈகிள்நீ, வேர்துழாவும்
கூகுள்நீ,
பின்னுமொழி ஊறல்நீ, பேரல்நீ;- உன்முன்னே
ஒன்றுமற்ற Emptyநான், ஒப்பேறாத் தம்டீநான்,
மண்டுநான், குன்றுநீ,எம் மான்!
அகரம் அமுதன்:-
நான்பருந்து உண்மைதான்; நாளெல்லாம்
நான்பறக்கும்
வான்பரப்பு நீதான் வணங்குகிறேன்; - 'நான்'விடுத்துக்
குந்திநான் நித்தம் கொறித்துச்
சுவைப்பதெல்லாம்
வந்துநீ சுட்ட வடை!
அண்ணன் விக்டர்தாஸ்:-
பாட்டியம்மா சுட்டவடை பால்நிலா என்றகதை
பூட்டியம்மா சொன்னதெல்லாம் போனநிலை;- ஏட்டியம்மா!
வாய்விட்ட காக்காநான் வவ்வுவாய்நீ
நேக்காதான்
தாய்இட்ட பாஉன் தமிழ்!
நின்று நிதானமாய் நீவிளை யாடுகிறாய்;
அண்டா அதில்கடல் ஆடுகிறாய்;- சண்டாளா!
குண்டாவுள் கூட குதிரைபோல்
ஓடுகிறாய்;
தண்டால் பலம்உன் தமிழ்!
அகரம் அமுதன்:-
புள்ளிக்குள் பூகம்பம் போ!உன்முன்
நான்ரம்பம்;
விள்ளுகிறாய்? வெண்பா விளாசுகிறாய்; - அள்ளிஎந்தன்
உள்ளாவி தன்னைத் துவைத்துப்
புதுப்பிக்கும்
வெள்ளாவி உன்பா; வெளு!
அண்ணன் விக்டர்தாஸ்:-
புள்ளிஎவள் வைத்தாலும் போய்அவள்மேல்
கோலமிட
மல்லிக் கவிதைமொக்கு வார்த்தவன்நான்;- ‘கள்ளியிலும்
தேன்வருமா?’ கேட்டவன்நான்; தேராத வேட்டுவன்நான்;
வான்தாண்டி எய்பவன்நீ வாழ்!
அகரம் அமுதன்:-
அசால்ட்டாய்க் கவிதைநெய்யும் அர்னால்டே! பாட்டில்
கசாமுசா பேணாக் கவியே! - பிசாசாய்
உலுக்குகிறாய் நெஞ்சை; உலுக்குலுக்கு...
நெஞ்சில்
சுளுக்குவிழுந் தாலும் சுகம்!
அண்ணன் விக்டர்தாஸ்:-
கண்டளையைப் பெண்ணிடத்தில் கண்டதுண்டு; ஆனால்உன்
வெண்டளையில் நான்வேர்த்து வெந்ததுண்டு; - பெண்டளையில்
துண்டலைநீ செய்வதுண்டு சூல்வளையைப்
பெய்வதுண்டு
மண்டலைநான் கண்டலைவேன் மாய்ந்து!
அகரம் அமுதன்:-
செக்குநான்; நீயோ சிவலிங்கம்; ஒன்றறியா
மக்குநான்; நீயோ மலை,கடல்; - அஃகுநான்;
மொத்த உயிரெழுத்தும் மூத்தவனே! நீயன்றோ!?
எத்தன்நான்; நீஎஃ(கு) இரும்பு!
அண்ணன் விக்டர்தாஸ்:-
தம்பி அமுதன் சபைவந்தால்
காலிநான்;
வம்பளக்கும் அன்னவன்ஓர் வாலிதான்;- அம்பென,வெண்
பாதருவான் ஜாலிதான்; பாக்கூர்மை
வாளிதான்;
பூதருவான் கூலிதான்மெய் போர்த்து!
அகரம் அமுதன்:-
Kohli போல் சிக்சர் கொளுத்துகிறாய்; சிக்குண்டு
நீலிக்கண் ணீரில்நான் நீந்துகிறேன்; - மூலியென்னை
வாலியென்றாய் நான்காலி; பார்முடிஞ்ச(து) என்ஜோலி;
ஜாலியா கீதே! ஜமாய்!
அண்ணன் விக்டர்தாஸ்:-
Holyஆநான்? நீஉருட்டும் கோலியா? வெட்டுவாங்கும்
கோழியா? காலணா கூலியா? - ஜாலியாநீ
வாளிபோல சோழியா? வாலிபோல ஆழியா?
தூளியா ஆட்டுறியே தூள்!
அகரம் அமுதன்:-
எப்படிநான் போட்டாலும் எட்டியடித்து என்பந்தை
அப்படியே சிக்சர்க்கு அனுப்புகிறாய்; - யப்பா!
கமாவைக்கும் காமா! கலாய்த்திடும் ராமா!
ஜமாய்;வாங்கு கின்றேன் ஜகா!
அண்ணன் விக்டர்தாஸ்:-
கன்டினியூ பண்ணவா கண்நியூ பண்ணவா
வண்டிநியூ இல்லையே வாரே வா-
இன்டர்வ்யூ
பண்றநீ; கற்பதா? பார்த்துநான் நிற்பதா?
பின்றநீ; நான் ஆனேன் Freeze!
அகரம் அமுதன்:-
இம்மெனுமுன் வெண்பாவா? உம்மெனுமுன்
வெண்பாவா?
அம்மெனுமுன் வெண்பாவா? ஆமாவா? - ஜம்மென்று
போயெல்லார் காதிலும் பூந்தமிழ்
போடும்உன்
வாயெல்லாம் வெண்பாவா? வாவ்!
==
கிளிஜோசிய வெண்பா!
டாப்பில் வருவேனா? டால்மியா ஆவேனா?
கேப்பில் கிடந்து கிழிவேனா? – டீப்பாய்நீ
யோசித்துச் சொல்கிளி ஜோசியா! உன்னுடைய
வாசிப்பில் உள்ளதென் வாழ்வு!
சீட்டெடுத்துப் போடுமா?
சீச்சீ...ன்னு சாடுமா?
நீட்டெடுத்து ஒன்றிரண்டு நெல்மணியை; - மீட்டெடுத்து
அந்தக் கிளிதரும் அட்டைப்
படம்பார்த்தென்
சொந்தக் கதையெல்லாம் சொல்!
சீட்டிலே யாரோ? சினேகாவோ? சிம்ரனோ?
காட்டுநான் பார்க்கிறேன் கண்குளிர; - ஏட்டிலே
என்விதி இப்பொழுது என்னதான் சொல்கிறது?
உன்மதி கண்டதை ஓது!
ஆயி இலியானா, ஆத்தா நயன்தாரா,
தாயி தமன்னா தருவாரா? - போயிநான்
கேட்ட வரங்களையும் கேட்க மறந்ததையும்;
சீட்டெடுத்துப் பார்த்துநீ செப்பு!
சோக்கா வருவேனா? ஜோராக வாழ்வேனா?
நேக்கா இருப்பேனா? நீயேசொல்; - காக்காசும்
இப்பயில்லேன் னாலும் இனிவருமா? சேருமா
தொப்பையில்லேன் னாலும் தொகை!?
காலையில் இட்லி,தட்டில் காய்க்குமா? பொஞ்சாதி
கால்வலியால் என்வயிறு காயுமா? - நாளைநல்ல
காலம் பொறக்குமா? காட்சி சிறக்குமா?
கோலம்தான் மாறுமா? கூறு!
குச்சிவீட்டில் வாடக் கொடுத்திருக்கா? நாளைக்கு
மச்சிவீட்டில் வாழ வகையிருக்கா? - வச்சிவாட்டும்
இந்த வறுமை இலாதொழிய
வாய்ப்பிருக்கா?
வந்துசுடு வாயால் வடை!
சிக்கலுக்குப் பஞ்சமில்லை; சீரழிவு
கொஞ்சமில்லை;
மக்கரெண்டு பெத்தபின்பு மஞ்சமில்லை; - அக்குளிலே
சேரா அழுக்குமில்லை; சீராய்ப்
பொழப்புமில்லை;
நேராகும் நாள்வருமா நேக்கு!?
ஆசைக்(கு) ஒருமகளும் ஆஸ்திக்(கு) ஒருமகனும்
பூசைநான் போட்டதுலே பூத்தெழுந்தார்; - ஓசையின்றி
இன்னொன்று வாய்க்க இடமிருக்கா? இல்லையா?
என்னென்று பார்த்துச்சொல் இன்று!
என்னப்பா யோசனை? ஏன்கருகல் வாசனை?
முன்னபின்ன வேணாம் முழுசாச்சொல்; - உன்னைவிட்டால்
சேதிசொல்ல நாதியில்லை; சீவனிலே பாதியில்லை;
ஆதிமுதல் அந்தம் அடுக்கு!
போகாத கோயிலில்லை வேண்டாத சாமியில்லை
நோகாது வாழ்ந்த நொடியுமில்லை; - ஆகாதா
நானும் கடைத்தேற? நல்ல படித்தேற?
தேனும்நஞ் சாகு தெனக்கு!
ஃபாரினுக்குப் போகவா? பக்கத்தூர் போகவா?
ஊரில் இருந்தே உருப்படவா? - பாரிதையும்
கந்துவட்டிக் காரன் கழுத்தைப்
புடிப்பானா?
சொந்தபந்தம் தாங்குமா? சொல்!
===
'நாய'கி ஆற்றுப்படை!
மச்சான் அவள்தான்டா! ஊரில் அழகாம்டா!
எச்சில் படாத இளசாம்டா! -
கச்சிதமாய்ச்
செட்டாவாள் பார்ஒனக்கு; செட்டானால்
பீர்எமக்கு;
Petநாங்க கட்றோம்டா Bet!
செம்ம அழகுடா! ஜோராப் பழகுடா!
சும்மாநிக் காமல்லவ் சொல்லுடா! –
நம்கேங்கில்
நீதான் தனியாள்டா; நேராப்போய்ப்
பெண்கேள்டா;
ஆதாம்நீ ஏவாள் அவள்!
என்னடா யோசனை? ஏன்செய்ற சோதனை?
சொன்னாக்கேள் போய்அவளைத் தூக்குடா! -
பின்னாடி
வர்றதைப் பார்க்கலாம்; வாதாடித் தீர்க்கலாம்;
விர்ன்னுபோய் விட்டு விளாசு!
நேத்தவள் வீட்டுக்கு நான்போனேன்; நேரிழையாள்
பூத்தபூங் கைகோதப் புல்லரிச்சேன்; - ஆத்தீ!கை
மென்மைன்னா மென்மை; மெதுவடையின் தன்மை;உனக்(கு)
என்னநான் சொல்ல இனி?
அப்படியோர் வாசனை; ஆண்டவனின் சாதனை;
இப்படியோர் தேவதைக்கே ஏங்கினை; - இப்போ
உனக்கெனத் தான்பிறந்து உள்ளாள்; அவளை
மணந்தால் உனக்கு மவுசு!
என்னே ஃபிகருடா! என்னே கலருடா!
சொன்னசொல்ஒவ் வொன்னும் சுகருடா! -
முன்புநான்
ஆட்டுக்கால் சூப்புக்(கு) அடிமை; இனியிவள்
காட்டும் விரட்கடிமை காண்!
பேதை பிரியாணி; பேச்சிலுண்டு
வெண்சீனி;
போதை தரும்விழிமீன்; போப்பா!நீ! -
மாதைக்
கணக்குநீ பண்ணாட்டா காதல்செய் யாட்டா
பிணக்குன்மேல் கொள்வோம்போய்ப் பேசு!
மொத்தத் தெருப்பயலும் மோப்பம்
புடிக்குமுன்னே,
வெத்துச் சளிமூக்கு வேர்க்குமுன்னே, - கெத்தாய்நீ
காதல்சொல் காதில்; கடிதம் விடுதூதில்;
பேதலிச்சி நிக்காதப் பே!
மெண்டலும் ஆகலாம்; மேதாவி ஆகலாம்;
ரெண்டுமே காதலில் ரைட்தான்டா! -
சண்டாளா!
ஒண்டிக்கட் டைக்கெல்லாம் ஊரில் மதிப்பில்லை;
கண்டிப்பாப் போடணும்கால் கட்டு!
உன்னைக் கழட்டிவிட உத்தரவு; இல்லேன்னா
என்னைக் கழட்டிடுவா என்மனைவி; - சொன்னாப்
புரிஞ்சிக்க மாட்டேன்ற; போடா!என் கஷ்டம்
தெரிஞ்சிக்க மாட்டேன்ற ச்சீ!
அப்பன்தான் கொஞ்சம் அடாவடி; காதலொன்றும்
தப்பில்லை காட்டு தடாலடி; - உப்பில்லாப்
பண்டம்குப் பைடா! பயலேலவ் செய்டா!போ
முண்டம்குட் பைடா! முழி!
பாய்விடு தூது படித்துக்கொள்; மாலையெழும்
நோய்விடு தூது நுகர்ந்துகொள்; - போய்விடும்
சம்சாரி யானால் சகல சுதந்திரம்;
ஐ’ம்சாரி... ஆளை விடு!
===
பாட்டி!
பல்லாடிப் போனாலும் பட்டமரம் ஆனாலும்
சொல்லாடிப் போனாலும் சூப்பர்நீ; - மல்லாடி
வாழ்க்கையை வென்றாய்; வருஷங்கள் மென்றாய்; நீ
சூழ்நிலையை மாற்றும் சுயம்பு!
கம்பூன்றி நின்றாலும் கையூன்றிச்
சென்றாலும்
தெம்பூட்டி நிற்கின்ற தேவதைநீ; - எம்போன்ற
முட்டாள் இளமைக்கு மூதுரைகள் சொல்லஉனை
விட்டால் எவருள்ளார் வேறு!?
வாய்க்கசப்பு நோய்க்குநீ வந்து தரும்மருந்து
பேய்க்கசப்பென் றாலு(ம்)நின்று பேசாதா? - தாய்க்கிழவி
தண்டட்டி கூறாதா? தாளத்தில் ஏறாதா?
கண்பட்ட காதல் கதை!
பொக்கைவாய்ப் புன்சிரிப்பும் பொத்தல்சேல்
கண்நடிப்பும்
தக்கை நுதல்சுருக்கத் தன்முனைப்பும் -
அக்கக்காய்த்
தாவணி நாள்கனவை, தாத்தனின்
தோள்தினவை,
லாவணிபா டிக்கொடுக்கும் லந்து!
கன்னி சிநேகம் கசக்கலாம்; கட்டிவந்த
பன்னி* சிநேகம் படுத்தலாம்; - என்றென்றும்
சிக்குநெடிப் பாட்டி சிநேகம்
கிடைத்தநொடி
லக்குநொடி; காண்போம் லயம்!
பன்னி - மனைவி.
===
குறட்டை!!!
தூக்கத்தின் கானம்; துயிலின் அரட்டை;சொல்
நீக்கிய வாக்கிய நிர்ப்பந்தம்; - கேட்கநாம்
ஏலாது காதிருந்தும்; ஏற்காத ஆதிசந்தம்;
தாலாட்டும் தொண்டைத் தவில்!
===
Petடோடு bedடிலாடு bet!
வேகத்தைக் காட்டலாம்; வேர்வைநீ ராட்டலாம்;
தாகத்தைக் கூட்டித் தணிக்கலாம்; - தேகத்தின்
ரீங்காரம் கேட்கலாம் ராவெலாம்; மெத்தைமேல்
ராங்கென்ப தில்லையெல்லாம் ரைட்!
ஆடையில்லா மில்க்மேனி; ஆளான ஹல்க்தான்நீ;
Moodஐக் கிரியேட்செய் மூடா!நீ! - வாடைக்குப்
பாதை கொடாய்நீ; பருவக் கிடாய்நீ; உன்
போதைக்கே ஊறுகாய் பூ!
மையல்நோய்க் குப்படையல் மல்லிகைப்
பூத்துவையல்;
பைய அரைநீ படுக்கையில்; - தையலுக்கும்
ஆசை இருக்காதா? ஆயுள் பெருக்காதா?
பாஷைக்குக் கட்டில் பகை!
பாரவளை; தள்ளிப் படுத்தவளை; கைகளுக்குப்
பார(ம்)வளை; அள்ளிப் படுத்தவளை; - நேரமிலை
சேலை,களை; ஈர்த்தவளைச் சேர்த்துவளை; ராப்பொழுது
லீலைகளுக் கில்லை லிமிட்!
லைட்டை எரியவிடு; லைட்டாய்த்
தெரியவிடு;
ரைட்சொல்லும் பெண்ணை ரசித்துவிடு; - ‘நைட்’டெல்லாம்
வட்டநிலா கண்டு வயிறெரிந்து
சாகட்டும்;
Bedடிலே நீநின்று பேசு!
கொஞ்சம் துணிந்திடுவாள்; கொஞ்சிச்
சிணுங்கிடுவாள்;
அஞ்சிப் பதுங்கிடுவாள் ஆகட்டும்; - மஞ்சத்தில்
Girlஅவயம் தேடிமெல்லக் கிள்ளிக் கிளப்பிவிடு
தாளலயத் தோடாடும் Thought!
===
பந்தியில் வந்தமர் மந்தியர் request :-
பிரியாணி போடலே; பீட்சாவும் இல்லே;
சரியாநீ செய்வது சாமி? - தெரியாமே
இந்தக் கனிகாய்க்கா இங்குவந்தோம்? ஊசிடுச்சு
தந்த புளியோ தரை!
வந்துவிட்டோம் என்பதற்காய் வாயில்
அடக்குகிறோம்;
பந்தியிலே காக்கிறோம் பண்பாடு; - மந்திகளைக்
கூப்பிட்டுத் தந்ததற்காய்க் கும்பிடு போடகிறோம்!
சாப்பிடறோம் நாங்க சமத்து!
சைவமே தின்று சலித்துவிட்டோம்
நாங்க;அ
சைவமே திங்கத்தான் ஆசை; - சவசவன்னு
நிக்காமல் நீவந்து நெத்திலித்
தொக்குவை;
திக்காய் மசாலா தெளித்து!
அடுத்த விருந்திலே ஆடிருக்க வேணும்;
கொடுக்கணும் கோழிக் குருமா; - அடுத்தடுத்து
முட்டை,மீன் என்று முறையாக வைக்கணும்
சட்டைசெய் யாமல் சகோ!
நாங்க ஒசத்தியில்லே; நீங்களொண்ணும்
மட்டமில்லே;
வாங்க!குந் துங்க வரிசையிலே; - நீங்க
எமைகுந்த வச்சி எழுந்துநிற்க
வேணாம்;
சமபந்தி போடுங்க சார்!
===
இப்படிக்கு குடிகாரன்!
போதை தலைக்கேற; போத்தல் தரைக்கேற;
காதைத் திருகிவெண்பா கண்ணடிக்க; - கீதைநான்
சொல்லிக் கொடுக்கவா? ஜோராய் நடிக்கவா?
மில்லி குடிக்கவா மேன்?
எயிற்றுக்குப் போனமது, எச்சில் குளித்து
வயிற்றுக்குப் போனமது வாழ்க; - அயிற்பின்றிக்
கிக்கேற்று கின்றதே; கிண்ணென்று நின்றதே;
கக்கக்க போ!வாயில் கப்பு!
குந்தி இருக்கேன் குடிச்சநான்; காலிபோத்தல்
சந்தி சிரிக்கச் சரிஞ்சிருச்சே! -
முந்திஅதன்
கெத்தென்ன? பெற்றரெஸ் பெக்டென்ன? நாம்கூட
வெத்தான பின்னாடி வேஸ்ட்!
போத்தலைப் பார்த்தவன்தான் போதையைப்
போட்டவன்தான்
போட்டொடச்சி ருப்பான் புவியீர்ப்பை; - பார்த்தாயா?
என்னமாய் ஈர்க்கிறது? ஏமாற்றப்
பார்க்கிறது?
நின்னாத் தெரியும் நெசம்!
நான்ரொம்ப டைட்டாய்ட்டேன்; நாலணா
வெய்ட்டாய்ட்டேன்;
நான்ரொம்ப நானற்ற நானாய்ட்டேன்; - வான்ரொம்பப்
பக்கத்தில் வந்துச்சு; பவ்யமாக்
குந்துச்சு;
சொக்கித்தான் சிந்துச்சு ஜொல்!
இந்தாபார் லெஃப்ட்ஹேண்டே! இப்போதென்
சைடு(ஸ்)டாண்டே!
வந்துபார் ரைட்ஹேண்டின் வம்படியை; - சிந்தாமல்
சிப்பண்ணத் தாரானா? சீக்கிரமா வாரானா?
கப்நசுக்கி ஏத்றான் கடுப்பு!
ஒருரவுண்டு போதைக்கு உதவாது; போடும்
இருரவுண்டில் போதை எனக்கே(து)? - அறுரவுண்டு
அடிச்சாத்தான் கிக்கே; அனல்பறக்கும் லக்கே;
குடிச்சாத் தெரியுமொனக் கும்!
சற்றே உடைசரிஞ்சா தாங்கவரும் கைகூட
முற்றும் இழந்தபின்னும் முன்வராது; - பற்றுவிடக்
கற்றுத் தருவதெல்லாம் கண்ணாடிக்
கோப்பையடா!
வெற்றென்பேன் சந்யாசம் வேஸ்ட்!
மில்லி அடிச்சா மினிஸ்டர்நான்; மூச்சுமுட்ட
ஃபுல்லடிச்ச பின்னாடி போப்பேதான்; - சொல்றதைக்கேள்!
ஈவதைநீ ஈந்தாக்கா, என்காலில்
வீழ்ந்தாக்கா,
பாவமன்னிப் புத்தாரேம் பா!
ஓரடி போதிமரம்; உன்நிழலில்
ஞான(ம்)வரும்;
தேரடி தேவநிலை தேடிவரும்; - நேரடியாச்
சித்தம் அடையாமல் சீவன் கரையாமல்
புத்தன்தான் ஏமாந்தான் போ!
சேப்பில் பணமில்லா ஷிவ்நாடார்; நான்கூட
டாப்பில் வரும்போது டாட்டாபார்! -
மாப்ளே!
உளவட்டப் பூமி ஒருகையில் தூக்கும்
இளவட்டக் கல்தான் எனக்கு!
பேஸ்மென்டு வீக்காய்ட்டேன்; பில்டிங்கு
ஸ்ட்ராங்காய்ட்டேன்;
பாஸ்மார்க்கு நான்வாங்கி Bossஆய்ட்டேன்; - டாஸ்மாக்கு
ரப்பப்பா ரப்பா ரபா;ரசித்து மப்பேத்தும்
தப்பைச்செய் இன்னோர் தபா!
யார்டாது போனிலே? இப்பவா நேரிலே?
பார்டாநான் குந்திருக்கேன் பாரிலே; - யார்டாநீ?
