வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கனவு!

நிமிட நேர
ஹைக்கூ…

உறக்கத்தின்
புன்னகை…

இமைக்கதவுகள்
மூடப்பட்டவுடன்
திரையிடப்படும் குறும்படம்…

உறக்க நதியின் மேற்பரப்பில்
நீந்துகின்ற நிலா…

உறக்கத்தால் ஈன்றெடுக்கப்படும்
பெண் சிசு…
அதனால்தானோ?
பிறந்தவுடன் விழிப்பெனும்
கள்ளிப்போல் கொடுத்தே
கொள்ளப் படுகிறது!

அகரம் அமுதா

புதன், 24 பிப்ரவரி, 2010

இவனா தமிழன்?

முத்தமிழில் அறிஞனென்பான்; தமிழுலகத் தலைவனென்பான்;
..........முறையாய் ஒன்றும்
அத்தமிழுக் கியன்றுசெய்யான்; வாய்ப்பேச்சால் வென்றிடுவான்;
.........அதுவு மன்றி
முத்தமிழும் தன்னாலே முகிழுதென மேடைதொறும்
.........முழங்கித் தீர்ப்பான்;
முத்தமிழர் காதோடு முகிழ்மலரைச் சூடுவதை
.........முனைப்பாய்க் கொள்வான்!

ஆங்கிலமே கல்விமோழி ஆகிவிட அதையெதிற்கா
.........அறிவுப் பஞ்சை
ஆங்கிலத்தை ஆளவிட்டு தமிழ்நாட்டை விட்டுதமிழ்
.........அகலச் செய்தான்!
பூங்குளத்துத் தாமரைபோற் பூத்ததமிழ் போயொழியப்
.........புரிந்தான் எல்லாம்
ஈங்குலகில் தாய்மொழிக்கே இவன்போலும் இரண்டகமும்
.........இழைத்தா ருண்டோ?

தனக்குற்ற எதிரிகளைத் தகையில்லாச் சொற்களினால்
.........சாடும் கீழோன்
தனக்கென்று தொலைக்காட்சி தன்பெயரில் நடத்திடுவான்
.........தகையில் லாதான்
தனக்குப்பின் தன்மகனே நாடாள வேண்டுமெனத்
.........தவிக்கும் நெஞ்சன்
தனக்குப்பெண் ஆனவளை தில்லியிலே ஆளவிட்டுத்
.........தாங்கி நிற்பான்!

இத்தாலிப் பேய்தேடி இரண்டகனாம் இவன்செல்வான்
.........இணைதாள் வீழ்வான்
செத்தாலும் இந்திநமக் கெதிரியென்பான் தன்மக்கள்
.........சென்று கற்க
ஒத்தாசை செய்திடுவான் ஈழத்தில் எந்தமிழர்
.........உறுக ணுற்றுச்
செத்தாலும் சென்றுதடுத் திடமுனையான் தன்னலத்தான்
.........திருவில் லாதான்!

அகரம் அமுதா

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தீராப் பழியைத் தரும்!

ஓரா(து) ஒழுக்கத்தை ஓப்பாது விட்டக்கால்
தீராப் பழியைத் தரும்!

இல்லாள் அகத்திருக்க இன்னொருத்தி யைத்தேடல்
நல்லார்க்(கு) அழகோ நவில்!

அகத்தாள் இருக்க அயலவளைக் கூடல்
முகையிருக்க முள்நுகர்ந் தற்று!

உனக்கென்(று) ஒருத்தி உளக்கால் உளத்தால்
நினையாய் அயலவளை நீ!

கூட ஒருத்தியைக் கொண்டபின் மற்றவளை
கூட நினைத்தல் கொடிது!

ஒருத்தியோ(டு) உற்ற உயர்வாழ்வே வாழ்வாம்
கருத்தினில் ஏற்றல் கடன்!

நினைவோடும் மற்றொரு நேரிழையை எண்ணாய்!
மனையாளோ(டு) இன்புறுதல் மாண்பு!

இருமனையாள் தேடி இணைவதுவும் வேண்டா;
ஒருமனையாள் போதும் உணர்!

