திங்கள், 9 மார்ச், 2026

நெக்குருகிப் போய்விடுவாய் நெஞ்சு!

 

 

நஞ்சென் றறிந்தாலும் நண்பரொடு போடுகையில்

மிஞ்சியெழும் கிக்கை விடவும்தன் - பொஞ்சாதி

பேரா தரவோடு பெக்கடிகும் போதினிலே

வாராத கிக்கு வரும்! 01

 

வெள்ளயர்போல் ஊற்றி விவரமாய்ச் சாப்பிட்டால்

உள்ளபடி சாராயம் உத்தம‍ம்தான்; – கொள்ளளவைக்

கண்டு பிடித்துக் கிளாசில் அளந்தூற்றித்

தண்ணீர் கலந்து தரேன்! 02

 

கள்நாக்கில் பட்டுக் கலந்த மறுநிமிடம்

உள்நாக்கில் தொட்டுவை ஊறுகாய்; – சுள்ளென்று

மின்சாரம் தேகத்தை மீட்டட்டும் மென்போதை

தன்சாரம் கூட்டட்டும் சார்ந்து! 03

 

சொட்டுச்சொட் டாய்க்குடித்தால் சுர்ரென்று தூக்காது;

பட்டென்று ஆளைப் படுத்தாது; – முட்டமுட்ட

மாந்துவதே குற்றம்; மகிழ்ச்சிக்குக் கோப்பையை

ஏந்துவதில் இல்லை இடர்! 04

 

பொதைக்குப் போட்டால் பிழைப்புச் சிரித்துவிடும்;

வாதைக்குப் போட்டால் வறுமைவரும்; – பாதைகள்

மாறாத வண்ணம் மதுவினைக் கையாண்டால்

நூறாகும் இன்ப நுகர்வு! 05

 

வாய்க்கும் கரத்துக்கும் வாய்க்கால் தகராறு

வாய்க்கும் முனமெழெந்தால் வம்பில்லை; – போய்மதுவை

மூக்குமுட்ட மாந்துவதே மூர்க்கம் அடையவைக்கும்;

வாக்குக் குழறவைக்கும் வாய்! 06

 

இன்றைய கோட்டா இதோடு முடிகிறது

பின்னொன்று கேட்டுப் பினாத்தாதே – முன்னிரவு

மஞ்ச விளையாட்டை மட்டுப் படுத்திவிடும்

கெஞ்சாமல் சும்மா கிட! 07

 

வான்படுத்த வட்டநிலா வையம் இறங்கிவந்தென்

ஊன்படுத்த சேதிசொல்வேன் உள்ளறையில் – நான்கொடுத்த

பெக்கடித்த போதைவிட பெண்டாட்டிப் போதையிலே

நெக்குருகிப் போய்விடுவாய் நெஞ்சு! 08




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக