சனி, 30 ஆகஸ்ட், 2008

இதுவா நட்பொழுங்கு?

தேளைப் போலக் கொட்டும் கேளை
நாளும் நாடி நட்புற்றேன் -அது
வேளை பார்த்துக் கொட்டுவ தென்றன்
மூளைக் கேட்டிட துடித்திட்டேன்!

வானம் என்றே பேனை எண்ணி
நானென் தலைமேல் இடந்தந்தேன் -அது
ஊனைக் கடித்தென் உதிரம் உண்ணக்
காணும் போதோ மிகநொந்தேன்!

நஞ்சை நறவம் என்றே எண்ணி
நெஞ்சில் வைத்துக் காத்தேனே –எனை
வெஞ்சினத் தாலது வஞ்சனை செய்ய
விழிநீர் கொட்டித் தீர்த்தேனே!

பாலைக் கேட்டால் பருகக் கள்ளிப்
பாலைத் தருவதா நட்பொழுக்கு? -அது
நாளும் நட்பெனும் போர்வைக் குள்ளே
நடாத்து கின்ற கற்பழிப்பு!

எத்தனை கற்றுத் தெளிந்தி டினு(ம்)இவ்
எத்தர் நெஞ்சம் புரிவதில்லை -அவர்
எத்தனை யாய்இன் சொற்கள் சொல்லி
ஏய்ப்பினும் ஏய்ப்பது தெரிவதில்லை!

சேயைப் போலே மார்பில் மிதித்தால்
தாயைப் போலே பொறுத்திடுவேன் -கொடும்
பேயைப் போலே துன்பம் தன்னை
ஈயப் போந்தால் ஒறுத்திடுவேன்!

அன்பா லென்னை ஆள்வோர்க் கென்போல்
நன்றி காட்டும் நாயில்லை -சுடும்
வன்சொல் லாலெனை வதைப்போர்க் கென்போல்
துன்பம் ஈயும் ஊழில்லை!

அகரம்.அமுதா

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஆசிரியர்!

ஒத்தினம் நாளும் ஓதும்
ஒப்பிலாக் கல்வி தன்னை
நத்திநம் நெஞ்சத் துள்ளே
நடுமாசி ரியர்கள் போற்ற
எத்தினம் உகந்த தென்றே
எண்ணிநாம் விதந்த வேளை
இத்தினம் எழுந்து வந்தே
இசைமாறி பொழியு திங்கே!

தரிசெம்மை உழுது நட்டுத்
தரணிக்குப் புகழைச் சேர்க்கும்
பரிசுத்த உழவர் என்றே
பார்க்கின்றேன் இவரை; அற்றம்
இரிதலைத் தொண்டாய்ச் செய்யும்
இவர்புகழ் தன்னை வானும்
அறிதலை வேண்டி நாமும்
அமைத்திட்ட இந்நாள் வாழ்க!

பொறையோ(டு) அறிவை என்றும்
பொய்த்திடா நற்கு ணத்தைக்
குறையாத கல்விச் செல்வம்
கொடுக்கின்ற வள்ளல் நாளும்
அறிவென்ற ஒன்றை மட்டும்
அமுதென்றே ஊறும் ஊற்றாய்த்
தருவிக்கும் இவர்த கைபோல்
தகைமையை நாட்டில் காணோம்!

பள்ளிக்குப் புழுவாய்ச் சென்றோம்
பட்டென்றே மாற்றி விட்டுத்
தள்ளிநின் றுவகை கொள்ளும்
தன்மையால் சிறந்து விட்டார்
அள்ளியே அறிவை ஈந்தும்
ஆனந்தம் அதிலே கண்டும்
உள்ளத்தால் வாழ்த்தும் இந்த
உத்தமரை உலகம் போற்றும்!

நல்வழி காண வேண்டி
நவின்றிடும் இவர்கள் பற்றிச்
சொல்லியம் பாட வென்றால்
சுந்தரத் தமிழே தீரும்
பல்கலை தேர எம்மைப்
பண்போடு பண்ப டுத்தி
நல்வினை ஆற்றும் அந்த
நல்லோர்கள் வாழ்க! வாழ்க!

அகரம்.அமுதா

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

அரசே அறிவிப்பாய் ஆங்கு!

நாட்டில் நகர்ப்புரத்தில் நாடிப் படிக்கும்நாள்
ஏட்டின் எழுத்துகளில் இன்திரைப் -பாட்டுகளில்
பட்டிதொட்டிப் பாமரர்தம் பேச்சுகளில் இல்லைபெயர்த்
தட்டியிலும் இல்லை தமிழ்!

தொட்டுப் பயிலும் தொடக்கநிலைக் கல்விமுதல்
பட்டப் படிப்புவரைப் பைந்தமிழைக் -கொட்டும்
முரசே முழங்க முழுமனதாய் ஆளும்
அரசே அறிவிப்பாய் ஆங்கு!

செம்மொழியாச் செய்து சிரிக்கின்றீர் வெட்கமின்றி!
அம்மொழியும் ஆட்சிமொழி ஆனதுண்டா? -நிம்மதியாய்
நாடாள வேண்டி நடாத்துகிறீர் நாடகங்கள்
பீடாறும் பாங்கில் பெரிது!

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைத்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து!

தாய்நாட்டில் தாய்மொழிக்குத் தக்கமதிப் பில்லையெனில்
மாய்ந்தேனும் அந்நிலையை மாற்றிடுவோம்! -தேய்ந்தேனும்
மீண்டுவரும் விண்ணிலவாய் மீளட்டும் மென்றமிழும்;
ஆண்டுவரும் நல்லரசே ஆங்கு!

எத்துறை நோக்கினும் எங்கும் எதிலும்நம்
முத்தமிழைக் காண முடியவில்லை -செத்தமொழிப்
பட்டியலில் சேர்க்கத்தான் பார்க்கின்றீர் உண்மையி(து)
அட்டியிலை என்பேன் அறிந்து!

இறைக்குச் சமற்கிருதம் என்றாகித் தோயுந்
துறைதோறும் ஆங்கிலமே தோன்றின் -முறையாசொல்!
தாய்நாட்டில் தாய்த்தமிழ் சாகும் நிலையெனில்
பேய்நாடீ தென்பேன் பெரிது!

பத்தொடு நாளும் பதினொன்றாய் ஆகின்றீர்;
நத்தி நரகலையே நாடுகிறீர்; -தித்திக்கும்
தீங்கரும்பாம் செந்தமிழைத் தீய்த்துத் தமிழர்க்குத்
தீங்கிழைத்து விட்டீர் தெரிந்து!

இதுவரை இன்றமிழ்க் கென்செய்தீர்? நாட்டை
மதுக்கடையாச் செய்து மகிழ்ந்தீர்; -இதற்கும்
வருந்தத்தான் வேண்டும் வழுநீங்க வேண்டின்
திருந்தத்தான் வேண்டும் தெரிந்து!

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து!


அகரம். அமுதா

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

மலர்கள் மீண்டும் மலரும்!

வில்லென்ற புருவம் வைத்து
வேலென்ற விழிகள் வைத்துக்
கள்ளுண்ட அதரம் வைத்துக்
கனியுண்ட அங்கம் வைத்தே
இல்லென்ற இடையும் வைத்தவ்
இடையகத்தில் இன்பம் பொங்கும்
நெல்லென்ற ஒன்றை வைத்து
நிற்பவரோ பெய்வ ளைகள்?

மொழிமுறை முற்றும் மாற்றி
மொழிதலை விரும்பு வோரும்
வழிமுறை என்னும் பேரில்
வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்
இழிமுறை அறிந்தி ருந்தும்
இருப்பதோ கல்லாய்? அவரை
அழிமுறை அறிந்தெ ழுந்தே
ஆர்ப்பதே பெண்ணின் வேலை!

வேணவா தீரும் மட்டும்
விரும்பியே அணைத்துக் கொள்ளும்
ஆணவா தீர்ந்த பின்னும்
அணங்கவா தொடர்ந்து விட்டால்
வீணவா என்னும் கீழ்மை
விலங்கவா வன்றோ மஞ்சல்
பூணவா பூவ வாவைப்
பூணொண்ணா விதவைக் கோலம்!

பெற்றவளைக் காணப் போமோ?
பிறப்பினால் தமக்கை யாகப்
பெற்றவளைக் காணப் போமோ?
பின்னாளில் மனையைக் கூடிப்
பெற்றவளைக் காணப் போமோ?
பேச்சிலே முள்ளை வைத்து
மற்றவளை கைம்பெண் என்றே
மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?

மதியென்பார் முகத்தை; வாயின்
மலரென்பார் சிரிப்பை; திரு
மதியென்பார் மணந்து கொண்டால்;
மணவாளன் இருக்கும் மட்டும்
மதியென்பார்; அவன்ம ரித்தால்
மதியவளை மிதியென் பார்கள்;
விதியென்றே வீட்டின் மூலை
வீழ்தலோ பெண்ணின் வீரம்?

மெட்டியை; மஞ்சல் தோய்ந்த
மணிக்கயிற் றோடு நெற்றிச்
சுட்டியை; பூவை; வண்ணம்
துளங்கிடும் ஆடை தன்னை;
போட்டோடு கைவ ளையைப்
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
அட்டியிலை அடுத்தோர் மாலை
அவள்தோளில் வீழ்தல் நன்றே?

பதுமைதான் இதுவ ரைநீ;
பாவைநீ துணிந்து விட்டால்
புதுமைதான் பூமி யெங்கும்;
புத்தியில் ஓர்ந்த றிந்தே
புதுக்கிடும் மறும ணத்தைப்
புரிதலே பெருமை யாண்டும்!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!

அகரம்.அமுதா

சனி, 9 ஆகஸ்ட், 2008

அமைதிப் பூங்கா!பூக்கள் நிறைந்த சாலைகளும்
      புள்ளின மாடும் சோலைகளும்
ஆக்கும் எந்திர ஆலைகளும்
      ஆற்றல் கைகளும் தோள்வலியும்
பாக்கள் நிறைந்த தமிழ்மொழிபோல்
      பசுமை படர்ந்த சிங்கைதே
னீக்கள் நாடும் பூவனம்போல்
      எழில்சேர் அமைதிப் பூங்காவாம்!

கலவரம் அறியாக் கன்னியிவள்
     கருணை அமைதியின் செல்லமகள்
பலவினம் வாழும் எல்லையிவள்
     பகையொன் றறியாப் பருவமகள்
அலைகடல் நடுவே வான்பிறைபோல்
     அமைந்த அமைதியின் உருவமிவள்
நிலவரம் பில்குறள் அளவெனினும்
     நேர்குறள் பொருளின் செறிவுடையாள்!

மெல்லினம் அரசாய் அமைந்ததனால்
     மேன்மைகள் நாட்டில் நடைபோடும்
வல்லின அரக்கரைச் சட்டம்தன்
     வலையில் வீழ்த்திச் சிறைபோடும்
பல்லினம் வாழும் நாடெனினும்
     பண்போ டொற்றுமை பேணுவதால்
இல்லையொன் றிங்கே பகையுணர்வு
     இதனால் கண்டார் நிதமுயர்வு!

காவலர் பணிக்கிங் காளுண்டு
     கள்வர் கயவர் எவருமில்லை
மேவிய நீதி மன்றமுண்டு
     கோவிலைப் போலன்றி வேறில்லை
தீவிர வாதம் தலைதூக்கித்
     திக்கெலாம் தாண்டவ மாடுகையில்
தீவிர அமைதி பேணுவதில்
     சிங்கைக் கியாதொர் நிகருமில்லை!

கள்வர் இல்லை களவுஉண்டு
     காதலர் கண்செயும் களவுஅது...
கொள்வார் இல்லை எடுத்தலுண்டு
     கொடுப்பார் புகழவாய் எடுத்தலது...
கல்லார் இல்லை கரத்தலுண்டு
     கவியுள் செம்பொருள் கரத்தலது...
இல்லார் இல்லை இரத்தலுண்டு
     இறையடி சேர்ந்திடும் இரத்தலது!

இனத்தால் கலவரம் இங்கில்லை
     இருளில் வீழா மதியுளதால்...
தனத்தால் ஏற்றத் தாழ்வில்லை
     சட்டம் தன்பணி ஆற்றுவதால்...
தனித்தேன் ஈப்போல் ஒன்றிடுவார்
     தனைப்போல் பிறரைக் கருதுவதால்...
மனத்தால் கெடுவார் எவருமில்லை
     மதியால் விதிவெல அறிந்துளதால்...

எப்படை வரினும் எதிர்த்துநின்றே
     இசைசேர்த் திடுவார் இனம்காப்பார்
தப்படி வைத்தெவர் தறுக்கிடினும்
     தப்புணர்த் திடுவார் திருத்திடுவார்
முப்படை நாற்றிசை காவலுறும்
     முறையுண் டெனினும் போரில்லை
செப்பிடின் ஆயுதம் அமைதிக்கே
     சேர்த்திடும் சிங்கைபோல் வேறில்லை!

