செவ்வாய், 10 மார்ச், 2026

வெண்பா கஃபே 2

 

வெண்பா கஃபே 2

 

ஈரடியில் புத்தி

இயம்பினான் வள்ளுவன்;

ஓரடியில் ஔவை

உரைத்தனள்; - பாரடிநீ

சும்மாஉன் பார்வையில்

சொல்லிவைத்தாய்; யார்பெரியார்?

அம்மா! உனக்கு'ஹேட்ஸ்

ஆஃப்'!

 

==

 

கல்லறை விட்டெழுந்து

கால்தளரும் மூப்புவிட்டு

வல்லிய தோள்படைத்த

வாலிபனாய்ப் - பல்முளையாப்

பாலகனாய் முன்னேறிப்

'பை'நுழைந்து விந்தாகிக்

காலத்தை வெல்வேன்

கடந்து!

 

==

என்னநான் சொல்லிவிட்டேன்?

ஏதுநான் சொல்லிவிட்டேன்?

சின்னதாய் ஓர்வார்த்தை

செப்பிவிட்டேன்; - ஒன்றும்நான்

சொல்லக்கூ டாதா?என்

தோழா! வெறும்வாயும்

மெல்லக்கூ டாதா?

விளம்பு!

 

==

 

குறட்டை!!!

தூக்கத்தின் கானம்;

துயிலின் அரட்டை;சொல்

நீக்கிய வாக்கிய

நிர்ப்பந்தம்; - கேட்கநாம்

ஏலாது காதிருந்தும்;

ஏற்காத ஆதிசந்தம்;

தாலாட்டும் தொண்டைத்

தவில்!

 

==

பூவுக்கே Powderரா?

பொன்னுக்கே Turmericகா?

காவுவாங்கும் Beautyக்கே

Cosmeticகா? - தேவுடா!

ஜவ்வா இழுக்குறா;

ஜோரா வழுக்குறா;

Loveல இதெல்லாமா

Law?

 

==

 

பார்த்தாலே ஷாக்கடிக்கும்;

பாலும் மறக்கடிக்கும்;

சேர்த்தாள நெஞ்சம்

சிறகடிக்கும்; - கோர்ப்பாயா

கையென்று கேட்கிறேன்

மெய்நின்று வேர்க்கிறேன்

பொய்யேனும் சொல்லிவிட்டுப்

போ!

 

==

 

சொப்பன சுந்தரி

சொக்கினா; மூலையில்

குப்பன எண்ணியே

குந்தினா; - தெப்பமா

வேர்வயைச் சிந்தினா;

வேண்டுதல் பண்ணினா;

தீர்வினைத் தேடினா

தேன்!

 

==

 

 

வெண்பாBore; நேர

விரயம்தான் ஆகிறது;

ஒண்பா அகவல்

உதவாது; - பண்பாட

மற்ற மரபுவகை

மாளாத் துயரவகை;

வெற்றுத் தமிழ்மேல்

வெறுப்பு!

 

காலை வணக்கம்

கனிவுடன் சொல்லிவிட்டு

மாலை வணக்கம்

வழங்கிவிட்டு; - வேலையெலாம்

தீர்ந்த பிறகிரவு

செப்பும் வணக்கமொடு

போர்த்திப் படுக்கிறேன்

போ!

 

==

 

'பீர்'உட்டாப் போலப் பெரிசாக் கிறுகிறுத்தேன்

'சார்பட்டா' பாக்கயில் சத்தியமாய்; - மார்க்கேட்டால்

பத்திலே அஞ்சு பதறாமல் தந்திடலாம்;

குத்திலே நெஞ்சம் குளிர்ந்து!

 

==

 

கட்டை விரல்ரேகை காணாமல் போய்இப்போ

மொட்டைவிரல் ஆச்சு மொபைலாலே; - விட்டுவிடக்

கூடவில்லை ஆண்ட்ராய்டை; கூறுகெட்ட ஃபேஸ்புக்கை;

ஓடவில்லை வேலையொன் றும்!

 

 

 

Gana வெண்பா!