அய்யய்யோ சம்சாரம்; ஆள்கொல்லும்
மின்சாரம்;
செய்வாளே வெச்சி சியர்ஸ்!
===
தாயாகிக் கண்ணகி
தங்கமகன் பெற்றிருந்தால்..?
சீற்றம் தணிந்திருப்பாள்; தீயோர்
சகித்திருப்பாள்;
மாற்றம் அடைந்திருப்பாள் மாற்றமில்லை; - நேற்றுவந்த
சேய்க்காக வாழ்ந்திருப்பாள்; சேரநாடா
சேர்ந்திருப்பாள்?
தாய்வீடு போயிருப்பாள் தாய்!
கானல் வரியில்லை; கோவலன் மாதவியைப்
பேணும் பிழையில்லை; இல்லைபழி; - கூனற்
சிலம்புக்கும் அங்கே சிறப்பில்லை; பிள்ளை
மலர்வயிற்றில் வந்துதித்த மாட்டு!
மன்னன் இலாக்குறையை மாணிக்கத்
தொட்டிலிலே
கண்ணுறங்கும் பிள்ளை களைந்திருக்கும்; - கண்ணகியின்
தாலாட்டுப் பாடல் தரணிக்கு
வாய்த்திருக்கும்
நாலேனும்; ரெண்டேனும் நன்று!
பிள்ளையவள் பெற்றிருந்தால் பெற்றவளாய்
ஆயிருந்தால்
கொள்ளை கொடுத்த கொழுந்தனுக்காய்த்
- துள்ளிவந்து
தீய்க்க எழுவாளா? தீமை உழுவாளா?
தாய்மைக்கே இஃது தடை!
பொங்கிவரும் கோபம் பொசிந்திருப்பாள்; இல்லத்தில்
தங்கிக் கணவன்சேய் தந்திருந்தால்; - தங்கமகன்
பூமுகம் பார்த்துப் பொழுது
கழித்திருப்பாள்;
கோமுகம் கண்டகவி போல்!
பிள்ளையை ஏவிப் பிழைத்தவனை
மாய்த்திருப்பாள்;
உள்ளெரியும் தீக்கா உயிர்கொடுப்பாள்? - பிள்ளையை
மானா மதுரைக்கு மன்னனாக்கிப்
பார்த்திருப்பாள்;
வீணான சிக்கல்கள் வென்று!
அப்பனைப் பிள்ளை அடித்திருப்பான்; செல்வழி
தப்பெனத் துள்ளித் தடுத்திருப்பான்; - ஒப்பிலா
மேகலைக்கு அண்ணனாய் மேதினிக்கு
மன்னனாய்
ஆகச் சிறந்திருப்பான் ஆண்டு!
கொண்கன் கொலைக்காகக் கோனழிந்தான்; மாதழிந்தாள்;
மண்கண் குடிமக்கள் மாய்த்திருப்பாள்? - கொண்ட
வயிற்றில் ஒருபிள்ளை வாய்த்திருந்தால்
மங்கை
உயிரின் மதிப்பை உணர்ந்து!?
பெண்தெய்வம் என்கின்ற பெற்றியில்லை; நம்இளங்கோ
கண்டெடுத்து சொல்லக் கருவுமில்லை; - தண்டைக்காய்ச்
சண்டையென்ப தன்றிச் சரித்திரம்
ஒன்றுமில்லை;
விண்டஇக் காப்பியமே வீண்!
கதைநடக்க வேண்டுமென்றால், கற்போர்தம் நெஞ்சம்
பதைபதைக்க வேண்டுமென்றால், பார்க்குச் -
சிதைமூட்ட
வேண்டுமென்றால் கண்ணகிக்கு வேண்டாம்சேய்
என்றிளங்கோ
பூண்டியாக்கி விட்டான் புரிந்து!
திருகி முலையெறிந்து தேசம் அழிக்க
உருகும்தாய் உள்ளம் உதவா(து) -
இருந்திடுமென்(று)
எண்ணி இளங்கோ இவள்மலடி என்றாக்க
மண்ணில் இறையானாள் மாது!
===
நாஸ்தாநீ தின்றாயா? நான்தந்தால்
தின்பாயா?
ஆஸ்தான ஆண்டவா! ஆக்காட்டு; - பீஸ்தேங்காய்
ஒன்றிலே பாதி உனக்குச்
சிறிதெனக்கு;
தொன்றுதொட்டு நாமிருவர் தோஸ்த்!
===
இட்லி வெண்பா!
இட்டவி என்பதேபின் இட்லியென்று ஆனதெனும்
வெட்டிக் கதையளக்க வெண்பாவா? - இட்லிக்குச்
சாம்பாரே சம்சாரம்; சட்னியே சக்களத்தி;
தேம்பாமல் உட்கார்ந்து தின்!
சட்னிப் பிராவணிந்து சாம்பார்ப் பிளவுஸ்இட்டு
இட்லி இலைமேல் எழுந்தருளப் -
பட்னி
வயிற்றுக் கதுதான் வயாகரா; நம்வாய்
எயிற்றுக் கதுதான் எசன்ஸ்!
அள்ளவே நெஞ்சம் அனுதினம்
நச்சரிக்கும்;
கிள்ளவே உள்ளம் கிறுகிறுக்கும்; - விள்ளவா?
தொட்டணைக்கத் தோதாகத் தோகைக்(கு) இருப்பதுபோல்
இட்லிக்கும் உண்டே இடுப்பு!
ஓர விளிப்பைத்தான் உற்ற இடுப்பென்றேன்;
சேர எடுமூன்று செவ்விரலால்; - பாரத்தைத்
தாங்காதே; உன்பிடியைத் தாளாதே; போய்உயிரை
வாங்காதே; நீயனுப்பு வாய்க்கு!
ஏழை, பணக்காரர் எல்லார்க்கும் ஏற்றஉணா;
வாழை இலைமீது வட்டநிலா; - ஊழைவென்று
ஜம்மென்று இருக்குமிட்லி ஜவ்வரிசி மாவிட்லி;
கும்மென்று இருக்குமிட்லி குஷ்பு!
சிற்றுண்டி என்பீர்கள்; சில்க்சுமிதா
என்பேன்நான்;
முற்றும் துறந்தவனும் மோகிப்பான்; - சற்றுமிதை
வெல்லவேறு சாய்ஸ்உண்டா? வென்றதுவாய்
நாய்ஸ்உண்டா?
டில்லிவரைக் காலை டிபன்!
ஆவி பறக்குமிட்லி ஆடை துறக்குமிட்லி
கூவி அழைக்கும் குடற்பசியை; - தாவி
எடுத்தோமா? தின்றோமா? என்றிரா மல்நாம்
தோடுத்தோமா வெண்பாத் துணுக்கு!?
சாம்பாரில் ஊறவைத்து சட்னியைச்
சேரவைத்து
நாம்தின்போம் அஃதே நலமாகும்; - சீம்பாலாய்த்
தெம்பூட்ட வல்லஇட்லி; தேகநலம் கொள்ளஇட்லி;
கம்பூன்றும் மூப்புவரை காப்பு!
பஞ்சுபோல் இட்லியுண்ணப் பல்லெதற்கு? பாவையவள்
நெஞ்சுபோல் இட்லிகிள்ள Nailஎதற்கு? - கொஞ்சம்போல்
சாம்பார் குளிக்கவைத்துச் சட்னி
குடிக்கவைத்து
வீம்பு விடுத்து விழுங்கு!
மன்மத மேடே!வெண் மல்லிகை லோடே!உன்
முன்னழகைப் பார்த்தேநான் மூர்ச்சையுற்றேன்; - கன்னிப்பெண்
முன்னழகும் பின்னழகே; முன்நிற்கும்
உன்னழகே;
முன்னமர்ந்து வண்டூதா மொட்டு!
'நொதிக்கவைத்தான்;
பின்னும்ஓர் நூதனம் செய்தான்;
கொதியாவி வைத்துக் கொடுத்தான்; - அதிபுத்தித்
தென்னாட் டவன்'என்பார்; தேசம் கடந்துண்பார்;
தன்னாட் டுணவொதுக்கித் தான்!
கன்னத்தைக் கிள்ளுதல்போல் கன்னிப்பெண்
அள்ளுதல்போல்
சின்னப்பூ மீதுவண்டு சேருதல்போல்; - சின்னஇட்லி
பிட்டுத்தின்; வாழையிலை இட்டுத்தின்; யூஸ்அண்ட்த்ரோ
தட்டுக்குப் போடு தடா!
வெள்ளைப் பணியாரம்; வெள்ளாவி ஆகாரம்;
உள்ளம் கவர்ந்த உணவாகும்; - உள்ளபடி
ஏடாண்ட யாரும் எடுத்தாள எண்ணாத
சூடான இட்லி சுகம்!
அரிசிஉளுந் தீன்ற அழகி; விழிகள்
தரிசிக்கும் பட்டத் தரசி; - உருசியான
இட்லி வறியவர்வாய் எட்டும் டிபனாகும்;
பட்ஜெட்டில் வீழாது Piece!
===
சலூன் வெண்பா!
தலைமேல் முடியடர்ந்தால் தாடி படர்ந்தால்
நிலைகொண்ட மீசை நிறைந்தால் -
விலைகொடுத்து
யாரும் எவரும் இறக்கிவைக்க
என்றென்றும்
சாரும் இடம்தான் சலூன்!
கண்ணாடி முன்னாடி காண அமரவைத்து
எண்ணியவாறு எல்லாம் இழுத்தடித்து -
உண்மையில்
கத்தியை வைப்பான் கழுத்து; வியக்கின்ற
வித்தையை வைப்பான் விரல்!
கத்தரிக்கோல் கைமேல் கதக்ஆடும்; ஓடிமுடி
கத்தரித்துக் காதில் கஸல்பாடும்; - தெத்துப்பல்
சீப்போடும் கொஞ்சமாய் சில்மிஷம் தேடும்அதன்
ஜாப்புக்குச் சொல்வோம் ஸலாம்!
அரியணையில் ஏற்றி அழுக்குப்பொன் னாடை
உரிமையொடு தோளில் உடுத்தித் -
தெரிந்தே
பலூன்மண்டை பற்றிமுடி பார்த்திறக்கி
னாலும்
சலூன்நமக்கு ராஜ்ய சபா!
கற்றவர் போட்டால் கடுப்பாவோம்; குந்தவைத்து
மற்றவன் போட்டால் மனம்நோவோம்; - முற்றுமிவன்
திட்டமிட்டுப் போடச் சினக்காமல்
ஏற்கின்றோம்
பிட்டெடுத்த பாதி பிளேடு!
மாயமோ? மந்திரமோ? மற்ற எதுவுமோ?
ஞாயமோ? நாட்பட்ட
நாடகமோ? - தேயவே
சோப்பெவன் போட்டாலும் துப்புவோம்; மாறாகச்
சோப்பிவன் போட்டால் சுகம்!
தண்ணீர் தெளிப்பானே; சாணை பிடிப்பானே;
கண்ணால் சிரித்துக் கனைப்பானே; - உன்னீரைக்
கன்னத்தில் காணாமல் கச்சிதமாய் ‘ஷேவிங்’கை
என்றைக்குச் செய்வான் இவன்!?
வெட்டி எறிவான்; விரசாய்
மழித்திடுவான்;
நெட்டி முறித்து நிறைவுசெய்வான்; - பட்டும்
படாமலும் கொஞ்சம் பவுடர் அடிப்பான்
விடாஎரிச் சல்கள் விளைத்து!
===
வெண்பா With த gun...!
யார்டாநீ? யப்பா! எவன்டாநீ? வெண்பாவைப்
பார்டாநீ பாடாப் படுத்துற; - Chairடாநீ
போட்டுத்தான் குந்துற; போட்டியிலே முந்துற;
காட்ஃபாதர் ஆய்ட்ட; கலக்கு!
பக்தி வடிவத்தைப் Pornவடிவம் ஆக்கிட்ட;
முக்தியை முத்தத்தில் முக்கிட்ட; - சக்தி
பிறக்குதடா உன்னோட பேச்சுலர் பாட்டில்;
பறக்குதடா ஈற்றடியில் பஞ்ச்!
ரிங்டோனா உன்வெண்பா? ரேப்சீனா
சொல்நண்பா!?
ரங்கீலா ஆவதா ராஸ்கலா? - தங்கிலீஷ்
டாராய்க் கிழிவதா? டார்ச்சர் படுவதா?
ஜோராய் அடிக்கிறாய் ஜோக்!
தப்புத்தான் செய்கிற; தப்பின்றிச்
செய்கிற;
உப்பள்ளிச் சக்கரையா(ய்) ஊட்டுற; - மப்புக்கே
மப்பேத்தப் பாக்குற; மாஸ்காட்டித்
தாக்குற;
யப்பே!நீ வெண்பா எமன்!
வேலியில் ஓணான்;உன் வேட்டியில் வேணாம்;நீ
ஜாலியா பண்ணுற? ஜாஸ்திபண்ற; - வாலிபால்
நாலடிக்குள் ஆடுற; நாற்பதுகோல் போடுற;உன்
காலடிக்குள் வெண்பாக் கடல்!
வெண்பாவில் காமிக்ஸா? வெண்டளையில் ஜாம்,மிக்ஸா?
ஒண்பாவில் ஓட்டுகிறாய் Ownரிக்சா; - நண்பா!நீ
சொல்யுத்தம் போடுவதும் சொக்கட்டான்
ஆடுவதும்
மல்யுத்த வீரன் மசாஜ்!
சாகசம் பண்ணுவதில்; ஜல்சாக்கள்
பண்ணுவதில்;
ஏகலைவன் நீதானென்(று) எண்ணுவதில்; - போகவிட்டுப்
பாம்போட்டுக் கொல்லுவதில் பந்தாவாய்த்
துள்ளுவதில்
ஜேம்ஸ்பாண்டு நாட்நாட் செவன்!
என்னநீ சொன்னாலும் என்னநீ செஞ்சாலும்
மின்னுதே வெண்பாவாய் மேலெழுந்து; - மென்மையாய்ச்
சொல்லாடித் தைப்பதில் சொக்கத்தான்
வைப்பதில்
கில்லாடி; நீதான் கிரேட்!
===
ஏகலைவன் சுட்டு விரல்!
(ஆகாசம் பட்டு சேஷாசலம் பற்றிய வெண்பாக்கள்....)
'ஆகாசம் பட்டு'வெண்பா அத்தனையும்
பட்டுவெண்பா;
ஏகாந்தம் போக்குதற்கு ஏற்றவெண்பா; - வாகாக
ஆஹாஹா சொல்லவைக்கும்; ஆனந்தம்
கொள்ளவைக்கும்;
ஓஹோஹோ விள்ளவைக்கும் ஓய்!
எதுகைகள் கொஞ்சம் இடிச்சாத்தான் என்ன?
அதுக்கெல்லாம் அஞ்சுற ஆளா? - அதுபோக
மோனை யெலாங்கூட முக்கிய மில்லை;
ஏனைத் தளைஇரா ஏற்று!
சுஜாதா வெளிக்கொணர்ந்த சொக்கப்பொன்; வெண்பா
மஜாவாய்த் தருவதில் மன்னன்; - கஜானாவில்
காலியே ஆகாத கற்பனை; நீயவரை
ஜாலியாய்ப் போய்ப்படி ஜஸ்ட்டு!
அண்ணாட வாழ்வியலை அப்படியே
வெண்பாவில்
கொண்டாந்து வைத்தார் குறிப்பறிந்து; - தண்டமாய்
மற்றவர் போல்வெண்பா வார்க்க விழையாதார்;
பற்றலாம் நாமவரைப் பின்!
கோட்டை தனில்வாழ்ந்து கொண்டிருந்த
வெண்பாவைப்
பேட்டைக் கழைத்துவந்த பேராசான்; - சாட்டையெடுத்(து)
ஆட்டுவித்தால் ஆடாதா? அச்சத்தில் வாடாதா?
வேட்டைப் புலிவெண்பா வே!
பேஸ்ட்டு பிரஷ்ஷுபற்றிப் பேசும் இவர்வெண்பா
வேஸ்ட்டென்று யார்தான் விலக்குவார்? - காஸ்ட்லியான
கள்தான் இவர்வெண்பா; கச்சிதமாய்க்
கேள்விகேட்டு
வள்ளுவரோ டும்புரிவார் வம்பு!
விண்பார்த்துப் பாவெழுதி விற்றார்முன்
பட்டிதொட்டி
மண்பார்த்துப் பாவெழுத வந்தமகன்; - கண்ணால்
வசக்கினார் வெண்பா; வழங்கினார் ஒண்பா;
கசக்கினார் இல்லை கடிந்து!
ஏற்றார் எளிமையை என்றும் எழுத்திலே;
காற்றாய்ச் சுழன்றார் கருத்திலே; - ஆற்றல்
அளப்பரிது; வெண்பாவில் ஆகாசம் பட்டை
விளம்பரிது; என்னே வியப்பு!?
===
நாட்டு நடப்புவெண்பா!
தோசைப் பதத்துக்குத் தொத்தலா
ரோடுபோட்டுக்
காசை லவுட்டிட்டான் காண்ட்ராக்டர்; - தேசமிப்போ
கெட்டாலும் கெட்டுச்சு; கேட்கநாதி
யத்துச்சு;
சட்டம்செல் வர்க்கே சகா!
லஞ்சம் கொடுக்காம Lawப்பேசிப் பாருநீ!?
கொஞ்சமா உன்னைக் குலையறுப்பான்? - கெஞ்சினாலும்
கையெழுத்துப் போடான் கவர்மெண்டு
சர்வன்டு;
ங்கொய்யால; நாளுமிதே கூத்து!
லட்சத்தில் சம்பளம்; லக்சரிக்காய்க்
கிம்பளம்;
உச்சத்தில் வாழ்க்கை ஒசந்திடும்; - பிச்சை
எடுக்காத பேருண்டா? எண்ணி எடுத்துக்
கொடுக்காத பேருண்டா? கூறு!
போக முடிதா? வரத்தான் முடிதா?பைக்
வேகம் கொறச்சா வினையேதான்; - நோகடிப்பான்
நான்சென்ஸு கான்ஸ்டபிள் நாம்நூறு தர்லேன்னா
லைசன்ஸு கேட்டு லடாய்!
போலீஸா? இல்ல பொறுக்கியா? ஏன்டாடோய்!
நீலூசா? திட்றத நிப்பாட்டு; - நீலேசா
லத்திய நீட்டுற; லஞ்சத்த நாட்டுற;
புத்தியத் தீட்டுடா போய்!
தேர்தல்னு வந்தாத் தெருப்பக்கம்
பாக்கலாம்;
தேர்தல் முடிஞ்சாத் திரும்பமாட்டான்; - யார்னு
உரசிநீ கேட்டதால் உன்னிடம்சொல் கின்றேன்
அரசியல் வாதி அவன்!
பாலாறு பாயும்பான் ஃபாரினாய்
மாறும்பான்
நாலாறு மாசத்தில் நன்மைம்பான்; - கோளாறு
பண்ணாத ஆட்சிம்பான்; பார்த்துநாம்
வாக்களிச்சா
கண்ணா! முடிப்பான் கதை!
அரசியல்னு வந்துட்டா அப்ப(ன்)மவன் இல்லை;
உரசல்னு வந்தா உதைதான்; - தரங்கெட்ட
தன்தலைவ னுக்காய்த் தலைகொடுக்குந்
தொண்டனுக்கு
என்ன கிழிச்சான் இவன்?
பள்ளிக்குப் பக்கத்தில், பஸ்டாண்டு
கக்கத்தில்,
உள்ளபடி கோவிலுக்கு ஓரத்தில், - தெள்ளத்
தெளிவாக டாஸ்மாக் திறந்துவெச்சான்; வாங்கிக்
குளிடா மதுவில் குதித்து!
சாராயம் அப்பனுக்கு; சத்துணவு
பிள்ளைக்கு;
வேராழத் தில்வெந்நீர் விட்டுவிட்டு -
ஜோராய்
விழுதுக்குப் பன்னீர் விடுகிறான்; எந்தக்
கழுதையும் தட்டிக்கேட் காது!
தேசமே குட்டிச் சுவராகக் காரணம்,
நாசமாப் போனபல நாளேடு; - மோசமா,
முன்னுக்குப் பின்முரணா, முச்சூடும்
பொய்க்கரணா,
நின்னு கெடுக்கும் நிதம்!
குத்தம் பெருகிருச்சு; குப்பைமே
டாயிருச்சு;
மொத்தமா நாடு முழுகிருச்சு; - சத்தமாப்
பேசாத சங்கிக பேரணியா வாராய்ங்க
ராசா! எடுத்திடுநீ Run!
டெஸ்ட்டாய் எடுக்குறாங்க; டெய்லி
படுத்துறாங்க;
பெஸ்ட்டாய்ப் பயமுறுத்திப் பீத்துறாங்க; - கஸ்டம்தான்;
வாய்நுழையாப் பேரெல்லாம் வக்கிறாங்க
டாக்டருங்க;
நோய்நுழையா னுஞ்சாவான் நொந்து!
பாத்தே தனியாரில் பாடையில் ஏத்துவான்;
பாக்காது அரசுடாக்டர் பாடைசேர்ப்பான்; - கேக்கஒரு
நாதியில்லா நாட்டில் நடக்கும்
கொடுமைகளுக்கு
ஆதியில்லே அந்தமில்லே ஆங்!
டாஸ்மாக்கி லாஅதிகம்? ஹாஸ்பிடலில்
சாவதிகம்;
ஹாஸ்பிடல் திங்கிற காசதிகம்; - ரேஸ்வெச்சா
காலனுக்கே டாக்டருங்க டஃப்கொடுப்பான்; நம்முசுரை
மேலனுப்ப எம்மாம் மிடுக்கு!?
சண்டை நடந்தா சமாதானம் ஆயிரு;
கொண்டுபோய் விட்றாத கோர்ட்டுக்கு; - தெண்டமாய்
வக்கீலும் வெக்காதே வாய்தாவும்
வாங்காதே
பக்கி!உன் காசாகும் பாழ்!
பொய்யா புளுகிவெப்பான்; பொய்யே
புளுகவெப்பான்;
அய்யா! அவனை அணுகாதே; - மெய்சொன்னா
ஓராண்டில் தீர்ப்புவரும்; ஒன்பதாண்
டிற்கிழுக்கும்
போராட்டம் வக்கீல் பொழப்பு!
பாலமா கட்டுறான்? பந்தலைப் போடுறான்;
காலையிலே கட்டினது மாலைவிழும்; - வேலையிலே
எத்தனை பர்சன்டேஜ் ஏய்க்கலாம் என்பதிலே
எத்தன்தான் இன்ஜி னியர்!
வீதிக்குச் சாதிஅஞ்சாம்; சாதிக்கோர்
நீதிசெஞ்சான்;
ஆதியிலே இல்லைஇந்த அக்கப்போர்; - பாதியிலே
வந்தாலும் வந்தது வாய்க்கரிசி தந்தது;
பிந்தாதா பாழுமிந்தப் பேய்!?
தேசத்தில் ஊரிரண்டாம்; சேரியொன்னாம்; ஊரொன்னாம்;
ஏசத்தான் மேடையில் ஏறுவான்; - பேசிவிட்டுக்
கீழிறங்கி வந்தால் கிணற்றிலிட்ட
கல்லாவான்;
பாழிருட்டும் வாங்காதா பல்பு!?
காசிருந்தால் போய்ப்பார் கடவுளை; காசிலாமல்
ஓசியிலப் பாக்கஎன்ன ஒப்பனா? - காசிருந்தால்
பக்கத்தில் போகலாம்; பக்திமான் ஆகலாம்;
அக்கப்போர் பண்லாம் அடா!
ஆசிரமம் கட்டுறான் ஆண்டவன்போல் சுத்துறான்;
ஓசியில பக்தைகளை ஓட்டுறான்; - யோசிச்சி
இன்னிக்கே சந்யாசம் ஏன்வாங்கக் கூடாது?
மன்னிக்க வேணும்மனை வி!
===
கருப்புசாமி வெண்பா!
என்னா கருப்பசாமி? என்மேல்
வெறுப்புசாமி?
சொன்னா திருத்திப்பேன் தோள்கொடுநீ; - உன்னைக்
குடிசாமி யாய்க்கொண்டேன்; கும்பிட்டு
நின்றேன்;
விடியலைக் காட்டு விரைந்து!
ஆடுவெட்ட ஆகவில்லே; கோழிவெட்டக்
கூடவில்லே;
மாடுவெட்டக் கையில் Moneyயில்லே; - பாடுபட்டு
ஒத்தஎலு மிச்சை ஒனக்காக வாங்கிவந்தேன்
கெத்தா(ய்);என் வேண்டுதலைக் கேள்!
வம்பாக ஏசவல்லே; வக்கனையாப்
பேசவல்லே;
அம்பானி ஆகணும்ற ஆசையில்லே; - தெம்பாநான்
நாலு சனத்துக்கு நல்லது போய்ச்செய்ய
ஏலும் வகையிலெனை ஏத்து!
நான்ரொம்ப நல்லவன்; நாநயம் உள்ளவன்;
மாண்பு மிகுந்தநல்ல மாணவன்; - சாண்பிள்ளை
ஆனாலும் ஆண்பிள்ளை; ஆக்காதே வீண்பிள்ளை;
நானாள வேண்டியதை நல்கு!
ஆசெல்லாம் வேணாம் அறிவைத்தா; கைநிறைய
காசெல்லாம் வேணாம் கனிவைத்தா; - நான்செல்லாக்
காசாகும் முன்னாலே கௌரவம்தா; பக்தர்க்குத்
தாசா!நான் கேட்டதைத் தா!
நாசாவில் வேலையா நாங்கேட்டேன்? ஸ்ரீபத்ம
சேஷாத்ரி ஸ்கூலிலா ஷேர்கேட்டேன்? – ராசாவாய்
ஊராள வையென்றா ஊளையிட்டேன்? ஸ்பீச்தமிழ்ச்
சீராள வைஅதே சேஃப்!
மாலையிலே சாப்பிட மட்டனா
நான்கேட்டேன்?
காலையிலே சாப்பிட கஞ்சிகொடு; - வேலையிலே
கில்லிநான் ஆனாலும் Cashவந்து சேரலியே;
பில்லிசூன்யம் வச்சதாரப் பே?
வானமே கூரையா மண்ணுலகு உன்வீடா
ஆனவன்நீ; என்னாலே ஆகுமா? - நானுமே
தங்கஒரு மாளிகை தா!இன்னா நாங்கேட்டேன்?
தங்க(க்) குடிசையொன்னு தா!
கண்ணிலே காமமெனும் காய்வேணாம்; வெட்டுண்ட
புண்ணிலே அன்புமலர் பூக்கட்டும்; - பண்பிலே
உச்சத்தில் என்னைவை; ஊரவையில் முன்னேவை;
வச்சாநீ வாகைசூட வை!
அஞ்சிலிட்டர் போதாதே அம்பது லிட்டரேனும்
கொஞ்சிக் கொடுக்கக் குருதிகொடு; - கெஞ்சலாய்
ராவெல்லாம் தூங்காமல் ராகம் படிக்கிறாள்
பாவம் கொசுப்பெண்ணப் பா!
சொற்பம் அறிஞ்சதுக்கே ஷோகாட்டும்
நெஞ்சிது
முற்றும் அறிஞ்சிருந்தா மூவிகாட்டும்; - வெற்றாக
வையதை; உன்பின்
வரவழை; வீண்விறகு
மெய்யிதை வீணையாய் மீட்டு!
அடசாமி! நானொரு ஆசாமி; நீயும்
மடசாமி இல்லை;மா சாமி; - கிடந்துழலும்
நானுன்சேய் இல்லையா? நாதியத்தப்
பிள்ளையா?
வானளவு வந்தென்னை வாழ்த்து!
குலசாமி! நீயென் குருசாமி; நீதான்
'தல'சாமி; நானுன்தாள் சாமி; - பலசாமி
பார்த்துவிட்டேன் நீதான் பவர்சாமி; உன்கையில்
சேர்த்துவிட்டேன் என்னையாக்கு ஷேக்!
நன்றி மறவாத நெஞ்சம்தா; முன்னேற
இன்றி அமையாத எண்ணம்தா; - குன்றின்மேல்
வெள்ளிநிலா ஆக்கென்னை விட்டிலாய் ஆக்காதே;
உள்ளிருந்து தாஉள் ஒளி!
மேகத்தை என்னுடைய மேனியாக்கு; மற்றவர்
தாகத்தைத் தீர்க்கும் தடாகமாக்கு; - ஆகத்தில்
அன்பை விதைத்துவிடு; ஆசை புதைத்துவிடு;
துன்பந் துடைத்துவிட்டால் தூள்!
முன்பின் தொழுதறியேன்; மூக்கால்
அழுதறியேன்;
உன்போல் பகையை உழுதறியேன்; - என்னளவில்
வாய்வந்த சொல்லால் வழுத்துகிறேன்; நெஞ்சுருகி
ஏய்கருப்பா! ஏதேனும் ஈ!
என்ன வறுமையிது? ஏகா எருமையிது?
என்னை தினம்பாத்து இளிக்கிறது; - என்போல
நாலுநாள் தேய்ந்துபார்; நல்கூர்ந்து
வாழ்ந்துபார்;
ஏலுமா உன்னால்? எழு!
ரெட்டைக் குழல்கன்னும் ரேஸ்பைக்கும்
நான்தாரேன்;
கிட்டவா!யூஸ் பண்ண Classஎடுப்பேன்; - பட்டனைத்
தட்டினா குண்டுவிழும் தற்கால போர்முறை;
வெட்டருவா வேல்கம்பு வேஸ்ட்!
பூச்சாண்டி யாடாநீ? பூகம்பக் காடாநீ?
ஏச்சேன்டா வாங்குறே எங்கிட்டே? - பாச்சல்
புலிவால் கணக்காப் புடலங்காய் மீசை
எலிவால் கணக்கா எடு!
தூக்கிக்காட் டாதே தொடைதெரிய வேட்டியை;
ஜாக்கிரதை போட்டுக்கொள் சட்டையை; - பாக்கறவன்
காட்டான் எனச்சொல்வான்; கள்வன்
எனக்கொல்வான்;
கூட்டாளி சொல்ஏற்றுக் கொள்!
===
சம்சார வெண்பா!!
அஞ்சு மணிக்கெழுந்தா நெஞ்சி
வெடிச்சிருமா?
மஞ்சமெழ மாட்றா மகராணி; - அஞ்சுக்கு
அலாரம் அடிச்சாலும் ஆஃப்பண்ணிப் போட்றா;
பளார்விட லாம்னா பயம்!
வாசல் தெளிக்கிறாளா? மாக்கோலம் போடுறாளா?
கேஸ்ஸை அடைச்சிவைன்னா கேட்கிறாளா? - பேசத்
திறந்தவாய் மூடுறாளா? தேம்பி அழுதே
கறக்குறா ஒப்பனைக்குக் காசு!
பேஸ்ட்டை விடுடீ பிரஷ்ஷத் தொலைடீன்னா
Costஐ நெனச்சிக் கவலையான்றா; - வேஸ்ட்டாம்நான்
குச்சியில்பல் தேய்க்கிறது; கூறுகெட்ட
நோய்க்கிருமி
எச்சிலில்சா வாதாம்; எதே?
மஞ்சளைப் பூசுறாளா? மல்லிகை சூடுறாளா?
வெஞ்சனம் நல்லாத்தான் வெக்கிறாளா? - கொஞ்சமா
சோறு குழைஞ்சதுன்னு சொல்லியே கூழ்பரி
மாறுறா ஊரான் மக!
நோகாம குக்கரில் நொய்யரிசி போடுறா;
வேகாதும் வெந்ததுமா வெக்கிறா; - ஆகா!
பிடிச்சோறு பிள்ளைக்கும் பின்பு தனக்கும்;
அடிச்சோறு எனக்குமா டீ!?
ஆ(ட்)டிய கள்ளெண்ணை அஞ்சிலிட்டர்
வாங்கிவந்தால்
பாட்டிலைக் காலிபண்றா பத்துநாளில்; - கேட்டாக்கா
வக்கணையாத் திங்கிறனாம்; வாய்நிறைய
முங்குறனாம்;
செக்கெண்ணைக் குண்டாம் செலவு!
இந்தநாள் இட்லிக்குப் போனவாரச் சட்னியத்
தந்துவிட்டு சூப்பரான்றா சண்டாளி; - இந்தஇட்லி
மாவுமே ஃப்ரிட்ஜ்உபயம்; மாமியா ரேஅபயம்;
நாவுமே செத்துஆச்சு நாள்!
ஒல்லியா வந்தவ ஊதிப் பெருத்துட்டா;
சுள்ளியா வந்தவ தூணாய்ட்டா; - புள்ளைக
ரெண்டுபெத்துப் போட்டதுக்கே குண்டாய்ட்டா; கேட்பதெங்கே
கொண்டாவென் றின்னோர் 'குவா'!?
தாய்க்குத்தான் சப்போட்டு; தந்தைமேல்
ரிப்போட்டு;
சேய்கள்மேல் தாய்க்குத்தான் செல்வாக்கு; - நாய்ப்பாடு
நான்பட்டுச் சேத்தென்ன? நல்லபடிப்
பாத்தென்ன?
நான்சொன்னாக் கேட்பார் நஹி!
சம்பளம் வந்தொடனே ‘ஷாப்பிங்
கிளம்பு’ன்றா;
கிம்பளம் வாய்ப்பிருந்தால் கேளுன்றா; - ரம்பாப்போல்
மேனி குலுக்குறா; மேனா மினுக்குறா;
ராணி கணக்கா ரவுசு!
கான்வென்டில் கற்றவளாம்; காலேஜும்
பார்த்தவளாம்;
'நான்படிச்ச பொண்ணு'ன்றா நக்கலா; - ஏன்டீ?நான்
பத்தாங் கிளாஸோடப் பள்ளிப்
படிப்பைவிட்டா
வெத்தா? சரிதான் விடு!
தஸ்ஸுன்றா; புஸ்ஸுன்றா; தங்கிலீஷ் பேசுறா;
எஸ்தவிர நோதவிர என்னகண்டேன்? - கஸ்டம்தான்;
நாலு மொழிபடிச்சி நான்தேறி
வந்திருந்தா
வாலுத் தனம்பண்ணு வா?
தஞ்சொந்தம் வந்தொடனே தாவிக் குதிக்கிறா;
எஞ்சொந்தம் வந்தா எழமாட்றா; - அஞ்சாம
வெத்தாசைக் கேகாசை வேஸ்ட்பண்றா; சேமிக்க
ஒத்தாசை பண்றாளா ஒய்ஃப்!?
அப்பனோட பேச அரைநாள்;செல்
போனில்தாய்க்(கு)
எப்போதும் பேசிவெறுப்பு ஏத்துறா; - இப்பத்தான்
முந்தாநாள் தாய்வீடு முற்பகலில்
போய்வந்தா;
இந்தா! கெளம்பிட்டா இன்று!
எவடீ ஒனப்பெத்தா? கைலமாட்னா செத்தா;
ரவஉப்மா வுக்கு ரசமா? - இவகழுத்தில்
தாலியைக் கட்டிநான் சம்சாரி ஆனதுக்கு
ஜாலியாப்போ லாஞ்சன்யா சம்!
நான்ஸ்டிக் தவாநிறம் நான்;பெண் ரவாநிறம்;
தேன்கெடாது பால்தான் திரிந்துகெடும்; - நான்விடும்
ஏப்பத்தில் கூட எதோஓர் குறைகாண்பா;
மோப்பத்தில் இன்னோர் மொசாட்!
‘சீரியல் பாக்காதே செல்போனைத் தேய்க்காதே
காரியம் வேறுபார் கண்மணி'ன்னா - சாரிநான்
வேலைசெஞ்சி ஓஞ்சிட்டேன்; மேலுகால்
தேஞ்சிட்டேன்;
காலையிலே பாக்லாங் கறா!
மனுஷன் அவசரம் மாதறிஞ் சாளா?
கணுக்கால் வரைக்குந்தான் காட்றா; - தினுசாப்
படுத்தறா பாடா;நைட் பத்துமணி யானாப்
படுக்கைக்கு வாராளா பார்!?
செத்தநேரம் பாக்காம சில்மிஷம் செய்யாம
ஒத்தநொடி கூட உருளலையே; - அத்தைமக
என்னத்தத் தாஞ்செஞ்சா என்னைய? பாதகத்தி
கண்ணுல வெச்சா கரண்டு!
என்னநான் திட்டினாலும் என்னவள் போல்வருமா?
சன்னிலியோன் தோற்றாள் சமயத்தில்; - இன்னிக்கும்
அந்தமொதோ ராத்திரிபோல் அம்சமாத்
தானிருக்கா;
சிந்தைக் கிவதான் சிலுக்கு!
===
வேல மரக்குச்சி வெண்பல்லுக்கு
அத்தைமுறை;
ஆல மரக்குச்சி மாமிமுறை; - ஞாலத்து
அரிதான இன்னொன்றும் அங்கிருக்கக்
கண்டேன்;
கரித்தூள்பல் லுக்குக் கசின்!
===
வாங்கிநான் வந்த வரம்!
சண்டிகரில் கேட்டாக சப்பானில் கேட்டாக
கிண்டியில் தாம்பரத்தில் கேட்டாக; - கண்டப்பன்
கண்காட் டினதால் கழுத்தஇவ
னுக்குநீட்டிப்
புண்பட்டுப் போச்சென் பொழப்பு!
எத்தனையோ மாப்பிள்ளை ஏழெட்டூர்
ஆம்பிள்ளை
ஒத்தக்கா லில்நின்னான்; 'ஊகூம்'ன - குத்தந்தான்
இங்கவாழ்க் கைப்பட்டு இவனால் இடிபடுறேன்;
சங்கைகெட்ட வாழ்க்கை; ஸ்ஸபா!
கத்துகடல் சூழுலகம் காணாத மாப்பிளையாம்;
பத்துப் பொருத்தமும் 'பக்கா'வாம்; - வெத்துவேட்டு
முண்டமந்த ஜோசியனைக் கண்டா
அறைஞ்சிடுவேன்;
தண்டத் தரகனையும் தான்!
‘நல்லாப் படிச்சவன்’னான்; ‘நாலேக்கர் காரன்’னான்;
ஜில்லாக் கலெக்டர்ன்னு சீன்போட்டான்; - பல்லிளித்துப்
பத்துப் பவுனோட பாழ்கிணத்தில்
வீழ்ந்துட்டேன்;
செத்தஆ ராஞ்சிருந்தா சேஃப்!
மச்சிவீட்டில் வாழ்ந்த மகராணி கேக்குதா
குச்சிவீட்டில் வாழும் குசேலனுக்கு? - வச்சிவாழ
வீசம் நிலமில்லை; வேலை எதுவுமில்லை;
ஆசமட்டும் உண்டூர் அளவு!
பாத்துச் சமைச்சிப் பரிமாறி நான்கேட்டா
ஆத்தா சமைச்சதுபோல் ஆவாதாம்; - ஆத்திரத்தைப்
பாத்திரத்தில் காட்டிப் படுக்கை யிலும்காட்டித்
தீத்துக் கிறேன்;வேற தீர்வு?
எட்டூரு வாய்நீளம் எம்மாமி யாருக்கு;
கொட்டுறா தேள்கொடுக்காக் கூனிமக; - கட்டிலிலே
கால்போட்டு வெட்டிக் கதையளக்கும்
மாமனார்க்கு
டீபோட்டே ஓஞ்சேன் தினம்!
வந்த வரிசையையே வைக்க இடமில்லை;
‘தந்ததென்ன ஒப்பன்’றா தாய்க்கிழவி; - இந்தவசை
வாங்கவா இந்த மனுசனைக் கட்டிக்க
வாங்கிநான் வந்தேன் வரம்!?
மாமியாரை வித்துநான் மல்லிகப்பூ வாங்கிவந்தேன்;
மாமனாரை வித்துமாங்கா வாங்கிவத்தேன்; - சேமிக்க
நாத்தனாரை வித்து நகைசெஞ்சா, வாங்கிவரான்
ஆத்தீ! அடகுவெச்சி 'ஆஃப்'!
சித்தாளா நான்போயி சேமிச்ச காசையெல்லாம்
ஒத்தாளாக் குந்தி ஒழிக்கிறான்; - பத்தாளைத்
திண்ணையில் குந்தவெச்சி சீட்டாடும்
ஆம்பளைக்கு
நண்டுசிண்டு கூடல்லாம் நட்பு!
கூழே குளுக்கோசா; குச்சிவீடே
மச்சிவீடா;
பாழே பணங்காசா பார்ஈசா! - ஏழேழு
சென்மம் படாத சிரமமெல்லாம்
நான்படுறேன்;
வன்மம்விட் டேஅளிநீ வாழ்வு!
ஆளைப்பாத் தேமாந்தேன்; ஆசைப்பட்
டேதேய்ந்தேன்;
மீள வகையில்லா மேமாய்ந்தேன்; - நாளைக்குக்
குத்தவெக்கும் எம்மகளைக் கொண்டுபோய்
நாங்கொடுப்பேன்
பத்தூர் அரசனுக்கே பாத்து!
===
தாலாட்டு வெண்பா!
பேமானி பேம்பர்ஸ் பிசுபிசுத்துப்
போனதால்
தேமேன்னு தூங்காம தேம்புறியா? - நான்மாத்தி
விட்டஉடன் தூங்கு; விழியில் கனாவாங்கு;
பட்டு மகனே! படு!
முத்தத்த எண்ணிநான் முந்நூறு
வெச்சாலும்
பத்தா தெனநீ படுத்துவதேன்? - மத்தபடி
அத்தானுக்கு ஈயத்தான் அஞ்சாறு
வெச்சிருக்கேன்;
கித்தாப்பா நிக்காதே கேட்டு!
பாலொனக்கு மட்டுந்தான்; பால்குடம்தான்
ஒப்பனுக்கு;
தாலவனுக்(கு) இங்குனக்கே தாலாட்டு; - பாலகனே!
கப்பம்நான் கட்டாதென் காலை விடியாதே;
ஒப்பன் அதில்ரொம்ப ஒர்ஸ்ட்!
தாய்ப்பால் குடிச்சோமா தாலாட்டுக்
கேட்டோமா
போய்ப்படுத் தோமான்னு போகோணும்; - வாய்கொடுக்கத்
தெம்பில்லை உன்தாய்க்குத் தெம்பாய்
இருகான்பார்
கம்புசுத்த ஒங்கப்பன் காத்து!
பாய்ச்சத்தம் கேட்டா பயப்படுவே; ஒங்கப்பன்
நோய்ச்சத்தம் கேட்டா நொறுங்கிடுவே; - வாய்விட்டே
ஆர்ப்பாட்டம் பண்ணாது அசந்துறங்கி
னால்தங்கைக்கு
ஏற்பாடு பண்ணுவோம் இன்று!
===
ஆடுவிடு தூது!
வேலியிலே மேய்கிற வெள்ளாடே!
நானுனக்கோர்
சோலியைத் தாரேன் சுமந்துபோ; - காலிருந்தும்
ஊனமா, வாயிருந்தும் ஊமையா ஆனேனே
தேனமுதப் பெண்ணிடஞ் செல்!
மழையொடச்சுப் போட்ட மரமெல்லாந் தேடித்
தழையொடச்சுப் போடுறேன் சாப்பிட்டு -
இழையொடச்சுச்
செய்த இடையாளைச் சென்றுகண்டு உள்ளத்தைக்
கொய்த கதையெல்லாங் கூறு!
காட்டா மணக்குமண்டுங் காட்டில்புல்
மேயும்உன்
ஆட்டாம் புழுக்கையெல்லாம் அள்ளினேனே; - மோட்டா
அரிசியுடன் கஞ்சி அருந்தத்தந் தேனே;
அரசியிடஞ் சொல்லென் அகம்!
ஆட்டுமந்தை வாசம் அவள்மேலும்
வீசுமவள்
காட்டுமந்த நேசம் கமகமக்கும்; - வாட்டுமெந்தன்
நெஞ்சந் தனைக்கொடுத்தேன்; நேராய் அவளிடம்
தஞ்சம் அடைந்ததைத் தா!
எந்தத் தொரட்டியால் என்ன உலுக்கினா?
அந்தத் தொரட்டி,கள வாடி,வா! - எந்தக்
கிடாய்முட்டி னாலும் கிடந்தழியேன்; பாழும்
விடாய்முத்திச் சாகிறேன் வெந்து!
மாதப்பேர் சொல்லாதே; வாதப்போர் செய்யாதே;
காதலை மட்டுஞ்சொல் காதிலே; - பாதத்தின்
ஓரத்தில் நின்றென் உணர்வையுஞ்
சொல்லிஎன்
பாரத்தைத் தீர்க்கவழி பார்!
சிக்கனமாப் பேசு; சிரிச்சே வலைவீசு;
சிக்கியபின் காதல் சிதறவிடு; - முக்கியமா
நான்சுக்காக் காஞ்சி நலமத்துப் போனதை
நாசுக்காப் பின்னே நவில்!
பேச்சுப்பால் தந்தென் பிணிபோக்கச் சொல்;அவள்
கோச்சுப்பாள் என்று குமுறாதே; - ஏச்சுக்கால்
பங்கே தருவாள்; பயப்பட வேணாம்;நீ
அங்கென் நிலைசொல் அடுத்து!
அவளைநாங் கட்டினால் ஆடே! ஒனக்குக்
கவலையில்லை ஊத்துவாள் கஞ்சி; - செவனேன்னு
தின்னு பெருக்கலாம்; தேமேன்னு இருக்கலாம்;
உன்னையெவன் கேப்பான்? உதவு!
குட்டியிலே நீகிடந்தாய் குற்றுயிராய்; எங்கப்பன்
'வெட்டியாக் காப்பாத்த வேணாம்'னான்; - புட்டிப்பால்
ஊட்டி வளத்தேன்; உசுரா நெனச்சேன்;என்
வாட்டந் தவிர்க்கப்போய் வா!
'கவலைப் படவச்சிக் கண்ணுல கண்ணீர்
திவலை வரவச்ச தேனோ?- அவனை
விரும்பாட்டிக் கூட வெறுக்காதே' என்று
குறும்பாட்டுக் காரியிடங் கூறு!
போவாம இங்கெனக்குப் போக்காநீ காட்டுறே?
சாவாம நானிங்கே சாவுறேன்; - வா!வா!நான்
ஒன்னப் புடிச்சுருச்சி உப்புக்கண்
டம்போட்டுத்
தின்னே அடையுறேன் தெம்பு!
மேய்ச்சல் நெலம்பாத்து மேயவிடட் டா?இல்லே
காய்ச்சல் நெலம்பாத்துக் கட்டட்டா? - பாய்ச்சல்
கிடாய்தேடி நேத்து கிணத்தோரம் நின்ற
'படாகேடி'! நீயே பகர்!
நாளைக்கு நீசினைக்கு நாண்றுகொண்டு
நிப்பேல்லே?
காலை ஒடச்சிஒங் கைலதரேன்; - மாலைக்குள்
நல்லதொரு சேதியை நாங்கேக்கத்
தான்வேணும்;
இல்லே,நீ செத்தே; இரு!
===
இம்மாம் பெரிசு இவனுக்கு; பாத்தியா?
அம்மாம் பெரிசு அவனுக்கு; - தம்மாத்தூண்
டேஎனக்கு; என்னசெய்வேன்? எம்மனசத் தாஞ்சொன்னேன்;
டேய்!என்ன நீநெனச்ச டேய்!?
===
'சிக்கன் யோகா சென்டர்' வெண்பா!
சிக்கன்யோ காஇது; சீக்ரெட்யோ காஇது;
மக்கள்யோ காஇல்லை மக்களே! -
இக்கலையின்
ஆசான்நான்; என்வயதோ ஆயிரம்; என்போலே
ராசாவாய் வாழணும்னா ரா!
Fitடா இருக்கோணும்;
Kidடாவே
வாழோணும்;
சிட்டாப் பறந்து திரியோணும்; - சட்டுன்னு
குண்டாய்ட்டா கொண்டுபோய்க் குக்கரில்
வேகவெச்சு
சன்டே முடிச்சிருவான் சாப்ட்டு!
கொஞ்சமும் நாம்வளரக் கூடாது; கோழியைத்தான்
கஞ்சிக்காய் வெட்டிக் கறிசமைப்பான்; - அஞ்சாமல்
சன்டேவை நாமணுகும் சாத்தியமே இந்தயோகா;
விண்டேஜ்செய் டீனேஜ்ஜை வெல்!
தலைகீழா நின்னா தடியாக மாட்டோம்;
விலைகேட்க யாரும் விரும்பார்; - இலையென்றால்
வாழ எலைமேலே வந்துவிழ
வேண்டிவரும்;
வாழஇருக் காது வழி!
சாகாம வாழ தலைதப்பித் தான்வாழ
நோகாம நோயின்றி நாம்வாழ - யோகாவைப்
ப்ராக்டிஸ்தான் செஞ்சி பிளாக்பெல்ட்
பெறவேணும்
வேக்கப் விரிங்கஉங்க விங்க்ஸ்!
லெக்பீஸ் ஒருதட்டில் விங்க்பீஸ்
மறுதட்டில்
சிக்கன் பிரியாணி சென்டரில்; - மக்களெல்லாம்
குந்தியே திங்க குருமாநாம் ஆகணுமா?
சிந்திச்சு நீயோகா செய்!
பின்றீங்க மக்கா; பிராய்லரின மா,கொக்கா!?
நின்றீங்க பார்தலைகீழ் நேராக; - இன்றுமுதல்
ரேஞ்சர் எனமாறி நம்மினத்தை
நாம்காத்தால்
டேஞ்சர் இனியில்லை டேய்!
எக்கும் நமதுடம்பும் எஃகானால் ஆகாதோ
சிக்கன் கடிக்கும்பல் சேதாரம்? - இக்கணமே
டீம்ஒர்க் அவுட்செய்து
ஸ்டீல்பாடி ஆகிடுவோம்;
கேம்இந்த யோகாநம் கிஃப்ட்!
பாடிபில்டிங் பண்ணிப் பவர்ஏத்து னோமின்னா
தேடிவந்து குக்பண்ணித் தின்பார்கள்; - நாடிப்போய்ச்
சாவவா வந்தோம்? சமர்த்தாய்,யோ காசெஞ்சா
லாவகமாத் தப்பிக்க லாம்!
பீட்டா தடுக்காது; ப்ளூகிராஸ் கேக்காது;
நாட்டில் நமைக்காக்க நாதியேது? – Meatடாய்த்தான்
பார்ப்பான் பலபேரும்; நாக்கில் நதியூறும்;
தீர்ப்பான் தினம்நம்மைத் தின்று!
யோகாவைப் பிள்ளைகளுக்(கு) ஊட்டாமல் ‘கேண்டிக்ரஷ்
சாகா’ விளையாடச் சம்மதித்து – நோகாமல்
நொங்கெடுக்கப் பார்ப்பதும் நோய்வந்தால்
சாவதும்
சிங்கி அடிப்பதுமா சேஃப்?
எங்கக்கா குண்டானா; எங்கேங்க உண்டானா?
தொங்கவுட்டு ஓனர்அவள் தொளுரிச்சான்? - தங்களில்
சாதிவிட்டுக் காதலிச்சா சாகடிக்கி
றாப்போல்எம்
சேதியெட்டுச் சா,டேய் செவிக்கு?
===
துளை(த்)தேன்!
குச்சிநுனி மேலே குறும்புப்
பயல்தனது
எச்சில்வாய் வைத்தழகாய் ஊதுறான்; - அச்சோ!
மனசைத் திறந்த மடையாய் விடுறான்;
எனக்குப் புரியும் இசை!
‘பூனை அறியுமா ப்ளூட்’என்றா கேட்கிறாய்?
கேனைஇல்லை நான்ரொம்பக் கில்லாடி; - தேனையொத்த
நாதம் பிறக்கிற நாயனமே நானறிவேன்;
கீதமெழும் வேய்,அதன் Kid!
மூங்கில் குழல்வழிதன் மூச்சைஇவன்
பேசவிடும்
பாங்கில் மயங்கிநான் Bustஆனேன்; - ஈங்கிவனின்
வாசிப்பில் நான்என் வயிற்றுப்
பசிமறந்தேன்;
நேசிப்பில் நான்மறந்தேன் Next!
புல்லாங் குழல்துளை ஃபுல்லாய் இசைமழை;
ஜில்லாகில் லாடிஇவன் ஜீனியஸ்; - நல்லாவே
நெஞ்சை உருவுறான்; நேக்காத்
துருவுறான்;
பிஞ்சுவிரல் நாட்டியம் பெஸ்ட்!
ஏழு துளைவழி ஏழிசை பூத்துவர
ஆழும் வரையாழ்ந்து அசந்துவிட்டேன்; - பாழுடம்பில்
ஒம்பான் துளையிருந்தும் ஓரிசையும்
பூக்கலையே;
அம்போன்னு குந்தி அழு!
கண்ணன் குழலிசைக்குக் காதல் வயப்பட்டாள்
பெண்ணணங்கு ராதையென்ற பேச்சுண்டு; - கண்ணனையே
விஞ்சும் விரல்வித்தை யால்மனப்
புண்ணுக்கு
டிஞ்சரிட்டான் வந்திந்த Dude!
சோக இசைபுடிச்சி ஜோராய் அசைபடிச்சி
தேகத்தில் ஜீவன் திசைபுடிச்சி -
ராகக்
கடைகட்டப் போறான் கடைக்குட்டித்
தம்பி;
விடைபெற்றுக் கீறேன் மியாவ்!
காணக் கிடைக்கிறப்போ Godஇடம் நான்கேட்பேன்
வேணு துளைபோல வேணுமென்று; - ஆனவரை
எல்லார் மனக்காயம் என்னாலே ஆறுமுன்னா
புல்லாங் குழலாவேன் போய்!
===
மை லார்ட்!
'பாழாம்கல், வாசற் படிக்கும் உதவாத
கூழாங்கல்' என்றுபலர் கூறுகையில் - ஏழாங்கல்
ஆட எடுத்தவளை, அன்பைக் கொடுத்தவளை,
லாடம்போற் காக்கவைMy Lord!
சுள்ளியினும் சின்னவனை சூப்பர்மேன் என்றவளை;
'வில்லி'என மஞ்சத்தில் விண்டவளை; - அல்லிலென்
பாய்க்குத் துணையாகி வாய்க்குண வானவளைத்
தாய்க்குநிகர் தாங்கவரம் தா!
மசித்துத் தினமென்னை மையாகப் பூசி
ரசித்து விரல்அரத்தால் ராவிப் -
புசித்துக்
கொழுத்தஎன் கண்மணியைக் கொண்டாடிப் பாட
எழுத்துவகை மூன்றினையும் ஈ!
திட்டுமென் வார்த்தையிலும் தேனுளது என்றுசொல்லிச்
சொட்டுவிடா மல்மாந்தும் சுந்தரியை -
எட்டையிரண்
டால்வகுத்த பாநான்கின் டான்ஆன வெண்பாவில்
டீல்செய்யத் தந்துவிடு டிப்ஸ்!
பச்சைத்தண் ணீர்அவளின் பட்டுவிரல்
பட்டவுடன்
அச்சோ! அமிழ்தாதல் ஆச்சரியம்; - எச்சிலிலே
இன்சுலின் வைத்துள்ள ஏஞ்சலை நானெழுத
பென்சில் தரவேணும் ப்ளீஸ்!
தெர்மாமீட் டர்விரலால் தேகவெப்பம்
கண்டுசொல்லும்
பர்மாதேக் கை,எனது பாதியை, - வர்மாபோல்
ஓவியமாய்த் தீட்ட உதவாது போனாலும்
காவியமாய்த் தீட்டவழி காட்டு!
எமகாபைக் வேகம்; இரவெல்லாம் போகம்;
எமகா தகிதான் இணையாள்; - சமகால
ராட்சசியைப் பாட ரசனைமிக்க
வார்த்தைகள்தா!
மாத்தூக்கம் போடா மலே!
பெண்வண்டின் கண்வண்டைப் பின்னாடும்
பூஞ்சிண்டைப்
பண்பாட வார்த்தையில்லாப் பாழ்மண்டை -
கொண்டென்ன?
டேக்இட்! இலையென்றால் தேவா! இயக்குஅறிவை
ராக்கெட்டின் வேகத்தில் ரன்!
நாளும் புதுபோதை; நாயகி சொல்கீதை;
மாளும் அவள்தொட்டால் மாவாதை; - ஆளும்
அரசியும் ஆனாள்; அடிமையும் ஆனாள்;
உருகிநான் பாட உதவு!
ரைட்டான ராங்கவள்; ராங்கான ரைட்டவள்;
நைட்டியில் வாழ்கின்ற நைட்டிங்கேல்; - டைட்டான
லூசவள்; ரொம்பவே லோலாயி யைப்பாட
யூசுவல் சொற்கள்நோ யூஸ்!
முகத்தில் பவுடர் முலாம்பூசாப் பொன்னை,
ஜிகர்தண்டா போலினிக்கும் ஜின்னை - மிகவே
நகாசுவேலை பண்ணி நவீனவெண்பா பாட
சகாயம்நீ செய்வாய் சகோ!
யுனிக்கான யுக்தி;அதில் ஊடாடும் சக்தி;
யுனிவர்சல் ரேஞ்சில் உவமை; - இனியுமொரு
பர்சனல் வேண்டுகோள்; பாட்டைப் படிப்பவன்
மெர்சல் அடையணும் மேன்!
==
பட்டம் எனக்கெதற்கு? பாராட்டும்
வேண்டாமே;
அட்டையில் சான்றிதழ் ஆர்கேட்டார்? – விட்டுவிடு
கேடயம் தாவெனக் கேட்டேனா? மாலைபொன்
ஆடையுமே வேண்டாம்; அடங்கு!
வீட்டுமரம் இல்லைநீர் விட்டு வளர்க்கநான்
ரோட்டு மரமில்லை ரூல்ஸ்போட; – காட்டுமரம்
மண்முட்டித் தானாய் வளர்ந்து
நிமிர்ந்தெழுந்து
விண்முட்டு கின்றேன் விரிந்து!
===
சூனாபானா விடுடா ஜூட்!
அத்தை மகளுக மாமன் மகளுக
மொத்தமா வண்டியிலே வாராக - எத்தைநான்
வேணாம்னு தள்ளுறது? வேணுமின்னு
அள்ளுறது?
'சூனாபா னா'விடுடா ஜூட்!
கம்மாக் கரையோரம் கண்டொருத்திக்
கன்னத்தைச்
சும்மாத்தான் கிள்ளிவெச்சேன் சொக்கிட்டாள்; - கும்முன்னு
தோப்போரம் நின்னவளின் தோள்தொட்டேன்
சிக்கிட்டாள்;
கேப்பில் விழுந்தாளோர் கேர்ள்!
கண்ணடிச்ச குத்தமெனைக் கட்டென்றாள்
தாலியைப்
பெண்ணொருத்தி; தாரேன்றா பேரழகி -
இன்னொருத்தி
நானவட்காய்க் காத்திருந்து நாலுநாள்
பின்னாலே
போனதுக் கேபுருசன் போஸ்ட்!
பேரட் நிகர்த்தவளா பெஸ்டி? டுவெண்டிஃபோர்
கேரட் அனையவளா கேர்ள்ஃபிரண்ட்? - ஈரெட்டில்
பாக்குறவ ளெல்லாம் படுசூப்பர் தான்;சொன்னாக்
கேக்குதா உள்ளம் கிடந்து!?
ஒன்றோ டிருந்தாத்தான் உத்தமம்; அல்லாம
இன்னொன்னு தேடினா இம்சைதான்; - இன்றளவில்
இத்தனையைக் கட்டினா என்னாகும் என்நிலமை?
ஒத்தையில வாழ்ந்துடலாம் ஓய்!
===
மேனினும் மேல்தான் விமென்!
பெண்செய்ய வாகிறதே ஆண்பணியை; ஓர்நாளும்
பெண்பணியை ஆண்செய்ய வாகிறதா? - ரெண்டுகையால்
ரெண்டா யிரம்வேலை ரெண்டே நிமிடத்தில்
உண்டில்லை பார்ப்பாள் உமன்!
பைக்சாவி தேடிப்பார்; பர்ஸ்தேடி
ஓடிப்பார்;
மைக்இன்றிப் பிள்ளைகளை மேய்த்துப்பார்; - கைக்கொன்றாய்
எத்தனை வேலை? இயன்றுபார்; இத்தனையும்
பத்து நிமிஷத்தில் பார்!
ஓய்வில்லா வேலைகளால் ஓவர்டைம் வேளைகளால்
மாய்கின்றார் வீடுகளில் மங்கையர்; - தேய்ந்தும்
நடைபோடும் பெண்ணைத் தடைபோட வேண்டாம்;
அடைகாக்கத் தானா அணங்கு!?
ஆளப் பிறந்தவரை ஆசைக்கு நாயகியாய்
மூலையில் குந்தவைத்தான் முப்பாட்டன்; - நாளைகளைத்
தன்வசம் ஆக்கும்பெண் தங்கங் களைநீயும்
பொன்விலங்கு பூட்டாதே போட்டு!
வீட்டிலே பெண்பாடு வேதனை கண்கூடு
நாட்டிலே பெண்பாடு நாய்ப்பாடு; - ரோட்டிலே
ஒத்தையில் போய்வர ஓர்நாளும் ஆகிறதா?
மெத்தைப் பொருளா விமன்!?
===
கொழுத்தவெண்பா என்னளவில் கோஸ்ட்!
ஊசிமுனைக் காதுக்குள் ஓட்டகம்
நான்நுழைப்பேன்;
வீசியடிக் கும்காற்றின் மேல்நடப்பேன்; - நாசிவழி
அந்தக் கருந்துளையை அப்படியே
உள்ளிழுப்பேன்;
இந்தவெண்பா ஹார்ஸ்கொம்பு எனக்கு!
சோற்றைநெல் ஆக்கிவயல் தூவட்டா? ஆலுயரம்
நாற்றை வளர்த்தெடுத்து நான்நடட்டா? - சீற்றப்
புயல்பிடித்துக் கட்டட்டா? போடா!போ! வெண்பா
முயல்பிடிக்க முட்டுதுஎன் மூச்சு!
நேராம் நிரையாம் நிரைபுவாம் நேர்பாம்வெண்
சீராம் தளையாம்கை சிக்காதாம்; - ஹே!ராம்!
வழுக்கைத் தலையில் மயிர்வளர்ப்பேன்; இந்தக்
கொழுத்தவெண்பா என்னளவில் கோஸ்ட்!
தளையைப்பார்ப் பேனா? தனிச்சொல்பார்ப்
பேனா?
விளைச்சல் எதுகையிடு வேனா? - முளைத்தெழும்
மோனை அறிவேனா? மோவாய் சொறிவேனா?
ஆனைநான் ஏற்பேனா ஆப்பு!?
சக்தி தருமாம்; தடந்தோள் வளர்க்குமாம்;
யுக்தி வருமாம் யுவர்ஹானர்! -
முக்தி
எலிபிடிக்க என்றும் இசைவேனா? வெண்பாப்
புலிபிடிக்க நான்குடிப்பேன் பூஸ்ட்!
===
வெண்பா பிராந்தி; விருத்த விராட்கோலி;
ஒண்பா ஒயின்;மரபு ஓட்ஸ்கஞ்சி; - நண்பா!நீ
இப்படியாய்ப் பட்டங்கள் எங்கேனும்
கண்டதுண்டா?
கப்பெனப் பற்றிடத்தா காசு!
எலிக்குத் தரும்பட்டம் ஏலியன்; மூக்குச்
சலிக்குத் தரும்பட்டம் தண்டர்; - மலிந்த
விருதுகளால் பேஸ்புக் விலாச்சொறியக்
கண்டு
கருகிடுதென் நெஞ்சு கனன்று!
'தான்'அரை வேக்காடு தானென்
றறிந்திருந்தும்
தேன்தடவிப் பட்டம் தினம்விற்பார்; - நான்நீஎன்று
ஓடிப் பெறுவதற்கும் ஓர்கூட்டம்
உள்ளதனால்
பேடிக்கும் பேரின்று பெண்!
நாவலர் பட்டமுண்டு நாலா யிரத்திற்கு;
பாவலர் பட்டமதில் பாதிவிலை; - கேவலம்
காசிற்காய் இங்கே கலர்கலர்
பட்டமீயும்
வேசிக்குப் பேர்'தமிழ் வேந்து'!
காசிருப்போர் வாங்கும் கடைச்சரக்குத்
தான்விருது;
ஆசிருப்போன் வாங்கிட ஆகாதே; - பேசிவைத்துக்
கொண்டு தருவதும் கூனிப் பெறுவதும்
தொண்டென் பவர்முகத்தில் துப்பு!
தமிழே அறியா தவன்தருக துட்டு;
தமிழறிந்தோன் ஏந்துக தட்டு; - தமிழ்க்கம்பன்
பட்டம் உனக்கு; பணமவர்க்கு; கேட்பதெவன்?
சட்டமவர் சர்ட்பைக்குள் சார்!
கூவிக் கொடுக்கையில் கூழ்விலை; நீயாகத்
தாவிப் பெறுகையில் தங்கவிலை; - பாவி!
கருதாமல் சென்றுநீ காசையிழக் காதே;
விருதால் வரும்வாழ்வு வீண்!
கூவி அழைப்பான்தான்; கூறுகட்டி
விற்பான்தான்;
கேவி அழுதுநீயும் கேட்கிறாய்தான்; - சாவிசிறு
பூட்டிலே என்றால் புகழலாம்; நெல்வயல்
காட்டிலே என்றால் கடுப்பு!
நாளும் ஒருசண்டை; நாறும் பலர்கொண்டை;
மீளவகை அற்றுடையு மேமண்டை; - கேளுமப்பா!
மாஸ்புக் இதுவல்ல மட்டமாய்ப் போனதிந்த
பேஸ்புக் வெரிவெரி பேட்!
பட்டம் தரஅவன் பல்கலை வேந்தனா?
மட்டம்தட் டாதநீ மாந்தனா? - சட்டெனப்போய்
மண்டியிட்டு ஏங்குவதா? மானத்தை வாங்குவதா?
குண்டிக்குச் சந்தனமா? கூறு!
===
ஏலே எசக்கி! எருதுவயல்
மேயுதுடே!
வாலே! விரட்டாட்டி வம்புவரும்; - நாலே
அடிச்சுவட்டை வச்சிஅது ஆர்வீட்டு மாடென்று
உடனறிவான் ஊர்காரன் ஓடு!
ஓரிடத்தில் மேயாமே வேறிடத்தில் மேயப்போய்
யாரிடத்தில் சண்டைமூட்ட எண்ணமோ? - நீரிடத்தில்
நிற்கும்புல் பாராமே நெல்வயல் தேடுதுபார்
குற்றமில்லை கைத்தடியால் குத்து!
===
தண்ணியில் லாமல் தலைக்குக்
குளிப்பாட்டித்
துண்டேயில் லாமல் துவட்டிடுவேன் -
கண்டபடி
கத்திக் கதறினாலோ கைகால் உதறினாலோ;
பத்திரம்மண் டைஃபன்னி பாய்!
நாங்க இருக்கோம்ல!? நாராக்
கிழிப்போம்ல!?
கேங்காய்த் திரண்டுவந்து கேட்போம்ல!? - ராங்ரூட்டில்
கேப்புல பூந்து கிடாய்வெட்டப் பாக்காம
கூப்புல நீபோயி குந்து!
ஏணிவச்சி நீயேற ஏழுமாடிக் கட்டிடமா?
கோணிவச்சி நீயள்ளக் கோலிகுண்டா? – தோணிவச்சி
நீகடக்க நீத்தமா? நிற்கும்
எவரஸ்ட்நான்;
வேகத்தீ; அண்ட வெளி!