நாடுகள் பலவும் நானிலத்தே
     நலிவுறும் உட்பகைப் பூசலினால்
பீடுறு அமைதி நிலையிழந்தே
     பெரிதும் துயர்படும் காலையிலும்
காடுறு அமைதியை நாட்டினிலே
     கண்டதென் நாடு? இந்நாடே!
நாடிது அமைதிப் பூங்காவாய்
     நாட்டிய நல்லர சோங்குகவே!

அகரம்.அமுதா

புதன், 6 ஆகஸ்ட், 2008

தன்நோய்க்குத் தானே மருந்து!

மாலைப் பொழுது; மலர்கள் மலர்ந்தாடும்
சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன்
உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும்;
தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப்
பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக்

கூத்தாடி நிற்கும்; குழலொலியைத் தன்குரலில்
ஏற்றிக் குயில்கூவும் எங்கோ இருந்தபடி;
சேற்றில் கயல்தேடிச் சென்றிருந்த நாரைகள்
கூட்டை அடைந்துவிடும் கொள்கையால் சிறகடித்துக்
காட்டைக் கலைத்துவிடுங் காற்றைப் பெருக்கிவரும்;

அங்கோர் அணில்கிளையில் ஆடும் அருங்கனியைத்
தங்கையில் ஏந்தித் தனதுபசி ஆறும்;
கதிரும் களைத்துக் கனிந்த பழம்போல்
உதிரும்; வானும் உதிரத்தைக் கக்கிவிடும்;
அந்தப்பொன் அந்தியிலே அங்கோர் மரக்கிளையில்

வந்துக்குந் திக்கொண்ட வண்ணப் பசுங்கிளிதன்
பெட்டை வரவைப் பெரிதும் எதிர்பார்த்துக்
கட்டைபோல் ஆடாது கண்ணிமையும் மூடாது
எண்ணப் பறவையது எங்கெங்கோ சென்றுவர
வண்ணப் பறவையிது வாடி மிகநொந்துச்

சின்னநுனி மூக்கின் சிவப்பழகுப் பெண்கிளியை
முன்னம் அருகிருந்து முத்தமிட்ட காட்சிகளும்,
கன்னங்கள் என்கின்ற கண்ணாடிக் கோப்பையிலே
தென்னங்கள் ஊற்றித் தினங்குடித்த காட்சிகளும்,
கண்ணின்முன் தோன்றக் கருத்தில் கடுங்காமம்

புண்ணில்வேல் பாயுதல்போல் போந்து துயர்செய்ய
தேறாது நெஞ்சமெனத் தேர்ந்த பெருங்கிளியின்
மாறாத மோகமதை மாற்றி விடாய்தீர்க்க
வந்த பெடைகண்டு வாரி அணைத்துமுத்தம்
தந்து தழுவித் தனதேக்கம் தீருமட்டும்

நோக்கும் பெடைதந்த நோய்க்கப் பெடையேநோய்
தீர்க்கும் மருந்தாம் தெரி!

அகரம்.அமுதா

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இருபொருள் வெண்பாக்கள்!

பம்பரமும், செக்கும்!
ஓரச்சில் ஊண்றி உழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சாற் தாக்கிக் குளைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்!

பம்பரமும், பாம்பும்!
மூச்சிரையும்; நின்று தலையாட்டும்; முன்கோபப்
பாய்ச்சலிட்டே கொத்திப் பதம்பார்க்கும்; -பேச்சென்ன
வட்டமிடும் ஆகையால் பம்பரமும் நற்பாம்பும்
இட்டமுடன் நேரென் றிரு!

ஆழியும்;, மாந்தரும்!
ஈகை குணமுளதால்; இவ்வுல காளுதலால்;
வாகாய் ஒலிசெயும்நா வாயுளதால்; -ஆகாயம்
சாருதலால்; உப்பிடுந் தன்னையால் இப்புவியில்
வாரிதிநேர் மாந்தர் வழுத்து!

தோசையும், கோலமும்!
பெண்கள்கை போடும்; அரிசிமா கொண்டாகும்;
கண்கள்போற் புள்ளிபல காணுமதைத் -தின்றுபசி
தீர்க்கும் பலஉயிரும் என்பதனால் தோசையின்
நேர்கோலம் என்றே நவில்!

அகரம்.அமுதா