புதன், 11 மார்ச், 2026

110 குறிப்பறிதல்

 

110 குறிப்பறிதல்

 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் ற‍ன்நோய் மருந்து! 1091

 

மையளந்த கண்ணுக்கு வாய்த்த திருபார்வை;

பொய்யளந்த பெண்ணுக்குப் போதுமிவை; – மெய்யளந்து

நோய்வார்க்கும் ஓர்பார்வை; நோயைத் தணிக்கின்ற

வாய்பார்க்கும் ஓர்பார்வை வந்து!

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது! 1092

 

என்னை விழியால் இமைப்பதற்குள் தான்திருடிச்

சென்ற அவளின் சிறுபார்வை – மென்மைமிகு

காதலின் இன்பத்தில் காலும் அரையுமில்லை

ஏதலிக்கும் முக்கால்பங்கு ஏற்று!

 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்! 1093

 

முன்னாலே வந்தென் முகம்பார்த்தாள் பார்த்ததன்பின்

தன்னாலே தன்பார்வை தாழ்த்தினாள் – அன்னத்தின்

இந்தச் செயல்காதல் இன்ப‍ப் பயிருக்கு

நிந்தாமல் ஊற்றிய நீர்!

 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்! 1094

 

பட்டுப்போற் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்

சட்டென்று தன்முகம் சாய்த்திருந்தாள் – எட்டிநின்றே

என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்

கண்கொண்டு காணாத‍க் கால்!

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்! 1095

 

இப்படியே வைத்தகண் இங்குமங்கும் வாங்காமல்

அப்படியே பார்க்கவில்லை ஆனாலும் – செப்புச்

சிலைஒரு கண்ணைச் சிறுத்துமுகம் பார்த்து

நிலைமறந்து புன்னகைப்பாள் நின்று!

 

உறாஅ தவர்போல் சொலினும் செராஅர்சொல்

ஒல்லை உணரப் படும்! 1096

 

பந்தமில்லை என்பதுபோல் பாசமில்லை என்பதுபோல்

சொந்தமில்லை என்பதுபோல் சொன்னாலும் – சிந்தனையில்

கிஞ்சித்தும் வஞ்சமில்லார் கூறுகின்ற சொற்பொருளை

நெஞ்சறியும் சீக்கிரமே நின்று!

 

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்பொன்று உற்றார் குறிப்பு! 1097

 

வஞ்சமே இல்லாத வாய்மொழியும் வன்பகைக்குப்

பஞ்சமே இல்லாத பார்வையும் – கொஞ்சமும்

சொந்தமிலார் என்பதுபோல் தோன்றிடினும் சொந்தத்தில்

குந்தகம் காணாக் குறிப்பு!

 

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்! 1098

 

அசையும் இடையாள் ஒசியும் நடையாள்

பிசையும் அழகிற் பெரியாள் – இசைந்துநான்

பார்த்த நொடியினில் பையச் சிரிக்கின்றாள்

ஈர்க்கும் இயல்பிலவள் ஏர்!

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலர் கண்ணே உள! 1099

 

சொந்தம் இலார்போலும் சுற்றம் இலார்போலும்

பந்தம் இலார்போலும் பார்ப்பதெல்லாம் – இந்தநற்

காதலில் மட்டுமே காணக் கிடைக்குமிது

காதலர்க்கே வாய்த்த கவின்!

 

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல! 1100

 

பையன் அவன்கண்ணும் பாவை அவள்கண்ணும்

பைய‍ஒன்றை ஒன்று பருகியபின் – தையலின்

வார்த்தையி னாலோ தலைவன்வாய்ச் சொல்லாலோ

ஓர்பயனும் இல்லை உணர்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக