வியாழன், 27 நவம்பர், 2008

வாழ்த்தும், ஏற்பும்!


யர்திரு நெல்லைக்கண்ணன் அவர்கள் என் வலைப்பூவைப் படித்து என்னைப் பாவால் பாராட்டியமையும் அதனை ஏற்று நான் பதிற்பா வடித்தமையும்.


வெண்பாவில் விளையாடும் உங்களையே
      வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
      கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
      பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன்
      பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க!

அன்புடன் நெல்லைக்கண்ணன்

இனி என் பாடல்:-

வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா

அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?

நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் ஒப்பாதே!
ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே

பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
ஆணென்பேன் என்னை அகவையிறு பத்தெட்டு!
முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்

மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;

பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!

அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே

கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;

தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
தீரமின் மையால் தெரிந்து!

அகரம்.அமுதா

ஞாயிறு, 23 நவம்பர், 2008

என் பாடல்!

செந்தமிழில் சொல்லெடுத்துத்
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!

காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!

உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!

முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!

உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!

முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!

சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!

எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!

காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?

எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!

முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!

அகரம்.அமுதா

வியாழன், 6 நவம்பர், 2008

சிங்கை பெற்ற செல்வம்! முகம்மது ரஃபி!


- - - - - - - - - முகம்மது ரஃபி--- அகரம்.அமுதா--- பொன்.மாகாலிங்கம்.

காலைக்கதிர் முளைக்கும் முன்-ஓர்
சோலைக்குயில்
ஒலி அலைவழி
ஒலியெழுப்பும்...

அதைக்-
கேட்டெழுந்தத் தென்றல்
கீழ்த்திசை கட்டிலில்
கிடந்துறங்கும் கதிரைத்
துயிலெழுப்பும்!

சேவல் கூவிச்
செங்கதிர் எழும் -இதை
ஊரறியும்;
உலகறியும்!

ஓர்-
பூவை கூவிப்
பொழுது புலர்வதை
வானொலி கேட்கும்
மாந்தர்தம்
காதறியும்;
கருத்தறியும்!

அக்குயிலின் பேர்
முகம்மது ரஃபி- என
மூலைக்கு மூலை
மாந்தர்தம்
மூளைக்கு மூளை
எழுதி(யி)ருக்கும்...!

-- -- --

அரிநிகர்த்த –அவ்
அரியவனின் நிறம்
ஊதா;

குரலில் கொஞ்சம்
தேனைக் குழைப்பார்
அதனைத் துய்க்காது
அளிகள் ஓடிப்போய்
மலர்களில் மகரந்தத்தை
ஊதா!

-- -- --

அவர்-
சாதனைகளின் குதிர்;
எப்படி சாதிக்கிறார்
என்பது
சாதனைகளாலும்
அறியப்படாத புதிர்!

சாதிக்க வேண்டி
மௌனமாய் இருந்து
மௌனத்தைச் சோதிப்பார்;
மௌனம்- இவரிடம் தோற்று
மௌனமானபின்
மலரிதழ் பூத்து
வாதிப்பார்!

இருமுப்பது மணிகள்
இடையறாது
நிகழ்ச்சி படைத்து
சாதிப்பார்;
இவர்போல்- ஆரும்
இயன்றிடின்- இயன்றவர்
தொண்டை கட்டிப்
பாதிப்பார்!

-- -- --

நூலாய்ந்த புலவோரும்;
கற்றாய்ந்த கவியோரும்
சூழ்ந்திருக்க...

என்போல்
கத்துக் குட்டிகளும்
கடைதேறக்
கவிதை நேரம் கண்டார்!

கிழமையில்
காரி வந்தால்
கவிதை ஒலிக்கும்...
அந்த வாய்ப்பு
ரஃபி தந்தது!

அதன் வழிதான்
கவியுலகின்
குஞ்சுக் குழாம்களைக்
குவலயம் கண்டது!

அநேகக் கவிஞருக்கு
அவரின்- கவிதை நேரம்தான்
ஊட்டச் சத்து!
ஆகையால்தான்
அவர்மேல்- எனக்கு
ஏகப்பித்து!

ஓராயிரத்து ஏழில்-
ஒப்பிலா மனிதரை
ஈராயிரத்து ஏழில்-
ஐந்தாம் முறையாக
அளப்பறிய நிகழ்ச்சிப்
படைப்பாளராய்
சிங்கை ஏற்றுக்கொண்டது!
அப்படி ஏற்றதனால்
அடங்காப் புகழைத்
தன்முடிமேல்
ஏற்றிக்கொண்டது!

அகரம். அமுதா