ஞாயிறு, 29 மார்ச், 2026

என்னங்க!? எங்க இருக்கீங்க? வீடுவர

இன்னமும் தாமதம் ஏனுங்க? - சொன்னாக்கேள்

முக்கிய மீட்டிங்கில் மும்முரமா நானிருக்கேன்

வக்கிறியா போனை அணைச்சு! 01

 

கொஞ்சம் இருங்கஏன் கோவப் படுறிங்க!?

எங்கென் றதற்கா எகுறுறிங்க? - இங்கநான்

எம்மாம் பிரச்சினையில் எக்குத்தப் பாஇருக்கேன்

சும்மாக் கிடநீ சுருண்டு! 02

 

மடச்சேவல் ஒன்னு வழிமாறிப் போயி

வெடக்கோழி சேரக்கண் வேர்த்தேன்; – அடைக்கோழி

போலும் பகல்தூக்கம் போட்டால் வரும்கனவு

மேலும் பலிக்காது வே! 03

 

நெல்லுக்குப் பாயவே நீரில்ல; பூப்பூக்கப்

புல்லுக்குக் கொஞ்சம் பொசியணுமா? – கல்லுப்பா

ஏன்டி கரிக்குற? ஏதம் உரைக்கிற?

நான்சுத்தப் பேர்வழிதான் நம்பு! 04

 

நம்பித்தான் போனேனே நான்மோசம்; எத்தனைநாள்

தம்பட்டம் இந்தச் சகவாசம்? - கும்பிடறேன்

அம்மாடி! ஊரார் அலரைஉன் மண்டைக்குள்

இம்மியும் ஏத்தா திரு! 05

 

முன்னாலப் பாத்து முழம்போட வேணாம்நீர்

பின்னாலப் பாத்தாப் பிழைபுரியும்; – பின்னால

நிக்கிறது நீதானா? சிக்கினது நான்தானா?

பிய்க்கிறதுக் கேனாம் பிரம்பு!? 06




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக