செவ்வாய், 21 ஜனவரி, 2014

வீணை விறகாச்சே!


வீணை விறகாச்சே!

ஈழத் தமிழச்சி, ஊடகவியலாளர் இசைப்பிரியாவைக் காடையப் பேடிகள் கற்பழித்துக் கொலைசெய்த காட்சி சேனல் 4-ல் ஒளிபரப்பானபோது...

'புலி'கண்டால் வயிற்றினிலே
புளிகரைக்குஞ் சிங்களரே!
கிலிபிடித்து நிற்கின்ற
கிளியென்னைப் பிடித்தவரே!

சாவுக் கஞ்சி
சமராடுந் துணிவின்றிப்
பூவுக்குக் குறிவைக்கும்
போர்த்தொழில் கற்றவரே!

ஆடை கிழித்தென்றன்
அங்கங்கள் மொய்ப்பவரே!
பாடையில் ஏற்றும்முன்
பதம்பார்க்கத் துடிப்பவரே!

அம்மணமாய் எனையாக்கி
ஆனந்தம் கொள்பவரே!
அசிங்கத்தை அரங்கேற்ற
ஆரூடம் பேர்ப்பவரே!

வெம்பியழும் எனைக்குதற
வெறிபிடித்து நிற்பவரே!
தேம்பியழும் எனைச்சிதைக்க
தினவெடுத்துச் சூழ்பவரே!

கைகள் இரண்டிருந்தும்
கைவிலங்கு பூட்டியதால்
மெய்மறைக்க முடியாமல்
மேனி கூசுகின்றேன்...

தேம்பி அழுதே
திரள்கின்ற கண்ணீரைத்
தேக்கி அதிலென்
தேகம் மறைக்கின்றேன்...

காற்றையே ஆடையாய்க்
கட்டப் பார்க்கின்றேன்...
கூற்றையே அழைத்தென்னைக்
கூட்டிப்போ என்கின்றேன்...

உங்களைப்போல் கூற்றிற்கும்
உள்ளம் கிடையாதோ?
மங்கை நான்தேடும்
மரணம்வரத் தடையாதோ?

எச்சில் இலையாகி
இழிந்துநான் போகும்முன்
எமனேறும் எருமையேனும்
எனைமுட்டிச் சாய்க்காதோ?

ஈசனோ புத்தனோ
ஏசுவோ அல்லாவோ
இச்சமயம் எனைக்காக்க
இங்குவரக் கூடாதோ?

பாஞ்சாலி துகிலிழக்கப்
பதறிய கண்ணனே!
ஏஞ்சாமீ? துகிலிழந்த
எனக்குதவ மாட்டாயா?

புத்தனுக்குப் பயந்து
போயொளியப் பாக்குறியா?
குத்தமிழைப் பாரோடு
கூட்டுச்சேரப் போகிறியா?

எச்சில்கள் என்மேல்
இச்சை கொள்கிறதே...
ஈழப் புலித்தலைவா!
இதைத்தடுக்க வாராயா?

தமிழனா(ய்)ப் பொறந்தா(ல்)
தப்பா? அதனினும்
தமிழச்சியா(ய்)ப் பொறந்தா(ல்)
தண்டனை கற்பழிப்பா?

இடுப்பிலே கொம்பு
முளைத்த விலங்குகள்
எதிரே வந்து
எனைமுட்டிச் சாய்க்கிறதே...

படுக்கைக் கிழுக்கப்
பலகைகள் நீள்கையிலே
உடுக்கை இழந்தஎனக்(கு)
உதவவொரு கையிலையே...

உள்ளூர் தெய்வங்களோ
உலகத் தமிழர்களோ
உள்ளம் பதறலையே...
ஓடிவந்து தடுக்கலையே...

விரியன் பாம்பொன்று
விழுந்து கடிக்கிறதே...
சனியன் ஒன்றென்னை
சாப்பிட்டு முடிக்கிறதே...

 கூவம் ஒன்றிந்த
கைங்கையில் கலக்கிறதே...
பாவக் கடலொன்று
புண்ணியத்தை விழுங்கிடுதே...

இடியே வந்தென்றன்
மடியில் இறங்கிடுதே...
நொடியில் என்கற்பு
நோய்பட்டு இறந்திடுதே...

கொடிய இருட்டொன்று
விடியலை மேய்கிறதே...
கடிய விஷமென்றன்
காயத்தில் பாய்கிறதே

உயிரில்லை என்றாலும்
உடல்கிடந்து துடிக்கிறதே...
இதயம் துடிக்கவில்லை
துடிப்பதுபோல் நடிக்கிறதே...

 தாயே! கண்ணகியே!
தமிழ்மதுரை எரித்தவளே!
திருகி முலையெறிந்து
தீயரைச் சரித்தவளே!

களையிழந்து கற்பிழந்து
கதறுமெனக்(கு) உதவாயோ?
முலையெறிந்து ஊரெரிக்கும்
மருமத்தை உரைக்காயோ?

சொல்லால் சுடவும்என்
சொல்லுக்கு வலிவில்லை...
தள்ளி விடவும்என்
தேகத்தில் தெம்பில்லை...

கற்பென்னும் திண்மையைக்
கறைபடியச் செய்பவரே!
அற்புதம் என்றனை
அற்பமாய்க் கொய்பவரே!

தட்டிக் கேட்கயெம்
தலைவன்வராக் காரணத்தால்
கட்டிப் போட்டென்னைக்
கற்பழிக்கும் காமுகரே!

பூமகள் என்றனைப்
புலிமகளா? என்பவரே!
கலைமகள் என்றன்
களையழித்துக் களிப்பவரே!

போட்டாப் போட்டியிட்டுப்
பூந்தேனைச் சுவைப்பவரே!
தோட்டா ஒன்றால்என்
உயிர்சுவைக்கக் கூடாதா?

போச்சு! எல்லாம்போச்சு!
போகலையே உயிர்மட்டும்...
ஆச்சு! பொறுத்தாச்சு!
அடங்கலையே இவர்கொட்டம்...

வீணையை விறகாக்கி
வெறிதீர்க்கும் வீணர்களா!
ஓவியத்தைச் சிதைச்சுத்தான்
ஊரையாளப் போறிகளா?

அழுக்கை என்மீது
அப்பிவிட்ட இழுதைகளா!
சுமையை என்மடியில்
இறக்கிவைத்த கழுதைகளா!

இன்னும் பசியெடுத்தா(ல்)
என்னோட பிணமிருக்கு...
கண்ணகிபோல் சினந்தெரிக்க
கற்பு(இ)ங்கே எனக்கிருக்கு?

புதன், 15 ஜனவரி, 2014

கதிர்விடு தூது! 2


மண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்
விண்ணும் வெளிச்சப்பால் வேண்டிடஉண்ணா

முலையே! முலையூட்ட முன்வந்தாய்; உன்றன்
கலையை அவித்துக் கருத்தாய்இலையென்னா(து)

அன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;
அன்னையப்பன் ஆன அருளரசே! –முன்னாளில்

குந்திக்குப் பிள்ளை கொடுத்தவனே! பால்வெளியில்
குந்தி அரசாளுங் கொற்றவ!நீகுந்தும்

இருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா
பொருவில்லா முல்லை; புகழ்சார்மருதமுன்

பாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ
பொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி

நீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு
மாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே

பட்டத் தரசி; பருவவேட் கையால்நீ
தொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;

நாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா
ஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்

வாளுமே விண்மீனா வானமே வெண்குடையா
நீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்

(தொடரும்)

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கதிர்விடு தூது! 1

பெண்ணினைப் பெற்றவளப் பெண்ணினை முன்பெழப்
பண்ணிப் பழக்குமப் பாங்கினில்எண்ணரும்

வைகலில் வைகலும் வன்சிறைச் சேவலவ்
வைகலில் வைதிட வைகலும்வைகலில்

வையம் பயனுற வந்தொளி கூட்டுநற்
செய்ய செறிகதிர் சிந்திடும்வெய்யோய்!

மயல்*போக்கி மிஞ்சும் மடிமை* அகலத்
துயில்போக்கி மஞ்சத் துழல்வார்ஒயில்*ஊக்கிப்

பைய பொழிலாடிப் பூவிதழ் மேற்பனி
தையல் மருங்கெனத் தானொழியஉய்யும்

நிலவும் சிறுமீனும் நேர்வெண் பனியின்
நிலைகாண மொட்டும் நிறைந்தமலராகி

மன்றல்* வளம்வர வண்டாட செண்டாட
தென்றல் திரிந்திட செவ்விமிகும்*அன்றில்போல்

வண்ணச் சிறகசைத்து வான வளஏட்டில்
பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி*

எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்
விழிப்புறத் தோன்றி விரியும்எழிற்கதிரே!

கோல்கள் அனைத்தையுங் கோலோச்சும் பேரரசே!
பால்போல் வெளிர்க்கீற்றைப் பாய்ச்சிடும் கோல்முதலே!

(தொடரும்)

வெள்ளி, 10 ஜனவரி, 2014

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! 9


எந்த சட்டப்பிரிவில்
கைது செய்வது
கண் கொண்டு தாக்கும்
உன்னை