அகரம் அமுதா

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சனி, 20 பிப்ரவரி, 2010

கவிப்பேரரசுக்கு...

பெண்ணைத்தான் கவிபுனைய தஞ்சை மண்ணைப்
.....பெயர்த்தெடுத்துக் கவிபுனைந்தாய் புலவா! நானும்
உன்னைப்போல் கவிபுனைய வேண்டும் என்ற
.....உளத்தாசை உந்துதலால் எழுத வந்தேன்!
தென்னையைப்போல் ஈந்துவிட பசுவைக் கேட்டால்
.....தந்துவிடும் தனைமுழுதும் தாரை வார்க்கும்
கண்ணைப்போல் பார்வைபெற நகக்கண் ஆமோ?
.....கவிஞனுனைப் போலெழுத என்னால் ஆமோ?

திணையிரண்டில் விளைவதனைத் தேர்ந்தெ டுத்துத்
.....தன்பெயராய்ப் புனைந்திட்டாய்! புதுமை தன்னின்
துணைகொண்டு மரபதனின் மயக்கம் தீர்த்தாய்!
.....துடிப்பாயுன் குருதியினைக் கொடையும் செய்தாய்!
பனைபோலக் கருத்திருந்தும் பால்நி லாப்போல்
.....பாவெங்கும் ஒளிசெய்தாய் சிறுபிள் ளைகள்
உணவுண்ண பால்நிலவைக் காட்டல் போல
.....உன்னெழுத்தால் நானெழுதப் பழகிக் கொண்டேன்!

பொதுவாய் எதுவாய்? முத்துப் பற்கள்
.....பூத்துவரும் செவ்வாய் அதுவாய்! நீயோ
மதுவாய் விருத்தத்தில் சிலம்ப மாடி
.....வாயென்னும் வார்த்தையதை வாழ வைத்தாய்!
இதுவாய் எனுமளவு சிவந்தி ருக்கும்
.....இளையவளின் செவ்வாயில் உனது ஜீவன்
புதிதாய்க் குடிபுகுந்து பொலிந்தி ருப்ப
.....தறியாவிஞ் ஞானத்திற் கேது ஞானம்!

பொருப்புடனே மழையதனை பொழியும் வானை
.....பொய்முகங்கள் காட்டுகின்ற சமுதா யத்தை
விருப்புடனே இலைமரத்தை வைய கத்தை
.....விடலையிலே வருங்காதல் வியந்து பாடி
கருப்பத்தில் சுமந்தீன்று காத்த தாயைக்
.....கவிதையிலே கண்முன்னே கொண்டு வந்தாய்!
‘இறப்பதனை நீயெய்தால் இன்னோர் தாயும்
.....எனக்குண்டோ?’ எனும்வரிகள் பிழியும் நெஞ்சை!

எண்ணமெலாம் உன்“பழைய பனைஓ லைகள்”
.....இதழில்”கொஞ் சம்தேனீர் நிறைய வானம்”
“இன்னொருதே சியகீதம்” “இந்தப் பூக்கள்
.....விற்பனைக் கல்ல”வெனும் இவைகள் நான்கும்
இன்னுமென் நினைவோடு “கொடிம ரத்தின்
.....வேர்கள்”போல் வாடாமல் வாழக் கண்டேன்
கண்ணெல்லாம் கல்வெட்டாய்க் கனவினோடும்
.....“கருவாச்சி காவியத்தைக் காணு கின்றேன்!

எத்தைநீ எழுதாமல் விட்டு வைத்தாய்?
.....இலை,சேரி, குண்டூசி முதலாய்த் தொட்டு
அத்துணையும் அழகுகவி ஆக்கி வைத்தாய்
.....அதில்முற்றும் முழுமைதனை அடுக்கி வைத்தாய்!
சித்தத்தால் நானமர்ந்து சிந்தித் தாலும்
.....சிலநேரம் உன்சாயல் தெரியு தப்பா!
பித்தேயுன் சாயலுக்குக் கார ணம்ஆம்
.....பேரரசே! கப்பம்நீ கேட்டி டாதே!

அகரம் அமுதா

வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஆணுக்கும் கற்பே அழகு!

பேணும் பெருங்கற்பே பெண்டிற்(கு) எழிலாகும்
ஆணுக்கும் அஃதே அழகு!

எல்லா அழகும் அழகல்ல; கற்பென்னும்
அந்த அழகே அழகு!

பொற்புடையான் என்னும் புகழினும் இன்புதரும்
கற்புடையான் என்னும் கவின்!

கற்றோரின் மிக்காராம் கற்புநெறி பேணுகிற
பொற்புடையார் என்னும் புவி!


அகரம் அமுதா

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

கட்டில் தாலாட்டு!

மலராத மலரே! கண்ணுறங்கு –என்
மாரோடு தேனுண்டு மயங்கு!

கண்ணாளன் கதைசொல்லும் நேரம் –ஏன்
கண்ணா! உன் விழியோரம் ஈரம்?

மலராத மலரே! கண்ணுறங்கு! –என்
மாரோடு தேனுண்டு மயங்கு!

சொன்னாலும் கேட்கவுன் அப்பன் –எனைத்
தின்னாமல் பசிதீர மாட்டான் –நீ
கண்ணாலே அதைக்கான நினைத்தால் –அல்லி
மலராலே கன்னத்தில் அடிப்பான்!

ஒருமடியில் இருதலைகள் வேண்டாம்
தொட்டிலிலே நீதூங்கச் சென்றால் –அவனைக்
கட்டிலிலே நான்தூங்க வைப்பேன் –மார்புக்
கொட்டிலிலே நான்தூங்கிக் கிடப்பேன்!

உனைப்போலே அவனும்ஓர் பிள்ளை
உனக்கேனோ அதுவிளங்க வில்லை
கணக்காக நீஎன்னைப் பகிர்ந்தால்
பிணக்காலே தலையணையை அணைப்பான்!

புரியாத புதிருக்கு விடைகாண வேண்டும்…
பக்கத்து நலவே! -நீ
அழுதாலது நடக்காது!
தனிமைதான் உனக்கேற்ற இனிமை –ஆடை
வறுமைதான் இப்போதென் உடைமை.

அவன்தானே உனைஎனக்குத் தந்தான் –என்
மடியணைத்து நீயழவே நொந்தான்…

தொட்டிலுக்குத் துணைவேண்டும்
அதுவேஉன் ஆசை…
எனக்கல்லோ புரியும் –இரு
பல்லிடுக்கின் பாஷை…

உன்தம்பி நாளைக்கு வருவான்
நீவெம்பி அழுதாலோ வருவான்?

பூங்காற்று கைகொண்டு அணைக்க
தேனூற்று கண்மூடிக் கிடக்க
மலராத மலரே! கண்ணுறங்கு...

அகரம் அமுதா

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (3)இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே –தியங்கா(து)
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)

தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க
எழுவரெம் வீரர் இனிதே –உழுவைக்
கொடிதாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை
மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)

மகிழுந்தில், வல்லுந்தில் மக்கள் கடத்தல்
நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் –பகைகொய்ய
வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!
யாண்டும் உனக்கே இசை! (23)

இசைவாய் உடன்படிக்கைக்(கு) என்னுமிந்தி யாமுன்
‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘இசைசேர்
விடுதலை ஒன்றையே வேண்டுகிறோம்’ என்றாய்
திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)

தெளியாப் பதர்செய் உடன்படிக்கை யாலே
நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த
அமைதிப் படையே அமைதி குலைத்துத்
தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)

தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்
வீழ்ந்த அமைதிப் படைவிம்ம –சூழ்ந்த
இகழைக் களையறியா இந்தியா உன்றன்
புகழில் புழுங்கும் புழுத்து! (26)

புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்
கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய்! –அழித்தனரே
எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்த
வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)

விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்
மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்
பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)

ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்
தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்
எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!
உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)

ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்
பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்
பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ
மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)

முனிதல் –சினங்கொள்ளுதல்; தியங்காது –கலங்காது; மல்லர் –வீரர்; உழுவைக்கொடி -புலிக்கொடி; வல்லுந்து –லாரி, வேன்; சிங்க நெருடர் –சிங்களராகிய வஞ்சகர்; இசை –புகழ்; விரை –மணம்; புரை –குற்றம்; மறவன் –வீரன்; உறுகண் –துன்பம்; ஓர்தல் –உணர்தல்; ஒழிவின்றி –முடிவின்றி.

அகரம் அமுதா

புதன், 10 பிப்ரவரி, 2010

ஒருவர்க் குமிலை துணிவு!

தொன்னைச் செயலைத் தொன்று தொட்டுச்
சூழ்ந்து புரியும் சீயர்
தன்னை யொறுத்துத் தமிழரைக் காத்த
தலைவா! எழிற்கரி காலா!
உன்னை யெதிர்க்கு முரனில் லாதார்
உலகை யுறுதுணைக் கழைத்துச்
சின்ன செயலைச் செய்து முடித்தார்
சிதைந்ததே ஈழ கனவு!

செல்வதெவ் வழியெனத் தேராச் சிங்களர்
சென்றுமுள் வேலியு ளடைத்துக்
கொல்வதெவ் வழியெனக் கூடியா ராய்ந்து
குலைக்கிறா ரீழரை யொறுத்து!
இல்வழக் கோடு மிருட்சிறை யோடும்
எஞ்சியோ ரழிவது கண்டும்
ஒல்வது செய்யவு முதவவு முலகில்
ஒருவர்க் குமிலை துணிவு!

==== ===== ==== ==== ==== ==== ==== ==== ====

தொன்னைச் செயல் –ஈனச்செயல்; ஒல்வது –இயல்வது.

==== ===== ==== ==== ==== ==== ==== ==== ====


அகரம் அமுதா

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஓட்டுனர்க்கு… !

நடையர்க்(கு) அச்சம் நல்கா(து) ஊர்தியைத்
தடையின்றிச் செலுத்தல் தலை!

ஒலியெழுப்பி மக்களுக்(கு) உறுகண் இழைக்காமல்
வழியளித்துச் செல்லுதல் மாண்பு!

முந்த முயல்வாரை முந்தாது வழிவிட்டுப்
பிந்திச் செல்வதைப் பேண்!

எதிரில் வருமூர்திக்(கு) இடமளித்(து) உன்வழியில்
மிதவிரைவிற் செல்வதே மேல்!

மிகுவிரைவு கூட்டுதல் மிகப்பெரும் இடருக்கு
வகுக்கும் வழியொன்றை வந்து!

புகைத்த படியே போயூர்தி ஓட்டாதே!
நிகழும் நேர்ச்சியை நினை!

மதுவின் மயக்கத்தில் மகிழுந்(து) ஓட்டுதல்
எதிர்கொண்(டு) எமனழைத்தற்(கு) இணை!

சாலை சட்டத்தை சார்த்து நடப்பதே
கோளென நெஞ்சில் குறி!

ஊர்தியை ஓட்டுகையில் ஒருவரொடும் பேசாதே!
நேர்ச்சிக்கு வழிகோளாய் நீ!

எரிபொருளைச் சேமித்தல் ஏலும் மிதவிரைவைச்
சரியாய்க் கையாளுங் கால்!

அகரம் அமுதா

திங்கள், 8 பிப்ரவரி, 2010

வசைபோய் வாழ்ந்தவன்!

தேரா மன்னா! தேரா மன்னா!
ஓரா தொருசொல் உரைத்ததோ உன்நா?

கொல்லன் உரைத்ததைக் கொண்டத னாலே
கொல்லத் துணிந்ததோ கோவுன்செங் கோலே!

காதில் விழுந்த களவுச் செய்தியால்
கோதில் ஒருவனைக் கொன்றது முறையா?

அழைத்தா ராயா தவன்தலை கொய்து
பிழைத்தாய் பெரும்பிழை இழைத்தா யன்றோ?

குற்றம் புரிந்ததாய்க் கூறக் கேட்டநீ
சற்றும் ஆய தளைப்பட் டனையோ?

முற்றும் உணரா மொழியுரைத் தனையே!
குற்றம் புரியான் கொலையுண் டனனே!

பாம்பின் நஞ்சைப் பற்றி யெடுத்துப்
பாம்பிடம் விற்கப் பறப்பா ருண்டா?

திருடிய பொருளைத் திருடிய பொழுதிற்
திருடிய இடத்தில் சென்றுவிற் பவர்யார்?

திருட்டுப் பொருளைச் சென்றுகா சாக்க
இருட்டுப் பொழுதே ஏற்றது மன்றோ?

கொற்றவள் சிலம்பைக் கொல்லை கொண்டவன்
விற்றிட வீதியில் விரைந்திடு வானா?

தப்பைப் புரிந்தவன் தனைமறைக் காது
தொப்பை தெரிய உலவிய துண்டா?

கறந்த பாலைக் காக்க கன்றினைச்
சிறந்த காவலாய்த் தேர்ந்திடும் செயல்போல்

பழுது பட்ட பாழ்மனத் தானிடம்
பழுது பார்க்கக் காற்சிலம் பீந்தனை!

நெஞ்சில் கரவை நிறைத்து வைத்தவன்
வஞ்சம் புரிந்தான் வழுவின் வழிசென்றான்!

ஒற்றைச் சிலம்பை ஒளித்தா னெனினும்
மற்றைச் சிலம்பை மறைத்தா னில்லை!

தற்செய லாக தன்சிலம் பெடுத்து
விற்கவந் தவன்மேல் வீண்பழி யுரைத்தான்!

உரைத்த பழியின் உண்மை யுணரா
திறைத்தாய் கடுஞ்சொ லிறந்தான் நல்லோன்!

பொற்கொல் லன்தன் பொல்லாப் பழியால்
நிற்குந் தலைபோய் நில்லா தொழிந்தனன்!

காவலன் உன்னிணையாள் காற்சிலம் பெடுத்தவன்
கோவலன் என்றா குறித்தனை? அய்யோ!

தகாத சொல்லால் தலைபோய் வீழ்ந்தான்
புகாரின் தோன்றல்; புகழ்செய லிதுவா?

குற்றம் புரிந்ததாய்க் கொள்ளினும் ஆளும்
கொற்றவா! அவையைக் கூட்டியவ் விருவரை

நயன்மை மன்றில் நிறுத்திய துண்டா?
அயலவன் அவனை அழித்தது நன்றா?

அறிவில் செறிந்தோ ரவையில் இருக்க
நெறியின் வழியில் நின்றி டாமல்

அரசன் என்னுஞ் செருக்கா லன்றோ
உரசிப் பார்த்தாய்? உயிர்கொலை செய்தாய்!

உண்மை அறியு முள்ள மில்லாய்!
அண்மித் தழிவி லகப்பட் டாயே!

எண்ணித் துணிந்தா யில்லை; உன்னிரு
கண்ணால் கண்டனை யில்லை; காதால்

கேட்டதை மெய்யெனக் கொண்டத னாலே
மாட்சி இழந்தாய்! மனம்மிக நொந்தாய்!

ஏதிலி யாகி இறந்து கிடந்தவன்
காதலி வந்தாள்; காற்சிலம் பெடுத்தாள்;

நயன்மை கேட்டு நடந்தா ளவையோர்
வியக்கு முரையை விரித்தாள் வீசி

எறிந்த சிலம்பி லிந்த பரல்கள்
தெறித்தன; சாட்சிகள் செப்பின; அந்தக்

காட்சியைக் கண்ட காவலா! உன்றன்
பேச்சினை இழந்தாய்; பேருருக ணுற்றாய்;

‘யானே கள்வன்!’ எனுமுரை செய்து
போனாய்; விண்ணகம் போந்தத னாலே

இசையிற் சிறந்த இறைவா!
வசைபோய் வாழ்ந்தாய் மண்ணுல கினிலே!

அகரம் அமுதா

சனி, 6 பிப்ரவரி, 2010

பண்பாய் தமிழில் படி!

கண்ணில் அருளும் கருத்தினிலே நேர்மையுமாய்
விண்ணில் திகழ்வெண் நிலாச்சொறியும் -தண்ணொளிபோல்
பண்பெல்லாம் பெற்றேயிப் பாரில் சிறப்படைய
பண்பாய் தமிழில் படி!


அகரம் அமுதா