வியாழன், 22 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (8)


களப்பில்* உணவின்றிக் கண்ணீர் வழிய
அளப்பில்* தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பி*ப்
பிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்
கறு*க்கொண் டவர்க்கியார் காப்பு? (71)

காணலரால்* எம்மவர் காணி* இழந்துநலங்
காணக் கடந்தார் கடல்நீரை; –தோணி
கவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே
தவித்தும் இறந்தார் தனித்து! (72)

தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (73)

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து*! (74)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)*
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (75)

காணக் கிடைக்காக் கவினே!* உனையேயெம்
மாண*த் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (76)

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (77)

உவட்டும்* உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தா(ய்)இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (78)

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (79)

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (80)

களப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில் தடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு அஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி; காணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்; இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்; நயத்தல் –விரும்புதல்; அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்; கவின் –அழகு; மாணம் –மாட்சிமை; உவட்டுதல் –அருவருக்கத்தக்க; மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்; குழுமாடு –காடையர்.

அகரம் அமுதா

புதன், 14 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (7)



இடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா!
அடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)
அடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;
எடுப்பார்கைப் பிள்ளையுமா னோம்! (61)

நோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;
நோக்கில் தெளிவன்றோ நோய்தீர்க்கும்? –போக்கொன்றே
ஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை
மோதி மிதித்தாய் முனைந்து! (62)

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (63)

ஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.

ஓரியக்கம் கண்டவனே! ஓர்ந்துதமிழ் காப்பவனே!
ஓரியர்க்குப் பாடம் உரைத்தவனே! –ஆரியர்க்கும்
நெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்
பற்றியடி வைக்கின்றோம் பார்த்து! (64)

ஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.

பாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்
மாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்
வந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்
நொந்தகுடி ஆனதனை நோக்கு! (65)

நோன்பிருந்து பெற்ற நிகரில்லாய்! சிங்களர்
ஊன்பிளந்து நொய்தின்* உயிர்குடித்தாய்! –வான்பிறந்த
காலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்
ஞாலத்தில் வாழ்ந்திடவே நன்கு! (66)

நொய்தின் –விரைவாக

நன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்
சென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்
ஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்
காரகற்றும் வெய்யவனே காண்! (67)

ஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை; வெய்யவன் –கதிரவன்.

காணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு
கோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாண*க்
குறையுடையார் தேடியெம் குட்டி மணி*யின்
உறுப்பரிந்து கொன்றனரே ஓர்ந்து! (68)

மாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை எதிர்த்த முதன்மையானவர்களுள் ஒருவர்.

ஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி
சீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)
ஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே
ஆரியரின் சூழ்ச்சியினால் ஆங்கு! (69)

ஆங்கண்* தமிழர் அமர்வழிய*த் தீயிட்டுத்
தூங்கா விழியராய்த் துச்சிலின்றி* –ஈங்கிருந்(து)*
ஏதிலி*போல் ஏகென்றார் காடையர்*; இப்பாரோர்
காதிலிபோல் நின்றார் களித்து! (70)

ஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்; ஈங்கு -இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.

அகரம் அமுதா

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஆறுதல் பரிசு!

வா! என்கண்ணே!
இச்சை அழுக்ககற்ற
முத்தத்தில் நனைத்து
உதடு துவை!

சூடான யாக்கை
ஆற்றுப் படுத்து!

உன் உளச்சுமையை
என்மீதும்
என் உடற்சுமையை
உன் மீதும்
வா!
சற்றே இரக்கிவைப்போம்!

உள்ளே உள்ளதை
உதடு மறைப்பினும்
நனைந்த நைலான் புடவையாய்
விழிகள் காட்டிக் கொடுத்துவிடும்

இன்றைய கோரிக்கைகள்
என்னென்ன?
பட்டியலிடு!

முன்னிரவு கோரிக்கைகளைப்
பின்னிரவில் மனம்
பரிசீலிக்கும்

பலமுறை
நிராகரிக்கப் பட்ட கவிதை
என்றேனும்
பிரசுரிக்கப் படுவதில்லையா!?

கோரிக்கைகள்
நிராகரிக்கப் படினும்
சோர்ந்து விடாதே!
முயற்சி செய்!

வா! என் கண்ணே!
உன்
இத்தனை நாள் பொறுமைக்கு
முத்துமாலை –மன்னிக்கவும்
முத்தமாலை ஆறுதல் பரிசாக!

