வாழ்த்துப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மார்ச், 2026

பாரத்தில் நீயெடுப்பாய் பங்கு!

 மார்ச் - 8 அனைத்துலக மகளிர் தினம். அந்நாளில் முகநூலில் மகளிரைப் போற்றிப் பற்பல கவிஞர்களின் வாழ்த்துக் கவிதைகள் வரிசைகட்டக் கண்டேன்.


வாழ்த்துகளால் மாற்றம் வருவதில்லை. செயல்களால் சீர்திருத்தம் செழிப்புறும்.
இதையுணந்த மங்கையொருத்தி எதிர்கவிதை தொடுத்தால் எப்படி இருக்கும்?
இதோ கவிதை...

பெண்கூற்று-

அம்மி அரைக்கும்
அலுப்பைத் துணிகளைக்
கும்மி எடுக்கும்
குடைச்சலை – மும்முறை
ஆக்கும் பணிச்சுமையை
ஆலிங் கனஅயர்வை
நீக்காத நாளெதற்கு
நேக்கு!?

நேற்றைய வாழ்த்துகளால்
நெஞ்சுகுளிர்ந் தாலுமில்லை
மாற்றம் நிகழ்ந்த
வரலாறு; – போற்றுவதே
பூவைக்குப் போதுமெனில்
பூமி பிளக்கட்டும்
சேவைக்கு வாழ்த்தா
சிறப்பு!?

பெண்ணுக்கு ஞாயிறும்
பெத்தம் பெருஞ்சுமையாய்
மண்ணில் அமைந்த
மறுநிமிடம் – உண்மைக்கு
மெத்தப் புறம்பாய்
விதந்தொருநாள் காண்பதெல்லாம்
சுத்தப்பொய்; விட்டுத்
தொலை!

காய்ச்சிய ஈயத்தைக்
காதிலே ஊற்றுதல்போல்
வாய்ச்சவடால் ஆண்வர்க்க
வாழ்த்துளது; – தாய்க்குலத்தின்,
தாரத்தின், தங்கையின்,
தங்க மகள்களின்
பாரத்தில் நீயெடுப்பாய்
பங்கு!

ஆணுக்கோர் ஞாயிறுபோல்
ஆரணங்கிற் கோர்நாளை
காணுங்கள் அஃதும்
கடமையன்றோ? – வீணுக்கு
வாழ்த்துகளால் எம்மை
வளைத்துக் குளிர்விக்கும்
கீழ்ச்செயலால் மாறாதெம்
கேடு!



புதன், 22 அக்டோபர், 2025

வாழ்த்துப்பா!

 

தூக்கலாய் அல்லாமல்,
தொய்வேதும் இல்லாமல்,
நீக்கமற வள்ளுவத்தில்
நின்றுள்ளான்; - ஆக்கங்கள்
அத்துணையும் தேன்தான்;
அமுத குறள்தெளிய
இத்துணையே போதும்
இனி! 01
முன்னம் எழுதி
முடித்த பனுவலைத்தான்
பின்னும் எளிமை
படுத்தியுள்ளான்; – தென்றமிழர்
உள்ளத்தில் ஏந்தி
உவக்கும் திருக்குறளை
வள்ளுவன் தான்பிறந்து
வந்து! 02
உரைதேடாப் பாட்டை
உலகிற் களித்தான்
நரைகூடா முன்னம்என்
நண்பன்; – கரைகாணாத்
தீங்குறள் ஆழியைச்
சேர்ந்தே கடப்போம்யாம்
ஈங்கிவனே ஓடம் எமக்கு! 03
தோல்,சடை நீக்கிச்
சுளையை வழங்கியுள்ளான்
கால்நடையும் தின்று
களிகொள்ள; – பால்நடை
போடும் கடைப்பாலில்
போட்டான் புதுத்தேனீர்;
ஏடும்பா ராட்டும்
எழுந்து! 04
பொய்யாத் திருக்குறளைப்
புத்தம் பொருட்குறளாய்
நையப் புடைத்து
நமக்களித்தான்; – பையநம்
பாவலன் சங்கர
பாண்டியன் செய்தசெயல்
பூவள்ளிப் பூவணிந்தாற்
போன்று! 05
கடுகைத் துளைத்தேழ்
கடலைஉள் வைத்துக்
கொடுத்தானே வள்ளுவக்
கோமான் – எடுத்திவன்
ஆராய்ந் துவர்ப்பகற்றி
அக்கடுகுள் தூயநன்
நீராழி வைத்தான்
நிமிர்ந்து! 06
வில்லெடுத்தான் ராமன்;
வியந்ததனைப் பாடுதற்குச்
சொல்லெடுத்தான் கம்பன்;
சுகதுக்கம் – எல்லாம்
துறந்தோன் குறளெடுத்தான்;
சுந்தர பாண்டி
குறளுக் கெடுத்தான்
குறள்! 07
பொய்யா மொழிக்குப்
பொருட்குறள் வார்த்தளித்த
அய்யா உனக்கென்
அகவணக்கம் – மெய்யாக
மேனாள் கவிக்கெல்லாம்
மேலான பாவலன்நீ
ஆனானப் பட்டவன்நீ
ஆம்! 08
நொடிப்போழ்த்தில் தீங்குறளில்
நுண்ணறிவி னாலே
இடியாப்பச் சிக்கல்
எடுத்தான் – படிநீ
அறிவும் வளரும்
அகமும் மலரும்
குறிக்கோள் அடைவாய்
குளிர்ந்து! 09
கோடிஉரை கண்ட
குறளுக்குப் பூங்குறளால்
நாடிஉரை நல்கிய
நண்பனே! – கூடியுனை
வாழ்த்தட்டும் ஊருலகம்
வாழ்த்தட்டும் வானவரும்
வாழ்த்தட்டும் வள்ளுவனும்
வந்து! 10

செவ்வாய், 21 அக்டோபர், 2025

 நறுக்குத் தெறித்தாற்போல்

நற்கவிதை செய்து
கிறுக்குப் பிடித்திடச்
செய்தீர்; - வறுத்தெடுத்த
வேர்க்கடலை போலே
விரும்பிப் புசிப்பதற்குச்
சீர்தொடுத்த தன்மை
சிறப்பு! 01
வாய்விட்டுப் பாடும்
வகையில் வரியாவும்
பாய்போட்டு நாவில்
படுத்திருக்க - ஆய்ந்தெடுத்த
சொல்லால் மனதில்
சுகப்போதை ஊட்டியுளீர்
கல்லல்ல உம்பாட்டு
கள்! 02
பூவா? புதுத்தேனா?
பொன்னா? பொழில்மீனா?
தீவா? திசைதானா?
செவ்வானா? – நாவா?அந்
நாவைகும் தாலாட்டா?
நற்றமிழின் கையூட்டா?
பாவையே! யாதுனது
பாட்டு? 03
சந்தனத்தில் வார்த்தையையும்
சவ்வாதில் சொற்களையும்
கந்தமுறத் தோய்த்துக்
கவிநெய்தீர் – அந்திவரை
தாங்காத மோகத்
தணல்குளிக்கும் மங்கையைப்போல்
தூங்காது நூல்குடித்தேன்
தோற்று! 04
முப்பதுநூல் போட்டு
முடித்த புலவனும்
இப்பதுமை நூலுக்
கிவண்தோற்பான் – அப்படியோர்
ஆன்ற புலமை
அமைந்திடப் பெற்றுள்ளார்
சான்றோர்வாய் வாழ்த்தட்டும்
சார்ந்து! 05
அற்பனுக்கு வாய்க்கா
அரிதான நல்லபலக்
கற்பனைகள் வாய்த்தஇளம்
காரிகையே! – விற்பனைக்குக்
காணிகள் கிட்டும்;
கவிதைகள் கிட்டுமா?
ஆணிப்போன் தானா
அவை? 06
பாவெனும் அந்தப்
பழுதடைந்த வீட்டைப்பெண்
பூவெனும் மங்கை
புதுக்கினார் – ஆவின்பால்
காய்ச்சினார் நெய்விளக்கின்
கண்சுடர் ஏற்றினார்
பாய்ச்சினார் ஆனந்தம்
பார்! 07
வெண்பாவை நல்ல
விருத்தத்தை ஐக்கூவைப்
பெண்பாவை தீட்டிப்
பெயர்பெற்றார்; - கண்பாவை
போலும் அழகழகாய்ப்
பூத்த கருத்தெல்லாம்
பாலும் பழரசமும்
பார்! 08
இதுகவிதை என்றே
இயம்பும் படியாய்ப்
புதுக்கவிதை நன்றே
புனைந்தார் - எதுகவிதை
என்பவர் கண்டால்
இதயம் இழந்திடுவார்
பொன்பெறும் அன்றோ
புனைவு! 09
தொட்டபொருள் எல்லாம்
துலங்கும் படிஎழுதும்
கெட்டிக்கா ரப்பெண்
கிடைத்துள்ளார்; – பட்டிதொட்டி
பாராட்டை நல்கினால்
பற்பல நூல்படைப்பார்;
சீராட்டை ஆழ்மனமே
சிந்து! 10

ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்த்துப்பா! வெண்பாவூர் செ. சுந்தரம்

வெண்பா இமயம், நல்லாசிரியர், வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் 'வெண்பாவில் என்பா விருந்து' நூல் படித்ததால் எழுந்த வெண்பாக்கள்

கனியிருக்கக் காயைக் கவர்ந்தீரே! மெய்யாய்
நனிசிறந்த வெண்பா நவில; -தனிவிருந்(து)
இவ்விருந்(து) இருக்க இமையோர் அழைத்திடினும்
அவ்விருந்துங் கொள்ளேன் அணைந்து!

தலைதந்தும் வெண்பாவைத் தாங்கும் இவர்தம்
நிலைகண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்; -முலைதந்த
அன்னையவள் அன்பைப்போல் ஆங்குறு சுந்தரனார்
வெண்பாவிற்(கு) உண்டோ விலை?

கொட்டருவி போலுமிவர் கொஞ்சுதமிழ்ப் பாவருவி
தொட்டுருவிப் போகுதடா தூநெஞ்சை; -அட்டியில்லை
பாடிக் கடன்தீர்க்கப் பாருதித்தார் போலுமதை
நாடிக் கடன்தீர்ப்போம் நாம்!

பல்லா சிரியர்இப் பாரிலுளார்; சுந்தர
நல்லா சிரியர்போல் நாட்டினரா? -வல்லிடை
மெல்லினமாய்த் தோன்றியிம் மேதினியை ஆள்கின்ற
வெல்தமிழ் வெண்பா விருந்து!

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

வாழ்த்துப்பா!


வாழ்த்துப்பா!

கிறுக்கன்தான் பெயரெனினும் பலரைப் போலக்
கிறுக்குவதைக் கவியென்னும் பண்பில் லாதான்!
சிறிதுந்தான் செறுக்கில்லாச் சிந்தை கொண்டோன்!
சிலேடைக்குக் காளமேகம் தம்பி ஆவான்!
நறுக்கென்றே இவன்பாடும் வண்ணம் கேட்டு
நஞ்சுடைய நெஞ்சத்தார் நாணு கின்றார்
மறுப்பில்லா மணிக்கவிதை வடித்துக் காட்டும்
வரகவிஞன் நம்கிறுக்கன் போலிங் கேயார்?

தேறலதில் இத்துளிதான் சிறந்த தென்று
தேர்ந்துசொல்ல இதுவரையில் முடிந்த துண்டோ?
மாறனவன் மலர்க்கணைபோல் மயங்க வைக்கும்
மதுப்பாவின் எப்பாவின் மாண்பைச் சொல்வேன்?
ஊறலுள்ள ஊற்றினைத்தான் ஊரும் நாடும்!
உண்மையுள்ள பாவினைத்தான் உலகம் பாடும்!
ஆறடுத்த கழனியைப்போல் பாக்கள் தீட்டும்
அருந்தமிழ்க் கிறுக்கன்பா என்றும் வாழும்!




குறிப்பு:- அருமை நண்பர் கவிஞர் தமிழ்க்கிறுக்கன் அவர்களை வாழ்த்தி நான் எழுதிய எண்சீர் மண்டிலம்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 2


எனது நண்பர் சின்ன பாரதியின் மைத்துநர் அறிவழகன் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துப் பாவாக இயற்றியது

தண்ணளி நெஞ்சன்; தண்டாப் பொறையினன்;
கண்ணோளி யாஞ்செழுங் கல்வியில் வான்புகழ்
வேளாண் துறைசார் வெல்லுங் கல்வியே
மேலாம் எனநனி விரும்பிப் பயின்றோன்;
சான்றோன் ‘தனிக்கொடி’ தாய்‘கோ சலை’சேய்;
ஆன்ற அறிவின் அழகன் ஆதலால்
‘அறிவழ கன்’எனும் அழகுறு பெயரினைச்
செறிவுடன் ஏந்திய செம்மல்; அறிவழி
உட்குச் செகுத்த பெட்புக் குரியோன்;
கட்குண வாகிடுங் கவின்யாக் கையினன்;
ஒள்ளிதி யாதென் றுள்ளி உஞற்றும்
மள்ளன்; என்மன மன்றில் உறையும்
பாவலன் ‘சின்ன பாரதி’ மைத்துனன்;
நாவலன்; நனிபெரும் நல்லோன் தனக்கும்,
வைகற் கதிராய்; வம்பு செறிமலர்ப்
பொய்கைத் தேறலாய்ப் பொலஞ்செறி அன்னம்
அனைய காரிகை; அன்பின் நிறைகுடம்;
மூரல் உதிர்க்கும் முழுநிலா; கற்பெனுஞ்
சாரம் செறிந்த தளிர்க்கொடி; செழுங்கனி;
பொறியியல் படித்த பூமகள் ‘சுமித்திரை’
நெறியியல் செழித்த நிறைவயல் தனக்கும்
ஈன்றோர், கிளைஞர், இவரொடு நொதுமலர்,
சான்றோர் கூடித் தகைமிகு திருமண
ஓலை வரைந்து ஒருமன தாக
சோலைக் குயில்களின் தோள்க ளிணைத்தனர்;
கண்ணொடு கண்ணினைக் கண்டு கலந்தும்
பண்பொடு நல்லுடல் பழகித் திளைத்தும்
பெரியோர் மெச்சும் பிறன்கடை பெருக்கி
வரியோர்க் குதவி வான்புகழ் எய்தி
தாமார்க் கும்முன் சான்றென
ஏமாப் பெல்லாம் இயையவாழ்த் துவனே!

சொற்பொருள்:- தண்ணளி –குளிர்ந்த அன்பு; தண்டாத –நீங்காத; பொறையினன் –பொறுமையானவன்; ஆன்ற –அகன்ற; செம்மல் –தலைவன்; உட்கு- அச்சம்; செகுத்தல் –அழித்தல்; பெட்பு –பெருமை; ஒள்ளிது –நல்லது; உள்ளுதல் –எண்ணுதல்; உஞற்றுதல் –செய்தல்; மள்ளன் –வீரன்; மன்று –அவை; நனிபெரும் –மிகப்பெரிய; வைகல் –விடியற்காலை; வம்பு செறிமலர் –மணம் மிகுந்தமலர்; தேறல் –தேன்; பொலம் –அழகு; மூரல் –புன்சிரிப்பு; கிளைஞர் –உறவினர்; நொதுமலர் –அயலார்; பிறன்கடை –வாரிசு; ஏமாப்பு –மகிழ்ச்சி; இயைய –பொருந்த.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 1


2010 ல் நடந்த எனது நண்பர் இலெனின் அவர்களின் திருமணத்திற்கு நான் எழுதிய வாழ்த்து அகவல் இது!

தேறல் மொழியன்; தெளிந்தநோக் குடையான்;
மாறன் அனையன்; மலர்மென் நெஞ்சன்;
காட்சிக் கெளியன்; கட்டுடல் பேணும்
மாட்சிக் குறியோன்; மறவன்; அறிஞன்;
இராம ராசு –சரஸ்வதி ஈன
வராது வந்த மாசறு பொன்னாம்
இலெனின் என்னும் இளவல் தனக்கும்
நிலமுறு பொறையினள்; நெறிநோக் குடையாள்;
கமலம் மீதமர் கலைமகள் அனையாள்;
அமல மொழிமெல் லடியாள்; ‘செவிலித்
தாய்’க்குப் படிக்கும் தகையினள்; சீர்மிக
வாய்க்கப் பெற்ற வடிவினள்; தமிழ்மணி –
மலர்க்கொடி இணையர் மகளாம் சத்திய
கலாவெனும் கவினுறு காரிகை தனக்கும்
திருமண உறவைத் திறம்பட இயற்றி
ஒருமன தாக உவப்புடன் ஒப்பிய
ஈன்றோர் மெச்ச இணையர் இருவரும்
சான்றோர் மொழியைச் சார்ந்து நடந்து
நீக்க மறயிந் நிலத்தினில்
ஆக்க முறபல் லாண்டுகள் வாழ்கவே!