புதன், 27 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (3)

உயர்வுக்கு முத்தமிழால் ஒன்னாதே என்னும்
மயர்வகற்றிக் கற்றபதே மாண்பு!

மாண்பு தமிழ்க்கல்வி மற்றை மொழிக்கல்வி
வீண்பெருமை வேண்டாம் விடு!

விடுத்தார் தமிழறிஞர் வேண்டி விருப்புற்(று)
எடுத்தோமா தமிழ்வழி ஏடு!

ஏடழித்த முன்னோர் இடரெதிர்த்து வாழ்தமிழின்
பீடழிக்காய் தாய்தமிழிற் கல்!

கற்றாரின் மேலாம் கலாதார் வினவிவிடின்
பற்றார் அயன்மொழியைப் பாய்ந்து!

பாய்ந்தோடு கின்றாய் பலமொழிகள் கற்க
தாய்தமிழை ஏனோ தவிர்த்து!

தவறுணந்து பேணத் தலைப்படு தாயை
எவருன்போல் கொன்றார் இயம்பு!

புட்டிப்பால் ஆகும் பிறவெல்லாம் பூந்தமிழே
முட்டிப்பால் உண்ணும் முலை!

முலையிலாள் முன்னழகும் முத்தமிழிற் கல்லாக்
கலையழகும் குன்றும் கடிது!

கடிது தமிழென்பார் கண்ணிலார் தேடிப்
படித்தயலைக் காப்பார் பரிந்து!


அகரம் அமுதா

வியாழன், 21 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (2)

மனமொன்றிப் போற்று மணித்தமிழை; நாளை
இனமுன்னைப் போற்றும் இசைந்து!

இசைமகள் தேடி இணைவாய்; வேண்டா
வசைமகள் நாடும் வழு!

வழுவமைதி இந்நாள் வரைவிலகி நின்ற(து)
எழுஅமைதி ஏனோ? இழுக்கு!

இழுக்குவரின் சாவர் இசைசான்றோர்; நீயும்
பழக்குன்னைப் பைந்தமிழ்நூல் பார்த்து!

பார்த்தால் வருமோ பழிநற் குறள்கற்றுத்
தேர்ந்தால் எழுமோ திமிர்!

திமிர்வகற்றி நாலடியுந் தேர்ந்துசிலம் போதி
நிமிர்வெய்தல் வேண்டும் நிலைத்து!

நிலையா உலகில் நினையழிக்கும் நூற்கள்
மலையாக் குவியும் மலிந்து!

மலிந்த சுவடிகள் மாண்பென நாடாய்
பொலிந்தநன் னூலுட் புகு!

புகுவாய் கவிக்கம்பன் பூந்தோட்டத் தேனை
வெகுவாய்ப் பருக விரை!

விரைந்தோடி ஒளவை வியத்தகு சித்தர்
உரையறிந்து போற்றி உயர்!


அகரம்.அமுதா

சனி, 16 மே, 2009

தமிழ் எங்கள் தமிழ்! (1)

கதிரே உலகின் கருப்பை; தமிழே
முதிர்மொழிக் கெல்லாம் முதல்!

முதலாந் தமிழை மொழிக! உளதோ
அதனிற் சிறந்த அமிழ்து!

அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து
தமிழினும் உண்டோ தலை!

தலையே உடலின் தலைமை; தமிழே
உலகின் மொழிகட்(கு) உயிர்!

உயிராம் உயர்தமிழ் ஓம்புக; அன்றேல்
உயிரை மயிர்போல் உதிர்!

உதிக்கும் அறிவும்; உயர்தமிழை ஓம்ப
மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்
இகழப்பா; தீர்ப்பாய் இடர்!

இடர்வரின் வீழ்த்தி எழுவாள்; தமிழாம்
மடவரல் என்பேன் மலைத்து!

மலைப்பே மிகினும் மலையாதச் செய்யிற்
களைகள் களைதல் கடன்!

கடமை; தமிழைக் கடைபிடி; இன்றேல்
மடமை; புதராம் மனம்!


அகரம் அமுதா

ஞாயிறு, 10 மே, 2009

குழுமத்தில் வந்து குதி!

அன்புடன் குழுமத்தில் உள்ள ஓரிழையான "வெண்பா விலாஸ்" கொடுத்த "குழுமத்தில் வந்து குதி"  என்ற ஈற்றடிக்கு நான் எழுதியது.

"அன்புடன்" என்றுபேர்கொண் டார்த்து நடைபோட்டு
விண்மண் வியக்க விரியிணையத் -தின்பால்
உழுவத்தின் நேர்தன் உழைப்பால் உயரும்
குழுமத்தில் வந்து குதி!

எழுமீற்றுச் சீர்க்கே எழிலார்"பா" தன்னைப்
பழுதின்றிப் பாடுகிற பண்போ -டொழுக்க
விழுப்பத்தில் தேர்ந்து விளங்கும்நம் வெண்பாக்
குழுமத்தில் வந்து குதி!


அகரம்.அமுதா

செவ்வாய், 5 மே, 2009

ஈற்றடி இந்தா எழுது!

சாற்றடி நான்கிலும் சத்துள்ள நற்கருத்தை
ஏற்றடி என்பேனே என்தங்காய்! -ஆற்றடி
மாற்றடி ஏழை மனத்துயரை வெண்பாவின்
ஈற்றடி இந்தா எழுது!

குறிப்பு:-
"வெண்பாவால் ஏழை மனத்துயரை ஆற்றவும் மாற்றவும் செய்க" என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.


அகரம்.அமுதா

வெள்ளி, 1 மே, 2009

பாட்டிற்கு ஒரு கோட்டை!

ஏடெடுத்து மக்கள் இடர்தீர் வகைபாடிப்
பீடெடுத்து நின்றான் பிறந்து!

கதைக்கும் பொருந்தும் கருத்திட் டிழிந்தோர்
பதைக்கும் கவிசெய்தான் பார்த்து!

மூடப் பழக்கம்முன் னேற்றத் தடையென்றுச்
சாடிச்சாக் காடீந்தான் சார்ந்து!

கடமையைக் கூடஅருங் காதலிற் சொன்னான்
மடமையை ஏறி மிதித்து!

திரைப்பாட்டிற் சுந்தரம்பொற் சின்னஞ் சிறார்க்கும்
உரைப்பாட்டுச் செய்தார்யார் ஒப்பு!

எதுவுடைமை என்றே அறியா தவர்க்கும்
பொதுவுடைமை சொன்னான் புரிந்து!

சின்ன வயதெனினும் செய்து திரைக்கீந்த
சின்னூறு பாட்டுஞ் சிறப்பு!

நாட்டிற் கொருகோட்டை நல்லரசு சுந்தரமே
பாட்டிற் கொருகோட்டை பார்!


அகரம் அமுதா