அகரம் அமுதா

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தமிழும், தமிழரும்!

நெஞ்சினில் மறத்தை நட்டுவ ளர்த்தும்
நேர்மையின் வழிதனில் சென்ற
மஞ்சினை ஒத்த வண்டமிழ் மக்கள்
மானமே உயிரெனக் கொண்டு
விஞ்சிய கல்வி மிகுப்புகழ் செல்வம்
விளங்கிட பாரினில் முந்நாள்
அஞ்சிய பேர்கட் கருள்மழை பொழிந்தே
அழகுற வாழ்ந்தனர் நன்றாய்

காய்ச்சிய இரும்பைக் கைதனில் எடுத்துக்
கண்முனம் நேரெதிர் நன்று
பாய்ச்சிட வரினும் பகையெனக் கருதாப்
பாங்குடன் நெஞ்சினை நிமிர்த்தும்
மாட்சிமை படைத்த தமிழரின் வாழ்வில்
வளர்ச்சியைக் கண்டுபொ றுக்கா
ஏச்சுடை பலர்தம் இரண்டகப் போக்கால்
இடர்பல உற்றனர் கண்டீர்!

செந்தமிழ் அழிப்பைத் திறம்பட புரிந்தால்
சிதைகுவர் தமிழரென் றாங்கே
வந்தவர் எண்ணி வடமொழி புகுத்தி
வளர்தமிழ் சிதைத்தனர் நன்றாய்
இந்தபே ரிடரால் கன்னடம் தெலுங்கோ(டு)
இன்மலை யாளமும் தோன்ற
முந்தைய தமிழர் கன்னடர் தெலுங்கர்
முகிழ்மலை யாளரும் ஆனார்!

எஞ்சிய தமிழர் இன்றமிழ் வளர்ப்பை
இடையறா தியற்றிய தாலே
நஞ்சினை முறிக்கும் மூலிகை அன்ன
நறுந்தமிழ் வளர்ந்ததென் றாலும்
அஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்
அருந்தமிழ் அழிவதும் நன்றோ?
எஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்
எப்படி வாழ்ந்திடும் தமிழும்?

கனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்
கலந்துகி டப்பது கண்டு
தனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்
தடுத்திட முனைந்தனர் அஃதை
நனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்
ஏற்றுந டப்பதி னாலே
இனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்
இவ்வுல கேற்றிடு மாறே!

அகரம் அமுதா

வியாழன், 1 ஏப்ரல், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (6)



என்றென்றும் காடையர்க்கே ஏற்றதை ஈந்துநமைக்
கொன்றொழிப்ப தாரியரின் கோளன்றோ! -என்றும்
இழிசெயலுக் கஞ்சியவா! இல்லை இவர்தம்
இழிசெயலை எண்ணிடவோர் எண்! (51)

எண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்
கண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்
தேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்
வாடிக் கலங்கலைநீ என்று! (52)

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (53)

துடைத்தழிக்கத் தோன்றிய தூயா! உலகம்
நடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி
ஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே
தூற்றிக் களிக்கும் தொடர்ந்து! (54)

துடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,
மடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்
குண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்
செண்டள்ளி*த் தூவும் சிரித்து! (55)

சிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்
இருப்பிடம் ஏகாரோ? ஏய்ப்போர் –இருக்கின்ற
நாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்
பாழ்பட்டுப் போகிறதே பார்! (56)

பார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்
நீர்சூழ்ந்த நாட்டில் நிலைகெட்டு? –தீர்வொன்றை
நாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே
தேம்பிப்பின் ஓடும் தெறித்து! (57)

தெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை
உறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்
சுட்டப் பிறந்த சுடர்கதிரே! இங்கவரை
நெட்டி நெரித்தாய் நிமிர்ந்து! (58)

நிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்
எமைக்காக்கும் ஈழத்(து) இறையே! –குமை*செய்
கொடுஞ்சிங் களரின் குடலை உறுவி
நெடுவான் எறிந்தாய் நிலைத்து! (59)

நிலைத்த புகழின் நிறையே! இகலைக்
களையப் பிறந்த கதிரே! –களத்திற்(கு)
அழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே
இழைத்தார் இமையா(து) இடர்! (60)

எனைத்தும் –முழுதும், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்; இகல் -பகை; துடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு; தெறுநர் –பகைவர்; நிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான காலஅளவு; குமை –அழிவு, துன்பம்.

அகரம் அமுதா