கூத்திமேல வக்கிற கொஞ்சமரு வாதியும்
வாத்திமேல
வக்கிறானா வக்காளி; - ஏத்திவிட்ட
ஏணிய எத்துறதும் ஏமாந்தாக்
குத்துறதும்
சாணிக்குண் டான சரக்கு!
வித்தையில் நான்டாடி; வேதனையில் வைதாடி;
கெத்தான ஆளுநான் கில்லாடி; - நித்தியன்நான்
இப்படிப்பார் ஜிம்பாடி என்பாடல் ரம்ஜாடி
அப்படிக்காப் போநான்கு அடி!
இந்தஇட மென்ன எழுப்பிவிட்டு
நீயமர
சந்தைமட மா?இல்லை சத்திரமா? - முந்திமுந்தி
முன்னேறி நான்வந்து முன்னூறு
பேர்வென்று
நின்ன எடம்டா! நிறுத்து!
உடனிருந்தே கொல்லும் வியாதியென்றாள் ஔவை;
அட!நெசமாய்த் தானதுவும் ஆச்சே –
மடமைக்(கு)
அறிவீட்டித் தானென்ன ஆளாக்கி என்ன
உரையாடல் வெண்பாவுக்கு உஷ்ஷ்ஷ்!
என்பாநற் சீரகம் உன்பா சிலுக்குரகம்
என்னை விடநீ எழுத்தனில்லை; - என்றென்றும்
அண்டம்நான் பிண்டம்நீ ஆமாம் அதையறிந்து
கொண்டுநட; நானுன் குரு!
===
குரங்கும் கிழவியும்!
:-
பாட்டி வடைசுடும் பால்நிலவில்
லேண்டுவாங்கி
நாட்டார்போல் வீடுகட்ட நான்போறேன்; - கேட்டால்என்
சர்ட்டிலில்லை சல்லிபைசா; தாரேன் கடனாத்தா
அர்ஜன்டா நாலே அணா!
கிழவி:-
எங்கிட்டக் கேட்டா? எதைவித்து
நான்தருவேன்?
ஒங்கிட்ட ருந்தா ஒதவிசெய்; - பங்கிட்டு
ரெண்டு ஃபிளாட்வாங்கி ரெண்டுவில்லா
கட்டிவிட்டா
துண்டில்விழும் வாடகை துட்டு!
:-
ஏடி பழங்கிழவி! என்னிடமில் லாமதான்
ஓடிநான் வந்திருக்கேன் உங்கிட்ட - கேடி நீ
நைசா சுறுக்குப்பை நான்வரக்
கண்டொளிச்சிப்
பைசாஇல் லேன்றே? பலே!
கிழவி:-
வெத்தலை ரெண்டு; வெளிர்பாக்கு
நாலஞ்சி;
சொத்தைச்சுண் ணாம்பு துளியளவு; - மத்தபடி
ஒங்கிட்ட நான்மறைக்க ஒன்னுமில்லை; நானென்ன
இங்காளும் மந்திரியா? ஏப்பு!?
:-
வங்கியில் நாம்கடன் வாங்கலாம்னா
நம்மநம்பி
எங்கிருந்து மேனேசர் 'இந்தா!'ம்பான்? - இங்கிருந்து
ஓடும் பணக்காரர்க்கு ஓடோடி 'இந்தா!'ம்பான்;
வாடும்நம் போன்றவர்க்கு வாழ்வு?
கிழவி:-
மனச உடாத; வருத்தப் படாத;
நெனப்புநெற வேறும் நெசமா; - மனஞ்சொலுது
'உள்ளூரில் வேண்டாம் உலகவங்கி யில்கேட்டா
இல்லேங்க மாட்டான்' இனு!
:-
பில்கேட்ஸா நாம?வெறும் பிஸ்கோத்து தாம்மே!'போய்
நில்கேட்டுக் கப்பால நீங்க'ளென்பான்; - பல்கழன்ற
மூதாட்டி நோக்கு முதியோர்
பணம்வருமே!?
தோதாகா தாஅத் தொகை?
கிழவி:-
தேத்திக் கொடுத்தகாசைத் தேடிவந்து
எம்மவனுக்(கு)
ஊத்திக் கொடுத்தே உருவுறாங்க; - ஆத்தி!இது
ஆளும் அரசா? அறுகுமுளைக் காத்தரிசா?
நீளுமா இங்கிவர்க்கோர் நீட்!
:-
பேசாம நாமபோய் பேலஸ்தீன்
இஸ்ரேலைக்
காசாவில் வைத்திருவர் கைகுலுக்கி -
லேசாய்ஓர்
சண்டை நிறுத்த சமாதானம் செய்வோமா?
அண்டையில்ஆள் இல்லை அதற்கு!
கிழவி:-
ஏழைசொல் அம்பலம் ஏறுமா? நாம்சொல்லிப்
பீழை அமெரிக்கா பிந்துமா? - கோழையைப்போல்
அங்குவந்தா ரங்குடிக்கு அம்மண்ணின்
மைந்தரின்
செங்குருதி கேட்குதா? ச்சீ...!
:-
ரெண்டிருக்கு வெத்தலைன்னே; ரெண்டிலொன்னு
தந்தாக்கா
மென்றுகொண்டே பேசலாம் மேலநாம; - கொண்டா
சுறுக்குப் பழம்பையை; சுள்ளுனுவீ ழாம
சிறுக்கி மவளே! திற!
கிழவி:-
வாங்கிவந்து வார்த்தைகளை வக்கனையாய்
நீதொடுத்துத்
தீங்கரும்பாய்ப் பேசித் திதிக்கவைத்தாய்; - பூங்கவிதை
ஒற்றிலையென் றாலும் உருப்படும்; முற்றுறாது
வெற்றிலை இல்லா விருந்து!
===
குழாயடி சண்டை வெண்பா!
பெண் 1:-
ஒத்தக் கொடம்புடிக்க ஓடி எடம்புடிச்சா
கொத்தாநா லேந்திக் குறுக்கவரே? - குத்தகைக்கு
நீயெடுதி ருக்கியாடி? நீரொம்ப லக்கியாடி?
ச்சீ..!யெடத்தக் காலிபண்ணு டி!
பெண் 2:-
ஒம்புருசன் போட்டதாடி? ஒங்கொப்பன்
விட்டதாடி?
ஒம்முடைய காசுலதான் ஓடுதாடி? - எம்புருசன்
போராடி வாங்கினான்டி; போலிஸடி
தாங்கினான்டி;
நீர்வார ரைட்ஸ்இலையா நேக்கு!?
பெண் 1:-
அறுத்துப் புடுவேண்டி; ஆம்பளைய வைதால்
பொறுத்துக் கிடமாட்டேன்; பொட்டைச் -
சிறுக்கிநீ
நிக்கும் வரிசையில நிக்காம முன்னால
நக்கவா வந்தே? நகர்!
பெண் 2:-
சின்னக் கொடமெடுத்து சிங்காரி
வந்திருந்தா
முன்னாடி வந்தேன்டி முட்டவரேன்? - இன்னிக்குப்
பூரா புடிச்சாலும் ஃபுல்லாகாக்
கொப்பரையை
நீராளக் கொண்டுவரே நீ!?
பெண் 1:-
சொம்பைச் சுமக்கவே தெம்பில்லா
நீயெல்லாம்
எம்பிக் குதிப்பதென்ன எம்முன்னே? - எம்புருசன்
வாங்கிக் கொடுத்தகொடம் வங்கக்
கடல்புடிக்கும்;
ராங்கிக் கிதிலேன் ரவுசு?
பெண் 2:-
யார்கேட்டா ஒங்கொடத்த? யார்பாத்தா
ஒங்கடத்த?
யார்கேட்டா உன்னிடத்தில் யாசகத்த? - ஊர்பார்க்க
உம்பெரும பாடுறியே; என்வறும சாடுறியே;
தும்ப(ம்)வாங்க வாவந்தேன்? த்தூ...!
பெண் 1:-
ஆரவல்லி சூரவல்லி ஆருகிட்ட வாரதுள்ளி?
காரைவீட்டுக் காரிநான்டி காஞ்சசுள்ளி! -
கூரைவீட்டுச்
சண்டாளி காட்டுமுள்ளி சாப்பிடுடி
கையிலள்ளி
கிண்டிவரேன் நச்சுக் களி!
பெண் 2:-
எம்புருஷன் ஜாடையிலே எண்ணிரெண்டு
பெத்தவளே!
ஒம்புருஷன் ஜாடையிலே ஒன்னிருக்கா? - வம்பிழுத்தா
போட்டுடைப்பேன் புன்மைகளை; பொட்டல்காட்
டுண்மைகளை;
காட்டட்டா சாட்சி களை?
பெண் 1:-
ஒத்தாளைப் பாத்தவநான் உத்தமியா
வாழ்ந்தவநான்
பத்தாளைப் பாத்ததநீ பாத்தவநான்; - அத்தனையும்
எம்மேல ஏத்துறநீ ஏடுகள மாத்துறநீ
நிம்மதியா சாவாயா நீ!?
பெண் 2:-
கொண்டைபிடி சண்டையில கோல்டுமெடல்
வாங்கினவ;
சண்டையிட்டு ஆஸ்காரும் தட்டினவ; - சுண்டெலிநீ
எம்முன்னே நிக்கிறியா? எஞ்சிண்டைப்
பிக்கிறியா?
யம்மாடி நீசமதை யா!?
பெண் 1:-
இந்தாடி வாங்கிக்கோ என்இடியத்
தாங்கிக்கோ
பந்தாடப் போறேன்டி பாத்துக்கோ; - குந்தாணி!
கன்னங்கள் வீங்கிக்கோ? பல்லுனதே
வாங்கிக்கோ!
கொன்னுடுவேன் நீதள்ளிக் கோ!
பெண் 2:-
உச்சி மயிறறுத்து உள்ளங்கால்
தோலுரித்துத்
தச்சி ஒனக்கே தவிலடித்து -
மிச்சமற
பாடை உனக்கெடுத்துப் பாவக்
கணக்கெடுத்துத்
தேடிவைப் பேன்டி திதி!
கூட்டத்தில் ஒருத்தி :-
அக்கா! அவள்பிடி; நிக்கா திவள்பிடி;
ஒக்கார வைப்போம் ஒதுங்கடி -
கொக்கரித்து
மெய்கொட்டத் தோணுமாடி? வீராப்பு வேணுமாடி?
கைகொடுத்துக் கொள்ளுங் கடி!
மற்றொருத்தி :-
கூறுகெட்டுப் போட்ட குழாயடிச் சண்டையில
நீரு வரதிப்போ நின்னுடுச்சே; - கூறுங்கடி!
எந்தநீரில் நாஞ்சமைக்க? எந்தநீரில்
நாநனைக்க?
எந்தநீரில் நாங்குளிக்க என்று!
===
பிடிவாரண்ட்!
குற்றவாளி 1:-
பொட்டு வெடிதான்டா போட்டேன்; அதுக்காக
ஜட்டியொடு உக்கார வச்சிட்டான்; - சட்டத்தின்
முன்னால் நிறுத்திட்டான்; முன்கதையை
மாத்திட்டான்;
தண்டனை தந்துவிட் டான்!
குற்றவாளி 2:-
மூனுநாள் உள்ளவெச்சி மொத்தகதை
மாத்திட்டான்;
ஏனுன்னு கேட்டதுக்கு எத்துவிட்டான்; - நானுன்னைப்
போல வெடிக்கலே; வேடிக்கை
தான்பாத்தேன்;
ஆளைத்தூக் கிட்டான் அதுக்கு!
குற்றவாளி 1:-
சுருள்காப்புத் துப்பாக்கி சுட்டதுதப் பென்று
பொருள்காட்சி ஆக்கிவிட்டான் போலீஸ்; - தெருசாட்சி
வந்துசொல்லிக் கேக்கலே; வாண்டுன்னும்
பாக்கலே;
எந்தஊர் ஞாயம் எலே!
குற்றவாளி 2:-
இப்படித்தான் கேட்டேன் இடுப்பிலொரு
குத்துவிட்டான்;
அப்படிப்போய்க் குந்தென்று அதட்டிவிட்டான்; - உப்புபெறாச்
சின்ன விஷயத்தை ஊதிப் பெரிசாக்கி
என்னை அடைச்சிட்டான் இங்கு!
குற்றவாளி 1:-
ஆனை வெடிபோட்ட ஆளைப் பிடிக்கலே;
வானவெடி போட்டவன் மாட்டலே; - நானெடுத்து
மூனு வெடித்திரியை ஒன்றாக்கித்
தீவைத்த
சீனிவெடிக் காடா சிறை!?
குற்றவாளி 2:-
ஊசிவெடி வெச்சதற்கும் ஓலைவெடி
போட்டதற்கும்
நாசிவேர்க்க வந்துநின்றான் நாங்கெடச்சேன்; - பேசிவெச்சி
வானவெடி போட்டவனை வையம் பொளந்தவனை
ஏனரஸ்டு பண்ணல இன்ஸு!?
குற்றவாளி 1:-
தின்றவன் தப்பிப்பான்; நோண்டினவன்
சிக்கிப்பான்;
இன்றுநேற் றல்ல, இதான்நிலைமை; - ஒன்றுதான்
காவலர் நாட்டமும் கள்வரின் ஆட்டமும்;
சாவதெல்லாம் ஏழைகள் தான்!
குற்றவாளி 2:-
தெக்குத் தெருவில் சினேகிதி தன்வீட்டு
முக்கில் வெடித்தாள் முனைகிள்ளி -
டக்குனுபோய்க்
கஸ்மால கான்ஸ்டபிள் கைதுபண்ணிப்
போட்டுட்டான்
புஸ்வாணத் திற்காய்ப் புழல்!
குற்றவாளி 1:-
பொண்ணுன்னும் பாக்காம பூவுன்னும் பாக்காமே
கண்கலங்கி நிற்பதையும் காணாமே - என்ஆளு
கம்முன்னு காதலாய்க் கைமேலே வெச்சிருந்த
கம்பிமத் தாப்புக்காய்க் கைது!
குற்றவாளி 2:-
ஆர்க்கும்காட் டாமல் அடைப்பானோ? கொண்டுபோய்ச்
சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பானோ? - ஊர்பார்க்க
நம்மோட போட்டோவை நாலிடத்தில்
வைப்பானோ?
கம்மனாட்டிக் கென்ன கடுப்பு!?
குற்றவாளி 1:-
சாட்சிகள் வேண்டாமாம்; ஜாமின் கிடையாதாம்;
காட்சிப் படுத்தாமல் கைதாமாம்; - பூட்ஸ்மிதி
வாங்கத்தான் வேண்டுமாம்; வாய்திறக்கக்
கூடாதாம்;
நாம்செத்தோம் வாய்தா நகி!
குற்றவாளி 2:-
குண்டாஸில் வந்த, கொலைகேஸில் உள்வந்த,
சண்டாளர் கூடநமைச் சாடுகிறார்; - உண்மையில்நாம்
அம்மாம் பெருங்குற்றம் அப்படி
என்னசெய்தோம்
இம்மாம் பெரிய எதிர்ப்பு!?
குற்றவாளி 1:-
குற்ற உணர்வூட்டிக் கேஸைநம் மேலேற்றிச்
சுற்றம் தவிக்க ஜுரம்கூட்டிக் - கொற்றவர்கள்
கூறியதைக் கேட்கவைத்துக் கொள்கைகளை
ஏற்கவைத்துப்
பீறிடவைப் பான்நாட்டுப் பித்து!
குற்றவாளி 2:-
ஆலைகள் மூடமாட்டான்; ஆரண்யம்
காக்கமாட்டான்;
வாலைக் கனிமவளம் வைக்கமாட்டான்; - ஓலைவெடி
ஒன்னுரெண்டு போட்டா ஒலகம்
அழியுமென்பான்;
என்னடா சூழலியல் இஃது!?
குற்றவாளி 1:-
சரக்கடிக்கக் காலநேரம் சட்டத்தில் இல்லை;
சரவெடிக்குப் போட்டான்பார் சட்டம்; - வரவரநம்
சின்ன மகிழ்ச்சியைச் சீதச்
சுதந்திரத்தைக்
கொன்றுபோட்டு ஆடுகிறான் கூத்து!
குற்றவாளி 2:-
அவனப்பங் காசையா ஆட்டயப் போட்டோம்?
எவனப்பங் காசை எடுத்தோம்? - சிவனேன்னு
வீட்டுல திட்டுவாங்கி வீதி யிலவெடிச்சா
மாட்டுவானா கையில் விலங்கு?
குற்றவாளி 1:-
ஏட்டைய்யா பாக்குறான் ஏத்தமா நோக்குறான்
கேட்டுட்டான் போலநம் கேலிகளை; - வாட்டமா
மூஞ்சிய வெச்சிக்கோ முன்னவரான் பிச்சிக்கோ
வீங்கிருமில் லேன்னா விலா!
===
வீண்ஜம்பம் வேண்டாம் விடு!
புல்லாங் குழல்வேண்டாம் பொய்யின்
நிழல்வேண்டாம்
நல்லான்போல் ஏய்க்கும் நகைவேண்டாம்; - அல்லாளா!
இற்றை நவீனனாய் என்முன் எழுந்தருள்
அற்றைப் பிழையனாய் அன்று!
பீதாம் பரமெதற்கு? பேண்ட்சர்ட்
அழகுனக்கு;
நாதா!நீ ஆகு நவீனமயம்; - ராதாநான்
வண்ண மிடியணிந்து வாகாய்ச்
சுடியணிந்து
எண்ணம்போல் வாழ்வோம் இணைந்து!
மாடுகள் மேய்க்கவேண்டாம் மானமே போகிறது;
ஆடுகள் மேய்க்கவேண்டாம் ஆளைவிடு; - காடுவிட்டு
நாட்டிலோர் வீடுபார்ப்போம் நல்லதோர்
பாடுபார்ப்போம்
போட்டுவை காதில்பார்ப் போம்!
கிடார்எடுத்து வாசி கிறுக்கியெனை யோசி
விடாப்பிடியாய் அன்பள்ளி வீசித் -
தடாலடியாய்
என்பெரு மைபேசி என்னைமட் டும்நேசி
தின்னவெனை யாசித் திடு!
பீசா பிரியாணி பர்கர் கிடையாதா?
ராசா! திருட்டுவெண்ணை ராவுணவா? - பேசாதே!
உன்பின்னால் வந்தேன்பார் உன்னைநம்பி
நொந்தேன்பார்
என்பசிக்குத் தோதா இது!?
பஞ்சுமெத்தை வேண்டும்உன் பாம்புமெத்தை
வேண்டாம்போ!
மஞ்சனே! நீக்கு மயிற்பீலி; - கொஞ்சமேனும்
கற்றவன் போல்நட காசினி போற்றிட
நற்பெய ரோடு நட!
வெண்ணை திருடினாய் வேந்தன்நீ; உன்வழியில்
மண்ணைச் சுரண்டுகிறார் மண்ணாள்வோர்; - உண்மையில்
உன்னிருப்பை நம்பாதோர் உன்வழியில்
ஏய்ப்பதுதான்
என்நகைப்புக் காணது இடம்!
கூர்விழிப் பெண்ணெனக்குக் குன்றளவு
பொன்னெதற்கு?
ஓர்முழம் போதாதா ஓதிக்கு? - கார்வண்ணா!
மேய்ப்பனுக் கித்தனை மின்னும்பொன்
ஏதென்று
காப்பிடுவர் வந்துனது கைக்கு!
அக்காலக் கண்ணன்நீ ஆடை களவாளி;
இக்காலப் பெண்களல்ல ஏமாளி; - முக்கியமாய்
ஆண்பெண் சரிநிகர் ஆன கதையுணர்;
வீண்ஜம்பம் வேண்டாம் விடு!
வேலைக்குப் போனோமா வீடுவந்து
சேர்ந்தோமா
சேலைக்குச் சேவைகள் செய்தோமா - பாலை
மறவாத சேய்வளர்த்தோ மாவெ(ன்)றிரு; தேடாய்
உறவாட வேறோர் உறவு!
===
போற போக்குல ஒரு பகடி!
முன்னிரு வரிகள் ஆண் பேசுவதாயும், தனிச்சீர்
தொடங்கிப் பின்னிரு வரிகள் பெண்பேசுவதாயும் கொள்க....
மாசா இருக்க; மனசக் கடையுற;
ரோசா கொடுத்துன்னை ரூட்விடவா? - பேசாம
போமாட்ட? என்ன புதுசேட்ட? ஒங்கையில்
நாமாட்டே னப்பா நட!
அசந்தா கவுக்குறியே ஆள, உனையென்
வசந்தான்னா செய்வதேன் வம்பு? - கசப்புக்குத்
தேனென்று பேர்வைக்கத் தேனா இனிச்சதுன்னா
நானென்னைத் தாரேன்நீ நம்பு!
ஏறெடுத்து நான்பார்க்க யாரோபோல்
நீபார்க்கக்
கூறெடுத்துப் பார்வைக் குசும்பென்ன? - சேறெடுத்துப்
பூசினாற் போல்முகமும் பூசணிக்காய்
போல்வயிறும்
ராசியெனப் பார்த்தேன் ரசித்து!
குஞ்செலி போல்மூஞ்சி கொண்ட உனக்கெல்லாம்
அஞ்சலி என்றுபேர் ஆர்வைத்தார்? - இஞ்சிஞ்சாத்
தோல உரிச்சுன்னைத் தொங்கவிட்
டாத்தெரியும்;
ஆளப்பார் என்னா அதப்பு!
கொடியேத்தி நான்மகிழக் கூடாதா என்ன?
அடியாத்தி! 'கர்ச்சிப்' அளிப்பாய்; - படியேறி
வந்தாலும் நின்னாலும் வாசலில செத்தாலும்
இந்தாங்க மாட்டேன் எடுத்து!
தட்டாம்பூச் சானஉடல் தன்னால் தளதளக்கும்
பட்டாம்பூச் சான பவிசென்ன? – கொட்டாவி
விட்டபடி நின்று விவரமொன்னும்
கேட்காதே
பட்டென் றுடைச்சிடுவேன் பல்!
அஞ்சாறு பெண்தோழி அல்லக்கை கொண்டவளே!
இஞ்சாரு கொஞ்சமெனை ஏறெடுத்து; - இஞ்சிதின்ன
மூஞ்சப்பார் மூஞ்சூறு; மூளை உனக்கேது?
தீஞ்சத்தார் வண்ணம் தெளிவு!
கஞ்சாச் செடிக்கிரண்டு கால்முளைத்த பெண்ணழகே!
நெஞ்சோரம் எந்தன் நினைப்புண்டா? - அஞ்சாம
செத்தஒரு பாம்புக்கு ஷேவிங்நீ
செய்துவிட்டா
அத்தமக வைப்பேன் அகம்!
செக்குநெடி தாங்கல; சீப்பெடுத்தும்
வாரல;
சிக்குமுடி கண்டதுண்டா சீயக்காய்? - நிக்காத
ஜீன்ஸத் துவச்சிநீ திங்கள்
இரண்டிருக்கும்
நான்சென்ஸ் குளிச்சதெந்த நாள்!?
ஆத்தாடி உன்மேல் அடங்காத காதலுன்னா
காத்தாடி கண்ணில் கனலெதற்கு? - தீத்தாவிப்
பூத்தெழுந்த சீதைபோல் பூக்குளித்து
நீயெழுந்தால்
காத்திருந்து நான்பிடிப்பேன் கை!
==
அம்மாஞ்சி வெண்பா!
அம்மாஞ்சி என்றால் அத்தைமகன், அறிவுக்
குறையுடையவன் எனப் பொருள்படும்.
உறவும் குறை அறிவும் ஒருங்கே பெற்ற ஒருவனை
ஊராரே சும்மா விடார்.
இதில் முறைப்பெண்ணிடம் சிக்கினால் சொல்லவா
வேண்டும்?
இதோ!
முன்னிரு வரிகள் அவளும்...
தனிச்சீர் தொடங்கிப் பின்னிரு வரிகள்
அவனும்...
(குறிப்பு:- முதலிரு பாடல்களில் ஆண் தன் மனதிற்குள் பேசிக்கொள்வதை
உற்றறிக.)
வழிபாத்துப் போறவரே! வந்தருகில் குந்தி
விழிபாத்துச் சொல்ஓர் விவரம்; - வழக்கேன்?
அடியாத்தி என்னால ஆகாது; சுத்த
இடியாப்பச் சிக்கல் இவள்!
வால்தடையா இல்லேன்னா வானரந்தான்
நீயிப்போ
கால்நடையாப் போறதெங்கே காசிக்கா? - மேல்விழுந்து
வாயக் கொடுத்தா வகையாநான்
மாட்டிப்பேன்;
பேயத்தான் ஆக்கிட்டான் பெண்!
மூச்சும் வரலே; முழியும் சரியில்லே;
பேச்சும் எழலே; பிணக்கென்ன? - பேச்சென்ன
ஒங்கூட? வேணாம் ஒறண்டை இழுக்காதே;
எங்காத்தா திட்டும் எனை!
அம்மா பயமோ? அவசொல்தான் வேதமோ?
சும்மாஎன் னோடு சுதிசேர்ப்பாய்; - பம்மாத்துக்
காட்டாதே; நெஞ்சைக் கடையாதே; சும்மா ரீல்
ஓட்டாதே என்னை உடு!
ஓரமாக் குந்தி ஒருவார்த்தை
பேசாமல்
நேரமாச் சின்னுகம்பி நீட்டுவதோ? - சாரமாப்
பேசிக் கவுப்பாய்;பின் பேசா தறுப்பாய்;நீ
பூசி மெழுகும் புலி!
எச்சில் படாத இளசுநான்; ஒம்போல
அச்சாரம் போடஓர் ஆள்பார்ப்பாய்; - அச்சச்சோ!
சிக்கியவன் செத்தான்; சிவன்பாதம்
போய்த்தொத்தான்;
பக்கிஅவன் பாடுபெரும் பாடு!
இம்மாஞ்சீர் தாரேன்; இருகாணி கொண்டாரேன்;
அம்மாஞ்சி! கட்டிக்க ஆகாதா? - சும்மாவே
அப்பா! வெரட்டுற ஆளை;உனைக் கட்டினா
டப்பாதான் ஆடாதோ டான்ஸ்!
பஞ்சிவெக்கா தேகாதில்; அஞ்சிவெக்கா
தேநெஞ்சில்;
கெஞ்சவெக்கா மல்பொண்ணு கேட்டுவா; - கொஞ்சமிரு
ஆத்தாளைக் கேட்டெனது ஆசையையும்
போட்டுன்னைக்
காத்தால பண்றேன் கணக்கு!
வச்சிவிடு இல்லேன்னா வாடிவிடும்; பூ,பொட்டு
நச்சரிச்சே கொல்லுதெனை நாளெல்லாம்; - கச்சைகட்டி
வாரப்போ போரப்போ வம்பளந்தா எப்படி?
ஆரப்போட் டேனும் அடி!
ஒண்டிப் புலியாட்டம் ஊரில் திரிஞ்சநீ
சுண்டெலி யான சுருக்கென்ன? - பெண்ணால
கண்டமிருக் கென்றான் கணியன்; நமக்குள்ளே
சண்டையெதற் குன்திருவாய் சாத்து!
===
கவிதையாய்க் காதல் கதை!
முன்னிரு வரிகள் பெண்... தனிச்சீர்
தொடங்கிப்
பின்னிரு வரிகள் பாவலன்...
பார்த்ததும் இல்லையோ பாவையை? பார்த்தவிழி
பூத்தபடி நிற்கும் புலவா!சொல்; - பார்த்ததெலாம்
கண்வண்டே யன்றிக் கவியரசன் என்மீது
பெண்வண்டே! என்ன பிழை!?
அழகாய்த்தான் பேசுகிறாய்; ஆளும் அறிவும்
பழக இனிக்கிறதா பார்ப்போம்; - பழகும்முன்
கண்பறித்துச் சூடுகிறாய் கார்குழலில்; வாடுதுபார்
மண்பறித்து நட்ட மலர்!
எனக்கோர் உவமை இயம்பி இதழ்கள்
தனக்கோர் உவமை தருக; - அனம்நீ
அரபுக் குதிரை; அதரம் அமுதன்
மரபுக் கவிதை வரி!
முன்னம் பலபேர் மொழிந்த உவமைகளை
இன்னும் பிதற்றல் எழில்தானா? - என்னை
விளையாட விட்டால் விளையும் புதுஉவமை;
உலைமூடி வைப்ப தொழி!
விற்பனை யானதா? வீரியம் குன்றியுன்
கற்பனை தீர்ந்ததா? காதில்சொல்; - நற்கணினி
நேரெதிர்நீ; மென்பொருளுள் நெஞ்சமெனும்
வன்பொருளைப்
பாரெடுத்து நட்டான் பரன்!
இறவாத கற்பனை ஏற்கிறேன்; உன்னை
மறவாத வாறொருசொல் வார்ப்பாய்; - சிறப்பான
மீம்ஸ்ஸான கண்ணால் விளம்பெனக்கு
உன்னப்பன்
மாம்ஸ்ஸாகச் செய்வோம் மணம்!
கேப்பில் கடாவெட்டக் கேட்டால் விடுவேனா?
தோப்பி(ல்)மறித் தென்ன தொணதொணப்பு? - பூப்படைந்த
செவ்வாழை உன்மேனி; செங்காந்தல்
வந்தேநீ
செவ்வாயைத் தந்தால் சிறப்பு!
தாழம்பூ வாசம் தலைவலி உண்டாக்கும்;
ஆழக் கவிநட்பும் ஆபத்தே; - வாழ
வழிகேட்டே னன்றி வளர்க்கவில்லை
வம்பைப்
பழிபோட்டாய் நெஞ்சம் பறித்து!
அஞ்சிலம்பு போட்டேன் அடிக்கன்றி
எப்பொழுதுன்
நெஞ்சிலம்பு போட்டேன்? நிஜத்தைச்சொல்; - அஞ்சிலென்ன?
அம்பதிலும் ஆசையெழும் அப்படியோர் பேரழகு;
நம்பதிலும் பொன்உன் நகல்!
நாழி பலவாச்சு; நல்கினேன்
நந்நெஞ்சம்;
வாழி!பிற கோர்நாள் வருகிறேன்; - தாழி
உடைவதோ வெண்ணை திரள்கையில்? சாந்தி
அடைவதே தெந்தன் அகம்!
==
திக்குவாயன் காதல் வெண்பா!
ஓ..டி ஒளிகிறாய்; ஓ..ரவிழி
பேசுகிறாய்;
தா..டி வளர்க்கஆள் தே..டுகிறாய் -
ஏ..டி!
எ..என்பேர் அமுதன்; எனக்குன்மேல்
க்கா..தல்;
உ..உன்பேர் எ..என்ன உரை!
தி..திக்குவாய் என்றென்னை திட்..ட்டாதே; காதல்
அ..அக்குவே றாணிவே றாக்க - ம..மக்குப்
பயலானேன் நீ..ஒரு பா..ஆர்வை
பார்த்தால்
வயப்படும் வ்..வார்த்தைஎன் வாய்க்கு!
சா..ந்த விழியுனது சத்தியமாய்
என்..னளவில்
கா..ந்த விழியாகும் கண்மணியே! -
கூ..ந்தலுக்குப்
பூ..க்களும் நெற்றிக்குப் பொட்டும் தருகிறேன்
பா..க்கிவைக்கா மல்சொ..ல் பதில்!
சொல்தி..க்கு மன்றிநா..ன் சொ..ன்னசொல் மாறாது;
கல்மேல் எழுத்துப்போல் கா..ஆப்பேன்; - நில்!நம்
விழியிருக்குப் பே..ச விரலிருக்குத்
தீ..ண்ட
மொழியெதற்கு? வ்..வார்த்தை முழுகு!
நன்றாகப் பே..சி நடிப்பவன்
பின்னால்நீ
சென்றால்உன் வா..ஆழ்க்கை சீரழியும் -
என்போன்றோர்
கய்..விடார்; வெற்றுக் கதைவிடார்; என்றென்றும்
பொய்தொடார்; காதல் புகல்!
==
பிச்சைக் காரனுக்கு காதல் வரக்கூடாதா என்ன?
பிச்சைக் காரனுக்கும் பிச்சைக்காரிக்கும்
இடையிலான காதல் உரையாடலுக்குக் காதுகொடுப்போம் வாங்க...
பிச்சைக்காரன்:-
நாலணா துட்டே! நடக்கும் திருவோடே!
காலணா காசே!வா! காதலிப்போம்; - சீலன்நான்
ராப்பிச்சைக் காரனடி; ராத்திருடன்
இல்லையடி;
தாப்பிச்சை நெஞ்சம் தனை!
பிச்சைக்காரி:-
வண்டுருட் டாம்பழமே! வாய்பெருத்த
வானரமே!
கண்டுருட்ட நானா கடைத்தேங்காய்? - உண்டிக்கே
தேடி இரக்கும் தெனாவட்டே!
தாண்டாதே
லேடிவிஷ யத்தில் லிமிட்!
பிச்சைக்காரன்:-
ஆவி பறக்கின்ற அன்னமே! என்னுடைய
ஆவி பறிக்கின்ற அன்னமே! - கூவிநான்
அம்மாவென் றால்வாயேன்; ஆத்தாளென்
றால்தாயேன்;
கம்மாக் கரைபக்கம் கண்டு!
பிச்சைக்காரி:-
ஓடே தலைகாணி; ஓண்டாண்டி தானேநீ?
போ!டேய்! எனக்குப் பொருந்தாய்நீ; - ஈடேறாக்
காதல் உனக்கெதற்கு? காசில்லாப்
பேர்வழிக்கு?
கீதல் ஒழிடா கிறுக்கு!
பிச்சைக்காரன்:-
சுண்டிவிட்ட நாணயமாய்த் துள்ளிக்
குதிப்பவளே!
மண்டியிட்டேன் தேவி! மணப்பாயா? - ஒண்டிமரம்
தோப்பாகா தன்பே! துணையாய்
வரவேண்டும்;
லாப்பேசிக் கொல்லாதே லவ்!
பிச்சைக்காரி:-
எடுப்பது பிச்சை; இருப்பது வீதி;
இடுப்பிலே கந்தல்; இதில்நீ -
படுப்பதற்குப்
பாய்பார்த்து நிற்கிறாய் பால்பழம்
கேட்கிறாய்;
நோய்ப்பட்டும் கேட்கிறதோ நொங்கு!?
பிச்சைக்காரன்:-
நாலு தெருவிருக்கு; நாற்பது வீடிருக்கு;
மேலும் சிவன்கோயில் மேற்கிருக்கு; - பாலும்
பழமெலாம் வாங்கப் பணமிருக்கு வாடி
பழகலாம் பத்துப் பகல்!
பிச்சைக்காரி:-
நாலூட்டுச் சோறும் நடுப்பந்தி
எச்சிலையும்
மேலூட்டம் கொள்ள விருந்துணவா? - நீலூட்டி
இங்கடிக்க வேணாம்; இளிச்சவாய்ப்
பெண்கிடைச்சா
அங்கடிக்கப் போநீ அகன்று!
பிச்சைக்காரன்:-
இந்தாடி! என்னோட இன்கம் தெரிஞ்சதுன்னா
முந்தானைக் குள்நீ முடிஞ்சிடுவாய்; - குந்தாணி!
இன்கம்டாக்ஸ் கட்டுகிற இந்தியன்நான்
ஊதடிநீ
பின்னாடி வந்து பிகில்!
பிச்சைக்காரி:-
ஆச மவராசா! அத்தபெத்த ஆணழகா!
மீச நிமிர்ந்த மிடுக்கறிஞ்சேன்; - பேச
அழுக்கு மொகம்தேடி ஆலாய்ப் பறந்தேன்;
கழுத்தினில் பொன்தாலி கட்டு!
==
தப்பிவிடு சிக்கா தடி!
சிட்டாப் பறந்திடடி! சிக்காமப்
போயிருடி!
முட்டாப் பயல்பிடிச்சா முட்டிபேர்ப்பான்; - பட்டுன்னு
சோட்டா லடிச்சஉன்னை சோலி
முடிச்சிருவான்;
நீட்டடி கம்பியை நீ!
உன்னோட ஓட்டுக்கும் உன்னிரண்டு
சோட்டுக்கும்
சொன்னானா? நல்லபதில் சொல்வானா? - நின்னேன்னா
பாட்டின்னு பாப்பானா? பண்பாடு காப்பானா?
ஊட்டியில யேமிதிப்பான் ஓடு!
இந்தவேலை ஏம்பாத்த? யார்வருவா
காப்பாத்த?
சந்தையில்நின் றேன்விட்டாய் சாபத்த? - தொந்திவச்ச
போலீசு கோவத்த போய்ப்பார்ப்ப
நாவத்த;
நீலேசில் சிக்காம நீங்கு!
நீயென்ன கண்ணகியா? நின்னிரண்டு
கண்நகியா?
தீயென்ன உன்வாய்க்குத் தேன்ருசியா? - நீயினிமே
காணாப் பொணந்தானா? காண்டா வனந்தானா?
வேணாம்டி தப்பி விடு!
கள்ளச் சரக்குவித்த, கஞ்சா கடத்திவந்த,
பிள்ளைகளை வெச்சிப் பிராத்த(ல்)செஞ்ச; - உள்ளதள்ள
இப்படிப் பொய்கேஸை எப்படியும்
போடுவானே!
தப்பிவிடு சிக்கா தடி!
சாரிசொன்னா தப்புவியோ!? சார்சொன்னா
மீளுவியோ!?
பாரிலுள்ள ஆண்டவன்கால் பத்துவியோ? - யாரிடத்தில்
போய்முறை யாடுவியோ? பொம்மலாட்டம்
ஆடுவியோ?
வாய்தா தருமோ வழக்கு!?
பாவிப் பயல்களெல்லாம் பந்தாவாய்ச்
சுற்றிவரத்
தாவியுனைத் தூக்கத் தனிப்படையா? - ஈவிரக்கம்
நெஞ்சில் இருக்கிறதா? நீதி சிரிக்கிறதா?
உஞ்சாமி காப்பாத்தும் ஓடு!
தூக்குமேடை ஏத்துவானே சாக்குமூடை
ஆக்குவானே
காக்கி பயல்பந்தா காட்டுவானே -
தூக்கிவந்து
பிச்சிப் பிராண்டுவானே பித்தலாட்டக்
காரனிடம்
வச்சிக்க லாமா வழக்கு?
பாதிக்கப் பட்டிருக்கா; வாதிக்க
துட்டிருக்கா?
சாதிக்குக் காப்பாத்தச் சத்திருக்கா? - நீதிக்குக்
கண்ணிருக்கா? கையிருக்கா? காலிருக்கா? பாவமிந்தப்
பெண்ணிருக்கா கண்ணீரைப் பெய்து!
செப்பலோசைக் காள்வோர் செவிகடுக்கும்
என்பதனை
இப்பொழுது நானும் இனங்கண்டேன்; - செப்பலோசை
செய்யும் எனையும் சிறையில் அடைப்பாரோ?
வையேன்; நமக்கெதுக்கு வம்பு!
==
வந்து தரேன்னுட்டு வா!
பொட்டிக் கடையில்போய்ப் பொட்டுக் கடலைநூறு
கட்டித் தரச்சொல்லி வாங்கிவா! -
செட்டிமவன்
எந்திரிச் சுன்னை எடுகாசை இன்னான்னா
வந்து தரேன்னுட்டு வா!
தேங்கா அரைமூடி தேவைக்குப்
பச்சமொளா
வாங்கமறந் துட்டு வராதஉன் - ரீங்கார
சைக்கிளில் போனா சடுதியா வந்துடலாம்
பைக்கில்போ னாப்போல் பறந்து!
தேங்காய்க் கணக்கிலொரு தேன்மிட்டாய்
வாங்குனால்
மாங்காசைஸ் வீங்கும் மறுகன்னம்; - ஏங்காம
சொல்லி அனுப்புன சோலிமட்டும்
பாத்துவா!
எள்ளுருண்டை தாரேன் எடுத்து!
இட்லிக்குச் சட்னி இலாமல் ஒருவாயும்
பிட்டுவைக்க மாட்டான் பெரியவன்; - தட்டுலயே
ஒங்கப்பன் கைகழுவி ஓயாமப் பேசிடுவான்
எங்கப்பன் ஆத்தாள் இழுந்து!
==
தூங்காம ஓட்டித் தொலை!
என்னாத்த ஓட்டுற? இப்படியேன் ஆட்டுற?
பின்சீட்டில் என்இடுப்பைப் பேக்குற; - சொன்னாக்கேள்!
ஆட்டாம ஓட்றா அடங்கொப்பன் தன்னான!
வாட்டுது குண்டி வலி!
ஆறுல போடா அட!அறிவு கெட்டவனே!
நூறுல போயிதான் நொட்டணுமா? - ஏறுனவன்
வாந்தி எடுத்து வயித்தால போணுமா?பஸ்
மாந்தன்மேல் ஏறணு மா?
ரோடாவும் ரோடில்ல பஸ்ஸாவும் பஸ்ஸில்ல
போடாநீ மெல்லமாப் போடாநீ; - ஆடாம
நாங்க அலுங்காம நல்லபடிச் சேரோணும்;
தூங்காம ஓட்டித் தொலை!
காது கிழியுதடா கஸ்மாலம்; ஹாரனொலி
ஏதுக்குத் தான்நீ எழுப்புறியோ? - போதுமடா!
பீதி கிளப்பாமப் பேருந்தை நீஓட்டிப்
பூதி கிளப்பாமப் போ!
'ஜெட்'டையா ஓட்டுற? ஸ்டீயரிங்ஏன் ஆட்டுற?
கெத்தெதுக்கு நீகெட்டக் கேட்டுக்கு? - விட்டாநீ
ஆக்சிடென்டு ஆக்குவ ஆள்கொல்லப் பாக்குவ
ஏக்கிறுக்கா! பஸ்விட்(டு) இறங்கு!
பாம்பா நெலிநெலிஞ்சிப் பாடாப் படுத்திவச்சி
வீம்பாக் கிளம்புறியே வேகமா;
- ஏம்பா!உன்
வீட்டில சொல்லிட்டு வந்துட்டி யா?எங்கக்
கூட்டில் உசுரில்லை யே!
இதுதான்சாக் குன்னொருத்தன் எப்டி விழுறான்?
அதுதான்சாக் குன்னொருத்திக் காட்றா; - பொதுவாக
நிக்கிறவர்க் கிந்தவேகம் நிம்மதிதான்; பார்த்தெரிவான்
ஒக்காந்த பேர்கள் உளம்!
முந்துறவன் முந்தட்டும் முந்தாம போடாநீ!
சந்துல பூந்தேன் தமாஷ்காட்ற? - எந்திரிநீ!
ஏய்!டேய்!கண் டக்டர்! எடுடாநீ வண்டிய;
போய்பாக்க ணும்நான் பொழப்பு!
குண்டுங் குழியுமா கோணலும் மாணலுமா
சண்டாளன் போட்டுவச்ச தார்ரோட்டில் - வண்டிய
உன்னோட இஷ்டத்துக்(கு) ஓட்டினா எங்ககதி
என்னா வதுநீ எழு!
இந்தக் களேபரத்தில் இஷ்டசாங் கேக்குதா?
எந்தப் பயல்போட்டான்? ஈதிசையா? - சந்தடியில்
ஓரக்கண் ணாலொருத்தி ஓலை அனுப்பஅவள்
சார்நிற்கி றார்படியில் சாய்ந்து!
==
எட்டாச்சி இப்பமணி இன்னும் டிபன்வரலே;
பொட்டச்சி என்ன பொழப்புபண்றா? - திட்டினா
மூக்கத்தான் சிந்தி முழியக் கசக்குறா;
கேக்கக்கூ டாததெல்லாம் கேட்டு!
எம்பசிக்கா கேட்டேன் எனக்குள் இருக்கிற
உம்பசிக்குத் தானே உணவுகேட்டேன் -
உம்மேல
அக்கரையா கேட்டஎன்னை அப்படியா பேசுவ?ன்னேன்;
டக்குனுகொண் டாந்தாள் டிபன்!
ஆத்தாள் சமையல்போல் ஆகுமா? காஞ்சமொளா
சேத்தாலும் தேன்கணக்காத் தித்திக்கும்; - நேத்துவரை
அப்படியோர் தேவ அமுதுண்டேன்; தேவையா
இப்படியோர் சாப்பா(டு) எனக்கு?
'ஓட்டல் திறந்தால் உனதிரு கைருசிக்கு
நாட்டில் பலபேர்க்கு நாக்கூறும் - கேட்டுச்சா?'
இன்னேன் அவசிரிச்சா; இம்மாம் பெரும்போய்க்கு
'நின்னேன்' எனத்துடிக்கும் நெஞ்சு!
பொன்னாலு மில்லைப் பொருளாலு மில்லையே
என்னாலு மில்லை இவளாலும்; - சின்னதொரு
பொய்யாலே வாழ்க்கை புரியும்; அதுதானே
நெய்தடவி வச்ச நெசம்!
==
கணவன்:-
எட்டாச்சி இப்பமணி இன்னும் டிபன்வரல;
பொட்டச்சி என்ன பொழப்புபண்ற? - திட்டினா
மூக்கத்தான் சிந்தி முழியக் கசக்குற;
கேக்கக்கூ டாததெல்லாம் கேட்டு!
மனைவி:-
நாலுகை தானிருக்கா? நாலிரண்டு
காலிருக்கா?
