சனி, 28 பிப்ரவரி, 2009

கதி -திக!

‘கதி’யென் றியம்புவார் கம்பனை; இந்தச்
சதிவீழ தக்கஉரை சாற்றிக் -‘கதி’யைத்
‘திக’என மாற்றித் திருக்குறட்பின் கம்பன்
தகுமெனச் சொல்வோம் தகைந்து!

எக்காலும் போற்ற எடுத்துரைத்தான் வள்ளுவர்ஓர்
முக்கால் அடியில் முதுமொழிகள் -எக்கவியும்
இக்கவிக்(கு) ஈடில் எனுங்கருத்தை மேடைதொறும்
மக்களுக்குச் சொல்வோம் மதித்து!

ஈந்தவனைப் பாடா தெலியோர் நலம்வாழச்
சாந்துணையும் நற்பாக்கள் சாற்றிவைத்தார் -வேந்தனையும்
பாட்டுக்குள் போற்றாப் பெருமதியோன் வள்ளுவரை
ஏட்டுக்குள் வைப்போம் இழைத்து!

செந்தமிழ் பெற்ற திருவாந் திருக்குறள்
எந்தமொழி பெற்ற திதுபோன்று -செந்தமிழர்க்(கு)
ஊனாகும் ஒப்பில் உயர்குறள் பூவிதழ்மேற்
தேனாகும் என்போம் தெரிந்து!

ஏடெடுத்த எண்ணில் எழிற்கவிஞர் எக்காலும்
பீடெடுத்து வாழ்ந்ததுவாய்ப் பேரில்லை -நாடெடுத்(து)
ஓதுகுறள் ஓதுவதால் ஓங்கும் அறிவெனிலோர்
தீதில்லை கண்டோம் தெரிந்து!அகரம்.அமுதா

புதன், 25 பிப்ரவரி, 2009

உளறல்!

உளறல் எனுமோர் உயர்தமிழ்ச் சொல்லுக்(து)
உளநற் பொருளும் உரைக்கின் -குளறல்;
உதவாக் குழறல்; உரைதடு மாறல்;
பிதற்றல் எனலாம் பெரிது!

கட்டித் தழுவிநாற் கால்சேர யாக்கையிரண்(டு)
ஒட்டி உறவாடி உய்கையில் -மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு?

அகரம்.அமுதா

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

வீணை வருடும் விரல்!


காலத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாலத்தை ஆள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்!

அகரம்.அமுதா

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

துன்பத் தீர்ப்பு!

(திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத் தீநேர்ச்சியில் வாழ்விழந்த மணப்பெண் சுபஸ்ரீயின் நிலைநின்று எழுதியது!)

திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்!
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்!

செண்டுகள் சூடியப் பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந் தேகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!

விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றியக் கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!

ஜதிகள் போடும் சலங்க சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!

சதியே செய்யும் விதியே! என்னை
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?

அகரம்.அமுதா

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

ஊதிவத்தி!

வேர் கிளை
இலை விடாத
விருட்சம் நீ...

உன்
வெள்ளை விழுதுகளோ
வான்நோக்கி எழுகின்றன...

நீ பூத்தநெருப்பில்
மணம் அவிழ்கிறது
எந்த வண்டிற்காக?

விழிப்பில் கறைகின்ற
கனவுபோல
காற்றில் கறைகிறது
நீ பரப்பும் மணம்!

மலரிதழ்கள் அல்லாத
மகரந்தம் தாங்கிய
மலர்க்காம்பு நீ...

புகை ஓவியம் தீட்டும்
அதிசயத் தூரிகை...

குறள் வெண்பாவினும்
குறுகிய வெண்பா...

எந்த மீன்களுக்காய்
நீ
புகைத் தூண்டில்
வீசுகிறாய்?

நீ
நின்று தவமிருக்க
சாம்பல் புற்று
உன்னை
முழுமையாய்ச் சூழ்ந்து
முற்றுகையிடுகிறதே!

உனக்குப்
பலரறிய அவையில் வைத்துத்
தீ மகுடம்
சூட்டுகிறோம் நீயோ
கூந்தல் அவிழ்க்கிறாய்
திரௌபதியைப் போல...

அகரம்.அமுதா

வியாழன், 5 பிப்ரவரி, 2009

சுவடுகள்!

இலக்கின் காற்புள்ளி...
இலட்சியத்திற்கு
பிள்ளையார் சுழி...
========
========

தூரிகையின்றித்
தீட்டிய ஓவியம்...
மையூற்றாமல்
மெய்யெழுதும் காவியம்...
========
========

பயண அஞ்சல்
இலக்கை அடைய
அஞ்சல் தலையும்...
அதிலிடும் முத்திரையும்...
========
========

பாதப் பதிப்பகம்
வெளியிடும் பதிப்பு...
பாதைகள் எல்லாம்
நூல்களின் தொகுப்பு...
========
========

இளமையின் மீது
நம்பிக்கை வைத்து
இலக்குகளை
ஊதியமாய் வழங்கும்
பயணங்கள்
முதுமையிடம் மட்டும்
ஊண்று கோல்களின்
சாட்சிக் கையொப்பத்தையும்
கேட்டுப் பெறுகிறது...!

அகரம்.அமுதா