 

முனிமா! எனக்குநீ மூனுமணி நேர

சினிமா; குலுங்கிச் சிரிமா; - கனிமாங்

கனிமா; எடுத்துக் கசக்கிப் பிழிமா;

Moneyமா தரவேணு மா?

 

பஞ்சவர்ண பட்சிநீ; பத்துவை இச்சிநீ;

மஞ்சத்தில் வந்துபோடி மச்சினி; - வஞ்சியொத்த

கேர்ள்ஸ்தான்என் கம்பெனி; கேட்போமா சிம்ப்பொனி;

கேள்தாரேன் லம்போர் கினி!

 

சும்மாசீன் போடுற; சூடேத்தி ஓடுற;

அம்மாநீ சோலோவா ஆடுற - கம்மாவில்

நின்னு கலாய்க்கிற; நேக்காய் தபாய்க்கிற;

டின்பீர்நீ பண்ணட்டா டேஸ்ட்?

 

பஸ்ஸ்டாண்ட் கிராக்கி; பசங்களஏ மாற்றி ;

Worstதான்டி நீஒரு ஊர்சுத்தி; - பெஸ்ட்டா

சுடி,மிடி போட்ற; சுருதியா பாட்ற;

அடிக்கடி மாத்துற ஆள்!

 

 

'ஆங்கிலேயன் தானுனக்கு

அப்பனா?' என்பவன்தன்

பூங்குருத்து ஆங்கிலமே

போய்ப்படிக்க; - ஆங்கதனின்

'அப்பன் இவன்தானா?

ஆங்கிலேய னா?கேட்டால்

தப்பைமறைக் கின்றான்

தடுத்து!

கற்றதும் ஆங்கிலம்;

கையெழுத்தும் ஆங்கிலம்;

விற்பன்னன் ஆங்கில

வித்தைகளில்; - அற்புதமாய்

மேடையில் கூவுகிறான்;

வேஷமிட்டுக் கேவுகிறான்;

பாடையில் பைந்தமிழைப்

பார்த்து!

'வாயிலில்லை; தீட்டும்

வரியிலில்லை; செந்தமிழ்நம்

தாயிலை யா?தகுமா?

தம்பி!'என்பான்; - நாயிவனின்

வீட்டிலே ஆங்கிலம்;

வீதியிலே தங்கிலிஷ்;

ஏட்டிலே செந்தமிழ்

ஏய்ப்பு!

ஆங்கிலப் பள்ளிகளில்

அந்தமிழிற் பேசிவிட்டால்

வாங்குகிறான் 'ஃபைன்';எவன்

வந்துகேட்டான்? - தூங்குதல்போல்

அங்கே நடிக்கின்றான்;

இங்கே வெடிக்கின்றான்;

பொங்கிஃபேஸ் புக்கில்போஸ்ட்

போட்டு!

உள்நுழைந்த நாளில்

'ஒருபாடம்' ஆங்கிலம்;

கொள்ளை அடித்ததின்று

கூண்டோடு; - விள்ளடா!

இன்றமிழ் இன்றளவில்

எத்தனைப் பாடங்கள்?

மென்றுமுழுங் காமல்

விளம்பு!

எத்தனைக் காலேஜில்

இன்பத் தமிழுளது?

முத்தமிழைப் போட்டதே

மூட்டைகட்டி!; - பித்தன்நீ

பார்த்துப் பதறவில்லை;

பாய்ந்து குதறவில்லை;

ஆர்ப்பதேன் இன்றைக்(கு)?

அடங்கு!

இந்திதான் கொல்லுமாம்

இன்றமிழை; இங்கிலீஷ்

வந்தபின் வாழ்கிறதோ

வாழ்வாங்கு? - மந்தியே!

கற்கஆள் இன்றிக்

கவின்தமிழ் சாகிறது;

தற்குறிபோல் பேசாதே!

தள்!

வாழ்க! எனச்சொன்னால்

வண்டமிழ் வாழ்ந்திடுமா?

தாழ்க!வென் றால்இந்தி

தாழ்ந்திடுமா? - சூழ்தமிழைக்

கட்டாயம் ஆக்காமல்

கற்றிட ஊக்காமல்

முட்டாளே! வாழா(து)'அல்

மோஸ்ட்!'

கற்றவன் தன்னறிவைக்

காட்டத்தான் இங்கிலீஷைப்

பெற்றித் தமிழிலிட்டுப்

பேசுகிறான்; - மற்றவன்

ஒன்றிரண்டு ஆங்கிலச்சொல்

ஒட்டிவரப் பேசிவிட்டால்

வன்மத்தைக் காட்டுகிறாய்

வந்து!?

நாய்போல வாலாட்டி

நாடிப் படிப்பதெல்லாம்

வாய்கிழிய இங்கிலீஷை

வாய்பொருத்தி; - பேய்மகன்பின்

கொஞ்சுதமிழ் வாழ்கவென்று

கோஷங்கள் போட்டுவிட்டால்

துஞ்சாமல் வாழ்ந்திடுமாம்;

த்தூ!

 

 

==

 

கல்மிஷம் இல்லாமல்

காதலியை டேட்டிங்கில்

சில்மிஷம் செய்தால்

ஜிலுஜிலுதான்; - ஜொல்ரசம்

மாந்தப் பிடிக்காத

மங்கையுண்டா? உண்ணாமல்

மீந்தவர லாறுண்டா

மேன்!?

 

==

 

தங்கிலீஷ் வாழ்த்து!

 

தங்கிலீஷே! தாயே! தமிழகம் ஆள்பவளே!

இங்கிலீஷும் இன்றமிழும் ஈன்றவளே! - இங்குள்ள

கற்றாரும் மற்றாரும் காதலிக்கும் காஸ்ட்லியே!

பொற்சிலையே! வாழ்க பொலிந்து!

 

வீட்டிலும் நீ;சினிமா பாட்டிலும் நீ;தமிழர்

நாட்டிலும் நீ;கற்றோர் நாவிலும்நீ; - ஏட்டில்

எழுத்திலும்நீ; அங்கிங்(கு) எனாதபடி எங்கும்

அழுந்தப் பதித்தாய் அடி!

 

குக்பண்ணி, டேஸ்ட்பண்ணி, கூல்பண்ணி, கால்பண்ணி,

செக்பண்ணி, ஃபீல்பண்ணி, ஷேர்பண்ணி, - மிக்ஸ்பண்ணி,

பன்னித் தமிழாய்ப் படித்தோர்வாய் வாழ்மொழிநீ

சென்றவிட மெல்லாம் சிறப்பு!

 

படிக்காத பேரும் பலுக்கும் மொழியே!

படித்தோர்வாய் வாழும் பகட்டே! - நடிகையர்வாய்

நாட்டியப் பேரொளியே! நான்காம் தமிழணங்கே!

Naughtyயே! ஆள்கநீ நாடு!

 

காலேஜ் பிகர்களும் காளையரும் தங்கிலீஷ்

நாலேஜ் வளர்த்து நமையசத்த - காலேஜே

போகாத பாமரரும் பட்டறிவால் தங்கிலீஷை

சாகாமல் காக்கின்றார் ஜஸ்ட்!

 

தஸ்ஸுபுஸ்ஸு இங்கிலீஷும் தாறுமாறு செந்தமிழும்

கஸ்டம்தான் பேசவும் கேட்கவும்; - புஸ்ஸுபுஸ்ஸு

தங்கிலீஷைப் போல்வருமா? தங்கிலீஷ் நேர்வருமா?

தங்கிலீஷ் கற்றோர்க்கே ஜாப்!

 

சிங்கிள்தான் செந்தமிழ்அச் சிங்கிலொடு இங்கிலீஷ்

மிங்கிளாகித் தங்கிலீஷ் மேலெழுந்தால் - இங்குமது

குண்டி எரிவதாய்க் கூறுகிறீர்; தங்கிலீஷ்முன்

மண்டியிடும் காலமிது மாம்ஸ்!

 

தமிங்கிலமே! இன்பத் தமிழகத்தை ஆளும்

திமிங்கிலமே! கற்றோர் திமிரே! - தமிழ்போல்நீ

நூற்றாண்டை வென்றுவாழ்; நூல்பல கண்டுவாழ்;

நாற்றின்மேல் காற்றாய் நடந்து!

 

தமிழர்வாய் தோறும் தகத்தகாய மாய்நீ

அமிழ்வாய்; அழகாய் அலர்வாய்; - அமிழ்தினும்

யம்மிநீ; எங்களின் இந்தத் தலைமுறைக்கு

மம்மிநீ; காட்டுகிறாய் மாஸ்!

 

தங்கிலீஷில் பேசுவோம்; தங்கிலீஷில் பாடுவோம்;

தங்கிலீஷில் நோட்ஸ்எடுப்போம் தப்பாமல்; - தங்கிலீஷே

ஸ்டைலிஷாய் வாழட்டும்; ஸ்டைலிஷாய் ஆளட்டும்;

ஸ்டைலிஷான தங்கிலீஷே டான்!

 

==

 

பட்டம் எனக்கெதற்கு? பாராட்டும் வேண்டாமே!;

அட்டையில் சான்றிதழ் ஆர்கேட்டார்? - விட்டுவிடு

கேடயம் தாவெனக் கேட்டேனா? மாலை,பொன்

ஆடையுமே வேண்டாம் அடங்கு!

 

வீட்டுமரம் இல்லைநீர் விட்டு வளர்க்கநான்

ரோட்டுமரம் இல்லைஒரு ரூல்ஸ்போட; - காட்டுமரம்

மண்முட்டித் தானாய் வளர்ந்து நிமிர்ந்தெழுந்து

விண்முட்டு கின்றேன் விரிந்து!

 

==

 

 

புத்தம் புதுச்சரக்கு;

போதை தருஞ்சரக்கு;

குத்தமில்லை குந்திக்

குடிக்கலாம்; - புத்தகமே

போத்தல்; எழுத்து'மது';

போயெடுத்து நாலுரவுண்(டு)

ஊத்தத் தெளியும்

உளம்!

 

==

 

சங்கரா! வேலன் தகப்பா! உடனேநீ

இங்க'ரா'! என்னை எழுதவை; - பங்கமாய்

உன்னை கலாய்த்தேனா? உன்முன் விடாய்த்தேனா?

என்னறிவைத் தாடேய் எடுத்து!

 

போலக் கவிபாடிப் பொய்மூட்டை யாகாமல்

சாலச் சிறந்தகவி சாற்றவை; - ஞாலத்தே

ஆட்டுமந்தைக் குள்ளென்னை ஆடாக ஆக்காமல்

காட்டுப் புலியாக்கு God!

 

சிந்தை துருப்பிடிக்கச் செய்வாயோ? புத்தாக்க

விந்தை தடுக்க விழைவாயோ? - அந்தரத்தில்

ஆடுகின்ற நாயகனே! அத்தா! எனைநன்றாய்ப்

பாடுகின்ற வாயனாக்கப் பார்!

 

இன்னும் புதுமையாய் இன்னும் தனித்துவமாய்

இன்னும் அழகாய் இளமையாய் - என்ன

எழுதலாம் என்றெண்ணி எம்மண்டை காயப்

பொழுதெலாம் தூக்கமில்லை போ!

 

மாசமொண் ணாச்சு மணிமணியாய் நானெழுதி;

மோசமும் போச்சோஎன் மூளைதான்? - ஆசையாய்

ஏதோ எழுதப்போய் ஏதோ வெளிப்படுதே!

ஏதேதென் னாச்சோ எனக்கு?

 

புஸ்வாணம் ஆவதா பூகம்பம்? கண்டகண்ட

கஸ்மாலம் எல்லாம் கலாய்ப்பதா? - விஸ்தாரம்

ஆக்கடா கற்பனையை; ஆதிப் பரம்பொருளே!

நாக்கிலே சொல்வன்மை நாட்டு!

 

 

==

 

வேகத்தைக் காட்டலாம்;

வேர்வைநீ ராட்டலாம்;

தாகத்தைக் கூட்டித்

தணிக்கலாம்; - தேகத்தின்

ரீங்காரம் கேட்கலாம்

ராவெலாம்; மெத்தைமேல்

Wrong கென்ப தில்லையெலாம்

Right!

ஆடையில்லா Milk மேனி;

ஆளான Hulk தான்நீ;

Mood ஐக் Create செய்

மூடா!நீ! - வாடைக்குப்

பாதை கொடாய்நீ;

பருவக் கிடாய்நீ; உன்

போதைக்கே ஊறுகாய்

பூ!

மையல்நோய்க் குப்படையல்

மல்லிகைப் பூத்துவையல்;

பைய அரைநீ

படுக்கையில்; - தையலுக்கும்

ஆசை இருக்காதா?

ஆயுள் வளர்க்காதா?

பாஷைக்குக் கட்டில்

பகை!

பாரவளை; தள்ளிப்

படுத்தவளை; கைகளுக்குப்

பார(ம்)வளை; அள்ளிப்

படுத்தவளை; - நேரமிலை

சேலைகளை; ஈர்த்தவளைச்

சேர்த்துவளை; ராப்பொழுது

லீலைகளுக் கில்லை

Limit!

Light டை எரியவிடு;

Light டாய்த் தெரியவிடு;

Right சொல்லும் பெண்ணை

ரசித்துவிடு; - Night டெல்லாம்

வட்டநிலா கண்டு

வயிறெரிந்து சாகட்டும்;

Bed டிலே நீநின்று

பேசு!

கொஞ்சம் துணிந்திடுவாள்;

கொஞ்சிச் சிணுங்கிடுவாள்;

அஞ்சிப் பதுங்கிடுவாள்

ஆகட்டும்; - மஞ்சத்தில்

Girl அவயம் தேடிமெல்லக்

கிள்ளிக் கிளப்பிவிடு

தாளலயத் தோடாடும்

Thought!

 

 

==

 

விடைபெறுகிறேன்!

கடுப்படிப்ப தால

கடமையுள்ள தால

விடுப்பெடுக்கப் போறேன்

வெரசா - குடுகுடுப்பக்

காரன்சொன் னான்நல்ல

காலம் பொறக்குதுன்னு;

வாரன் பொறவுபாக்க

லாம்!

சரசகவி யாகி

சமரகவி யாகி

விரசகவி யாகி

வெறுத்தேன்; - அரசகவி

ஆசையெல்லாம் இல்லை;

அடங்காத கோபமுள்ள

மீசைகவி யாய்வாரேன்

மீண்டு!

இடைபாடி ஏற்ற

இறக்கங்கள் பாடி

நடைபாடி ஜென்மம்

நசிந்தேன்; - கடைபோட்டு

விற்றேன் கடைச்சரக்கு

வீழ்ந்தேன் தொடைக்கறிக்குக்

கற்றேன் அளவிற்

கடுகு!

சந்தையில் விற்றேன்

சமரசம்; வெள்ளாட்டு

மந்தையில் விற்றேன்

மரகதம்; - தொந்தி

வளர்ப்போர் நடுவில்

வயிற்றிலறு துண்டம்*

இளப்பத்தில் தானே

இறும்!

அறுதுண்டம் - சிக்ஸ்பேக்.

கந்தனுக்கு நேந்து

கயிறுநான் கட்டிண்டேன்

தொந்தரவு மீண்டும்

தொடராதாம்; - இந்தவெண்பா

என்னையினி தொட்டா

இரத்தந்தான் கக்குமாம்

சொன்ன படிநடந்தா

தூள்!

'அக்மார்க்'நான் முன்னாடி;

அப்படியே இப்போநான்

'எக்மார்க்'என் றானேன்

எதனால? - 'நக்மா'ப்போல்

பேரழகு வெண்பாவின்

பின்னால் அலைந்தலைந்து

பேரழியப் பீடித்தேன்

பித்து!

தோண்டி துளையானேன்

தோணி துளையானேன்

வேண்டிப் பெறாததால்

வீணானேன்; - மீண்டும்

துளையாகும் வாய்ப்புத்

தொடருமென்றால் மூங்கில்

துளையாகக் கேட்பேன்

தொழுது!