ஏலுமின்னா செய்யேனா ஏழ்மணிக்கா? - மேலுகாலு
நோவுதுன்னு சொன்னேன் நினைவிருக்கா? உம்பசி
காவுவாங்கக் காத்திருக் கா?
கணவன்:-
கால்வலிக்குக் கால்புடிச்சிக் கைவலிக்குக்
கைபுடிச்சி
மேல்வலிக்கு மேல்புடிச்சே வீணானேன்; - பால்பழிக்கும்
பல்லழகி! உன்னால் படாதபாடு
நாம்படுறேன்
சொல்லழகி! ஞாயமா சொல்!
மனைவி:-
கால்களை ஏம்புடிச்ச? கைவளை ஏனொடைச்ச?
கேள்கட்டில் சொல்லும் குறுங்கதையை -
ஆள்நீ
இரவிலொரு பேச்சும் பகலிலொரு பேச்சும்
தரவல்ல பேச்சாளன் தான்!
கணவன்:-
ஏதோநான் பாட எதிர்பாட்டு
நீபாடக்
காதோடு கேட்டுப்போய்க் காத்தாட - ஓடோடி
சுற்றத்தைக் கூட்டிவந்து சோலிமுடிப்
பான்ஒப்பன்
முத்தழகி! பேச்சை முடி!
மனைவி:- (மனதிற்குள்)
பேசவச்சிக் கேட்டதும் பேச்சை ரசிச்சதும்
ஆசைவச்ச நாளில் அலுக்கவில்லை; - மீசைவச்ச
ஆம்பளைக்கு இப்போ அரைவார்த்தை
பேசினாலும்
வேம்பாக் கசந்து விடும்!
==
சேவல்:-
முச்சில் அரிசியிட்டு மும்முரமாக்
கல்பொறுக்கும்
மச்ச நெறத்து மவராசா! -
எச்சிலூறக்
கூப்பிடுதே என்னையுந்தான் கொத்திப் பசியாற;
சாப்பிட நாலரிசி தா!
கிழவன்:-
நாலே அரிசிம்பே; நாந்தந்தா
சாப்பிட்டுத்
தாலேய் ஒருபிடி தானென்பே; - ஏலேய்!உன்
புத்தி தெரியாதா? போக்குப் புரியாதா?
ஒத்தலேன்னா வீழும் உதை!
சேவல்:-
வாயே திருவோடாய், மாஞ்சேன் கருவாடாய்;
ஏய்ஏய்கொஞ் சம்தா எழுந்தோடாய்; - தாயேநீ
சொன்னாத் தருவான்;உன் சுட்டுவிழிக்
கேபணிவான்;
பொன்னாத்தா சொல்லடியிப் போ!
கிழவி:-
திங்கிறது இங்கே; துரைக்குத்
தினவெடுத்தாத்
தங்குறது எங்கேன்னு தாஞ்சொலவா? - மங்கலத்துப்
பஞ்சாரம் தேடிப் பறக்கும் உனக்கரிசி
அஞ்சாறு கேக்குதா? ஆங்!
சேவல்:-
நான்போனா தப்புனது நாயகன் அப்பப்போ
தான்போனா மட்டும் சரிதானா? - ஏன்பாட்டி!?
ஏதோநான் பாட்டுக்கே ஏதேச்சை யாப்போனேன்
காதோடு சொல்லுச்சே காத்து!
கிழவி:-
கிழட்டுப் பயலே!நீ கெட்டக்கேட் டுக்கு
விழட்டுமா என்றெவள் வீழ்ந்தாள்? – சுழற்றி
எடுவிளக்கு மாற்றை; எவளெவளுக் கோஎன்
படுக்கையில் கேக்குதா பங்கு!?
கிழவன்:-
பத்தவச் சுட்டியே பங்காளி; வாயிலேயே
குத்தவச் சுட்டியே கூட்டாளி; - செத்தஇரு
சாராய போதைக்குச் சாப்பிட
நானுரிப்பேன்
தோராய மாயுனது தோல்!
சேவல்:-
பிடிகொடுக்க வாறேன்; பிடிச்சுத்தான்
பாரேன்?
தடிக்கிழவா! சம்மதம் தாரேன்; - பொடிநடையாய்
நான்போறேன் முன்னாலே நீவாடா பின்னாலே
கூன்'மல்லி கா'வீட்டுக் கு!
==
விக்டர் எனும்கவிஞர் வெல்லும்
எழுத்துவழி
லிட்டர் கணக்கிலே லிக்க(ர்)விற்பார்; - சொட்டெடுத்து
வாயிலே இட்டவன் மீளாப் பெரும்போதை
நோயிலே வீழ்வான் துணிந்து!
போதை தவறுதான் போதைஅழைத்
துச்செல்லும்
பாதை தவறுதான் ஆனாலும் -
ஈதைவிட்டால்
முன்னேறும் பாவலர்க்கு முன்னேராய்
வேறில்லை;
முன்னேரும் பிந்துமிவர் முன்!
தம்பி உடையவர் தானைப் படைத்தலைவர்
அம்பிபோல் தோற்றம்ஆ னால்'ரெமோ'; - ஜிம்னாஸ்டிக்ஸ்
பெண்ஆண் செயக்காண்போம்; பேரார் கவிஞரிவர்
பண்டமிழைப் பண்ணவைப் பார்!
'கமா'வைப்பார்; அஃதைக் கவிதையென்பான்; புள்ளி
'டெமோ'வென்பான்; கொள்வான் டரியல்; - சமாச்சாரம்
என்னவென்றால் அண்ணன் எழுத்தாலே வந்தவினை;
பொன்னின் துகளதுவும் பொன்!
கிழவனும் தின்னுகிற கிண்டர்ஜாய் அண்ணன்
வழங்கிடும் பூம்பா வரிகள்; - பழகினால்
விட்டொழிக்க ஏலாது; விட்டொழித்த ஆளேது?
கெட்டப் பழக்கமிது கிஃப்ட்!
பண்டோரால் கூடப் பகர ஒண்ணாக்
கற்பனைகள்
தண்டோரா போட்டுத் தருகின்றார்; - சண்டாளர்
மிச்சமே வைக்காமல் விள்ளுகிறார்; நானெழுத
சொச்சமே வைத்தாரா சொல்!?
அடாவடி காட்ட அறியார்; கவியில்
தடாலடி காட்டத் தவறார்; - சடாமுடி
போற்பின்னும் கற்பனையும் பொன்றாக்
கருத்து(ம்);இவர்
காற்பிண்ணும் நான்கு கவி!
சில்லென்ற பீருமிவர் செப்பும்
தமிழ்ச்சீரும்
அல்லை எனக்குள் அழகாக்கும்; - சொல்லுங்கள்!
உங்களுக்கும் அப்படியோர் உற்சாகம் பொங்கியதா?
பொங்கலையென் றாலது பொய்!
பிக்காசோ ஓவியமும் பீத்தோவன்
சிம்பொனியும்
சிக்னேச்சர் காட்டுமிவர் செய்யுளிலே; - விக்டர்
முகநூலெங் கும்தன் முகம்காட்டு
கின்றார்
நகலெடுக்கா தானை நவில்!
==
சேப்பிலே என்ன? சிலநூறு காசிருக்கா?
மாப்பிளே! வாய்யா! மதுகுடிப்போம்; - தோப்பிலே
மூனுசீட் டில்வச்சா மொத்தமா அள்ளிடலாம்;
நானுனக்குத் தோதுசெய்வேன் நம்பு!
கைநடனம் ஆடுதுபார் கண்ணதன்பின்
ஓடுதுபார்
பொய்நடனம் பொம்மலாட்டம் போடுதுபார்; - ஐ!நடுவில்
இட்டசீட் டில்தான் இருக்கு நமது'லக்கு';
துட்டையெல்லாம் கட்டிஅதைத் தூக்கு!
சொன்னேன்ல? சொன்னபடிப் போட்டபணம் ரெட்டிப்பாத்
தன்னால வந்ததைநீ பாத்தேல்ல? - இன்னபடிக்
காப்பீடு தந்திடுமா? கார்பரேட்டு
தந்திடுமா?
கூப்பிடுநீ பாப்போம் குறி!
ஆட்டமிப் போதுதான் ஆரம்பம்; மாப்பிளே!
நோட்டை விரலின் நுனியில்வை! -
போட்டதன்மேல்
தாக்கிட லாம்;சமந் தாவைப்பெண்
கேட்கலாம்;
பீக்கில்நாம் இப்போ பிளாய்!
அஞ்சிநூ றோடுவந்தாய் ஐயா யிரமாச்சா?
நெஞ்சறிஞ்சி சொன்னேன் நெசமாச்சா? - கொஞ்சமிரு
லட்சங்கள் ஆக்கிடலாம் லாடுலபக் காகிடலாம்
தட்மொமண்ட்டில் காசவச்சித் தாக்கு!
ஆட்டத்தை மாத்துகிறான் ஆள்நிறம்
மாறுகிறான்
நோட்டத்தை நம்மேல் நுணுக்குகிறான்; - சீட்டைத்தான்
சுண்டு விரலால் துரிதமாய்
மாற்றிநம்
கண்ணைக் குருடாக் கறான்!
சீட்டுல கட்டும்முன் நோட்டுல முத்தமிடு;
ஈட்டுற லாபத்தில் எண்ணமிடு; - மாட்டல;
இந்தாட்டம் தான்நம்மை ஏமாற்றி விட்டது;
வந்த வரைலாபம் வா!
'மப்பாலே நம்நிலைமை மாறிடாது; சூதுநமைக்
குப்புற வீழவைக்கும் கூறிடாது; - அப்பாலே
போய்விழுந்த சீட்டால்தான் போச்சுநம்
காசெல்லாம்;
வாய்ப்பிருக்குத் துட்டெடுத்து வை!
பணமெல்லாம் போச்சா?உன் பைகாலி யாச்சா?
பணத்தால் பலிக்காதா பாச்சா? - பணம்வரும்
போகும்; மனமுடைந்து போகாதே! கைவாட்ச்சால்
ஆகும்நாம் விட்டதையள் ள!
விட்டது போல்விட்டு விட்டதுக்கும்
மேலநமை
மொட்டை அடிச்சி முடிச்சிவுட்டான்; - கெட்டதுபோ!
காதும்கா தும்வச்சிக் காத்திருந்தாற்
போல்நமைச்
சூதும் முடிச்சிருச்சே த்தூ!
==
காராம் பசுவாங்கிக் காடு கரைமேச்சி
ஊராங் கழுநீரை உண்ணவச்சி -
சீராநான்
பத்துலிட்டர் பால்பீய்ச்சிப் பக்குவமா
நெய்காய்ச்சி
வித்துவரக் காசிலொரு வீடு!
சாணி பொறுக்கிவந்து தட்டி
வறட்டியிட்டுப்
போன விலைக்குவிற்றுப் பொன்வாங்கிக் -
கானமயில்
தங்கைக் கணியவிரு தங்கவளை தாள்கொலுசு
தொங்கல் சரடிரண்டு தோடு!
தோடென்ன தொங்கலென்ன தோப்பு தொரவென்ன
காடென்ன உண்ணுங் கறியென்ன - மாடென்ன
எல்லாமும் கைவரலாம் என்ராசிக்
காட்படலாம்
கல்லுமே பொன்னா கலாம்!
ராணி கணக்காக ராசா எனக்காகக்
காணிநிலத் தோடுவந்து கைப்பிடிப்பான் -
நாணி
அவன்முன்னே நிக்க அவன்பாத்து சொக்கத்
தவமிருந்து நான்வந் தவ(ள்)!
ஆஸ்திக்கோர் ஆண்பிள்ளை ஆசைக்கோர்
பெண்பிள்ளை
ஜாஸ்தியாய்ப் பெற்றால் தரும்தொல்லை; - ஆஸ்பத்
திரிபோகா வண்ணமவர் தேகநலம் பேண
உரிய திறைவா! உதவு!
==
கார்குழலில் பாம்பெடுத்துக் கட்டு!
(மகளின் போக்கு கண்டு தவிக்கும் தகப்பன் மனைவிக்கு உரைப்பது...)
தானாய்ச் சிரிக்கின்றாள்; தள்ளி
இருக்கின்றாள்;
தேனாய் இனிக்கும்சொல் திக்குகிறாள்; - மீனாகத்
துள்ளும் விழிப்பார்வை தூரம்
அனுப்புகிறாள்;
கள்ளியிடம் இல்லை களிப்பு!
நான்கு பருக்கைகளை நான்குநாள்
உண்ணுகிறாள்;
தேன்கலந்த பாலைத் தெவிட்டுகிறாள்; - நான்கிடந்து
மாற்றமெத னாலென்று மண்டை உடைகின்றேன்;
ஆற்றவழி சொல்லுவது ஆர்?
எப்போது வண்டுவரும்? இன்றேனை
மொண்டுவிடும்?
துப்புரைக்க ஊரா துணைக்குவரும்? - முப்போதும்
காவல்தான் நம்மாலே காத்திட ஆகுமா?
கோவலர்க்குப் பஞ்சமா கூறு!
காதல் கடுதாசி காதருகில் கைபேசி
கீதக் கிளிக்குக் கிறுக்காச்சி; - ஆதலால்
தேர்வில் மதிப்பெண்கள் தேய்பிறை என்றாச்சி;
கார்குழலில் பாம்பெடுத்துக் கட்டு!
அச்சப் படும்தேவை அப்பன் எனக்கில்லை;
நச்சரவு காக்குமடி நம்பிள்ளை; - வச்சவிழி
வாங்காத வாலிபனும் வாலைச் சுருட்டியே
நீங்குவான் நம்பெண் நினைப்பு!
நாகதோசம் பெண்மணத்தை நாள்தள்ளிப்
போடுமாம்;
நாகநேசம் காதல் நசுக்காதா? - சோகவேசம்
போடாதே சுந்தரியே! பூங்குழலில்
பாம்புசுற்று;
பாடாதே நீயெதிர் பாட்டு!
படைநடுங்கும் பாம்பை சடைமுடிந்து
விட்டால்
தொடைநடுங்கிப் போவாரே தூரம்; - தடையின்றி
முன்போல் மதிப்பெண் முழுதெடுப்பாள் நம்மகளின்
பின்போக மாட்டார் பிறர்!
பொன்னையும் காக்கும்; புதையலையும்
காக்கும்;நம்
பெண்ணையும் காக்குமடி பின்னலிடு; - கன்னிமகள்
கொண்டைக்குப் பூவேண்டாம்; கொண்டுவா பூநாகம்;
வண்டுக்குத் தாராதே வாய்ப்பு!
==
செத்தாண்டா சேகர்!
சந்தனக் கிண்ணத்தாள் சாய்ங்கால வண்ணத்தாள்
சந்தைக் கொருநாள் தனித்துவந்தாள் -
வந்தவள்
பார்வையை ஓட்டிப் பலகடைகள் பார்வையிட்டாள்
பார்வைநிலாக் காய்ச்சிய பாகு!
கடைகள் பலவும் கண்ணுற்ற பாவைக்
கடைக்கண் கடையொன்றைக் காணக் - குடைபோலும்
ரெக்கை களைவிரித்து ரீங்காரம் இட்டகிளிப்
பக்கம்போய் நின்றனள் பாய்ந்து!
கூண்டுக் கிளியதன் கொஞ்சு மொழிதனது
நீண்டவிழிப் பெண்மக்கள் நேசத்தைத் -
தூண்டுமெனக்
கேட்ட விலைதருவேன் கேளென்றாள்; கேட்டமொழி
மீட்டுகிற வீணைக்கு மேல்!
விற்பவன் சொன்னான், ‘விலைமகள் வீட்டிலே
பற்பல நாள்வாழ்ந்த பஞ்சவர்ணம்; - முற்றிலும்
கொச்சைமொழி பேசும் கொடுஐம் பதை’யென்றான்
கச்சைப்பூ நீட்டினாள் காசு!
பச்சையாய்ப் பேசிடுமோ பஞ்சவர்ணம்? வாய்திறந்து
கொச்சையாய் ஏதேனும் கூறிடுமோ? - அச்சத்தில்
முற்றத்தில் தொங்கவிட்டாள் மொய்குழலாள்; கிள்ளைசொல்லும்
‘புத்தாள்;இவ் வீடும் புதிது!’
நெஞ்சுக்குள் சந்தோசம் நேரிழைக்குப்
பெண்மணிகள்
அஞ்சுக்குள் வீட்டை அடையக்கண் –
டஞ்சுகமும்,
‘வீட்டாள் புதியவள், வீடு புதிதிரண்டு
கூட்டாள் புதிதெ’ன்னும் கூர்ந்து!
கொஞ்சமாய்ச் சங்கடம் கோதையர்க்கு மேலிடும்;
தஞ்சத்தால் தப்பியது தத்தையும்; - வஞ்சியர்
வாய்விட்டுப் புன்னகைத்து வாசல்
எதிர்பார்த்துப்
பாய்போட் டமர்ந்தார் பறந்து!
வேலைக்குச் சென்றவன் வீடு திரும்பினான்
மாலையில் மூத்தாள் மணவாளன்; - வாலைகளும்
தொத்தினார் தோள்களில்; தொத்துவதைக்
கண்டகிளி
கத்துச்சாம் 'ஹாய்!ஹாய்!சே கர்!
==
சொத்தைப்பல் பெண்ணெங்கே சொல்!
சிக்குண்டான் போர்வீரன் தீவிர வாதியிடம்;
நொக்குண்டான்; என்பு
நொறுக்குண்டான்; – ‘பக்’கென்றான்
விட்டு விடக்கெஞ்சி வேண்டினான்; வேண்டியவன்
எட்டாள் பலம்கொண்ட ஏறு!
கேட்டுச் சிரித்தவக் கேடனோ வாரணன்;
போட்டுத்தான் தள்ளுவதில் பூரணன்; – ‘போட்டி
சரியாயோர் மூன்றெ’ன்றான், ‘தப்பிக்க நீஅப்
பரிச்சையில் பண்ணடா பாஸ்!’
‘கூடாரம் மூன்றுண்டு; கூடாரம் ஒன்றிலே
நாடாரும் நாடும் நறவுண்டு; - ஆடாப்பல்
ஆடும் புலியொன்றில், ஆரணங்கு மற்றொன்றில்,
ஈடுகொடுப் பாயோ இவைக்கு!?’
போட்டி இதுதான்நீ போய்முதலில் கள்ளருந்து;
காட்டுப் புலிப்பல் கழற்றியெடு; - வாட்டும்
விரகத்தால் வாடும் விலைமாதின் நெஞ்சச்
சுரத்தை எறிவாய் துணித்து!
அச்சமில் லாதவன் ஆகத்தில் எங்கேயோ
மச்சமென் றேகள்ளை மாந்தினான் - அச்சச்சோ!
காட்டுப் புலிக்கூண்டில் கால்வைத்தான்; கூண்டதுவும்
ஆட்டம்தான் கண்டதுவே ஆங்கு!
சோலி முடிந்ததெனச் சுற்றி இருந்தவர்
காலி இவனென்று கத்தினார்; - கேலிசெய்தார்;
ரத்தக் களரியாய் ராணுவன் வினவினான்
‘சொத்தைப்பல் பெண்ணெங்கே சொல்!’
==
நாய் வெண்பா!
பெட்டிலே தூங்கிப் பெடிகறி சாப்பிடும்
சிட்டியில் வாழ்கிற சீமைநாய் - கட்டாந்
தரையிலே தூங்கித் தருங்கஞ்சி
சாப்பிட்(டு)
இரவுக்கா வல்புரிவேன் யான்!
நாட்டுநாய் என்பதால் நக்கலா? இன்றுபலர்
வீட்டுநாய் ஆனதால் விக்கலா? - ரேட்டுக்கு
வாங்கினால் தான்நாயா? 'வாயில் வரும்'போய்யா!
டோங்கிரி! தள்ளிப்போ டோய்!
எங்கஎச மான்வீடு; யாராச்சும்
வந்துபார்
தொங்கு வதைக்கடிச்சித் துப்பிடுவேன்; - அங்கிருந்து
என்னடா பாக்குற? ஏன்கல்லைத் தூக்குற?
மென்னு முழுங்கிடுவேன் மேன்!
கேட்டுக்கு மேற்கால்யார் கிஃட்டோடு
நிக்கிறான்?
ரோட்டுக்குத் தெற்கால்யார் ரூட்விடுறான்? - கேட்டுக்கோ!
எங்கையில் சிக்கினா ஏதாச்சும் முக்கினா
சங்கக் கடிச்சிருவேன் சார்!
கையில் எவனோ கடுதாசி
வச்சிருக்கான்;
பையில் அதனைப் பதுக்குறான்; - ங்கொய்யால!
எங்கூட்டுப் பொண்ணுக்(கு) எழுதியதா? நான்விடேன்
ஒங்கப்பன் தன்னால ஓடு!
எம்பேரு செம்பாடா! எங்கிட்ட வம்பாடா?
ஜிம்பாடி காட்டாதே சீ!போடா! -
சும்மாநீ
கெக்கபெக்கே என்றெனக்குக் கேட்கும்
படிச்சிரிச்சா
ங்கொக்கமக்கா! ஆடிருவேன் கூத்து!
சார்வரும் நேரம்டா! தள்ளித்தான்
போங்கடா!?
கார்சத்தம் கேட்குதடா காதுல! - சார்எனது
கட்டை அவுத்துவுட்டா காணாமப் போய்டுவிக
பட்டை கிளப்பிடுவேன் பாய்ந்து!
எசமானி யம்மா!வா! இப்படிநீ உட்கார்!;
நெசமாநீ அம்மாவா? நீஉன் -
பசங்களுக்கு
அள்ளித் தறியே! அதுல சிறிதெனக்குக்
கிள்ளித் தறியாநீ கேக்!?
பிள்ளைகள் கையிலென்ன பிஸ்கோத்தா? தந்திடுவா
ரில்லை; அதைக்கேட்டா ரிஸ்க்ஆத்தா! -
மெள்ளநான்
கேக்குறதைப் பாத்தா கிழிச்சிருவார்
தாத்தா;நான்
போக்கிடம் வேறில்லை போ!
ஆட்டிப் படைக்கிறா; ஆளை முறைக்கிறா;
ஆட்டம்நான் போட்டா அதட்டுறா; - பாட்டி
செமக்கடுப் பாகிச் செவத்துல சாத்திக்
கொமட்டுல குத்துறாங் கோ!
ஐயாவின் கையில் அதுஎன்ன பொட்டலம்?
"ஐய்ய்ய்யா!" அதன்மணம் ஆள்தூக்கும்; - மெய்யாலும்
ஆட்டுக்கால் சூப்பா? அதில்கொஞ்சம்
தாப்பா!நான்
கேட்டில்காய் கின்றேன் கிடந்து!
சாப்பாட்டு நேரமிது சப்பாத்தி வாசமது
கூப்பிட்டார் போற்குரல் கேட்கிறது; - ராப்பிச்சை
இப்பப்பாத் தாவருவான்? எஞ்சோத்தைப்
பங்கிடுவான்?
