ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கானா பாடல்! 4


அதோஅவ பின்னாலே
போனதுமனம் தன்னாலே
இதோஅதோன்னு இழுக்கடிச்சி
ஏய்ச்சாளே கண்ணாலே

அலையப்போல அலைஞ்சேனே
மெழுகப்போல உருகினனே
கையத்தந்தாக் கழன்டிடலாம்
தலையத்தந்து தவிச்சேனே
ஏதேது இளைச்சேனே
ஏமாந்து கிடந்தேனே
போதாது என்பதுபோல்
பூவைக்காய் நடந்தேனே

மலபோல நிமிர்ந்திருக்கும்
மாராப்பு மறச்சிருக்கும்
நெஞ்சோரம் இடங்கொடுத்தாள்
நெசந்தான்னு குடிபுகுந்தேன்
குடிபுகுந்த பின்னாடி
குட்டுடைந்த தென்னாடி
என்முகத்த எனக்குக்காட்ட
மறுத்ததுமேன் கண்ணாடி

எம்மனசில் அவயிருந்தா
அவமனசில் யாரிருந்தா
சொன்னாளா முன்னாடி
தெரிஞ்சென்ன பின்னாடி?
மைபூசும் கண்மேலே
பொய்பூசி நின்னாளே
பொய்யநம்பிப் பொய்யநம்பி
மெய்யாகச் செத்தேனே

செவ்வாய், 22 ஜனவரி, 2013

கானா பாடல்! 3


உன்
சுண்டுவிரல் தொட்டதுல சொர்க்கத்தப் பார்த்தேன்-கற்
கண்டுஇதழ் பட்டதுன்னா மோட்சத்தப் பார்ப்பேன்-அடி
பிச்சிப்பூவே பிஞ்சுநிலாவே
அச்சம்விட்டுக் கொஞ்சிடவாயேன்
என்உசுர உன்நிழலுக் கெழுதி வெக்கவா
உன்திசையில் என்நிழலும் விழுகுதல்லவா

ஏழுகடல் நீந்தனுமா ஏழுமலை தாண்டனுமா
தேவர்கள வெல்லனுமா சூரர்கள கொல்லனுமா
ஆயுளுக்கும் தவமிருந்து ஆண்டவன வேண்டனுமா
என்னசெஞ்சா நீகெடைப்ப? நீயேசொல்ல வேண்டுமம்மா
பூமியத்தான் இன்றுவரை நிலவுசுத்துது –இந்தக்
காதலிலே ஏன்டிஅந்த விதியும்மாறுது

பம்பரம்போல் சுத்துற பார்த்துப்பார்த்து சொக்குற
அம்பலத்து அண்டிபோல ஆட்டமாட வக்கிற
ஏன்டிஇந்த மாதிரி நீண்டதிந்த ராத்திரி
இன்னுமென்னை என்னசெய்ய எண்ணுகிறாய் சுந்தரி
என்உசுரே எட்டிநிண்ணு என்னைப்பாக்குது-அது
கண்ணால்நூறு கதைகள்பேசி நழுவி ஓடுது

புதன், 16 ஜனவரி, 2013

கானா பாடல்! 2


காலாலே கோலமிடும் கன்னிப்பொண்ணே வரியா
காலமெல்லாம் நான்சொமப்பேன் காதல் நெஞ்சத் தரியா
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
பூவுன்னு நான்நினச்சேன் முள்ளாகக் குத்துறியே
மேயாத மானேநீ புலிமேல பாயுறியே

ஜல்லிக்கட்டு நீதானே மல்லுக்கட்ட வந்தேனே
மல்லுக்கட்ட வந்தேனே துள்ளியோடும் பூமானே
புல்லுக்கட்டப் பாத்துப்புட்டா பசுவிடுமா செந்தேனே
மிச்சசொச்சம் இல்லாம மொத்தமும் செவந்தவளே
மொத்தமும் செவந்தவளே மச்சமும் செவந்தவளே
மச்சான ஏங்கவச்சி மனசுக்குள் ரசிப்பவளே

போதுமடி பொய்வேசம் நீயேயென் சந்தோசம்
நீயேயென் சந்தோசம் அதிலென்ன சந்தேகம்
ஒன்னோட நாஞ்சேர ஒழியட்டும் பிறதோசம்
சொக்கப்பனைக் கண்ணழகி வெட்கப்பட்டு நிக்குறியே
வெக்கப்பட்டு நிக்குறியே வேல்விழியால் தைக்குறியே
சுத்தமான மனசுக்காரி என்நெனப்பில் மொய்க்குறியே

ஆறுவக சுவையிருக்கு ஆறும்உன்னில் தானிருக்கு
ஆறும்உன்னில் தானிருக்கு ஆசப்பட்ட மாமனுக்கு
ஆசதோச என்பவளே என்னடி உன்கணக்கு?
அள்ளித்தர மனமில்லாட்டிக் கிள்ளித்தரக் கூடாதா
கிள்ளித்தரக் கூடாதா கிட்டவந்தால் ஆகாதா
அனுபவம் எனக்கில்ல சொல்லித்தரக் கூடாதா

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழன்கை அன்றே ஓங்கும்!


மலையாளி ஆண்டான்; நம்மை
வடுகனுமே ஆண்டான்; தண்ணீர்
இலையென்ற கன்ன டத்தின்
எழில்மங்கை ஆண்டாள்; என்றும்
நிலையாகத் தமிழர் நாட்டை
நின்றாளத் தமிழன் போந்தால்
கொலைவாளுக் கஞ்சி யோடும்
கோழைபோற் பதுங்கு கின்றோம்!

அண்டைமா நிலத்தா ரெல்லாம்
ஆள்கிறார் நம்மை; வந்து
மண்டைமேல் ஏறிக் குந்தி
மகிழ்கிறார்; எதிர்த்துக் கேட்டால்
சிண்டைத்தான் பிடித்து ஆட்டிச்
சிதைக்கிறார்; துடித்தெ ழுந்து
பெண்டைத்தான் நிமிர்த்தா விட்டால்
பேடிகள் நாமென் றாவோம்!

தானாடா விட்டா லென்ன?
சதையாடும் என்பார்; அந்த
ஊனாடா விட்டா லென்ன?
உயிராட வேண்டும்; நம்மை
ஏனாள வேண்டும் மாற்றான்
      எனும்கேள்வி எழுந்தால் போதும்
தானாக மாற்றம் தோன்றும்
      தமிழன்கை அன்றே ஓங்கும்!