மொடாக்குடி காரன்நான்

முன்வெண்பாக் கள்ளை

விடாப்பிடியாய் மாந்தி

விழுந்தேன் - தடாலடியாய்ச்

சாப்பிடுவ தில்லையென்று

சத்தியம் பண்ணிவிட்டேன்

'ஓப்பன்தி பாட்டிலெ'ன்போன்

ஓடு!

டயலாக்கில் வெண்பாவை

டான்ஸ்ஸாட வைக்கும்

பயலாக்கும் என்பார்

பலபேர்; - புயல்மையம்

இன்றே கரைகடக்க

என்றும் இனியில்லை

மன்றாடி னாலும்

மழை!

ல(வ்)வராசெட் டானவர

லாற்றைநான் சொன்னா

டவராசெட் என்பீர்

சரிதான்; - தவறில்லை;

வெண்பாகண் நானிமை;

இன்றுமுதல் கஞ்சனுக்கும்

தொண்டிற்கு மான

தொலைவு!

 

==

 

 

என்னைப் பின்தொடர்பவர்கள் நன்கறிவர் - வெண்பாவுடன் அடிக்கடி நான் நிகழ்த்தும் ஊடல் பற்றி.......

கட்டிய மனைவியைக் கண்டபடித் திட்டினாலே கொஞ்ச நேரத்தில் பொறுமை இழந்திடுவார் எனும்போது....... இவ் வெண்பா பொறுமையிழந்தால் எதிர்வினை என்னவாயிருக்கும்????

சற்றே செவிமடுப்போமா?

வெண்பா கூற்று:-

அகலா திருந்தவன்;

அன்பொளி சிந்தும்

அகலா யிருந்தவன்;

அல்லும் - பகலா(ய்)

இருந்தவனா என்னை

இகலென்றான்? உற்ற

விருந்தவனா ஆனான்

விஷம்?

சவ்வாது வாசனையும்

சந்தன யோசனையும்

கவ்வாதா என்னையினி

காலமெல்லாம்? - ஒவ்வாது

போனேனா அந்தப்

புலவனுக்கு? கொங்குதமிழ்த்

தேனேநான் ஆனேனா

தேள்?

நாளும் மலர்ப்படுக்கை

நானிட்டேன் பொன்மேனி

ஆளும் கவிஞன்

அமுதனுக்கே; - வாளும்நேர்

என்றால் விழிக்கது

காசென்போன் என்னகண்டான்

என்றன் உறவில்

இழுக்கு?

கட்டியவன் கண்ணினிய

காதலன் சீவனில்

ஒட்டியவன் உள்ளம்

ஒளிந்தவன்; - வெட்டியவன்

ஆனானா? ஆசைக்(கு)

அரளி அரைத்தளித்துப்

போனானா நெஞ்சம்

பொடித்து?

மோனை எதுகைதந்தும்

மூவா மொழிகொடுத்தும்

ஏனை அணிகள்

எடுத்தளித்தும் - கேனையனை

இம்மெனும் முன்னே

எழுதவைத்துப் பார்த்தேனே;

அம்மெனுமுன் போனான்

அகன்று!

மோனைமுள் குத்த;

முகிழ்எதுகை மொத்த; சொற்

சேனைகொண் டென்னைச்

சிதைப்பார்முன் - வீணைபோல்

மீட்டிய பாவலன்

மீட்டெடுத்த காவலன்

வாட்டுவ தேன்பிரித்து

வைத்து?

ஆறரை கோடியில்

ஆளன் இவனென்றே

கூறவைத்தான்; இன்றேன்

கொலைசெய்தான்? - மாறவைத்த

வெட்டிச் சிறுக்கியெவள்?

மேனா மினுக்கியெவள்?

தட்டிப் பறித்ததெவள்

சார்ந்து?

காட்டுப் பயலவனைக்

கண்டு கரம்பிடித்தென்

ஏட்டுச் சரக்கை

எடுத்தளித்து - நாட்டுக்குள்

நாயகன் ஆக்கினேன்

நல்லவை ஊக்கினேன்

பேயகன் ஆனதேன்

பின்?

ஊடல் வளர்ப்பவன்

ஊடல் வெறுத்துப்பின்

கூடல் வளர்ப்பானா

கூறுங்கள்; - தேடல் பொன்

என்றானால் இன்பம்பாழ்

இன்றைநீ நன்றேவாழ்

என்றேனே கேட்டானா

ஏறு?*

ஏறு - காளை.

இன்னும் மறக்கவில்லை

என்னும்சொல் சொல்வானென்(று)

இன்னும் துறக்கவில்லை

இன்னுயிரை; - என்னவனைக்

கண்டால் வரச்சொல்வீர்;

காதல் உறச்சொல்வீர்;

தண்டாமல் வீழ்கின்றேன்

தாள்!

 

 

அன்புவல்லி அம்மா!

மேன்மாடி மேலிருந்த

மெல்லியலைத் தானிழுத்தே

ஏனம் கழுவி

இடுப்பொடித்து - வானம்

அளந்தாளைக் கீழ்த்தள்ளி

னாற்போல வெண்பா

தளர்ந்தாளே உன்கைத்

தலத்து!

நான்:-

கைநோகும் என்பதற்காய்க்

கஞ்சிகாய்ச்சக் கூடாதா?

மெய்நோகும் என்று லீவா

மெத்தைக்கு? - அய்யோ!நான்

கட்டிவந்த காரணம்

கட்டிலுக்கும் கஞ்சிக்கும்;

ஒட்டிவந்த காரணம்?வே

றோது!

அன்புவல்லி அம்மா!

செல்லமாய் எம்புலவர்

சீராட் டியபெண்ணை

வல்வழக்காய் நீவிர்

வதைப்பதுவாய் - நல்லுலகம்

பேசுவதைக்

கேட்டீரோ

பேச்சுக்குக் கேட்கின்றேன்

ஓசை அதிகம்தான்

ஒப்பு !

நான்:-

பண்டிதர் பாட்டல்ல

பாமரர் பாட்டென்று

கண்டுபலர் கற்கவழி

காணுகிறேன்; - மொண்டுகொள்ள

ஆழ்கிணற்று மோவாளி

ஆனேன்; தொடுப்பதா

வாழ்விக்கு மென்மேல்

வழக்கு!?

அன்புவல்லி அம்மா!

ஆமாம் அதுவுண்மை

அந்தணர்க்கே

வெண்பாவாம்

சாமா னியர்க்கென்ன

சாற்றுப்பா - ஏமாப்புக்

கொண்ட இளைஞர்கள்

கொண்டாடிக் கொண்டாடி

வெண்டளையில் வைத்தார்

விருந்து!

நான்:-

இன்னும் எளிமையை

எட்டத்தான் எண்ணுகிறேன்;

பின்னும் பலரென்னைப்

பின்பற்றப் - பண்ணுகிறேன்;

வெண்பாவின் ஐக்கான்நான்;

வீழ்த்தஒண்ணா மைக்காநான்;

வெண்டளையில் நானென்றும்

வேந்து!!

 

==

 

கூத்திமேல் வக்கிற கொஞ்சமரு வாதியும்
வாத்திமேல் வக்கிறானா வக்காளி; - ஏத்திவிட்ட
ஏணிய எத்துறதும் ஏமாந்தாக் குத்துறதும்
சாணிக்குண் டான சரக்கு!

இந்தஇட மென்ன எழுப்பிவிட்டு நீயமர
சந்தைமட மா?இல்லை சத்திரமா? - முந்திமுந்தி
முன்னேறி நான்வந்து முன்னூறு பேர்வென்று
நின்ன எடம்டா! நிறுத்து!

 

உடனிருந்தே கொல்லும் வியாதியென்றாள் ஔவை;

அட!நெசமாய்த் தானதுவும் ஆச்சு – மடமைக்(கு)

அறிவீட்டித் தானென்ன ஆளாக்கி என்ன

உரையாடல் வெண்பாவுக்(கு) உஷ்ஷ்ஷ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக