வியாழன், 26 மார்ச், 2026

 

போய்வா கணநொடியே! போகாதேன் நிற்கின்றாய்?

வாய்ச்சண்டை போட்டேனோ வைகின்றாய்? - நோய்பரப்பும்

ஈப்போலேன் மொய்க்கின்றாய்? ஏன்கண்ணில் தைக்கின்றாய்?

ஆஃப்மோடில் வைக்கின்றாய் ஆப்பு! 01

 

நொய்நொய் எனக்காதில் நொட்டைச்சொல் சொல்கின்றாய்;

மொய்மொய் எனவென்னை மொய்க்கின்றாய்; – செய்செய்

எனவென்னைச் செய்கின்றாய்; ஏன்கொல்லு கின்றாய்?

மனமென்ன கல்லாஉன் மாட்டு!? 02

 

சென்ற நொடிபோலே செல்லா தருகினில்

நின்றென்னைக் கொல்வது நீதியல்ல; - ஒன்றன்பின்

ஒன்றாய் நகரும் உனக்கிம்மாம் ஆங்காரம்

நன்றல்ல; எட்டி நட! 03

 

படுக்கிறாய் பாய்போட்டு; பாவைவரும் நேரம்

தடுக்கிறாய் தாழ்போட்டு; தங்கிக் – கெடுக்கிறாய்;

சீண்டிச் சிரிக்கிறாய்; சீவன் பறிக்கிறாய்;

நோண்டி எடுக்கிறாய் நுங்கு! 04

 

நேசக் கிழத்தி நெடுநேரம் காணவில்லை;

மோசம் எனதுநிலை; மூச்சுமில்லை; - வாசற்

படிதாண்டாப் பத்தினிபோல் பக்கம்நிற் காமல்

நொடியே!நீ போவாய் நொடிந்து! 05

 

ஒருகணம் கூட ஒருயுகம்போல் போனால்

வருங்கணம் எப்படியாய் வாய்க்கும்? – பெருங்கணத்தை

எண்ண‍எண்ண தேகம் இளைக்கும்; மறுபடியும்

உண்ண‍உண்ண சோரும் உளம்! 06

 

பார்வை குறைவிருக்கா? பாதச் சுளுக்கிருக்கா?

யார்ஒருவர் இங்குனக்காய் ஏங்கிருக்கா? – பேர்த்தெறிய

நாக்கிருக்கா? மூக்கிருக்கா? நாடி நரம்பிருக்கா?

சீக்கிருக்கா? சீக்கிரமாய்ச் செல்! 07

 

இப்போது நீசெல் இளையவள் வந்தவுடன்

தப்பாது மொய்வைத் தழைக்கின்றேன்; – அப்போது

தங்கிவிருந் துண்டு தவிசில் துயில்கொண்டு

மங்கலப் பேருகமாய் மண்டு! 08

 

நொடிக்குள் யுகத்தை நுணுக்கி நகர்த்தத்

துடிப்பாய் அருகிருக்கும் தோறும்; – வெடித்து

யுகமாய் விரிவாய் யுவதியரு கின்றேல்;

நுகர‍ஒண்ணா நீபெரும் நோய்! 09

 

காலக் கடிகாரம் காலொடிந்து நின்றதுபோல்

சாலம் புரிகின்ற சாத்தியத்தைச் – சீலமுடன்

சேவையாய் நீயிருந்து செய்யலாம்; இப்பொழுது

பூவை வரும்வரைக்கும் போ! 10


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக