அன்புள்ள மான்விழிக்கு!
அன்புள்ள மான்விழிக்கு! அன்பன்
மனம்பதைத்து
என்பிலிரத் தம்தோய்த் தெழுதுவது; - என்னவென்றால்...
பேஸ்புக்கில் உன்துயரம் பேசும்
படம்பார்த்தேன்;
மாஸ்குறைந்த தாகண் மணிக்கு!? 01
மாதரசி மண்ணள்ளி மாய்வதா? வெய்யிலிலே
காதல் இளவரசி காய்வதா? - தீதெல்லாம்
தேவதையைச் சேர்வதா? தேன்நிலவு தேய்வதா?
மாவழகு வாடு வதா!? 02
பிட்டுக்கு மண்சுமந்தான் பித்தன் பிறைசூடி;
சுட்டிப்பெண் நீயேன் சுமக்கின்றாய்? - துட்டுக்கு
லிப்ஸ்டிக்கு வாங்கவா? லெ தர்பேக்கு
வாங்கவா?
செப்பல்கள் வாங்கவா? செப்பு! 03
கோட்டுள் கனிபதுக்கும் கோமகளே! ஏனடிஅக்
காட்டில் படுகின்றாய் கஷ்டங்கள்? - மூட்டுவலி
வந்தாலோ தைலமிட மாமன் அருகிலையே!
செந்தா மரைக்கேனித் தீங்கு!? 04
பூமகள் நோயுறவா? பொன்விரல்
புண்படவா?
தேமலர்ப் பாதங்கள் தேய்வுறவா? - நான்மனம்
வெம்பி அழுதிடவா? வெண்பா எழுதிடவா?
மம்முதன்’கிம்’ தூக்கவைத்தான் மண்!? 05
காசுபணக் கஷ்டமா? காடுகரை நஷ்டமா?
ஏசுபவர் ஏசுவதில் இஷ்டமா? - ஆசுவதம்
மண்சுமந்தால் கிட்டுமா? பெண்சுமந்தால்
மட்டுமா?
கண்சுமந்தாள் கண்ணீர்க் கடல்! 06
ஆண்டியாய் ஆனானோ ஆரணங்கே! என்மாமன்
போண்டியாய்ப் போனானோ பூங்கரும்பே! -
வேண்டுமென்றே
மண்சுமக்க வைத்தானோ மாதுளையே! தாங்குமோ
பெண்சுமக்கும் பூவிரல் பிஞ்சு!? 07
இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்க
மொட்டுமலர் மண்சுமத்தல் மோசமே – பட்டென்று
கோபத்தில் கொட்டுவைக்கக் கோமான் குசேலனில்லை;
ஆபத்தில் போய்முடியும் அஃது! 08
ராணிபோல் காப்பாற்ற ராஜன் தவறிவிட்டான்;
தோணியில் ஏறிவா தோகையே! – காணி
உழுதுழைத் தேனும் உனைக்காப்பேன்; நெஞ்சில்
விழுதரைத்து நீவை விருந்து! 09
நாளை அதிகாலை நான்கு மணியளவில்
காளைநான் கண்மணிக்காய்க் காத்திருப்பேன்; - வேளை
தவறுமுன் ஓடிவந் தாயேல் மணப்பேன்;
தவறினால் மாய்வேன் தடத்து! 10

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக