நன்றகற்றித் தீதினையே நத்துகின்ற நாய்மனத்தர்
சென்றுதவி செய்வார் திருடர்க்கே -தொன்றுதொட்டுச்
செந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரை
செந்தழலுக் கீதல் சிறப்பு! (41)
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (42)
இவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;
தவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்
தமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி
எமக்கரண் ஆணாய் எழுந்து! (43)
எழுத்துப் பிழையோ? எதுவோ? அறியேன்
பழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து
விடுகல்லால்; அந்தோ! வியன்தமிழர் தாமும்
கொடுமைபல காணல் கொடிது! (44)
கொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்
துடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்
கொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்
மடிவதனைப் பார்ப்பார் மகிழ்ந்து! (45)
மகிழ்நன்* முனமே மனையாளை வாரித்
துகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்
உமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்
அமிழ்வார் உலகத் தவர்! (46)
தவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி
அவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை
எதிப்பார் இலரே எழுகதிர்க் கையா!
மதிப்பார் அவரை மனத்து! (47)
மனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்
குணமென்ப தில்லாத கூட்டம்! –நிணமே
உடலான காடையர் ஊரழித்தல் கண்டும்
தொடர்ந்தவர்க்குச் செய்வரே தொண்டு! (48)
தொண்டு கிழந்தமிழ்த் தோன்றால்! இவற்றையெலாம்
கண்டு மனம்வெடித்த காவலா! –பண்டு*தமிழ்
மாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்
போய்மறையச் செய்தாய் புலர்ந்து! (49)
புலவு*தோள் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்
உலம்பு*தோள் மன்னா உரைத்தாய்! –கலங்கிக்
கருத்தழிந்த மாணார் கரவா ரியரை
இரப்பார் ‘படையருள்க’ என்று! (50)
உறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம், தாவு –தப்பு, குற்றம், மகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை, நிணம் –கொழுப்பு, பண்டு –பழமை; மறு –குற்றம், புலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற; கரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்.
அகரம் அமுதா