அப்பப்பா! யார்டா அவன்!?
==
போய்வா 2024!
காலா வதியாகும் காலம்
அறிந்திருந்தும்
ஏலாது மீள எனத்தெரிந்தும் -
காலாலே
எத்துவிட்(டு) ஏகுகின்ற இவ்வாண்டே!
உன்னுடைய
கெத்துவிட்(டு) என்சொல்லைக் கேள்!
எல்லாம் தருவாயென்(று) ஏக்கம்
தணிப்பாயென்(று)
எல்லாரும் கூடி இனிதேற்றோம்; - செல்லுமுனைப்
போகாதே என்றோமா? பொங்கி அழுதோமா?
சாகாதே என்றோமா சாற்று!
நம்பிய பேர்க்கென்ன நல்லது
செய்துவிட்டான்?
நம்பாரை எந்த நரகிலிட்டான்? - தம்மளவில்
காண்டாவ தற்கொரு காரண மில்லாத
ஆண்டவனும் நீயுமொன்(று) ஆம்!
நேற்றைய பேரம்நீ நாளைய பாரம்நீ
மாற்றிட ஏலாத மாற்றம்நீ -
சாற்றுங்கால்
சப்பாத்திக் கள்ளியோர் சாராக்கோர்
சாரார்க்கு
மப்பேத்தும் மில்லிநீ மாஸ்!
சந்தர்ப்ப வாதிநாம் சாகா வியாதிநாம்
வெந்ததைத் தின்றாலும் வேந்தன்நாம்; - வந்தெம்மைப்
பாடாய்ப் படுத்தினாய்; பாடும் படுத்தினோம்;
நீடாது போவதேன்நீ நீத்து!?
சகித்தோம் உனையென்று சாற்றோம்; வெகுவாய்ச்
சுகித்தோம் உனையென்றும் சொல்லோம்; - வகித்த
பதவி உனக்குப் பறிபோச்சு; புத்தாண்(டு)
உதவி வருதெமக்(கு) ஊர்ந்து!
ஏற்ற உறுதிமொழி ஏற்றவா றேயிருக்கக்
கூற்றோன் உனையழைத்துக் கொண்டானே! -
போற்றுமுனைப்
போகவிட்ட போதினிலும் போக விடமாட்டோம்
ஆகத்(து) உறுதியினை ஆம்!
செத்தாண்டு நீயாக; புத்தாண்டு வாராக;
கித்தாப்பில் மப்பேத்திக் Gareஆக; - எத்தனிக்கும்
ஓரா யிரங்கனவா ஓயாப் பகற்கனவா
ஈரா யிரத்திருபத் தைந்து?
==
கொல்லாது போ நாயே!
என்னடா நாயிது? எம்மேல பாயுது?
பின்னால தாவுதே பேயிது!? - தன்னால
வள்ளுன்னு வீழுது; வந்தென்னைச் சூழுது;
'குள்ளனே! நில்டா'ங் குது!
அச்சத்தில் கத்தவா!? ஐயோ!வாய் பொத்தவா!?
சச்சரவைப் பேசிச் சரிசெயவா!? - அச்சச்சோ!
தாய்கொடுத்த பால்கக்கித் தந்துவிட்டுத்
தப்பவா!?
வாய்கொடுத்துப் புண்வாங்க வா!?
கல்லெடுத்து நானடித்த காரணமோ? கொச்சையான
சொல்லொடுத்து நான்தொடுத்த தோரணமோ? - மெல்லநான்
நின்னாக் கடிக்குமோ? நில்லாட்டிப்
பாயுமோ?
முன்விட்டுப் பின்விரட்டு மோ?
எங்கோநான் போவதோ? என்கதியென் னாவதோ?
இங்கேநான் சாவதோ? வீழ்வதோ? - இங்கிந்நாய்
தப்பாய்ப் புரிந்ததோ? தன்சேய் பிரிந்ததோ?
தொப்பை குறைக்கவெண்ணு தோ?
சங்கிநான் இல்லையே காவியுடை தொல்லையே
பிங்கிநான் புத்தனின் பிள்ளையே; - பொங்குசினம்
கொல்லாது போனாயே!? குட்டிப்
பயலென்னைக்
கொல்லாது போநாயே! Go!
நானும் அவனும்...!
சுதாகர் :-
ஏடா! அமுதா! எனக்குள் உறைபவனே!
வாடா!என் பக்கத்தில் வந்தமர்; - பாடாய்ப்
படுத்துகிறாய் பாட்டை; படுத்தவெண்பா
மாட்டை;
எடுத்ததெல்லாம் சாட்டை எதற்கு?
அகரம் அமுதன் :-
பாடாய்ப் படுத்தவில்லை; பாடம் நடத்தவில்லை;
மாடாய் நினைந்து மருட்டவில்லை; - ஏடாள்வோர்
மத்தியில் என்பா மகத்துவம்
ஓங்கத்தான்
ஒத்தையில் ஆடுகிறேன் ஊடு!
சுதாகர் :-
செக்கிணையாய்ச் சுற்றிவரச் செய்வார்முன்
நீரொம்ப
வக்கணையாய் வெண்பா வடிக்கின்றாய்; - நக்கலாய்
நையாண்டி பின்னுகிறாய்; நாராசம்
பண்ணுகிறாய்;
பையா!நீ கெட்ட பயல்!
அகரம் அமுதன் :-
சின்னத் தனித்துவத்தைச் செய்தேன் நனிதவத்தை
என்ன இதில்அவஸ்தை? என்றால்கேள்! -
முன்னவர்கள்
ஓர்திசையில் ஓடுகையில் ஒட்டா
தெதிர்த்திசையில்
பார்!திருப்பி விட்டேன் பதம்!
சுதாகர் :-
அறம்கூறும் வெண்பா; அதைமீறும் நண்பா!
புறம்கூறு கின்றார் புலவா! - திறம்கூற
வெண்பாதான் கிட்டியதா? வெண்டளைதான்
எட்டியதா?
ஒண்பா ஒழிப்ப தொழி!
அகரம் அமுதன் :-
வெத்தாக்க வெண்பாக்கள் வேட்கையுடன்
உண்பார்கள்;
புத்தாக்கம் என்பார்கள் போலிகள்; - மத்தபடி
மாற்றம் விரும்பா மடையர்கள்; வெண்பாவின்
ஏற்றம் விரும்பார் இகல்!
சுதாகர் :-
செய்கிறாய்நீ லோக்கலா; செக்ஸ்கொஞ்சம்
தூக்கலா;
வைகிறாய்நீ ஆகுதுன்பா வைரலா; - எய்கிறாய்நீ
லீகலா; சிக்குவாய் லேசிலா? பாவலா!
பாகலா? யார்நீ? பகர்!
அகரம் அமுதன் :-
கையில் பணமில்லை; கண்ணில் பயமில்லை;
மெய்யில் பலமில்லை; வேஷமில்லை; - பொய்யில்லை
ஹிட்லர்நா னில்லை; மகாத்மாவு மில்லை;நான்
பட்லர்;என் ராஜ்ஜியம்வெண் பா!
சுதாகர் :-
நாலாம் கிளாஸ்படித்தே ஞானநிலை எட்டியதாய்
ஆலாய்ப் பறக்கின்ற ஆட்களிடை – ‘கூலா’ய்நீ
ஏதும் அறியாத ஏமாளி போலிருத்தல்
போதும்; புகல்உன் புகழ்!
அகரம் அமுதன் :-
படிப்பதெல்லாம் வெண்பா; படைப்பதெல்லாம்
வெண்பா;
குடிப்பதெல்லாம் வெண்பாக் குடியே; - இடிப்பதெல்லாம்
வெண்பா மதில்சுவரை; வெண்பா அதில்தவறை;
வெண்பா,ஆல்; நானோ விழுது!
சுதாகர் :-
பாடம் படிக்கும்முன் பாவகைகள்
தேரும்முன்
சீடர் புடைசூழச் செல்லுகிறார்; - Model நீ!
கூட்டத்தைக் கூட்டாமல் கூர்ந்துகொடி
நாட்டாமல்
நீட்டுவதா கம்பி? நிகழ்த்து!
அகரம் அமுதன் :-
நானே பிரீகேஜி; நானெந்தக் காலேஜி?
வீணேநான் சுற்றுகிறேன் வில்லேஜி; - சீனேநான்
போடுவது மில்லை;இச் சிஷ்யர்
பெருந்தொல்லை;
Leedதன தென்பார்; Lyric!?
சுதாகர் :-
சுற்றி வளைக்காதே! சூசகமாய்ச்
சுட்டாதே!
நெற்றிப் புருவம் நெரிக்காதே! -
முற்றுமுனைக்
கொண்டாடச் சிஷ்யக் குழாமுண்டா? பின்பற்றிப்
பண்பாட உண்டா பலர்?
அகரம் அமுதன் :-
தானிட்ட எச்சத்தில் தான்வளர்ந்த
தென்றாபுள்
கானிடத்தில் சென்று கணக்கெடுக்கும்? - நானிவற்றைக்
கற்பிப்ப தெல்லாம் கடமை உணர்வாலே;
பிற்சொல்லிக் காட்டல் பிழை!
சுதாகர் :-
வாரிசு வேண்டாமா? வாய்ஜம்பம் போதுமா?
சீரசை பின்னாள் சிறப்புறுமா? - நேரிசை
வெண்பா நிலைபெறுமா? வெண்டளை வாழ்வுறுமா?
நண்பா!நல் சீடரை நாட்டு!
அகரம் அமுதன் :-
கல்லைநான் ஆக்கலாம் கற்கண்டு; மாடுதின்னும்
புல்லைநான் ஆக்கலாம் போதிமரம்; - கல்,புல்லைக்
காலம்தான் காட்டவில்லை; கைவிரலை
நீட்டவில்லை;
ஜாலம் நிகழ்த்தவில்லை சார்ந்து!
சுதாகர் :-
கலகம் உனது கருப்பொருள்; வெண்பா
உலகம்உன் கோலி உருண்டை; - பலகாலக்
பாட்டைக் கெடுப்பதுன் பண்பு; மொழிக்கலப்பால்
வாட்டி வளர்ப்பதேன் வம்பு?
அகரம் அமுதன் :-
தொடாப்பொருள் தொட்டேன்; தொடைநடுக்கம்
விட்டேன்;
விடாப்பொருள் முற்றிலும் விட்டேன்; - தடாலடி
என்போக்கு; தப்பிது வென்போர்க்குச் சொல்லுகிறேன்
பின்போக்குத் தானவர் பேச்சு!
சுதாகர் :-
எழுத்திலே எள்ளல்உன் யுக்தி; தமிழின்
கழுத்திலே வைக்கிறாய் கத்தி; - அழுத்தியுன்
பாதம் பதிக்கவெண் பாவைச் சிதைப்பது
தீதன்றோ? உள்ளம் திருந்து!
அகரம் அமுதன் :-
உலக மயமாக்கல் ஒண்டமிழிற் கூடக்
கலப்பை நிகழ்த்தியே காட்டும்; - கலங்காதே!
செந்தமிழ் ஆழி,தன்னில் சேர்கின்ற ஆறுகளால்
சொந்த முகமிழக்கா து!
சுதாகர் :-
யாரிடம் கற்றாய்? எவரிடம் பெற்றாய்?ஊர்,
பேர்,இடம் சொன்னால் பெரிதுவப்பேன்;
- வேரிடம்
தேனைநீ வாங்கித் தெளிக்கின்றாய்; உன்னிடம்
பூனையென் றாச்சே புலி!
அகரம் அமுதன் :-
வெண்பா புலிதான்; விரும்பிஅதை
நேசித்தால்
நண்பா! அதுநமக்கு நட்பாகும்; - உண்டுநம்
உள்ளங்கைக் குள்ளே உறங்கிடும்; ஆம்அது
வெள்ளந்தி யான விலங்கு!
சுதாகர் :-
ஆசானைப் பற்றி அமுக்கிநீ
வாசித்தால்
ஏசாதா ஊருலகம்? யார்தான்சொல்; - Massஆன
வெண்பாக்கள் நீயே வழங்கும்போ
துன்னாசான்
ஒண்பாக்கள் தன்மையென்ன? ஓது!
அகரம் அமுதன் :-
ராமன்வில் தோற்றுவிடும்; காமன்வில்
வேர்த்துவிடும்;
ஆமெனது ஆசான்சொல் அப்படி; - நாமெவரும்
பக்கத்தில் நிற்கவொண்ணாப் பாட்டன் 'முருகடியான்'
கக்கத்தில் நாற்பாக் கடல்!
சுதாகர் :-
அன்றாடச் செய்திகளை ஆண்ட்ராய்டில்
வெண்பாவாய்
நின்றாடு கின்றாய் நிதானமாய்; - இன்றளவும்
செய்திகளை வெண்பாவில் செய்தவன்நீ; உன்இடத்தை
எய்தவன் இங்கே எவன்?
அகரம் அமுதன் :-
போராட்ட வெண்பாக்கள் போரடித்த தாலேநான்
சீராட்டிக் கொம்பதற்குச் சீவவில்லை; - பாராட்டித்
தோள்மேலே ஏற்றவில்லை; தொல்லைவரும்
மாற்றமில்லை;
தேள்மேலே கால்வைத்த தீம்பு!
சுதாகர் :-
ஒண்பாக்கள் இங்கே ஒருநூ றிருக்கையில்
வெண்பாவின் மீதே விருப்பமேன்? - பண்பாட
எண்ணம் இலையோ? எழுத வரவிலையோ?
உண்மை எதுவோ? உரை!
அகரம் அமுதன் :-
ஆயிரம் பெண்பார்த்தேன்; ஆங்கவர்
கண்பார்த்தேன்;
வாயியம்பும் வார்த்தை வளம்பார்த்தேன்; - சேயினது
தெள்ளுதமிழ்ப் பேச்சாலும் செப்பலோசை
வீச்சாலும்
அள்ளிவிட்டாள் எந்தன் அகம்!
சுதாகர் :-
தகரமோ தங்கமோ வாழ்த்துவதை விட்டு
நகர்கின்ற உன்செய்கை நன்றோ? - முகநூலில்
சீராட்டு கின்ற சினேகிதர்க்கு
நாம்செய்யும்
பாராட்டும் தானே பலம்!?
அகரம் அமுதன் :-
கொஞ்சமாய்க் கற்றவன்; கொஞ்சமாய்ப்
பேசுபவன்;
கொஞ்சம் முகநூலில் குந்துபவன்; - அஞ்சுகிறேன்
மெத்தப் படித்தவர்முன்; மேதாவி யானவர்முன்;
சத்தமாய்ப் பேசுவது தப்பு!
சுதாகர் :-
பேருக்கு முன்'கவிஞர்' பெற்றாயா? பல்லிழித்துத்
தாருங்கள் பட்டமெனச் சார்ந்தாயா? - ஊருக்கூர்
சென்று கவிபாடிச் சேர்ந்து துதிபாடி
வென்றாயா பாராட்டை? விள்!
அகரம் அமுதன் :-
பொன்னாடை என்னளவில் புண்ணாடை; பட்டங்கள்
பன்னாடை; பாராட்டு பாவாடை; - என்னாடை
என்றும் எளிமையே; இஃதென் வலிமையே;
நன்றென் தனிமையை நாடு!
===
அசால்ட்பண்ண ஆகா அமுதன்போல் யாரும்
உசார்பண்ண ஆகா உரம்கொள்; - பிசாசுபோல்
உண்டில்லை என்றாக்கு வெண்பாவை; போய்உரி
தொண்டில்லை என்பார்தம் தோல்!
அல்வாப்போல் மெல்லும் அசைச்சொற்கள்
ஆக்குகிற
செல்வாக்குப் பெற்ற செழுங்கவியே! -
தெள்ளுதமிழ்
அப்பனே கல்லாடா! அச்சுறுத்தும்
பின்லேடா!
ஒப்புகிறேன் நீஈடு உனக்கு!
என்சைக்ளோ பீடியா; ஏய்க்காத மீடியா;
என்மனதைக் கொள்ளையிட்டாய் ஈசியா;* - இன்றமிழை
ஆள்கின்ற ஏசியா;* அம்கண்கள் ஏசியா!?*
தூள்கிளப்பு கின்றாய் சியா!*
ஈசி - Easy; ஏசியா - Asiya; ஏசி - Air conditioner. சியா(ன்) - தலைசிறந்தவன்.
பனித்துளி!
புல்லின்கை Dumbellலா? புல்லுக்கே Ambrella!
மல்லாடி வாங்கும் மழைக்குல்லா! -
புல்லின்மேல்
Showகாட்டும் Googleளா? சூர்காட்டாம் Dracula!
"ஆ"காட்டும் வானமா லா!?
==
விடைபெறுகிறேன்!
கடுப்படிப்ப தாலும் கடமையுள்ள தாலும்
விடுப்பெடுக்கப் போறேன் வெரசாய்க் -
குடுகுடுப்பக்
காரன்சொன் னான்நல்ல காலம் பொறக்குதுன்னு;
வாரன் பொறவுபார்க்க லாம்!
சரசகவி யாகி சமரகவி யாகி
விரசகவி யாகி வெறுத்தேன்; - அரசகவி
ஆசையெல்லாம் இல்லை; அடங்காத கோபமுள்ள
மீசைகவி யாய்வாரேன் மீண்டு!
இடைபாடி ஏற்ற இறக்கங்கள் பாடி
நடைபாடி ஜென்மம் நசிந்தேன்; - கடைபோட்டு
விற்றேன் கடைச்சரக்கு வீழ்ந்தேன்
தொடைக்கறிக்குக்
கற்றேன் அளவிற் கடுகு!
சந்தையில் விற்றேன் சமரசம்; வெள்ளாட்டு
மந்தையில் விற்றேன் மரகதம்; - தொந்தி
வளர்ப்போர் நடுவில் வயிற்றிலறு துண்டம்*
இளப்பத்தில் தானே இறும்!
கந்தனுக்கு நேந்து கயிறுநான் கட்டிண்டேன்
தொந்தரவு மீண்டும் தொடராதாம்; - இந்தவெண்பா
என்னையினி தொட்டா இரத்தந்தான் கக்குமாம்
சொன்ன படிநடந்தா தூள்!
'அக்மார்க்'நான் முன்னாலே; அப்படியே இப்போநான்
'எக்மார்க்'என் றானேன் எதனாலே? - 'நக்மா'ப்போல்
பேரழகு வெண்பாவின் பின்னால் அலைந்தலைந்து
பேரழியப் பீடித்தேன் பித்து!
தோண்டி துளையானேன் தோணி துளையானேன்
வேண்டிப் பெறாததால் வீணானேன்; - மீண்டும்
துளையாகும் வாய்ப்புத் தொடருமென்றால்
மூங்கில்
துளையாகக் கேட்பேன் தொழுது!
மொடாக்குடி காரன்நான் முன்வெண்பாக் கள்ளை
விடாப்பிடியாய் மாந்தி விழுந்தேன் -
தடாலடியாய்ச்
சாப்பிடுவ தில்லையென்று சத்தியம்
பண்ணிவிட்டேன்
'ஓப்பன்தி பாட்டிலெ'ன்போன் ஓடு!
டயலாக்கில் வெண்பாவை டான்ஸ்ஆட வைக்கும்
பயலாக்கும் என்பார் பலபேர்; - புயல்மையம்
இன்றே கரைகடக்க என்றும் இனியில்லை
மன்றாடி னாலும் மழை!
ல(வ்)வராசெட் டானவர லாற்றைநான் சொன்னா
டவராசெட் என்பீர் சரிதான்; - தவறில்லை;
வெண்பாகண் நானிமை; இன்றுமுதல்
கஞ்சனுக்கும்
தொண்டிற்கு மான தொலைவு!
==
வெண்பா கூற்று:-
அகலா திருந்தவன்; அன்பொளி சிந்தும்
அகலா யிருந்தவன்; அல்லும் -
பகலா(ய்)
இருந்தவனா என்னை இகலென்றான்? உற்ற
விருந்தவனா ஆனான் விஷம்?
சவ்வாது வாசனையும் சந்தன யோசனையும்
கவ்வாதா என்னையினிக் காலமெல்லாம்? - ஒவ்வாது
போனேனா அந்தப் புலவனுக்கு? கொங்குதமிழ்த்
தேனேநான் ஆனேனா தேள்?
நாளும் மலர்ப்படுக்கை நானிட்டேன் பொன்மேனி
ஆளும் கவிஞன் அமுதனுக்கே; - வாளும்நேர்
என்றால் விழிக்கது காசென்போன் என்னகண்டான்
என்றன் உறவில் இழுக்கு?
கட்டியவன் கண்ணினிய காதலன் சீவனில்
ஒட்டியவன் உள்ளம் ஒளிந்தவன்; - வெட்டியவன்
ஆனானா? ஆசைக்(கு) அரளி அரைத்தளித்துப்
போனானா நெஞ்சம் பொடித்து?
மோனை எதுகைதந்தும் மூவா மொழிகொடுத்தும்
ஏனை அணிகள் எடுத்தளித்தும் - கேனையனை
இம்மெனும் முன்னே எழுதவைத்துப் பார்த்தேனே;
அம்மெனுமுன் போனான் அகன்று!
மோனைமுள் குத்த; முகிழ்எதுகை மொத்த; சொற்
சேனைகொண் டென்னைச் சிதைப்பார்முன் -
வீணைபோல்
மீட்டிய பாவலன் மீட்டெடுத்த காவலன்
வாட்டுவ தேன்பிரித்து வைத்து?
ஆறரை கோடியில் ஆளன் இவனென்றே
கூறவைத்தான்; இன்றேன் கொலைசெய்தான்? - மாறவைத்த
வெட்டிச் சிறுக்கியெவள்? மேனா
மினுக்கியெவள்?
தட்டிப் பறித்ததெவள் சார்ந்து?
காட்டுப் பயலவனைக் கண்டு கரம்பிடித்தென்
ஏட்டுச் சரக்கை எடுத்தளித்து -
நாட்டுக்குள்
நாயகன் ஆக்கினேன் நல்லவை ஊக்கினேன்
பேயகன் ஆனதேன் பின்பு?
ஊடல் வளர்ப்பவன் ஊடல் வெறுத்துப்பின்
கூடல் வளர்ப்பானா கூறுங்கள்; - தேடல்பொன்
என்றானால் இன்பம்பாழ் இன்றைநீ நன்றேவாழ்
என்றேனே கேட்டானா ஏறு?
இன்னும் மறக்கவில்லை என்னும்சொல்
சொல்வானென்(று)
இன்னும் துறக்கவில்லை இன்னுயிரை; - என்னவனைக்
கண்டால் வரச்சொல்வீர்; காதல்
உறச்சொல்வீர்;
தண்டாமல் வீழ்கின்றேன் தாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக