ஞாயிறு, 17 ஜூலை, 2011

பொறுத்துப் பார்த்தேன் முடியலே

பொறுத்துப் பார்த்தேன் முடியலே –நான்
பொறுமை இழந்தேன் முடிவிலே
கருத்துச் சொன்னாக் கசக்குதா –அத
உறத்துச் சொன்னா உறைக்குதா?

உழைக்கச் சொன்னா முனகுறான் –பிறர்
உழைப்பில் வாழ முனைகிறான்
எடுத்துச் சொன்னா எதிர்க்கிறான் –தனைக்
கெடுத்துக் கொள்ளத் துடிக்கிறான் –மதி
மெத்த உண்டு –எனப்
பித்தங் கொண்டு –மன
சுத்தமின்றி நட மாடுகிறான் –அதப்
(பொறுத்துப்)
தப்புக்கு வருந்த மறுக்குறான் –அவன்
ஒப்புக்குந் திருந்தா திருக்குறான்
உப்புக்கும் பொராம தருக்குறான் –வெறும்
உடம்பை வளர்த்து முறுக்குறான் –பயம்
ஏது மின்றி –தன்
மான மின்றி –வழி
மாறிச்சென்று சுகம் காணுகிறான் –அதப்
(பொறுத்துப்)
போக்குச் சரியில்ல அதச்சொன்னா –அவன்
பொங்குறான் ‘அதனால் உனக்கென்னா
ஆச்சு’ண்ணு கேட்குறான் நமக்கென்னா –என
அலட்சியம் பண்ணாத அறிஞரெல்லாம் –அற
நூல்கள் தேடி –மன
நோயைச் சாடி –அறி
வூட்டினால் அரண் டோடுகிறான் –அதப்
(பொறுத்துப்)

தாலாட்டு!


விழியில் நீரோடை ஏனோ தாமரையே
விடியும் நாள்தூரம் இல்லை வான்பிறையே
சிவனுக்கும் அன்னை தந்தை கிடையாதம்மா
அவன்போலே மண்ணில் வந்து பிறந்தாயம்மா
--- --- ---
பெண்ணாய் வந்து பூமியில் பிறந்தது
பிழையென அழுதாயா
ஈன்றவர் உன்னை எடுத்தெறிந் ததனால்
இருவிழி கசிந்தாயா
ஆடும் மயிலும் கூவும் குயிலும்
அழுவது கிடையாதே
சூடும் மலரே சுந்தர நிலவே
சோகத்தில் துவலாதே
உனக்காக வானம்வந்து நீர்வார்த்தது
எதற்காக உந்தன்கண்கள் நீர்கோர்த்தது -ஒரு
பூவைப்போலே வாழும் –பெண்
புயலாய் மாறக்கூடும் –விழும்
சோதனைகள் –எழும்
சாதனைகள் –ஏன்
வேதனைகள்?
--- --- ---
ஓடும் நதியில் ஓர்துளி என்றே
உன்னை நினைந்தாயா
நாளைப் பொழுது உனக்கென விடியும்
நம்பிக்கை இழந்தாயா
ஆடும் காற்றில் அகல்விளக் கணையும்
சூரியன் அணையாதே
நாணல் போலே நம்பிக்கை வளைந்தால்
நன்மைகள் பிறக்காதே
வலிசெய்யும் வாழ்க்கைதானே வளமானது
உளியின்றிச் செற்பங்களெங்கே உருவானது -ஒரு
புலியைப் போலே பாயும் –துயர்
போனபின் இன்பம் சூழும் –வரும்
காலங்கள் –இனி
வளமாகும் –சுகம்
உனதாகும்!